இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது ‘கரகாட்டக்காரன்’ படம் ஓடிக்கொண்டிருந்தபோது பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரம். ‘மாரியம்மா... மாரியம்மா..’ பாடலுக்கு தியேட்டரில் சாமி வந்து ஆடும் பெண்களின் படம் இடம்பெற்ற விளம்பரம்தான் ‘கரகாட்டக்காரன்’ படத்தைப் பார்க்கத் தூண்டியது.
திருச்சியில் ஜூபிடர் தியேட்டரில் ஆரவாரமாக ஓடிக்கொண்டிருந்த ‘கரகாட்டக்காரன்’ படத்துக்கு அம்மா அழைத்துசென்றபோது கிளைமாக்ஸில் வரும் ‘மாரியம்மா...’ பாட்டுக்காகப் படம் தொடங்கியதிலிருந்தே காத்திருந்தேன்.
அந்தப் பாட்டு வருவதற்கு முன்பாக தியேட்டரில் விளக்குகளை ஒளிரவிட்டுவிட்டார்கள். பெண்கள் பகுதியில் சூடம், திருநீறு, தீப்பெட்டி சகிதம் தியேட்டர் ஊழியர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். நாடி, நரம்பை தூண்டிவிடும் இசையுடன் கூடிய ‘மாரியம்மா... மாரியம்மா...’ பாடலைக் கேட்டதும் உண்மையிலேயே பெண்கள் பலர் சாமியாட்டம் போட்டார்கள்.
அப்படி ஆடும் பெண்களுக்குச் சூடம் ஏற்றி, திருநீறு பூசி சாந்தப்படுத்தும் பணிகளும் கச்சிதமாக நடந்தேறின. ‘கரகாட்டக்காரன்’ படத்தைத் தியேட்டரில் பார்த்தபோது கிடைத்த மறக்க முடியாத அனுபவம் இதுதான்.
அந்தப் படத்தைப் பற்றி எப்போது நினைத்தாலும் வரும் நினைவும் இதுதான். இப்போதும் அதன் எண்ண ஓட்டங்கள் அந்தப் பழைய நினைவுகளைக் கிளறிகொண்டிருக்கின்றன. 1980-களின் இறுதியில் தமிழ் சினிமாவில் மாயாஜாலத்தை நிகழ்த்திய படம் ‘கரகாட்டக்காரன்’.
இதோ, அந்தப் படம் வெளியாகி ஜூன் 16-ம் தேதியுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ‘கரகாட்டக்காரன்’ படத்தையோ, அதன் பாடல்களையோ, அதன் காமெடி காட்சிகளையோ டி.வி.யில் இப்போது பார்க்க நேர்ந்தாலும், ரிமோட் ஓய்வுக்குச் சென்றுவிடும். காலம் கடந்தும் ‘கரகாட்டக்கார’னுக்குக் கிடைக்கும் மரியாதை அது.
கிராமிய கதாபாத்திரங்களுக்கும் கரகம் எடுத்து ஆடும் கரகாட்டக் கலைஞர்களின் கதாபாத்திரங்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தியது ராமராஜன் - கனகா இணை. நகைச்சுவைக்கு கவுண்டமணி - செந்தில் இணை. கூடவே கோவை சரளாவும் ஜால்ரா கூட்டமும். சென்டிமென்டுக்கு சண்முகசுந்தரம், காந்திமதி, கோகிலா.
வில்லத்தனத்துக்கு சந்தானபாரதி, சந்திரசேகர். இவர்கள் எல்லோருக்கும் மேலே படத்தின் முக்கிய நாயகன் இசைஞானி இளையராஜா. ‘கரகாட்டக்காரன்’ படத்தின் காம்போவே அவ்வளவுதான்.
‘கரகாட்டக்கார’னின் வெற்றி என்பது 80-களின் இறுதியில் ஈடு இணையில்லாததாக அமைந்தது. அந்தக் கால கட்டத்தில் கதாநாயகர்களின் சாகசங்களைக் கொண்ட படங்கள் வந்துகொண்டிருந்த வேளையில், ஒரு தென்றலைப் போல வந்த படம் ‘கரகாட்டக்காரன்’. ரஜினி, கமல் எனப் பெரிய ஹீரோவுக்குக் கிடைக்கும் வரவேற்பு ‘கரகாட்டக்காரன்’ படத்துக்கு எடுத்த எடுப்பிலேயே கிடைக்கவில்லை ‘ஸ்லோ பிக்அப்’ படம்தான்.
