ஆதலால்
 காதல் படம்
 எடுப்பீர்!

By வெ.சந்திரமோகன்

நூறாவது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கருப்பொருள் என்ன என்ற கேள்வியை ‘க்யூரியாசிட்டி ரோவர்’ விண்கலம் மூலமாக அனுப்பி ஒரு கருத்து கணிப்பு நடத்தினால், ‘லவ்.. ப்யார்..பிரேமம்.. காதல்’ என்று செவ்வாய்க் கிரகவாசிகள்கூட உரத்த குரலில் பதிலளிப்பார்கள்.


முக்காலே மூணு வீசம் காதல், கொஞ்சூண்டு கதையை வைத்துக்கொண்டு தமிழில் வெளியான படங்கள் எத்தனை எனக் கணக்கிடுவது என்பது தேமுதிக யாருடன் கூட்டணி என்றறிவதை விடக் கடினமானது. அதை நம்பகமான கதையம்சத்துடன் சொன்ன படங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது என்பது கோச்சடையான் வெளியாகும் தேதியைக் கணிப்பதற்கு ஒப்பானது.


தியாகராஜ பாகவதர் காதலித்தார். எம்ஜியார் காதலித்தார். சிவாஜி, கமல், கார்த்திக், விஜய், தனுஷ் என்று பல தலைமுறை நடிகர்கள் ஓய்வே இல்லாமல் காதலித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் உண்மையான காதல் சினிமாவில் காட்டப்பட்டதா, படுகிறதா என்று காதலர் தினமான இன்று தமிழ் சினிமாவைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.


காவியக் காதல்


தமிழ் சினிமாவில் காதல் அரும்பும் தருணம் காட்டப்படுவது ஒரு தனிக் காவியம். நாயகி காலையில் கோவிலுக்குச் செல்கிறார். வழிபாடு முடிந்து திரும்புவதற்கு நள்ளிரவு ஆகிவிடுகிறது. வரும் வழியில் மழை பெய்கிறது. உடனே இயற்கையை நேசிக்கும் குழந்தை மனம் கொண்ட நாயகி மழையை வரவேற்று ஒரு பாடல் பாடி ஆடுகிறார். அதுவரை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவரது தோழிகள் மேக்கப் கரையாத அளவுக்குப் பத்திரமாக அங்கு வந்து சேர்கிறார்கள். நாயகி ஆடும் நடனம் தப்பாமல் அவர்களும் ஆடுகிறார்கள். பாடல் முடிந்தவுடன் தோழிகள் சொல்லாமல் கொள்ளாமல் தூங்கச் சென்றுவிடுகிறார்கள். மழையால் நனைந்த சாலையில் நாயகி தனித்து விடப்படுகிறாள். அப்போது முகத்தில் அம்மைத் தழும்பு, அடர்ந்த தாடி, வாயில் பீடி சகிதம் வில்லன் எதிர்ப்படுகிறார்.


பெண்களைக் இழிவுபடுத்துவது தனது பிறப்புரிமை என்ற மாறாக் கொள்கை கொண்ட அவர் தனது கடமையைச் செய்ய முயல்கிறார். அப்போது, எங்கிருந்தோ ஒரு கை அவர் மீது
ஆக்ரோஷமாக விழுகிறது. நாயகனின் கண்,
வாய், காது போன்ற உடல் உறுப்புகள் தனித்
தனியாகக் காட்டப்படுகின்றன. பின்னர், என்ன
நடக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ரத்தக் காயத்துடன் நாயகியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடும் வில்லன், பின்னர் கிளைமாக்ஸில்தான் தலைகாட்டுவார்.


காப்பாற்றப்பட்ட நாயகி கையெடுத்து நன்றி சொல்ல, “சேச்சே..இது என் கடமைங்க..” என்று சொல்லிவிட்டு பிரேமை விட்டு நாயகன் வெளியேறும் தருணத்தில் ஒரு டூயட் பாடல் தொடங்கவில்லையென்றால் அந்தப் படம் காதல் காவியம் என்ற பெருமைக்குத் தகுதி இல்லாததாகிவிடும்.


முன்னேறிய கற்பனை


இப்போதெல்லாம் காதல் காட்சிகளில் கடுமையான முன்னேற்றம் தென்படுகிறது. கலைந்த தலைமுடி, காட்டுத் தாடி, கால் தெரிய மடக்கிக் கட்டிய கைலி, வாயில் பீடி சகிதம் ஒரு
‘வாலிபன்’ தெருவில் செல்லும் ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுக்கிறான். அந்தப் பெண் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க, அங்கு கதாநாயகன் ‘எப்ப வருவாரோ’ என்று காத்திருக்கிறோம். ஆனால், அந்தப் பெண்ணின் கண்களை உற்றுப் பார்க்கும் வாலிபன் கிறக்கமான கண்களுடன் பரட்டை முடி அசைய, தலையாட்டியபடி அங்கிருந்து நகர்கிறான். பார்த்தால் அவன்தான் நாயகன்.


பின்னர், நீண்ட தெருவின் ஒரு கோடியில் அவனும், மறு கோடியில் இவளும் நடக்கத் தொடங்குகின்றனர். அருகில் வந்தவுடன் தாவணி போட்ட நாயகி காதல் பார்வையை வீச, நிலைகுலைந்த நாயகன், நெஞ்சில் வலது கையை வைத்து உடம்பைத் திருப்பாமல் தலையை மட்டும் ‘ஈவில் டெட்’ பட பேய் போல் திருப்பி ஒரு ‘ரொமான்டிக் லுக்’ விடுகிறான். அப்புறம் நெஞ்சில் ஓங்கி ஓங்கிக் குத்திக்கொண்டே, கால்களால் மண்ணை உதைத்து ஒரு புழுதி மண்டலத்தை உருவாக்குகிறான். காதல் அரும்பிவிட்டதாம். “அடியே.. நாசக்காரீ..என் முதுகெலும்ப உருவ வந்த மோசக்காரீ..” என்று கிறக்கமாகப் பாட, காட்டுச் செடியில் காதல் மலர் சூல்கொள்கிறது. தன்னை ஈவ் டீஸிங் செய்யும் ரவுடி மீது அந்தப் பெண்ணுக்குக் காதல் வருவது எப்படி என்று கேட்கக் கூடாது.


காதலிக்கப்படும் பெண்ணை அசட்டுப் பெண்ணாகச் சித்தரிப்பதில் தமிழ் இயக்குநர்களுக்கு இருக்கும் ஆவலை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இப்படிப்பட்டவர்களையெல்லாம் காதலிக்க வேண்டுமென்றால் ஒரு பெண் முட்டாளாக இருந்துதானே ஆக வேண்டும்?


முன்பெல்லாம் டவுனுக்குப் படிக்கப் போன பண்ணையார் மகள், டவுசர், தொப்பி சகிதம், தன்னுடன் படிக்கும் தோழிகளுடன், சுமார் இருபது முப்பது வருடங்கள் கழித்து சொந்த கிராமத்துக்குத் திரும்புவாள். அங்கே சிவப்பு சட்டை, மஞ்சள் நிற ஷூ அணிந்து வயல் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ‘பி.ஏ’ பட்டதாரி நாயகனின் வயலுக்குள் காரை ஓட்டிச் சென்றபடி, “ஹே..வில்லேஜ் பாய்..யா!” என்றபடி சிரித்துச் செல்வாள்.


பட்டணத்துப் பெண்களின் கொட்டத்தை அடக்க கிராமத்தில் வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களைக் கிளப்பிக் கொண்டு வந்து ஒரு ஈவ் டீசிங் பாடலை நாயகன்
பாடுவான். “நீ என்ன படிச்சாலும் பொம்பள தான்.. நான் மாடு மேய்ச்சாலும் ஆம்பள தான்..” என்று பாட்டாலே புத்தி சொல்வான்.


தெய்வீகக் காதல்


நாயகி மாலையைத் தூக்கிப் போடும்போது அது பறந்துபோய் யார் கழுத்தில் விழுகிறதோ அவனே அவள் காதலனாக மாறும் தெய்வீகக் காதலுக்கும் தமிழில் இடமுண்டு. கடவுளின் முன் ஏற்றப்பட்ட தீபம் அணையாமல் காப்பாற்ற
ஓடி வரும் ஆணும் பெண்ணும் காதலில் விழுவது, கோவில் மணி ஓசை கேட்கும்போது மங்களகரமாக நடந்து செல்லும் நாயகியை அரைக்கோணப் பார்வையில் கண்டு நாயகன்
சிலிர்ப்பது போன்ற தெய்வீக அனுபவத்தையும் இயக்குநர்கள் சாத்தியப்படுத்துகிறார்கள்.


காதலையே சுவாசித்து, காதலையே தின்று காதலையே அருந்தி உயிர் வாழும் தமிழ் சினிமாவில் நாயகனின் வீரம் வெளிப்படும் காட்சிகளில் மட்டும் காதலை எதிர்பார்க்கக்கூடாது. சூர சம்ஹாரம் நடக்கும்போது மன்மதன் முருகனாக மாறிவிடுவார். ஆனால் அடுத்த காட்சியிலேயே முருகன் மீண்டும் மன்மத அவதாரம் எடுத்து ரதியுடன் குளிர்ப் பிரதேசங்களுக்குக் கிளம்பிக் காதலைப் புதுப்பித்துக்கொள்வார்.


இதுபோன்ற பல காட்சிகளைத் தங்கள் மேலார்ந்த கற்பனை மூலம் உருவாக்கித் தொண்டு செய்துவந்த மூத்த படைப்பாளிகளும் இளைய படைப்பாளிகளும் ’தமிழ் வாழ்வில் காதல்’ என்ற தலைப்பின் கீழ் யார் ஆய்வு செய்தாலும் அதில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படுவார்கள் என்பது மட்டும் திண்ணம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்