ஒரு திருவிழாவில் ஊர்கூடித் தேர் இழுப்பது லேசுபட்ட வேலை அல்ல. பெரிய தேரை அதன் நிலையிலிருந்து வீதிக்கு இழுத்துக் கொண்டுவர வேண்டும். நூற்றுக்கணக்கானவர்கள் வடம்பிடித்து இழுத்து ஊர் முழுவதையும் சுற்றிய பின்னர் மீண்டும் நிலைக்குக் கொண்டுவரும் வேலையை மொத்த ஊரும் சேர்ந்து செய்யவேண்டியிருக்கும்.
இந்த வேலையில் தேர் செய்த தச்சன், கயிற்றைப் பிடித்து இழுக்கும் கடைக்கோடி மனிதர், மின்சார ஒயரைத் தூக்கிப் பிடிப்பவர், சக்கரம் நிற்க கட்டை போடுபவர் என அனைவருமே முக்கியமானவர்கள். தேரிழுக்கும் வேலை போன்றதுதான் திரைப்படமும். அதன் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவையே. ‘மிஸ்ஸியம்மா’ முதல் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ வரை அனைத்துப் படங்களுக்கும் அதன் நிகழ்வுகள் நகர உதவும் ஒவ்வொரு சிறு கதாபாத்திரமும் அவசியம். அவை பார்வையாளனிடம் ஏற்படுத்தும் பாதிப்பும் முக்கியம்.
நிஜ வாழ்வில் நமக்கு எத்தனையோ உறவுகளும் நண்பர்களும் இருந்தாலும், கீச்சுக் குரலில் பேசும் அக்கா ஒருவரையோ, சைகையில் உணர்த்தும் வாய்பேச இயலா அண்ணன் ஒருவரையோ, முழங்கை மடிப்பில்கூட பவுடர் போட்டுக்கொள்ளும் ஒரு பெரியப்பாவையோ, மிமிக்ரியில் கலக்கும் நண்பரையோ நம்மால் எளிதில் மறந்து கடந்து செல்ல இயலாது. நமக்கு மிகவும் பரிச்சயமான திரை நீரோடையைத் தெளிவாக ஓடச்செய்யும் சில கூழாங்கற்களைப் பார்ப்போம்.
கிறுக்குக் கிழவி
‘மேற்குத் தொடர்ச்சி மலை’ – மலை சார்ந்து வாழும் சுமைக்கார ரங்கசாமியின் தனி மற்றும் பொது வாழ்வைச் சொல்லும் படம். இந்தப் படத்தில் ஒரு மனம் பிறழ்ந்த கிழவியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மலையில் குடும்பத்துடன் வசித்துவந்த அவள், மலையிலிருந்து இறங்கித் தன் மகளுக்குத் திருமணம் செய்யப் போகும் வேளையில், அவளுடைய கணவன் யானையால் தாக்கப்பட்டு இறக்கிறான். அவர்கள் கொண்டு செல்லும் பணமும் மலையில் சிதறிவிடுகிறது.
அந்தச் சம்பவத்தால் புத்தி பிசகிய நிலையில் பணத்தைத் தேடி மலையில் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறாள். யானைகளைக் கொல்லவேண்டும் என்ற அவளது கோபமான புலம்பல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உறவினர்கள் உதவியுடன் மணம் முடித்து வைக்கப்பட்ட அவளது மகள் மட்டும் அவ்வப்போது வந்து தன் தாயைப் பார்த்துக்கொள்கிறாள். மகளிடம் வளையல்களை மட்டும் விரும்பி வாங்கிப்போட்டுக்கொள்ளும் அந்தக் கிழவி, ஒரு நாளில் பெய்த அடை மழையின்போது, மண் சரிவில் புதைந்து இறந்துபோகிறார். மழையும் காற்றும் ஒதுக்கிப்போட்ட குப்பையில் அவளது வளைக்கரம் மட்டும் வெளியில் தெரியக் கிடக்கிறார் பிணமாக.
அவளைக் காட்டு யானைகள் எதுவும் செய்வதில்லை என்பதும் நமக்குச் சொல்லப்படுகிறது. சில நிமிடங்களே வந்தாலும், மலை முகடுகளில் பட்டு எதிரொலிக்கும் அவள் கூச்சலும் தேடலும் மலைவாழ் மக்களின் ஒரு சிறு துணுக்காக நமக்கு உணர்த்தப்படுகிறது. அதன் பாதிப்பு நமக்குப் படம் முடிந்த பின்னும் தொடர்கிறது. இத்தனைக்கும், இந்த மாதிரி மனம் பிறழ்ந்தவர்களை எல்லா ஊர்களிலும் நாம் பார்த்து வளர்ந்திருக்கிறோம்.
பெண் துறவி
அடுத்து ‘அன்பே சிவம்’ படத்தில் வரும் கன்னியாஸ்திரி. “எக்ஸ்கியூஸ் மீ.. ஹீ இஸ் சீரியஸ்” என ஆரம்பித்து ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும் ஒரு சிறு கதாபாத்திரம் அது. ‘யார்.. யார்.. சிவம்’ பாடலில் கமல்ஹாசனின் மாபெரும் திரை இருப்பையும் மீறி, தனியே தெரியும் அக்கிறிஸ்தவ பெண்துறவிக் கதாபாத்திரத்தின் கனிவும் அன்பும் பார்வையாளரின் எல்லா மனத்தடைகளையும் உடைத்து கண்களை பணிக்கச் செய்யும்.
அந்தப் பாடலின் முடிவில், விபத்துக்குப்பின் குணமாகிச்செல்லும் கமலை அழைத்து “ நல்லசிவம்.. ஐ ஃபார்காட் சம்திங்” என்று அழைத்து அணைத்து, கண்ணீர் பெருக வழியனுப்புவார்.
அவரை எத்தனை வருடங்களானாலும் மறக்க முடியாது. அவரே இன்னொரு ரயில் விபத்துக் காட்சியில் ஒரு சிறுவனின் உயிரைக் காப்பாற்றும் நேரம் “ஒரு உயிரைக் கொன்று, இன்னொரு உயிரைக் காப்பாற்ற மாட்டோம் ப்ராமிஸ்” எனச் சொல்வார். படத்தில் சில நிமிடங்களே வந்தாலும், அந்தச் சிறு கதாபாத்திரம் ஏற்படுத்தும் பாதிப்பு காலம் கடந்தும் அகலாதது.
இவை தவிர “அஞ்சு ரூபா குடு” என்று சத்தமாகப் பேசி ஒரு பறவையைப் போல இறக்கை அடித்து பறந்துபோகும் ‘அஞ்சாதே’ குருவி. உதவி இயக்குநர் முயற்சியின் வலியை ஒரு பீடியின் இழுப்பில் சொல்லும் ‘ஜிகர்தண்டா’ படத்தில் வரும் பெட்டிக்கடை பழனி (சங்கிலி முருகன்), ஆங்கிலமும் தமிழும் கலந்து அடிக்கும் ‘மெட்ராஸ்’ பட ஜானி என நீண்டுகொண்டே போகும் இந்தப் பட்டியல்.அலசல்
தொடர்புக்கு: tottoh@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago