டிஜிட்டல் மேடை 02: ரஹ்மானின் ஆன்மத் தேடல்

By எஸ்.எஸ்.லெனின்

இந்தியா போன்ற பன்மைத்துவச் சமூகங்களின் கூடாரத்தை, அதன் பாரம்பரிய இசை வடிவங்களின் வழியாகத் தரிசிக்க வாய்ப்பளிக்கிறது ’ஹார்மனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ என்ற இசைப் பயணத் தொடர்.

கேரளா, மகாராஷ்டிரம், சிக்கிம், மணிப்பூர் என பல்வேறு மாநிலங்களுக்குப் பயணப்படும் ரஹ்மான், அப்பகுதியின் வழக்கொழிந்து வரும் பழம் சிறப்பு வாய்ந்த இசைக் கருவிகள் மற்றும் இசைக் கலைஞர்களைச் சந்தித்துத் தன் பாணியில் அளவளாவுகிறார். இசைக் கருவிகளின் பாரம்பரிய வரலாறு, பூகோள ரீதியாக அவற்றின் முக்கியத்துவம், இசைக்கருவியும் அதற்கான கலைஞனும் சந்திக்கும் நேர்கோடு, இசையை ரசிக்கும் உத்திகள், குறிப்பிட்ட இசைக் கருவியையும் அதன் வாசிப்புப் பயிற்சிகளையும் மீட்க மேற்கொள்ளப்படும் பிரயத்தனங்கள் எனப் பலவற்றையும் ரஹ்மானின் பார்வையில் நுட்பமாகத் தருகிறார்கள். இதனுடன் கோயில்களிலும் மாடங்களிலும் முடங்கியிருந்த வாத்தியங்கள் பொதுவுக்கு வந்ததன் பின்னணியையும் சொல்கிறார்கள்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் அமேசான் பிரைம் வீடியோ இத்தொடரை வெளியிட்டது. 4 கலைஞர்களுடனான சந்திப்புடன் 5 அத்தியாயங்கள் கொண்டதாக தொடரின் முதல் சீஸன் அமைந்திருக்கிறது. ரஹ்மானுக்கு சினிமா வாசலைத் திறந்து வைத்த கவிதாலயா நிறுவனத்தின் பெருமைமிகு தயாரிப்பு இது. இசைப் பயணத் தொடரின் பங்கேற்பாளராகவும் தொகுப்பாளராகவும் வரும் ரஹ்மான், பெரும்பாலும் அடக்கியே வாசிக்கிறார். குழந்தையின் குதூகலத்துடன், சமயங்களில் ஜோக்கடிப்பதும் வியப்புடன் கேள்விகள் கேட்பதும் சைக்கிள் விடுவதுமாக ரஹ்மானின் இன்னொரு முகத்தை ரசிக்க வைக்கிறார்கள். பண்ணிசை ஒவ்வொன்றையும் தனி ஆவர்த்தனமாக அதன் கலைஞர்கள் வெளிப்படுத்தியபின், ரம்மியமான இயற்கைச் சூழலில் ரஹ்மானின் நவீன மின்னணு இசைக்கருவிகளுடன் அவர்கள் இணைந்து ஜூகல்பந்தி விருந்து படைக்கிறார்கள். நிறைவு அத்தியாயத்தில் இசைக்கலைஞர்கள் அனைவரும் தனி அரங்கில் கூடி ரஹ்மானுடன் இணைந்து 22 நிமிடங்களுக்கான இசைக்கும் நிகழ்ச்சி முத்தாய்ப்பாக நடக்கிறது.

சாதாரண ரசிகன் முதல் இசை விற்பன்னர்கள்வரை ஒவ்வொருவரும் தனக்கானதை எடுத்துக்கொள்ள இந்த இசைத் தொடர் வழிசெய்கிறது. இசைக் கோவைகளைக் கண்களை மூடி ரசிக்க விடாது, இயற்கைக் காட்சிகளில் விராஜ் சிங்கின் குளுமையான ஒளிப்பதிவு அசத்துகிறது. தரமான ஒலிப்பதிவு மற்றும் எடிட்டிங் மூலம் இசையைக் கேட்பதற்கு அப்பால் பார்க்கவும் முடியும் என்ற உணர்வை  கடத்துகிறார்கள். தொடரை இயக்கியிருக்கும் ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன், ‘தானொரு ரஹ்மான் ரசிகை என்பதையும், தொடருக்காக எட்டு மாதங்கள் ஆய்வு மேற்கொண்டோம்’ 

என அவர் கூறுவதையும் நம்ப வைக்கிறார்.

ரஹ்மான் சந்திக்கும் இசை மேதைகள் தெரிவிக்கும் தகவல்கள் பலவும் சுவாரசியமானவை. கேரள மிழவு இசைக் கருவியில் முழங்கும் சாஜித் விஜயன், அதன் சிலப்பதிகாரப் பின்னணித் தகவலைத் தருகிறார். நவி மும்பையில் ருத்ரவீணையை மீட்டும் பகாவுதீன் டாகர், ஓர் இசைக் கருவி தனக்கான கலைஞனைத் தேர்வு செய்வதை விளக்குகிறார். பயணத்தின் இடையே இசை குறித்து எளிமையாகவும் இயல்பாகவும் நம்மிடம் பேசுகிறார் ரஹ்மான்.

ஆவணத் தொடர் என்றாலே பிரத்யேகமான வறட்சியும் இறுக்கமும் இயல்பாகச் சேர்ந்துவிடும். ஆனால், ஒரு திரைப்படத்துக்கான சுவாரசிய அம்சங்களுடன் செல்கிறது ரஹ்மானின் இந்த இசைத் தொடர்.

தமிழர்களின் உழைப்பில் உருவாகியிருக்கும் இந்த அரிய தொடரில் தமிழ் டப்பிங் அல்லது சப்டைட்டில் சேர்த்திருந்தால் அந்த உழைப்புக்கு மேலும் அர்த்தம் சேர்ந்திருக்கும்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்