ஆனால், அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்தவர்கள், அதைப் பற்றிச் சிலாகித்துப் பேசிப்பேசியே அந்தப் படத்துக்கு விளம்பரத்தைத் தந்தார்கள். படத்தைப் பற்றியும், அதன் இசையைப் பற்றியும் பாடலைப் பற்றியும் நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றியும் குறிப்பாக வாழைப்பழ காமெடியையும் ஆராதித்த ரசிகர்களால் பின்னர் அந்தப் படம் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி சென்றது.
‘கரகாட்டக்கார’னின் வெற்றிக்கு எதை முக்கியக் காரணமாகச் சொல்ல முடியும்? அந்தப் படத்தைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனைமிக்க காட்சி பிடித்திருக்கலாம். ஆனால், தமிழர்களின் மரபு சார்ந்த அடையாளத்தை வெகுமக்கள் ஊடகம் மூலமாக மீட்டுருவாக்கம் செய்ததே படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.
அதற்கு முன்புவரை சினிமாவில் காட்சியின் ஊடாகக் காட்டுப்பட்டுவந்த ‘கரக’ கலையைப் படம் முழுக்க காட்டிய இயக்குநரின் கைவண்ணமும் பாராட்டத்தக்கது. கங்கை அமரன் இயக்குநராகப் பரிணமித்த காலத்தில் தமிழின் அடையாளங்களை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்த படம் இது. ‘கரகம்’ எடுத்து ஆடும் ஒரு சமூகத்தின் இசையைப் பட்டிதொட்டியெங்கும் தட்டி எழுப்பி பார்வையாளனுக்குள் ஒருவிதமான களிப்பை ‘கரகாட்டக்காரன்’ ஏற்படுத்தியது. அந்த இசைக்குக் காரணகர்த்தாவாக விளங்கியது இசைஞானி இளையராஜா.
‘கரகாட்டக்காரன்’ படத்தின் கதை புதுமையானதும் இல்லை. கொத்தமங்கலம் சுப்பு எழுதி 1968-ல் வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் தாக்கத்தில் உருவாகி கிராமியக் கதைக் களத்தையும் கிராமியக் கலையையும் பொருத்திக்கொண்டு வெற்றி பெற்ற ஜனரஞ்சக இசைச்சித்திரம்தான் ‘கரகாட்டக்காரன்’.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நாகஸ்வரக் கலைஞருக்கும் நாட்டியக் கலைஞருக்கும் இடையே காதல் கதை என்றால், ‘கரகாட்டகாரன்’ படத்தில் இரு கரகாட்டக் கலைஞர்களுக்கு இடையே ஏற்படும் காதல்தான் கதை.
‘தில்லானா மோகனம்பாள்’ படத்தில் தனியாக நகைச்சுவைக் கூட்டம், திகட்ட வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள், மனதை மயங்கச் செய்யும் பாடல்கள், காதலுக்கு அம்மா குறுக்கீடு, நாயகிக்காக மல்லுக்கட்டும் வில்லன் ஆகியவைதான் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் கதைக் களம்.
அதே சட்டகத்திலிருந்து பெரிதாக மாறாமல் வெளியான படம்தான் ‘கரகாட்டக்காரன்’. தனியாக நகைச்சுவைக் கூட்டம், திகட்ட வைக்கும் நகைச்சுவை காட்சிகள், மனதை மயங்க செய்யும் பாடல்கள், காதலுக்கு மாமா குறுக்கீடு, நாயகிக்காக மல்லுக்கட்டும் வில்லன் என ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் என்னென்னவெல்லம் திரைக்கதையில் இருந்ததோ அந்த ‘பேக்கேஜ்’ ‘கரகாட்டக்கார’னிலும் உண்டு.
‘தில்லானா மோகனம்பாள்’, ‘கரகாட்டக்காரன்’ சாயலில் 1999-ல் வெளியான ‘சங்கமம்’ படத்தின் கதையும் அதே டெம்பிளேட் கதைதான். வெவ்வேறு காலகட்டங்களில் ‘தில்லானா மோகனம்பாள்’, ‘கரகாட்டக்காரன்’, ‘சங்கமம்’ வந்திருந்தாலும் ‘கரகாட்டக்கார’னின் வெற்றி 30 ஆண்டுகளைக் கடந்து இன்றும் பேசப்படுகிறது.
இன்னும் பல தலைமுறை தாண்டியும் ‘கரகாட்டக்கார’னின் இசைப் பெருமையும் ராமராஜன் என்ற வசூல் நாயகனை உருவாக்கிய வரலாறும் தமிழ் சினிமாவில் பேசப்படும். வெகுஜன சினிமா என்ற வகைமையில் ‘கரகாட்டக்காரன்’ ஏற்படுத்திய தடம் இன்னும் தொடர்வதே அந்தப் படத்தின் உண்மையான வெற்றி.
தொடர்புக்கு:
karthikeyan.di@thehindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago