பாகுபலி வழங்கிய படைப்புச் சுதந்திரம்! - எஸ்.எஸ்.ராஜமௌலி நேர்காணல்

By கா.இசக்கி முத்து

“சிவகாமி, பிங்களத்தேவன், பல்லாளத்தேவன், தேவசேனா, பாகுபலி என ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் எனது அப்பா சொன்னபோது சிறுகுழந்தை மாதிரிக் கேட்டேன். அதற்குப் பிறகு அந்தக் கதாபாத்திரங்கள் என் மனதை விட்டு அகலவில்லை. அப்பா சொன்னபோது நான் என்ன நினைத்தேனோ, அதை அப்படியே படம் பார்க்கும் மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என நினைத்து உருவாக்கிய படம்தான் ‘பாகுபலி 2' ” என்று பேசத் தொடங்கினார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி.

‘பாகுபலி' ஒரே கதைதான். ஏன் அதை இரண்டு பாகமாக வெளியிட முடிவு செய்தீர்கள்?

ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க வேண்டும் என்றுதான் தொடங்கினோம். ஒரு கட்டத்தில் போதிய பணமின்றி, ஒரு பாகத்தை மட்டும் தயார் செய்து வெளியிட்டு, அதில் வந்த பணத்தை வைத்து 2-ம் பாகத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினோம்.

முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போதே, ஒரு அரங்கை அமைத்து அதில் படமாக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் எடுத்துவிட்டோம். அப்படி எடுத்ததில் 2-ம் பாகத்துக்கான சுமார் 40 சதவிகித காட்சிகளை முதல் பாகத்தின் படப்பிடிப்பிலே படமாக்கிவிட்டோம். 2-ம் பாகத்துக்கான படப்பிடிப்பில் முக்கியமான போர்க்களக் காட்சிகள், பாடல் காட்சிகள், துணை நடிகர்களுக்கான காட்சிகளை மட்டுமே காட்சிப்படுத்தினோம்.

பிரபாஸால் மட்டுமே ‘பாகுபலி'யாக நடிக்க முடியும் என்று சொல்வதற்குக் காரணம் என்ன?

அவருடைய 5 வருட உழைப்பு மட்டுமே காரணம். எனது அப்பா கதையைச் சொல்லும் போதே, என் மனதில் பிரபாஸ்தான் பாகுபலி என்று முடிவு செய்துவிட்டேன். அதற்கான காரணம் என்ன என்பது முதல் பாகத்திலேயே தெரிந்திருக்கும். ‘பாகுபலி' என்றாலே பிரபாஸ்தான். அந்த இடத்தில் வேறு எந்ததொரு நாயகனும் என் மனதுக்குள் வரவேயில்லை. வேறு யாரையும் நான் கற்பனை செய்து பார்க்கவும் விரும்பவில்லை. இந்த 5 வருடத்தில், பிரபாஸ் நினைத்திருந்தால் 5 படங்களில் நடித்துப் பணம் சம்பாதித்திருக்கலாம். ஆனால், 2 கதாபாத்திரங்களுக்காக 2 விதமாக உடலமைப்பை மாற்றி நடித்துக் கொடுத்தார். அப்படி ஒரு கதாபாத்திரத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து நடிக்கும் நடிகர்கள் கிடைப்பது அரிது.

சரித்திரப் பின்னணி கொண்ட படம், படப்பிடிப்பில் நிறைய கஷ்டங்கள் அனுபவித்திருப்பீர்களே?

இப்படத்தின் கதை, திரைக்கதை அனைத்துமே இறுதியானவுடன் போர்க்களக் காட்சிகள்தான் சவாலாக இருக்கும் என்று தெரியும். அதனால் மொத்தப் படக்குழுவிடமும் உட்கார்ந்து எப்படியெல்லாம் இதைக் காட்சிப்படுத்தலாம் என்று பேசினேன். நான் இந்தக் கதையைத் தூக்கி சுமந்தேன் என்பதைவிட மொத்தக் குழுவுமே சுமந்தோம் என்றுதான் சொல்வேன். இரண்டாயிரம் துணை நடிகர்களை வைத்துக்கொண்டு போர்க் காட்சிகளைப் படமாக்கும்போது, ஒரு சிறு தவறு நடந்தால் கூட மறுபடியும் டேக் போக வேண்டும். அப்படி மீண்டும் படமாக்கும்போது யாருமே சோர்வை வெளிக்காட்டாமல் நடித்துக் கொடுத்தார்கள். இந்த மாதிரியான குழுவை அமைந்ததுதான் இப்படத்தின் முதல் வெற்றியாக நினைக்கிறேன்.

2-ம் பாகத்தில் கதையின் போக்கு எப்படியிருக்கும்?

முதல் பாகத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகம் பிரதானமாக இருந்தது. ஆனால், 2-ம் பாகத்தில் அக்கதாபாத்திரங்களுக்கு இடையே நடப்பது என்ன என்ற விஷயங்களைக் காணலாம். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற விஷயம் படத்தின் முக்கியமான இடத்தில் தெரியவரும். கிளைமாக்ஸில் வரும் போர்க் காட்சிக்காக மட்டும் சுமார் 120 நாட்கள் படப்பிடிப்பு செய்துள்ளோம். முதல் பாகத்தில் தமன்னாவின் காட்சிகள் அதிகமாகவும், அனுஷ்காவின் காட்சிகள் குறைவாகவும் இருந்தன. ஆனால், 2-ம் பாகத்தில் அனுஷ்காவின் காட்சிகள் அதிகமாகவும், தமன்னாவின் காட்சிகள் குறைவாகவும் இருக்கும். இளமையான அனுஷ்காவின் கதாபாத்திரப் பின்னணி அனைவரையும் கவரும்.

நீங்கள் உருவாக்கியதோ சரித்திரக் கதை. ஆனால் கதாபாத்திரங்கள் பேசும் தமிழ் வசனங்கள் இப்படி இருக்கலாம் என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்?

இது முழுக்கக் கற்பனைக் கதை. திரைக்கதையாக முடிவானவுடனே நான், மதன் கார்க்கி, நாசர், சத்யராஜ் அனைவருமே உட்கார்ந்து பேசினோம். உரையாடல் முழுவதும் இலக்கிய நடையில் இருந்தால் சிலருக்குப் புரியாமல் போகலாம் என்று எண்ணினோம். எந்த வருடத்தில் இக்கதை நடக்கிறது என்பதைக் கூறாதது எங்களுக்குச் சாதகமாக அமைந்தது. பழங்காலத் தமிழுக்கும் செல்லாமல், நிகழ்காலத் தமிழும் இல்லாமல் இரண்டையும் கலந்து மதன்கார்க்கி வசனங்கள் எழுதிக் கொடுத்தார்.

சரித்திரக் கதைக்கு முக்கியமான தேவை அரங்குகள். அதை எப்படி உருவாக்கினீர்கள்?

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த மன்னரின் கதையைப் படமாக்கினால் மட்டுமே வீடுகள், அரண்மனைகள் இப்படியெல்லாம் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். கற்பனைக் கதை என்பதால் வீடுகள், அரண்மனைகள் அனைத்துமே கற்பனைதான். ‘பாகுபலி'யை எந்தக் காலத்தில் நடந்த கதையாகப் படமாக்கலாம் என்று எண்ணிய போது துப்பாக்கிகள் தோன்றியக் காலத்துக்கு முன்பு என வைத்துக் கொண்டேன். கதையின் காலம் முடிவானவுடன் மக்களின் பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றை முடிவு செய்தோம். இவை எல்லாம் உருவான போதே, அரங்குகள் எப்படியெல்லாம் இருக்கலாம் என்று தோன்றியது.

‘பாகுபலி 2' படத்துக்குப் பிறகு உங்களது அடுத்த படம்?

உண்மையில் எந்ததொரு கதைக்கான எண்ணமும் இதுவரை இல்லை. ‘பாகுபலி 2'க்கு மக்கள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதற்காகக் காத்திருக்கிறேன். ஆனால், எனது அடுத்தப் படத்தை கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் இல்லாத ஒன்றாகச் செய்யலாம் என்ற எண்ணம் மட்டுமே உருவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

மேலும்