ராகயாத்திரை 22: பொன்வானம் பன்னீர் தூவுது!

By டாக்டர் ஆர்.ராமானுஜன்

சில படங்கள் நினைவுகளை விட்டு நீங்காதவை. கேரள சினிமா ரசிகர்களுக்கு அப்படியொரு படம், ‘ஓளங்கள்’ (1982). பாலு மகேந்திரா இயக்கிய மலையாளப் படம். அந்தப் படத்தில் ஓர் அற்புதமான பாடலை இசைஞானி அமைத்திருப்பார். காபி ராகத்தில். ‘தும்பி வா தும்பக்குடத்தின்’ என்ற பாடல். ஜானகியின் குரலில் இழைந்தோடும் அச்சு அசலான கும்பகோணம் டிகிரி காபி ராகம் அது.

அதே ஆண்டு வெளியான ‘ஆட்டோ ராஜா’ தமிழ்ப் படத்தில் ‘சங்கத்தில் பாடாத கவிதை’ என அழகான வரிகளில் ஒலித்த மெட்டு. பின்னர் 27 ஆண்டுகள் கழித்து 2009-ல் வெளிவந்த ‘பா’ இந்திப் படத்திலும் இதே மெட்டை இடம்பெறச் செய்தார் ராஜா. சரியாகப் பதிலளித்த திருவான்மியூர் சாந்தி பரமேஸ்வரன் மற்றும் சென்னை ஜோஸ்வா ஆகியோருக்குப் பாராட்டுகள்.

காபி ராகம் கொஞ்சம் எடக்கு மடக்கானது ஸ ரி2 ம1 ப நி2 ஸா, ஸ நி1 த2 நி1 ப ம1 ரி2 க1 ரி2 ஸ என ஆரோகண அவரோகணங்களுடன் வரும். சில இடங்களில்  க2-வும் வரும். இதில் இளையராஜா சில மறக்க முடியாத மெட்டுகளைத் தந்திருப்பார். ‘ப்ரியா’ (1978) படத்தில் வரும் ‘ஹே பாடல் ஒன்று’ பாடல் சுவையான ஃபில்டர் காபி.

‘ஆவாரம்பூ’ (1992) என்ற படத்தில் வரும்  ‘சாமிகிட்ட சொல்லி வச்சு’ எனும் பாட்டு கொஞ்சம் எக்ஸ்ட்ரா சர்க்கரை போட்ட ஸ்ட்ராங்கான காபி. இன்னொரு கலக்கலான காபி ராகம், ‘சிவா’ (1989) படத்தில் வரும் ‘அட மாப்பிள சும்மா மொறைக்காதே’ என வரும் பாடல். கிண்டல் செய்யும் பாடலுக்கு அந்த ராகத்தைச் சரளமாகப் பயன்படுத்தியிருப்பார். ‘சிந்து பைரவி’யில்(1985)  டப்பாங்குத்தாக  ‘தண்ணித்தொட்டி தேடிவந்த’ என காபியில் ஒரு காக்டெயில் பாடலைக் கொடுத்திருப்பார்.

மெய்மறக்கச் செய்யும் கௌரி மனோகரி

காபிக்கு நெருக்கமான ராகம் ‘கௌரி மனோகரி’. 23-வது மேளகர்த்தா ராகம். இது ஸ ரி2 க1 ம1 ப த2 நி2 என ஸ்வரங்களால் அமைந்தது.   ‘திருவிளையாடல்’ (1965) படத்தில் கே.வி. மகாதேவன் அமைத்த 'பாட்டும் நானே’ எனும் புகழ்பெற்ற பாடல் இந்த ராகத்தில் சிகரம் போன்றது. இந்த ராகத்திலும் ராஜா பல மென்மையான பாடல்களை அமைத்திருக்கிறார்.

‘கிளிப்பேச்சு கேட்க வா’ படத்தில் வரும் ‘அன்பே வா அருகிலே’, தர்மத்தின் தலைவன் படத்தில் வரும் ‘முத்தமிழ்க் கவியே வருக’ ஆகியன அசத்தலான எடுத்துக்காட்டுகள். ‘வெள்ளை ரோஜா’ படத்தில் ‘சோலைப் பூவில் மாலைத் தென்றல்’ இன்னொரு சுகமான பாடல். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொன்று, ‘நிழல்கள்’ படத்தில் ‘தூரத்தில் நான் கண்ட’ என ஜானகியின் குரலில் ஒலிக்கும் பாடல் இந்த ராகத்தில் ஒரு கிளாசிக். இந்துஸ்தானி பாணியில் இந்த ராகத்தை பட்தீப் என்பார்கள்.

அதே ஜாடையில் ‘கண்ணா வருவாயா’ என ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் வரும் பாடலும் மெய்மறக்கச் செய்யும். இந்த ராகத்தில் இன்னும் இரண்டு பாடல்களைச் சொல்லாவிட்டால் எனக்கு மோட்சம் கிட்டாது. ‘தூறல் நின்னு போச்சு’ (1982) படத்தில் ‘பூபாளம் இசைக்கும்’ என யேசுதாஸ், உமா ரமணன் குரல்களில் ஒலிக்கும் பாடலில் இந்த ராகத்தை மெல்லிசை மாலையாகத் தந்திருப்பார்.

அதேபோல் ‘இன்று நீ நாளை நான்’ (1983) படத்தில் வரும் ‘பொன்வானம் பன்னீர் தூவுது’ என்னும் பாடல் இந்த ராகத்துக்கு ராஜாவின் சிறந்த அர்ப்பணம். தகிட தகதிமி என வரும் ஏழு எண்ணிக்கைகள் கொண்ட தாளத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும்.

பஸ் டிக்கெட் முயற்சி

கௌரி மனோகரியின் ம-வை மட்டும் மாற்றி ம2 வாக ஆக்கினால் வருவது தர்மவதி. அந்த ராகத்திலும் இனிய சில பாடல்களை மறக்க முடியாதபடி அமைத்திருக்கிறார் ராஜா. ‘காயத்ரி’யில் (1977) சசிரேகாவின் குரலில் ‘வாழ்வே மாயமா’ என ஒலிக்கும் பாடல் இந்த ராகத்தில் போடப்பட்டதே.

‘என்னுள்ளே ஏதோ’ என ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’யில் (1979)  வாணி ஜெயராம் மயக்கும் குரலில் பாடிய பாடல். அதே போல் ‘மீண்டும் மீண்டும் வா’ என விக்ரமில் (1986) ஒலிக்கும் பாடலும் இந்த ராகத்தின் இன்னொரு பரிமாணம். இந்த ராகத்தில் ஆகச்சிறந்த பாடல் என்றால் ‘உனக்காகவே வாழ்கிறேன்’ (1986) படத்தில் வரும் ‘இளஞ்சோலை பூத்ததா’ என்ற பாடல்தான் எஸ்.பி.பியின் குரலில் ஒரு மினி கச்சேரியாக அமைந்திருக்கும்.

அண்மைக்காலத்தில்  ‘வானவில்லே வானவில்லே’ என ‘ரமணா’ (2002) படத்தில் இந்த ராகத்தில் கலக்கியிருப்பார்.

பழங்குடிகள், பூர்வ குடிகள் பாடிய பாடல்களே பாணர்கள் காலத்தில் பண்களாக உருவெடுத்தன. பின்னர் அவற்றுக்கு மேலும் இலக்கணங்கள் வகுக்கப்பட்டு ராகங்களாக இசைக் கலைஞர்களால் பாடப்பட்டன. தமிழிசை மூவர், கர்னாடக சங்கீத மூவர் எனப் பக்தி மார்க்கத்தின் வழியாக ராகங்கள் பயணப்பட்டன.

திரைப்படம் வந்த புதிதில் அந்தச் செவ்வியல் ராகங்களின் வழியிலேயே பாடல்களும் அமைக்கப் பெற்றன. பாபநாசம் சிவன் போன்றோர் இக்காலத்தின் முன்னோடி. பின்னர் ஜி.ராமநாதன், எம்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன் போன்றோர் ராகங்களைக் கொஞ்சம் நெகிழ்ச்சியான மெட்டுகளில் தந்தனர்.

மெல்லிசை மன்னர்களோ ராகங்களை மேலும் தளர்த்தி மெல்லிசையாக விருந்தளித்தனர். அந்த வரிசையில் நமது இசைஞானி. அவர் தனது பாடல்களில் பயன்படுத்திய ராகங்களை பற்றிச் சுருக்கமாக எழுதுவது என்பது மகாபாரதக் கதையை பஸ் டிக்கெட்டின் பின்னால் எழுதுவது போன்றதாகும். நான் அதைத்தான் கடந்தவாரங்களில் செய்து வந்திருக்கிறேன்.

ராஜாவின் தனித்துவம்

இசைக்கு இலக்கணங்களைப் படைத்தது அதனை மேலும் செழுமைப்படுத்த வேண்டும். இனிமையின்றி வெறும் இலக்கண சுத்தமான இசையாக மட்டும் இருந்தால் அதில் ஜீவன் இருக்காது. இந்த இடத்தில்தான் இளையராஜாவின் மேதைமைத் தனம் புலப்படுகிறது. ஒரு பாடலின் மெட்டு, பின்னணி இசை, இடையிலே வரும் இசைத் துணுக்குக்கள் என எல்லாவற்றையும் அப்பாடல் அமைந்த ராகத்திலேயே பெரும்பாலும் அமைத்திருப்பார்.

அவ்வளவு இலக்கணச் சுத்தமாக இருந்தாலும் பாடலின் இனிமை எங்குமே சிதைந்திருக்காது. தொடரில் சொல்லாத ராகங்களில் உதாரணம் சொல்ல வேண்டுமானால் ‘ரீதி கௌளை’ என்ற ராகத்தை இலக்கணச் சுத்தமாக ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ (கவிக்குயில்) என அமைத்துப் பாலமுரளி கிருஷ்ணாவையே பாடவைத்தது போல்.

ragam 2jpgடாக்டர் ஆர்.ராமானுஜம்right

சக்கரவாகம் என்னும் ராகத்தின் ஜாடை மாறாமல் ‘நீ பாதி நான் பாதி’ (கேளடி கண்மணி), மலயமாருதம் என்னும் ராகத்தில் ‘கண்மணி நீவரக் காத்திருந்தேன்’ (தென்றலே என்னைத் தொடு), ஹம்சாநந்தியில் ‘ராத்திரியில் பூத்திருக்கும்’ (தங்க மகன்) என ராகங்களின் நுணுக்கம் தெரியாதவர்கள் கூட ரசிக்க வைக்கும் வகையில் அமைத்திருப்பார். செவ்வியல் பாணியிலும் நாட்டுப்புற பாணியிலும் மேற்கத்திய இசையாகவும் மெல்லிசையாகவும் அதே ராகங்களை வேறு வேறு உருவங்களில் உலவிடச் செய்தவர்.

‘வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும், இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்’ என வாலி சொன்னது போல் இசை என்னும் மாபெரும் சமுத்திரத்தில் கலக்கின்ற ராக நதிகளில் யாத்திரை சென்று கொஞ்சம் கொஞ்சம் அள்ளி அருந்தி மலர்ந்தோம்.

‘இசையின் பயனே இறைவன் தானே’ என்கிறது அப்பாடல். இசையே இறைதானே! தொடர்ந்து பெரும் வரவேற்பு கொடுத்துப் பங்கு பெற்ற வாசகர்களுக்கும் நன்றி. ஒரு இடைவெளிக்குப்பின் இசையின்பால் மீண்டும் இணைவோம்.

(நிறைந்தது)

தொடர்புக்கு:ramsych2@gmail.com
படங்கள் உதவி:ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்