மூன்றாவது ஆண்டாகப் பரபரப்புடன் தொடங்கிவிட்டது ‘பிக் பாஸ்’. குடும்பத்துக்கு, உடற்பயிற்சி செய்ய, வாசிக்க, உறவினர்கள் - நண்பர்களைப் பார்க்க வருடம் முழுவதும் நேரமில்லாத நபர்களுக்கும் கூட, இந்த 100 நாட்களில் ‘பிக் பாஸ்’ பார்க்க மட்டும் எப்படியோ நேரம் கிடைத்துவிடுகிறது.
மூன்றாவது முறையாகவும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், ஃபாத்திமா பாபு, லாஸ்லியா, சாக்ஷி அகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ், ரேஷ்மா, மீரா மிதுன் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை
(ஜூன் 23) ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியின் முதல் எபிஸோடு ஒளிபரப்பானது. அதில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்திய கமல்ஹாசன், ‘இந்த நிகழ்ச்சி மூலம் உங்களுக்குப் பெரிய அளவில் புகழ் கிடைக்கும். நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும்’ என்பது போல் பேசினார்.
அவர்தான் அப்படிப் பேசினார் என்றால், ‘இந்த நிகழ்ச்சி மூலம்தான் எங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது’ எனப் போட்டியாளர்களும் பேசினார்கள். ஆனால், அது உண்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த இரண்டு சீஸன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களையும், அவர்களின் தற்போதைய நிலையையும் பார்த்தால், ‘பிக் பாஸ்’ புகழ் என்பது வெறும் மாயை மட்டும்தானோ எனத் தோன்றுகிறது.
ஜூலியும் ஓவியாவும் எங்கே?
‘பிக் பாஸ்’ என்றாலே அனைவரின் நினைவுக்கும் வரும் முதல் பெயர் ‘ஜூலி’. சினிமா அடையாளமின்றி, அதுவும் முதல் சீஸனிலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ‘வீரத் தமிழச்சி’ அவர். ஜல்லிக்கட்டுப் போராட்டம் அதற்குக் காரணமாக அமைந்தது.
மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் நின்று வீரமுழக்கம் இட்டவரை, ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் அலறவிட்டு உலகுக்கே ஜூலியை அறிமுகப்படுத்தியது விஜய் டிவி. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி கெட்டவராகக் காட்டப்பட்டாலும், அவருடைய கருத்தையும் மதிப்பவர்கள் இருந்தனர். ‘பிக் பாஸ்’ என்றால் ஜூலி என்று சொல்லும் அளவுக்கு இன்றைக்கும் ஜூலி புகழ் ஓங்கி நிற்கிறது. ஆனால், அதனால் கிடைத்த பலன்?
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற குழந்தைகளுக்கான டான்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 6 சீஸன்களாக நடைபெற்றுவந்த அந்த நிகழ்ச்சி, ஜூலி தொகுத்து வழங்கிய 6-வது சீஸனுடன் இழுத்து மூடப்பட்டது.
அதன்பிறகு, ‘அம்மன் தாயி’ என்ற படத்தில் அம்மனாக நடித்தார். அந்தப் படத்தின் ட்ரெய்லர், கடந்த வருடம் (2018) அக்டோபர் மாதம் வெளியானது. ஆனால், இன்னும் படம் ரிலீஸாகவில்லை.
இந்த நிகழ்ச்சியில் ஜூலி எந்த அளவுக்கு வெறுக்கப்பட்டாரோ, அதைவிட அதிகமாகக் கொண்டாடப்பட்டவர் ஓவியா. நடிகைக்கு ஆர்மி தொடங்கிய வரலாறு, சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத ஒன்று. அவருக்குக் கிடைத்த புகழைப் பார்த்து, ‘தமிழ் சினிமாவின் அடுத்த நயன்தாரா’ இவர்தான் என்று சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாகக் கொண்டாடினார்கள் ஓவியா ரசிகர்கள்.
ஆனால், நடந்தது என்னவோ தலைகீழ். ‘கணேசா மீண்டும் சந்திப்போம்’, ‘90 எம்எல்’ என இரண்டு சுமார் படங்களில் நடித்தவர், ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் ஒரு பாடலுடன் சில காட்சிகளில் தலைகாட்டினார். ‘காஞ்சனா 3’ படத்தில் கூட ராகவா லாரன்ஸின் 3 மாமா பெண்களில் ஒருவராக நடித்தாரே தவிர, அவருக்கென முத்திரைக் காட்சிகள் எதுவும் இல்லை.
ஆமை வேகத்தில் ஆரவ்
முதல் சீஸனின் வெற்றியாளர் ஆரவ். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு ‘ஓ காதல் கண்மணி’, ‘சைத்தான்’ ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ‘ராஜபீமா’, ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என இரண்டு படங்களில் நடித்துள்ளார்.
ஏற்கெனவே சினிமாவில் ஹீரோ வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த ஆரவ்வுக்கு, ‘பிக் பாஸ்’ புகழ் கைகொடுத்து உதவியதே தவிர, முழுக்க முழுக்க அதுதான் காரணம் எனச் சொல்லிவிட முடியாது. இந்த இரண்டு படங்களின் ரிலீஸுக்குப் பிறகுதான், ஆரவ்வின் நிலை என்ன என்றும் கணிக்க முடியும்.
இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை ஓரளவுக்குப் பலன் கிடைத்தது என்றால், அது ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைஸா வில்சன் இருவருக்கும்தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு ஏழெட்டுப் படங்களில் ஹீரோவாக நடித்த ஹரிஷ் கல்யாணை, அதுவரைக்கும் பெரிதாக யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிகழ்ச்சியில் சிம்புவின் புகழ் பாட, சிம்பு ரசிகர்களின் வெளிச்சப்பார்வை அவர்மீது விழுந்தது. நிகழ்ச்சியில் இருந்து வந்ததும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ யூத் சப்ஜெக்ட் என்பதால், இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழை, அந்தப் படம் மூலம் தக்கவைத்துக் கொண்டார். அந்தப் படம் ஹிட்டாக, யுவனின் இசையும் பாடல்களும் மிக முக்கியக் காரணம். ஆனால், அதன்பிறகு வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ சரியாகப் போகவில்லை.
ரைஸாவுக்கும் இதே கதைதான். ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் அவர் இருந்தபோது, அவர் கேரக்டர் ரோலில் நடித்த ‘விஐபி 2’ ரிலீஸானது. அதன்பிறகு ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்தார். தற்போது ‘அலைஸ்’ மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘காதலிக்க யாருமில்லை’ படத்தில் நடித்துவருகிறார்.
கண்டுகொள்ளப்படாத திறமை
முதல் சீஸனிலாவது பலன் கிடைத்த சிலரின் பெயரைச் சொல்ல முடிகிறது. இரண்டாவது சீஸனில் அப்படிச் சொல்வதற்குக்கூட ஒருவருமில்லை இரண்டாவது சீஸனின் வெற்றியாளரான ரித்விகாவுக்கு, இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் குணச்சித்திர வேடங்கள்தான் இதுவரை கிடைத்து வருகின்றன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாவது ‘பரதேசி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ எனப் பெரிய படங்களில் நடித்தார். தற்போது அதுகூட இல்லை. திறமையான நடிகையாக இருந்தும், இந்த நிகழ்ச்சியில் வென்றும் கண்டுகொள்ளப்படாத கலைஞராக நம் கண்முன் சாட்சியாக நிற்கிறார் ரித்விகா.
வையாபுரியின் பார்வை
“ ‘பிக் பாஸ்’ மூலம் கண்டிப்பாகப் பட வாய்ப்பு கிடைக்காது. எனக்குத் தெரிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாருக்குமே பெரிதாக வாய்ப்பு வந்ததாகத் தெரியவில்லை. ஆரவ் இரண்டு படங்களில் நடிக்கிறார். அதுவும் ஒரு வருடம் கழித்து, இரண்டாவது சீஸன் முடிந்தபிறகு. இரண்டாவது சீஸனில் கலந்துகொண்டவர்களுக்கு, சீஸன் முடிந்தபிறகு அவர்கள் பெயர்கூட வெளியில் தெரியவில்லை. இதற்கான காரணம் என்னவெனத் தெரியவில்லை. மக்கள் மத்தியில் நல்ல புகழ் இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், எங்களை வைத்துப் படமெடுக்க சினிமாக்காரர்களுக்குப் பிடிக்கவில்லையா? அல்லது இவ்வளவு பெயர், புகழுடன் இருப்பவர்களை வைத்துப் படமெடுக்க வேண்டாமென நினைக்கிறார்களா? எனத் தெரியவில்லை. வாய்ப்பு கிடைப்பவர்களுக்குத் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கிறது.
இல்லாதவர்களுக்குக் கிடைப்பதில்லை. ‘பிக் பாஸ்’ இதில் எந்தவிதப் பங்கையும் வகிக்கவில்லை” என்கிறார் முதல் சீஸனில் போட்டியாளராகக் கலந்துகொண்ட நகைச்சுவை நடிகர் வையாபுரி.
உண்மை இப்படி இருக்க, இந்த நிகழ்ச்சியால் வாழ்வு அல்லது மறுவாழ்வு கிடைக்கும் என நினைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இந்த முறையாவது அற்புதத்தை நிகழ்த்துமா என்பதும் கேள்விக்குறிதான். இந்த சந்தேகம் எழ, கடந்த இரண்டு சீஸன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களே சாட்சி!
தொடர்புக்கு:
cauvery.manickam@thehindutamil.co.in
‘பிக் பாஸ்’ புகழ் என்பது வெறும் மாயை மட்டும்தானா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 mins ago
சிறப்புப் பக்கம்
27 mins ago
சிறப்புப் பக்கம்
59 mins ago
சிறப்புப் பக்கம்
1 min ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago