சினிமாவில் டாப் ஸ்டார் யார் என்பதை நிர்ணயிக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்று சம்பளம். யாருடைய படத்துக்கு அதிக வசூல் ஆகிறதோ அந்த நட்சத்திரங்கள் கேட்ட தொகையை அள்ளிக் கொடுப்பது தயாரிப்பாளர்களின் வழக்கம். இதனாலேயே வெற்றிகள் கூடக் கூட நட்சத்திரங்களின் சம்பள பில்லும் எக்கச்சக்கமாய் எகிறும்.
கே.பி.சுந்தராம்பாள், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர் என்று அந்தக் காலத்திலேயே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய நட்சத்திரங்களின் பட்டியல் உண்டு. அந்த வரிசையில் இப்போது சம்பளம் வாங்குபவர்களில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்களைப் பற்றி பார்க்கலாம்.
தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை இன்று ஊதிய விகிதத்தில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ‘படையப்பா’ படத்தில் ஆரம்பித்து, ரஜினியை அவர் நடிக்க ஒப்புக்கொள்ளும் படங்களில் ஒரு பங்குதாரராக ஆக்கிவிடுவதாகச் சொல்கிறார்கள். அதாவது ரஜினி படத்தின் மொத்த விற்பனையில், படத்தின் செலவுத்தொகையை கழித்துவிடுகிறார்கள். எஞ்சுவது லாபம். அதில் 60% ரஜினிக்கும் 40% தயாரிப்பாளருக்கும் என்ற ரீதியில்தான் ரஜினியின் சம்பளம் இருந்து வருவதாகச் சொல்கிறார்கள். அப்படிப்பார்த்தால், தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஊதியம் பெரும் ஒரே நட்சத்திரமாக ரஜினியே இருக்கிறார்.
அடுத்த இடத்தில் இருப்பவர் உலகநாயகன் கமல். உலகநாயகன் என்ற பட்டத்துக்கு ஏற்ப, அவருக்கான உலக மார்க்கெட் மற்றும் அகில இந்திய மார்க்கெட் ஆகியவை என்றும் ‘எவர் க்ரீன்’. இதனால் கமல், வெளித்தயாரிப்பாளரின் படங்களுக்கு கால்ஷீட் மட்டுமே கொடுக்கிறார் என்றால் 20 முதல் 25 கோடி ஊதியம் வாங்குகி றாராம். அதுவே முதல் பிரதி அடிப்படையில் தயாரித்துக்கொடுத்தால், ஒரு படத்துக்கான ஊதியம் 30 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.
கமலுக்கு அடுத்த நிலையில் அதிரடியான ஊதியப்போட்டியில் இருப்பவர்கள் விஜய் - அஜித் - சூர்யா ஆகிய மூன்றுபேரும்தான். அஜித்தை என்னதான் ‘கிங் ஆஃப் ஓபனிங்’ என்று புகழ்ந்தாலும், அஜித் நடிக்கும் வித்தியாசமான படங்களை, விநியோகஸ்தர்கள் கொஞ்சம் அச்சத்தோடு வாங்கி வெளியிடுகிறார்களாம் இன்றும். ‘வீரம்’ படத்தையும் அப்படித்தான் வாங்கியிருக்கிறார்கள். “அஜித் வேஷ்டி கட்டி நடித்தால், அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று ஆரம்பத்தில் ‘வீரம்’ படத்தை வாங்கவே தயக்கம் காட்டியவர்கள், விஜய் படம் சாதாரணமாக இருந்தால் கூட போட்ட முதலுக்கு மோசமிருக்காது என்ற அளவுகோலை கடைபிடிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் ஊதிய விவகாரத்தில் விஜய்யும் அஜித்தும் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள் என்கிறார் அவர்களது படங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற தயாரிப்பு நிர்வாகிகள் சிலர்.
அஜித் ‘ஆரம்பம்’ படத்துக்கு 15 கோடி ஊதியம் பெற்றிருந்த நிலையில், தற்போது அதே தயாரிப்பாளரின் படத்துக்கு 18 கோடி ஊதியம் பெற இருப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோல ‘துப்பாக்கி’ படத்துக்கும், ‘தலைவா’, ‘ஜில்லா’ ஆகிய படங்களுக்கும் விஜய் தலா 15 கோடி ஊதியமாக பெற்றதாகவும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கும் படத்துக்கு 18 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் காதைக் கடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
‘கஜினி’ படத்தின் தெலுங்குப் பதிப்பில் தொடங்கி சூர்யாவுக்கு ஆந்திரப்பட உலகில் வரவேற்பு இருப்பதால் தெலுங்கு உரிமைக்கும் சூர்யா சேர்ந்து வாங்கும் ஊதியம் 20 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். பெரும்பாலும் தெலுங்கு வெளியீட்டு உரிமையை சூர்யா எழுதி வாங்கிக் கொள்வதாகவும், தமிழுக்கு மட்டும் 12 கோடி ஊதியம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
விஜய்- அஜித்- சூர்யா வரிசையில் இணைந் திருக்க வேண்டிய விக்ரமின் மார்கெட்டை ‘தாண்டவம்’ ‘டேவிட்’ ஆகிய படங்கள் காலி செய்து விட்டதால், ஷங்கரின் ‘ஐ’ படத்தில் அவருக்கு 10 கோடி சம்பளம் தரப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ‘ஐ’ வெளியான பிறகு விக்ரமின் மார்க்கெட் உயர்ந்து, இது நால்வர் அணியாகும் என்கிறார்கள் முன்ணனி தயாரிப்பு நிறுவனத்தின் மூத்த நிதி நிர்வாகி.
இந்த நால்வருக்கும் அடுத்த நிலையில் 6 முதல் 8 கோடி ஊதியம் பெற்றுகொண்டு நடிக்கும் மூன்றாம் கட்ட மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் இருக்கிறார்கள் கார்த்தி, ஆர்யா, விஷால் ஆகிய மூவரும். தனக்கு தரப்படுவது மிகக்குறைவான ஊதியம் என்று அறிந்து கொண்ட விஷால், வெகுண்டு எழுந்து சொந்தத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதில் ஊதிய விவகாரமும் ஒரு முக்கிய காரணமாம். ஜெயம் ரவி - ஜீவா இருவரும் 5 முதல் 6 கோடியில் நிற்கிறார்களாம்.
ஜெயம் ரவி, ஜீவாவுக்கு அடுத்த நிலையில் சிம்புவும் தனுஷும் சம்பள விவகாரத்தில் தற்போது நொண்டியடித்துக் கொண்டிருக்கிறார்களாம். ‘மரியான்’ படத்துக்கு பேசப்பட்ட சம்பளத்தின் 30 சதவீதத்தை தற்போது அவர் 4 வேடங்களில் நடித்துவரும் படத்தில் ஈடு செய்து விட்டாராம் தயாரிப்பாளர். அப்படிப்பார்க்கையில் 8 முதல் 10 கோடி ஆகியிருக்க வேண்டிய தனுஷின் ஊதியம் 7 கோடியிலேயே நிற்கிறதாம். சிம்பு நிலையோ இன்னும் மோசம். அவர் எதிர்பார்த்த பல படங்கள் தாமதமாகிவிட்ட நிலையில், தன்னை வைத்து அவரே சொந்தப்படம் எடுக்க வேண்டிய சூழ்நிலை. என்றாலும் சிம்புவின் நடப்பு சம்பளம் 6 கோடி என்கிறார்கள்.
சந்தை நிலவரப்படி நான்காம் நிலை நாயகர் களில் தற்போது சிவகார்த்திகேயன் -விஜய் சேதுபதி ஆகிய இருவரது காட்டிலும்தான் அடை மழை. ஆரம்பத்தில் 5 லட்சத்துக்கு நடிக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயனின் சம்ப ளம் தற்போது 5 கோடி. அவருக்கு 8 கோடிகூட கொடுக்க தயாராக இருக்கிறார்களாம் தயாரிப் பாளர்கள். ஆனால் சிவகார்த்திகேயன் நல்ல கதையில் நியாயமாக அடக்கி வாசிப்போம் என்ற கொள்கையை பின்பற்றுவதால், அவரது கால்ஷீட் தங்கப்புதையல் மாதிரி பார்க்கப்படு கிறது. கிட்டத்தட்ட இதே நிலையில்தான் விஜய் சேதுபதியும் கொண்டாடப்படுகிறார். இவர்களோடு விமல் - ஜெய் இருவரும் இப்போதுதான் 2 கோடியை தொட்டிருக்கிறார்களாம். இவர்களுக்குப் பிறகு 50 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் பல வளரும் நாயகர்கள் இருக்கிறார்கள். கதாநாயகிகளின் கல்லாபெட்டி நிலவரத்தை தனியாகப் பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago