இயக்குநர் அவதாரம் எடுத்தாகிவிட்டது. வெற்றிபெற்ற நாடகமே எனினும், அதன் திரைவடிவத்தை உருவாக்கும்போது மேடையில் சாத்தியமில்லாத பலவற்றை சினிமாமொழியில் சிறப்பாகக் கொண்டுவர முடியும். அதனால் திரைக்கதையில் பல திருத்தங்களைச் செய்த கோபு, கலை இயக்கம், இசை ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்தினார்.
மூத்த கலை இயக்குநரான சேகரை இந்தப் படத்துக்காக அமர்த்திக்கொண்டார். அவரிடம் “‘மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்க கூடாது’ பாடலில், நாயகன், நாயகி இருவரும் மேஜை மீது இருக்கும் டெலிபோன், பிறகு பேனா ஸ்டேண்ட் ஆகியவற்றின் மீது அமர்ந்து, பாடி, ஆடுவதுபோல் காட்சியைப் பிரம்மாண்டமாக எடுப்போம்.
இதற்காக டெலிபோன், பேனா ஸ்டேண்ட் ஆகியவற்றை ‘லைஃப் சைஸ்’ அளவுக்குக் கொஞ்சம் பெரியதாக செட் போட்டு படப்பிடிப்பு நடத்துவோம்” என்று கோபுவும், சேகரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது தயாரிப்புக் கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஏவி.எம் மானேஜர், “இது குறைந்த பட்ஜெட் படம், ஒவ்வொரு பைசாவையும் பார்த்துச் செலவு செய்யுங்கள்?” என்று அவர்முன் கைகட்டி நின்று கேட்டுக்கொண்டிருந்த தயாரிப்பு நிர்வாக உதவியாளர் ஒருவரிடம் கறாராகச் சொல்லிக்கொண்டிருந்தார். அதை எதிர்பாராமல் காதில் வாங்கிவிட்ட, கோபு, சேகரைப் பரிதாபமாகப் பார்த்தார்.
ஆனால், சேகரின் கருத்தை அறிந்த ஏவி.எம் நிறுவனம், பெரிய டெலிபோன், பேனா ஸ்டேண்ட், காலண்டர் என ஒரு மேஜையின் மீது உள்ள பொருட்களைப் பிரம்மாண்டமாக செட் அமைத்து வைத்துவிட்டார்கள். இதை சேகர் கமுக்கமாக வைத்துக்கொள்ள, மூன்று நாட்களுக்குப் பின் படப்பிடிப்பு அரங்கத்துக்குள் நுழைந்த கோபு தான் எதிர்பார்த்த செட்டைப் பார்த்து நெகிழ்ந்து போனாராம்.
“இம்மாதிரி தனது நிறுவத்தின் படங்களில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைத் தருவதில் ஏவி.எம்முக்கு நிகர் ஏவி.எம்தான்” என்று படப்பிடிப்பு நாட்களை நினைவுகூர்கிறார் கோபு.
காமெடியனுக்கு கட் –அவுட்
சென்னையின் ராயப்பேட்டையில் இருந்த பைலட் திரையரங்கம், ஆங்கிலப் படங்களை மட்டுமே அப்போது திரையிட்டுவந்தது. ஆச்சரியகரமாக ‘காசேதான் கடவுளடா’ படத்தை பைலட் திரையரங்கில் ரிலீஸ் செய்திருந்தார்கள். படம் ரிலீஸ் அன்று மதியக்காட்சி முடிந்துவரும் ரசிகர்களின் கருத்துகளை அறிந்து வருவதற்காக பைலட் திரையரங்கில் படம் வெளியாகியிருப்பதை அறிந்து அங்கே வந்துசேர்ந்தார் கோபு.
படம் முடிந்து வெளியே வந்தவர்களில் ஒருவர், நேராக கோபுவை வந்து கட்டியணைத்துக்கொண்டார். “தம்பி பிரமாதம். கடைசிவரைக்கும் சிரிக்க வெச்சுட்டே. கொடுக்குற காசுக்கு ரசினுக்குத் திருப்தி கிடைக்கணும் அது உன் படத்துல இருக்கு” என்று பாராட்டிவிட்டுச் சென்றார். அவர் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஏ.பி. நாகராஜன். ‘காசேதான் கடவுளடா’ நாலா பக்கங்களிலிருந்தும் வெற்றிச் செய்திகள் வந்துகொண்டிருக்க, கோபுவின் திருவல்லிக்கேணி வீட்டு வாசலில் காரில் வந்து இறங்கினார், தேங்காய் சீனிவாசன்.
ஒரு ஜரிகை வேட்டி, மேல்துண்டு ஆகியவற்றை கோபுவுக்குப் பொன்னாடையாகப் போர்த்தி அவரது காலில் விழுந்து வணங்கினார். “என்ன தேங்காய்.. நமக்குள்ள இந்த ஃபார்மாலிட்டி எதுக்கு? '' என்று கேட்க, “படத்தோட ஹீரோவை விட்டுபிட்டு, காமெடியனான எனக்கு, பதினாறு அடியில பைலட் தியேட்டர் வாசல்ல கட் அவுட் வெச்சிருக்கிறார் செட்டியார்! அதுக்கு உங்க காமெடிதான் காரணம் அண்ணா!'' என்று நெகிழ்ந்தார் தேங்காய்.
அவர் ஏற்று நடித்திருந்த அப்பாசாமி சாமியாரின் சென்னை வட்டார வழக்குத் தமிழை, ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசிப்பதைப் பார்த்த செட்டியார், இரவோடு இரவாகத் தேங்காய் சீனிவாசனுக்கு மட்டும் சாமியார் வேட கட் - அவுட்டை வைத்துவிட்டார். கோபாலபுரத்தில் வசித்துவந்த தேங்காய் சீனிவாசன் எதிர்பாராமல் அந்தவழியே போய்த் தனது கட்-அவுட்டைப் பார்த்ததும் காரை விட்டு இறங்கி, பொளபொளவென்று கண்ணீர் வடித்துவிட்டு அப்படியே துணிக்கடைக்குச் சென்று விலை உயர்ந்த வேட்டி மற்றும் துண்டை வாங்கிக்கொண்டு கோபுவைக் காண திருவல்லிக்கேணி வந்துவிட்டார்.
ஆனால், இதைக் கண்டு செம கடுப்பாகிவிட்டார் படத்தின் ஹீரோவான முத்துராமன். கோபுவைத் தேடி அவரது வீட்டுக்கே வந்துவிட்டார். சார் என்று மரியாதையாக அழைத்தாலும் அவரது குரலில் முரட்டுக் கோபம் தெறித்தது. “கோபு சார்.. ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’, ‘நெஞ்சிருக்கும் வரை’ன்னு உங்களோடவே வளர்ந்தவன் நான்.
இது தெரிஞ்சிருந்தும் பட ஹீரோவான என்னை விட்டுட்டு காமெடியனுக்கு கட் அவுட் வச்சிருக்காங்களே.. ஜனங்க என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க?” என்று கோபப்பட்டு பின் குழந்தையாய்க் கலங்கினார். அவரை அப்படியே அணைத்துக்கொண்ட கோபு, அவருக்குத் தேங்காய் கட்-அவுட் வந்ததன் பின்னணியை கோபு கூறியதும் கோபம் தணிந்து கோபுவின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டார்.
வருத்தமும் ஆசியும்!
இந்த கட்-அவுட் இன்னொரு பிரச்சினையையும் இழுத்துக்கொண்டுவந்தது. கதைப்படி அப்பாசாமி ஒரு டீக்கடைக்காரர். அவர் போலிச் சாமியார் என்பதைக் காட்ட, அவரது முகத்துக்குக் கருப்புக் கண்ணாடி ஒன்றை அணிவித்துவிட்டார் கோபு.
கோபுவின் நாடகத்திலும் அப்படித்தான் கருப்புக் கண்ணாடியை அந்தச் சாமியார் அணிந்திருப்பார். இது தெரியாமல் யாரோ ஒரு குசும்பு பத்திரிகையாளர், தேங்காயின் அப்பாசாமி சாமியார் கெட் - அப் அப்படியே ‘பித்துக்குளி’ முருகதாஸை நினைவூட்டுகிறது என்று எழுதிவிட, பித்துக்குளியாரே கோபுவுக்கு போன்போட்டு “என்னப்பா.. இப்படிச் செய்துட்டே… நான் புளு பூச்சிகளுக்குக்கூடத் தீங்குசெய்ய நினைக்காதவன் என்பது உலகத்துக்கே தெரியுமே” என்றார்.
அவரிடம் உண்மையை விளக்கிய கோபு'' ஒரு தடவை அந்தப் படத்த நீங்க பார்த்தீங்கன்னா உங்களுக்குப் புரியும்!'' என்றார். அதுவும் சரிதான் என்று பித்துக்குளியார் படத்தைப் பார்த்துவிட்டு கோபுவுக்கு போன் செய்து “சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறு புண் ஆயிடுச்சுப்பா… மனுசாளை நல்லா சிரிக்க வை… பாதி நோய் பறந்துடும். தீர்காஸுமான் பவ” என்று ஆசி வழங்கிய அதிசயமும் நடந்தது.
நாடகமே வாழ்க்கை
இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம், தனது யூனிட்டி கிளப் நாடக குழுவினர்தான் என்கிறார் கோபு. திறமையானவர்களும் நாடகக் கலைக்காகத் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர்களும் அந்தக் குழுவில் இருந்தனர்.
குறிப்பாக, நட்ஸ் என்ற சம்பத், டீ.கே. கஸ்தூரி, சி.எல்.நரசிம்மன், நாகராஜன், ரமணி, ராவ் போன்றவர்கள் நாடத்துறையின் தூண்கள். யூனிட்டி கிளப்பின் அனைத்து நாடகங்களும் பெரும் வெற்றியைப் பெற்றன. ‘காசேதான் கடவுளடா’, ‘வீட்டுக்கு வீடு’, ‘ஸ்ரீமதி’ போன்றவை திரைப்படங்கள் ஆயின.
‘நடிகர் திலக’மாக உயர்ந்த பிறகும் நாடகத் துறையின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார் சிவாஜி. சிவாஜிக்கு கோபு கதை வசனம் எழுதிய காலத்தில் மாலை ஐந்து மணி ஆனதும் படப்பிடிப்புக்கு டாட்டா சொல்லிவிட்டு நாடக மேடைக்குப் பறந்துவிடுவார்
‘நூர்ஜஹான்’, ‘காலம் கண்ட கவிஞன்’, ‘வியட்நாம் வீடு’ போன்ற சிவாஜியின் நாடகங்கள் எழுபதுகளில் பெரிய பரபரப்பை உருவாக்கியவை. மியூசிக் அகாடெமியில் ‘வியட்நாம் வீடு’ நாடகத்தில் ‘பிரிஸ்டீஜ்’ பத்மநாபனாக சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன், தாரை தாரையாகக் கண்ணீர் விட்டு, கேவிக் கேவி அழுது கொண்டிருந்தாராம்.
இது ஒன்று போதாதா, சிவாஜி கணேசனுக்கு நடிப்பு துறையின் மீது இருந்த தாக்கத்தைப் பற்றி அறிய. அப்படிப்பட்ட சிவாஜிக்கு அடையாற்றின் கரையில் மணிமண்டபம் உருவாகி இருக்கிறது என்பதே தமிழ் சினிமாவுக்குப் பெருமை.
இன்றும் நல்ல நாடக குழுக்கள் சிறந்த நாடகங்களைத் தந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், வரவேற்புதான் வருத்தத்தைத் தருகிறது. ஐ.பி.எல், தொலைக்காட்சித் தொடர்கள் என மக்களின் கவனத்தை ஈர்க்க நிறைய பொழுதுபோக்குகள் வந்துவிட்டாலும், உயிருள்ள நடிகர்களின் நடிப்பை நேருக்கு நேராகக் காணும் அற்புதக் கலையான நாடகத்துக்கு மவுசு உருவாகும் காலம் ஒன்று வந்தே தீரும்” என்று கூறும் கோபு
நாடகத்துறையைக் கண்ணெனக் கருதிய சிவாஜியுடன் இணைந்து ஒவ்வொரு காட்சியையும் சுவைத்து, ரசித்துத் தயாரித்த ‘கலாட்டா கல்யாணம்’ படத்தின் நினைவுகளுக்குப் பறந்தார். பெயரிலேயே கலாட்டா இருக்கிறது. அப்படி என்றால் படப்பிடிப்புத் தளத்தில் எவ்வளவு வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்திருக்கும் ?
(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago