அலசல்: வசூல் களம் - ஓட்டைப் பாத்திரத்தில் ஊற்றும் தண்ணீர்?

By கா.இசக்கி முத்து

அண்மையில் தமிழ்த் திரையுலகை உலுக்கியது ஒரு ‘வாட்ஸ் அப்’ குரல் பதிவு. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர், பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன். சமீபகாலத் திரைப்படங்களின் வெற்றியையும் வசூல் நிலவரத்தையும் கண்டு கொதித்தெழுந்து, கடுமையான குற்றச்சாட்டுக்களை அதில் எழுப்பியிருந்தார். அடுத்தடுத்து வரும் அரசியல் பரபரப்புகளால் பொதுமக்கள் பலரும் தொலைக்காட்சி செய்திகளில் மூழ்கியதில் திரையரங்குக்கு வரும் கூட்டம் வெகுவாகக் குறைந்தது. இந்நிலையில் விநியோகஸ்தரின் இந்தக் குற்றச்சாட்டு திரையுலகையும் தாண்டி ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எந்தப் படம் ஓடியது?

அவரின் அந்த ஆதங்கக் குரல் தற்போதைய நிலையை அம்பலப்படுத்துகிறது. “ ‘கபாலி', ‘ரெமோ', ‘பைரவா', ‘சி 3', ‘கொடி', ‘போகன்', ‘கத்தி சண்டை' உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்துமே விநியோகஸ்தர்களுக்குப் பெரும் நஷ்டத்தை அளித்துள்ளன . இதையொட்டி பெரிய நடிகர்கள் தங்கள் படங்களை, தயாரிப்பாளர்களோடு இணைந்து வெளியிட வேண்டும் எனக் கோருவது என எங்களின் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு புதிய முடிவை முடிவெடுத்திருக்கிறோம். அப்போதுதான் வசூல் எவ்வளவு என்பது அவர்களுக்குத் தெரியவரும்” என்று அவர் கூறியிருப்பதன் மூலம் விநியோகஸ்தர்கள் சந்திக்கும் வசூல் சிக்கலும் அவர்களது எதிர்பார்ப்பும் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

விநியோக முறைகள்

இன்றைய சினிமா வியாபாரத்தில் அவுட்ரைட், மினிமம் கியாரண்டி (எம்.ஜி.), விநியோகம் ஆகிய முறைகள் நடைமுறையில் பின்பற்றப்படுகின்றன.

# அவுட்ரைட்: படத்தை மொத்தமாக விலை கொடுத்து வாங்கிவிடுவது. லாபம், நஷ்டம் எல்லாமே வாங்கியவருக்குத்தான். இம்முறையில் தயாரிப்பாளர் நல்ல லாபம் வைத்து விற்கலாம்.

# எம்.ஜி.: தயாரிப்பாளர் அதிக லாபம் இன்றி படத்தை மொத்தமாகக் கொடுத்துவிடுவது. நஷ்டம் வந்தால் தயாரிப்பாளரிடம் கேட்கக் கூடாது. லாபம் வந்தால் கொடுத்த தொகை போக மீதமுள்ள பணத்தில் 15% கமிஷன் வழங்கப்படும். கமிஷன் தொகை போக உள்ள பணத்தில் 50 - 50 பிரித்துக்கொள்வார்கள்.

# விநியோக முறை: படத்தை வாங்கிய தொகை போக வரும் லாபத்தில் கமிஷன் தொகை போக மீதமுள்ள பணத்தைத் தயாரிப்பாளருக்கு அளிக்க வேண்டும். நஷ்டம் என்றால், நஷ்டப்பட்ட தொகையைத் தயாரிப்பாளர் விநியோகஸ்தருக்கு வழங்க வேண்டும். முன்பணம் இல்லாமல் விநியோக உரிமை வழங்கப்பட்டால் வரும் பணத்தை இருவரும் பிரித்துக்கொள்வார்கள்.

அவுட்ரைட், எம்.ஜி. இரண்டிலுமே ராயல்டி முறை என ஒரு வகை உள்ளது. அதில் ஒரு படத்தை வாங்கினால் க்யூப், யு.எஃப்.ஓ.முதலான வெளியீட்டு முறைகள், விளம்பரங்கள் என எல்லாவற்றுக்கும் விநியோகஸ்தர்தான் செலவழிக்க வேண்டும். இதர விநியோக முறை அனைத்திலுமே தயாரிப்பாளர்தான் க்யூப், யு.எஃப்.ஓ. செலவுகளை மேற்கொள்வார். அவுட்ரைட், எம்.ஜி. ஆகியவற்றில் நஷ்டம் வந்தால் தயாரிப்பாளரிடம் கேட்கக் கூடாது என்பது விதிமுறை.(க்யூப், யு.எஃப்.ஓ என்பது பிலிம் சுருளுக்குப் பதிலாகத் திரைப்படங்களை டிஜிட்டல் பிரதியாகத் திரையிடும் முறை).

விநியோகஸ்தர் ஒரு படத்தை வாங்கிய பிறகு திரையரங்குகளுக்குக் கொடுப்பதில் சில முறைகள் உள்ளன. விநியோகஸ்தர் அவுட்ரைட் முறையில் திரையரங்குகளுக்குக் கொடுப்பது Fixed Hire என்று பெயர். இம்முறை அதிகம் புழக்கத்தில் இல்லை. இதைத் தவிர எம்.ஜி., முன்பணம் வாங்கிக்கொண்டு கொடுப்பது ஆகிய முறைகளிலும் திரையரங்குகளுக்குக் கொடுக்கப்படுகிறது. சென்னையில் உள்ள சத்யம் மாதிரியான முன்னணித் திரையரங்குகளுக்குப் படத்தைக் கொடுத்துவிட்டு, அதில் ஷேர் வாங்கிக்கொள்ளும் முறையும் உள்ளது.

பிரச்சினைக்குக் காரணம் என்ன?

சிறு ஊர்களில் 1,000 இருக்கைகள் கொண்ட திரையரங்குகளில் சிறு முதலீட்டுப் படங்களைத் திரையிட்டால் 100 இருக்கைகள் நிரம்பினாலே நல்ல வசூல்தான். பெரிய நடிகர்களின் படங்களுக்குச் சுமார் 700 இருக்கைகள் நிரம்பினாலே பெரிய வெற்றிதான். 1,000 இருக்கைகள் கொண்ட திரையரங்கில் 100 பேர் வரும் படத்தை நான் ஏன் ஓட்ட வேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் கேள்வி. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் சிறுமுதலீட்டுப் படங்களைக் கண்டுகொள்வதில்லை.

இப்படிப் பெரிய படங்களுக்கு மட்டுமே முன்னிலை அளிப்பதால், பெரிய படங்கள் வெளியாகும்போது விநியோகஸ்தர்கள் பெரிதாக முன்தொகை கேட்கிறார்கள். திரையரங்கு உரிமையாளர்கள் பெரிய தொகையை அளிக்கத் தயாராக இருப்பது தயாரிப்பாளருக்குத் தெரிந்துவிட்டால், அவர் விநியோகஸ்தரிடம் பெரிய தொகையை முன்பணமாகக் கேட்கிறார். இது நடிகர்களுக்குத் தெரிந்தால், அவர்கள் சம்பளத்தை அதிகமாகக் கேட்கிறார்கள். பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்பணம் அளிக்கத் திரையரங்கு உரிமையாளர்கள் தயாராக உள்ளார்கள். மற்ற படங்களுக்கு டெபாசிட் முறையில் கூடப் பணம் கொடுப்பதில்லை.

டிஜிட்டல் மாற்றத்தால் நிலவும் சிக்கல்

முன்பு பிலிம் சுருளில் ஒரு படம் உருவாகும்போது (ஒரு பிரதி எடுக்க சுமார் 70 ஆயிரம் வரை செலவாகும்), சிறு ஊர்களில் குறிப்பிட்ட இந்தத் திரையரங்கில் போட்டால் மட்டுமே வசூல் இருக்கும் என்று கணக்கிட்டு, அதற்கு மட்டுமே அளிப்பார்கள். தற்போது அனைத்துமே டிஜிட்டல் என்பதால் அதிக பிரிண்ட்கள் போடப்பட்டு, அனைத்துத் திரையரங்குகளுக்கும் கொடுக்கிறார்கள். சின்ன ஊர்களில் உள்ள திரையரங்கில் 500 இருக்கைகள் நிரம்பினாலே பெரிய விஷயம். அப்படிப்பட்ட ஊர்களில் 3 திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதால் யாருக்குமே லாபம் இருக்காது.

சில ஊர்களில் விநியோகஸ்தர்கள் திரையரங்குகளைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எல்லாத் திரையரங்குகளுக்கும் பெரிய நடிகரின் படத்தைக் கொடுத்துவிட்டு, 5% கமிஷன் வாங்கிவிடுகிறார்கள். அனைத்துத் திரையரங்குகளிலும் வெளியாவதால், 2-வது நாளே கூட்டம் முற்றிலுமாகக் குறைந்துவிடுகிறது. ஒரு திரையரங்கம் மட்டும் போதும் என்று தயாரிப்பாளர் சொன்னாலும், கொடுத்தால் எல்லாத் திரையரங்குக்கும் கொடுங்கள் இல்லையென்றால் முடியாது என்று விநியோகஸ்தர்கள் தடுத்துவிடுகிறார்களாம். பெரிய நடிகர்கள் படம் வேண்டுமானால், திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் சொல்வதைக் கேட்டாக வேண்டும்.

திரையரங்கில் நிலவும் சிக்கல்

தமிழகத்தில் இன்று பல திரையரங்குகளில் ஏ.சி. வசதி இல்லை. டாய்லெட், சீட் அமைப்புகள் உள்ளிட்ட இதர வசதிகளும் சுத்தமாக இல்லை. இப்படியிருக்கும் பட்சத்தில் நாங்கள் ஏன் 100 ரூபாய் கொடுத்துத் திரையரங்கு வந்து படம் பார்க்க வேண்டும், 50 ரூபாய் கொடுத்து டிவிடி வாங்கினால் மொத்தக் குடும்பமும் வீட்டிலேயே சகல வசதிகளுடன் பார்த்துவிடுவோமே என்று மக்கள் நினைக்கிறார்கள். சில திரையரங்குகளில் டிக்கெட் விலையைவிட, அங்கு விற்கப்படும் பாப்கார்ன் விலையும், பார்க்கிங் கட்டணமும் அதிகம்.

விநியோகஸ்தர்களின் பாதுகாப்பின்மை

முன்பு ஒரு படத்தின் விநியோக உரிமைக்கு 1 கோடி ரூபாய் என்றால் 10 லட்சம் முன்பணம் கொடுத்து உரிமையைப் பெற்றுவிடுவார்கள். திரையரங்கு உரிமையாளர்களிடம் முன்பணம் பெற்று மீதிப் பணத்தைக் கட்டுவார்கள். இன்று நிலைமை தலைகீழ். டிஜிட்டல் முறை வந்த பிறகு திரையரங்குகளுக்குள் போட்டி என்பதே இல்லை. எம்.ஜி. தர மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்களிடம் கூறுகிறார்கள். விநியோகஸ்தர்களோ பெருவிலை கொடுத்துப் பட உரிமையைக் கைப்பற்றுகிறார்கள். இதனால் மொத்த ரிஸ்க்கும் விநியோகஸ்தரின் தலை மேல் உள்ளது. இதனால் கடன் அதிகமாக ஆரம்பித்தவுடன், பைனான்சியர்களிடமிருந்து நெருக்குதல் வரும். இதனைச் சமாளிக்கத் தொடர்ச்சியாகப் பெரிய நடிகர்களின் படங்களை வாங்கி விநியோகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஷேர் அடிப்படையில் தயாரிப்பாளருக்கு 50 கோடிக்கு மேல் வந்த ஒரே படம் ‘எந்திரன்'. 40 கோடியைத் தாண்டிய படங்கள் ‘துப்பாக்கி', ‘கத்தி', ‘வேதாளம்', ‘தெறி'. நிலைமை இப்படி இருக்க, ஒரு சில புதிய விநியோகஸ்தர்கள், பெரிய நடிகர்களின் படங்களை 45 கோடி கொடுத்துத் தமிழ்நாட்டு உரிமையைக் கைப்பற்றி நஷ்டப்படுகிறார்கள் என்று அனுபவம் வாய்ந்த விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

நடிகர்களின் அணுகுமுறை

தங்களுடைய படத்தின் வியாபாரம் என்ன என்பதை ஒரு சில நடிகர்களைத் தவிர யாருமே தெரிந்துகொள்வதில்லை. பட வெளியீட்டில் உள்ள சிக்கல்களோ வசூல் விவரமோ பல நடிகர்களுக்குத் தெரியாது என்று தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். “பல பெரிய நடிகர்களின் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், வெளியே சொல்ல மாட்டார்கள். சொன்னால் அந்த நடிகரிடம் அடுத்த கால்ஷீட் கேட்க முடியாது. இதனாலேயே பல முன்னணித் தயாரிப்பாளர்கள் படம் எடுப்பதை நிறுத்திவிட்டார்கள்” என்று கொதிக்கிறார் முன்னணி விநியோகஸ்தர் ஒருவர்.

என்னதான் தீர்வு?

திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் உட்கார்ந்து பேசி, தற்போதுள்ள சூழலை நடிகர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். சிறு முதலீட்டுப் படங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். டிஜிட்டல் இருக்கிறதே என்பதற்காக ஏகப்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிடக் கூடாது என்றெல்லாம் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் இவற்றையெல்லாம் கலந்து பேச வேண்டும். வெறுமனே வார்த்தைப் போர் நடத்திக்கொண்டிருந்தால், ஃபைனான்சியர்கள் மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசுவார்களா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்