கல்லூரி போகும் நாள் வரையில் எங்கப்பா என்னை பெல்ட்டால் அடித்திருக்கிறார். அவரைப் பற்றி யோசித்தாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது பெல்ட்தான்… கோபக்காரர், கண்டிப்பானவர், அன்பை அப்படி வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த மனிதர்… அவருக்கும் எனக்குமான கதையைத்தான் எம்டன் மகனாக எழுதியிருக்கிறேன்…” என்ற திருமுருகன், எம்டன் மகன் படத்தின் கதையை இரண்டு மணிநேரம் சொன்னார்.
அதற்குக் கொஞ்சநேரத்துக்கு முன்புதான் என் தந்தை பற்றியும் அவருடைய பணி ஓய்வு நாளில் அவரோடு இருக்கமுடியாமல் பத்திரிகை பணி என்னை முடக்கிப் போட்ட சூழலைப் பற்றியும் சொல்லியிருந்தேன்.
எம்டன் மகன் கதை கடினமான தந்தைக்கும் மென்மையான மகனுக்குமான உறவாக இருந்தது. அவர் சொன்ன கதையில் கடைசிவரையில் அந்த தந்தை தன் கடினத் தன்மையை விட்டுக் கொடுக்கவே இல்லை. உங்கள் அனுபவத்தை வைத்து எல்லாத் தந்தைகளையும் பொதுமைப்படுத்தக் கூடாது என்பதில் தொடங்கிய விவாதம் நீண்டுகொண்டே போனது. இன்னும் சிலரும் திருமுருகனிடம் இதைப் போலவே சொல்லியிருப்பார்கள் போல. எம்டன் மகன் படமாகத் திரைக்கு வந்தபோது கதையின் முடிவில் அப்பா கதாபாத்திரம் நெகிழ்ந்து நிற்கும்.
பிரத்யேகக் காட்சியில் படம் பாத்து முடிந்து வெளியே வந்தபோது “என்ன சார்… எங்கப்பாவுல ஆரம்பிச்சு உங்கப்பாவுல முடிஞ்சுருச்சா..?” என்றார். உண்மையிலேயே நம் உறவுகளின் நெருக்கத்தைச் சொல்லும் விதமாக அந்தக் கதை வடிவம் பெற்றதற்குத் திருமுருகனின் திறந்த மனதுதான் காரணம்.
மெட்டி ஒலிக்கு முந்தைய காலம் முதலே திருமுருகனின் இயல்பு அதுதான். மெட்டி ஒலி படப்பிடிப்பின்போது சந்திக்கச் செல்லும்போதெல்லாம் கண்ணில் படும் விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு உற்சாகம் தரக் கூடியவர்.
மெட்டி ஒலி மெகா தொடர் சின்னத் திரை சீரியல் வரலாற்றில் ஒரு புதிய முயற்சி என்றே சொல்லலாம். மத்தியதர வர்க்கத்தின் கதைகளை உரக்கச் சொன்ன கதை அது. கிட்டத்தட்ட அதுதான் முதல் முயற்சி என்றுகூடச் சொல்லலாம். அந்தச் சமயத்தில் எப்போது சந்தித்தாலும், அப்புறம் ஊர்ல என்ன சார் விசேஷம் என்பார். ஊருக்குள் நடக்கும் நல்லது கெட்டது எல்லா விஷயங்களையுமே கேட்டுக்கொள்வார். சகஜமான உரையாடலாக வெளிப்படும் அந்தத் தகவல்கள் எங்கோ ஓர் இடத்தில் காட்சியாகக் கதைக்குள் பயணிக்கும்.
என்னுடைய திருமணச் செய்தியைச் சொன்னபோதுகூட அவருக்கு என் மனைவியின் தந்தையும் பெரியப்பாவும் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள் என்ற செய்திதான் ஈர்த்தது. “பரவாயில்லை சார்… அண்ணன் தம்பி ஒற்றுமை பெரிய விஷயமில்லை… அவங்களோட வீட்டுக்காரம்மாக்கள் ஒற்றுமையா இருக்கறதுதான் சூப்பர்…” என்று சிலாகித்தார்.
வெளிப்படையான விமர்சனத்தைதான் அவர் விரும்புவார். எம்டன் மகனுக்குப் பிறகு அவர் எடுத்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்துக்கும் பிரத்யேகக் காட்சிக்கு அழைத்திருந்தார். படம் முடிந்து வெளியே முதல் ஆளாக வந்தபோது எதிரே நின்றுகொண்டிருந்தார். என்ன சொல்வது என்று ஒரு கணம் யோசித்துவிட்டு, “எம்டன் மகன் ஃபீல் இதுல இல்லை…” என்றேன். ஒரு கணம் உற்றுப் பார்த்த திருமுருகன், சட்டென்று கைகளைக் குலுக்கிவிட்டு, அடுத்தடுத்து அரங்கில் இருந்து வந்தவர்களிடம் பேசப் போய்விட்டார். எல்லாருமே வடிவேலு காமடி சூப்பர், செமி அர்பன் கலர்ல வந்திருக்கு படம்… அது புதுசா இருக்கு என்று என்னவெல்லாமோ சொன்னார்கள். நடுவே மீண்டும் வந்து கைகுலுக்கிவிட்டு நாம அப்புறம் பேசுவோம் சார் என்று சொல்லிவிட்டுப் போனார்.
அடுத்தநாள் மறக்காமல் போன் செய்தார். “நீங்க சொன்னதுதான் சரி… இது எம்டன் மகன் மாதிரி வரலை. அதுக்கு பல காரணங்கள் இருக்கு. ஆனா, அதையெல்லாம் சொன்னா நான் தப்பிச்சுக்கற மாதிரி இருக்கும். இதை நான் இன்னும் கவனத்தோட பண்ணியிருக்கணும்…” என்றார்.
கதை விவாதம் என்பதையே ஏதோ குடும்ப விஷயங்களைப் பேசுவது போலத்தான் செய்வார். அவருடைய குடும்பத்தில் மூன்று சகோதரிகள், எனக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கை, எங்க சித்தப்பா வீட்டில் இப்படி ஒரு விஷயம் நடந்தது… இப்படித்தான் விவாதம் போகும். கதாபாத்திரங்களின் பின்னணியை மட்டும் வைத்துக் கொண்டு சம்பவங்களைக் கோர்க்கும் விதமான அவருடைய பாணிக்கு நம் குடும்ப உறவுகள்தான் கைகொடுக்கும்.
மெட்டி ஒலிக்குப் பிறகு அவர் நாதஸ்வரம் என்ற சீரியலைத் தயாரித்து இயக்கக் களத்தில் இறங்கியபோது ஓராண்டுகாலம் அவரோடு பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அந்தக் கதையின் பின்னணியைப் புரிந்து கொள்வதற்காகக் காரைக்குடி செட்டிநாடு வீடுகளுக்குச் சென்றோம். அப்போது எந்த வீட்டுக்குச் சென்றாலும் மெட்டி ஒலி சரோ கதையும் என் கதையும் ஒண்ணு என்பார்கள். அந்த போஸூ பட்ட பாடும் நான் பட்ட பாடும் பல நேரங்கள்ல ஒண்ணா இருக்கும் என்பார்கள். கதையில சிதம்பரம் செத்த அன்னிக்கு எங்க சித்தப்பா செத்துப் போனதுதான் நினைப்புல இருந்துச்சு என்பார்கள். மொத்தத்தில் மத்திய தர, அதற்கும் கீழ்தட்டில் குருவிக் கூடு போன்ற வீடுகளில் வாழும் மக்கள் அவரை இப்படித்தான் எதிர்கொண்டார்கள். அதுதான் அவர் கதையின் வெற்றி.
எப்போது கதை பற்றிப் பேசத் தொடங்கினாலும் “எங்க வீட்டுல நடந்ததே ஒரு சுமைக்கு இருக்கும்… இன்னும் உங்க வீட்டுல நடந்ததையும் சேர்த்துச்சுன்னா மெகா சீரியலுக்குப் போதும் போதும்ங்கற அளவுக்குக் கதை கிடைக்கும்” என்பார். அவருடைய உதவியாளர் சுந்தரமூர்த்தி சட்டென்று தன் குடும்ப அனுபவம் ஒன்றைச் சொல்வார். ஒருவேளை அது தன் கதையோட்டத்துக்கு உதவவில்லை என்றால், “இது செட் ஆகாது…” என்பார். உடனே சுந்தர மூர்த்தியும், “ஓகே… இதை என் கதைக்கு வெச்சுக்கறேன்…” என்பார். திருமுருகனும், “தாராளமா வெச்சுக்கோங்க… இதெல்லாம் சொத்து மாதிரி…” என்பார். இந்த கண்ணோட்டம் தான் திருமுருகனின் சொத்து.
தொடர்புக்கு cmbabu2000@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago