‘‘எந்த ஒரு மனிதனும் தன்னோட நேர்மையை நேசிக்கிறவன்தான். அதை அவ்வளவு சீக்கிரம் கெடுத்துக்கொள்ள அவன் தயாராக இல்லை. ஆனால், சந்தை வணிகம், உலகமயமாதல் போன்ற முற்றிலும் அந்நியமான ஒரு சூழலில் சிக்கும்போது தன்னோட மரியாதையை இழக்கிறான். ஒரு கட்டத்தில் கடனாளியாகவும் ஆகிறான்.
இந்த இடத்தில் அவனால் இரண்டே முடிவுகள்தாம் எடுக்க முடிகின்றன. ஒன்று ஏமாற்றுக்காரனாக மாறணும். அல்லது அவன் வாழும் இடத்தில் இருந்து இடம் பெயரணும். நம் கண் முன்னால் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வலிமிகுந்த சாமானியனின் வாழ்க்கையைத்தான் ‘வெள்ளை யானை’ படமாக உருவாக்கியிருக்கிறேன்!’’ என்று உரையாடத் தொடங்கினார் சுப்ரமணியம் சிவா.
விவசாயத்துக்கும் ‘வெள்ளை யானை’ என்ற தலைப்புக்கும் என்ன தொடர்பு?
புராணத்தில் இந்திரன் பயன்படுத்துவது வெள்ளை யானை வாகனம். நம் இலக்கியத்தில் வயலும் வயல் சார்ந்ததுமான மருத நிலத்துக்கு தலைவன் இந்திரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சோறு விளையும் இடம்தான் சொர்க்கம் என்போம். அந்தச் சொர்க்கம் இன்று பாலைவனமாகிக்கொண்டிருக்கிறது. மனிதன் உட்பட உலக உயிரினங்களின் வாழ்க்கை உயிரை நம்பி இருக்கிறது.
உயிர் உணவை நம்பி இருக்கிறது. உணவு உற்பத்தி விவசாயத்தை நம்பி இருக்கிறது. விவசாயி நிலத்தை நம்பி இருக்கிறான். நிலம் நீரை நம்பி இருக்கிறது. இதுதான் இந்த உலகம் இயங்குவதற்கான உயிர்ச் சங்கிலி. நீர் இல்லாத நிலத்தைப் பாலை என்கிறோம். அதனால்தான் ‘நீரின்றி அமையாது உலகு’ என்று உறுதிபட உரைத்துச் சென்றார் நமது வள்ளுவப் பாட்டன்.
அப்படிப்பட்ட நீரை இழந்து நிற்கும் விவசாயத் தலைமுறையின் கதையை உருவகமாகச் சுட்டுகிறது இந்தத் தலைப்பு. கதாநாயகனுக்குச் சூட்டப்பட்டிருக்கும் ‘வெள்ளக்குஞ்சு’ என்ற பெயரையும் இந்த இடத்தில் பொருத்திக்கொள்ளலாம்.
சமீக காலமாக விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்ட படங்கள் அதிகரித்திருக்கின்றன. ‘வெள்ளை யானை’ எந்த வகையில் வேறுபட்டு நிற்கிறது?
நிலத்தைப் பிரித்துவிட்டோம். கடல், வான் எல்லைகளையும் பிரித்துவிட்டோம். காற்றையும் தண்ணீரையும் மட்டும்தான் விட்டு வைத்திருந்தோம். அதில் தற்போது மனித இனம் தண்ணீரைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கிறது. உங்கள் நிலத்துக்காக இயற்கை வழங்கிய தண்ணீரை யாரும் எப்போதும் உறிஞ்சிக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.
தண்ணீர் எனும் பூமியின் குருதி அனைவருக்கும் பொதுவானது என்ற நிலை மாறி, தண்ணீர் அரசியலாகவும் விற்பனைப் பொருளாகவும் மாறிவிட்டது. இப்படிப்பட்ட கையறு நிலையில் தண்ணீரை நம்பி இருக்கிற விவசாயி, தண்ணீர் இல்லாத நிலையைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறான்.
ஒரு விவசாய மண்ணில் பிறந்து, விவசாயம் செய்த மனிதனாக இந்தக் கதைக் களத்தைப் படமாக்க நினைத்தேன். இதில் காதல், சாதியம், அடிதடி என இல்லாமல் விவசாயம் செய்யும் மக்கள் எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், அதில் இருந்து எப்படி மீள்கின்றனர் என்பதை அவல நகைச்சுவை கலந்து தொட்டிருக்கிறேன்.
சமுத்திரகனி கதாநாயகன் எனும்போது கருத்துப் பிரச்சாரம் இருக்குமா?
மண்ணின் வாழ்வைச் சொல்ல இயல்பான கதாநாயகன் தேவை. கனி அண்ணன் இந்தப் படத்தில் பெரிதாக வசனம் பேச மாட்டார். அவரது செயல்பாடுகள் மட்டுமே வெளிப்படும். அவரது பகுதிகள் ரொம்பவும் புதிதாகத் தெரியும். ‘என்னப்பா.. நம்ம ராமராஜனுக்குப் பிறகு நான்தான் அதிக நாட்கள் டவுசர் போட்டுக்கிட்டு நடிச்சிருப்பேன் போலிருக்கே!’ என்று சிரித்தார்.
தஞ்சாவூரைச் சுற்றித்தான் படப்பிடிப்பு நடத்தினோம். படத்துக்காக 3 ஏக்கர் நிலத்தை உழுது, சேறாக்கினோம். அதில் இறங்கி ஏர் உழவும், நாற்று நடவும் செய்ய வேண்டும். எல்லாமும் செய்தார். படத்தில் பெரும்பாலும் அரைக்கால் சட்டை, பனியனோடும், பல காட்சிகளில் வெற்று உடம்போடும் வந்திருப்பார்.
சேறு, சகதி, நாற்று, கலப்பை என அவரைவிட்டால் இந்தக் கதாபாத்திரத்துக்கு ஆளே இல்லை என்பது படம் பார்க்கும்போது புரியும். அதேபோல படத்தில் அமுதாவாக வர்றாங்க நாயகி ஆத்மிகா. கனி அண்ணனோட மனைவியா நடிச்சிருப்பாங்க. கிராமத்துல மண்வெட்டி, கலப்பை செய்கிற தொழில் பின்னணியில் வளர்ந்தவங்க. அதுவும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கு.
‘சீடன்’ படத்துக்குப் பிறகு ஏன் நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டீர்கள்?
நேரடியாக நான் படம் இயக்கவில்லை என்றாலும் அமீர் அண்ணன் படம், விஜய் மில்டன், வெற்றிமாறன், வேல்ராஜ், தனுஷ் என நண்பர்கள் இயக்கிய பல படங்களில் ஓயாமல் வேலை பார்த்துக்கொண்டே இருந்தேன். அதில் நிறைய மேன்மையும் அடைந்ததாக நினைக்கிறேன். அடுத்து எல்லாமும் சரியாக அமைந்ததால் என் பட வேலைகளில் குதித்தேன். இனித் தொடர்ந்து என் படங்களைப் பார்க்கலாம்.
நீங்கள் இயக்கிய ‘யோகி’ படத்தில் அறிமுகமான யோகிபாபுவின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு நகைச்சுவை நடிகனோட புத்திசாலித்தனம் படம் வழியே மக்களுக்குத் தெரியவே கூடாது. அந்த வகையில் பெரிய திறமைசாலியான யோகிபாபு படங்களில் தனது வேலையை ’இன்னசென்ட்’ மனிதராகவே செய்து வருகிறார். யோகி படத்தில் அவருக்குச் சின்ன ரோல்தான்.
இருந்தாலும், அதை அவ்வளவு சிறப்பாகச் செய்திருப்பார். இன்றைக்கு அதிகப் படங்களில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட யோகிபாபு ‘வெள்ளை யானை’ படத்தில் கொழுக்கட்டை என்ற கதாபாத்திரத்தில் குணச்சித்திர நடிகராக வருகிறார். மக்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.
கதை, கதாபாத்திரங்கள், காட்சிகளை யோசிக்கும் இயக்குநரான நீங்கள் நடிகர் தனுஷ் ரசிகர் மன்றத்துக்குத் தலைவராக இருக்கிறீர்களே?
எந்த ஒரு வேலையைக் கையில் எடுத்தாலும் அதைச் சிறப்பாக செய்ய வேண்டும். என் புத்தி சொல்வது அதுதான். இயக்குநராக இருந்தால் அதை மட்டுமே செய்யணும் என்பது விதிவிலக்கல்ல. அப்படி நானே விரும்பி ஏற்றுக்கொண்டதுதான் இந்தப் பொறுப்பு.
7 லட்சம் பேர் கொண்ட ஒரு ரசிகர் மன்றம் இது. ஒவ்வொரு ரசிகனையும் ஒரு குழந்தைக் கலைஞனாகவே பார்க்கிறேன். எந்த ஒரு நடிகனின் ரசிகனும் சமூகக் குற்றங்களில் ஈடுபடுவதில்லை. கலையை ரசிப்பவர்களால் சமூக அமைதி நிலவும்.
நாம் கையாளும் பொழுதுபோக்குடன் அறிவூட்டலும் நடக்கும்போது ரசிகனும் தன்னை மேம்படுத்திக்கொள்கிறான். தனுஷின் படங்கள் பெரும்பான்மையும் அறிவூட்டக்கூடியவையே. அந்த மாதிரியான ஒரு நடிகரின் ரசிகர்களை அரவணைப்பதைச் சிறந்த வேலையாக நினைத்து செய்து வருகிறேன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
32 mins ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago