நாடகத்துறையின் மீது தீராத காதல் கொண்டிருந்தவர் நடிகர் திலகம். கோபுவுக்கோ திரைப்படத்துறை மாதவியாகவும் நாடகத்துறை கண்ணகியாகவும் திகழ, கோவலனைப் போன்று இங்கும் அங்குமாகக் காலத்தைக் கழித்தார். கோபுவை மீண்டும் நாடகத்துறைக்கு இழுத்ததே நடிகர் திலகம்தான்.
நட்சத்திர இரவுக்காக கோபு எழுதிய ‘கலாட்டா கல்யாணம்’ தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் வரவேற்பைப் பெற்ற நாடகம். “ஆச்சாரி! இந்தக் கதையை நானே படமா எடுக்குறேன். இதுமாதிரி எனக்கு நிறைய நாடகங்களை எழுதிக் கொடு. நாம் மேடை நாடகங்கள் போடலாம்!'' என்று கோபுவுக்குள் தீபமாக எரிந்துகொண்டிருந்த நாடக ஜோதியைக் காட்டுத் தீபோல கொழுந்து விட்டு எரியச் செய்தார் சிவாஜி.
தன் மகன் ராம்குமாரின் பெயரில் உருவாக்கிய பட பேனரில் ‘கலாட்டா கல்யாணம்’ எடுக்க இருப்பதாக அறிவிப்பும் செய்து விட்டார். கோபுவுக்குத் தயக்கம். அந்தப் படத்தின் ஹீரோ, கிட்டத்தட்ட ஒரு கல்யாணத் தரகர் போன்ற கதாபாத்திரம். மாப்பிள்ளை தேடி அலைவார். நகைச்சுவை படம் என்பதால், நாயகன் கதாபாத்திரம் பல இடங்களில் சொல்லடி பட வேண்டும்.
சமயங்களில் அடி, உதையும் கூட வாங்க வேண்டும். வேறு எந்தக் கதாநாயகனாக இருந்தாலும், “சாரி சார்! இதுல ஹீரோவுக்குரிய அம்சம் எதுவுமே இல்லை!'' என்று படத்தில் நடிக்க மறுத்திருப்பார்கள். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தையே ஒரு சவாலாக எடுத்து நடிக்கத் துணிந்துவிட்டார் சிவாஜி. அவருக்கு மனத்தில் ஒன்று பிடித்துவிட்டால், வேறு எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்.
அன்பான உத்தரவு
படத்தில் வில்லனாக நடித்த செந்தாமரை, ஒரு காட்சியில் சிவாஜியையும் நாகேஷையும் புரட்டி எடுத்து வெளியே தள்ளுவார். கதைப்படி அடி வாங்கிய சிவாஜிக்கு அவருடைய காதலி ஜெயலலிதா ஒத்தடம் கொடுப்பார். உடனே அதைப் பார்த்து வயிறு எரியும் நாகேஷ்,'' “உனக்கு பரவாயில்லைடா. அடி வாங்கின கையோட, ஒத்தடம் கொடுக்கிறதுக்குக் காதலி தயாரா இருக்கா.
என் ஆளுக்காக நான் அடி வாங்கினதுதான் மிச்சம்!'' என்று கூறும் நாகேஷ் மேலும் ஜெயலலிதாவிடம், “இவன் பெரிய ஹீரோன்னு நினைச்சு அந்த ரௌடியை அடிக்க இவனை அழைச்சுக்கிட்டு போனா, அடியை வாங்கிட்டு பொசுக்கு பொசுக்குன்னு விழறான்!'' என்று கூறுவார். அதற்கு சிவாஜி, “அவனோட பாடி அடியாள் பாடிடா. அடிக்கிறதுக்குன்னே உடம்பை வளர்த்து வச்சிருக்கான். என் பாடி வெறும் ரொமாண்டிக் பாடி!” என்று பதில் கூறிவிட்டு ஜெயலலிதாவைக் காதலுடன் ஒரு பார்வை பார்ப்பார். திரையரங்கு அதிர்ந்த காட்சி இது.
இந்த வசனங்களைத் திரைக்கதையில் படித்த இயக்குநர் சி.வி. ராஜேந்திரன் பயந்தார். “கோபு.. சிவாஜி அண்ணன் ஏதாவது தப்பாக எடுத்துக்கப்போறாரு.. இதை மாத்திடு!'' என்றார். கோபுவுக்கு மனம் வரவில்லை.
“நல்ல நகைச்சுவைக் காட்சி ராஜி! படிச்சுக் காட்டுகிறேன்! பிடிச்சிருந்தா எடுக்கலாம். இல்லேன்னா மாத்தி எழுதித் தரேன்!'' என்று சொல்லி, காட்சியைப் படமாக்கிய தினத்தன்று படித்துக் காட்டினார். மூவருமே மிகவும் ரசித்துச் சிரித்தனர். சிவாஜியோ “இந்தக் காட்சியில் எந்த வசனத்தையும் மாற்றக் கூடாது, குறிப்பா ரொமாண்டிக் பாடி!” என்று சொல்லி அந்தக் காட்சியை மிகவும் ரசித்து, சிரித்து நடித்துக் கொடுத்தார். அத்துடன் கோபுவுக்கு ஒரு அன்பான உத்தரவையும் போட்டார் சிவாஜி.
“ஒரு வசனத்தாலோ ஒரு காட்சி அமைப்பாலோ கதாநாயகனின் இமேஜ் விழுந்துடும்னு ஒரு எழுத்தாளன் நினைக்கக் கூடாது. அப்படி வசனத்தை மாத்துன்னு சொல்றவன் நடிகனா இருக்க முடியாது. “அம்மா தாயே பிச்சை போடுமான்னு வசனம் எழுதினாக் கூட, கதாபாத்திரத்துக்காக அதை உணர்ச்சியோடு சொல்லி பெயரை வாங்கிட்டு போறவன்தான் உண்மையான நடிகன். நான் எப்படி நடிச்சாலும் என் ரசிகர்கள் ஏத்துப்பாங்க. அதனால நீ எனக்கு எப்படி வேணும்னாலும் எழுது!'' என்றார்.
கல்யாண வீட்டின் ரகளை
கலாட்டா கல்யாணம் படப்பிடிப்பு தளமே கல்யாண வீடு போல் களைகட்டியது. சிவாஜி கணேசன், ஏவி.எம். ராஜன், நாகேஷ், சோ, வி.கோபாலகிருஷ்ணன், தங்கவேலு, வி.எஸ் ராகவன், ஜெயலலிதா, ஜோதிலட்சுமி, மனோரமா, சச்சு, சுந்தரிபாய் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளம்தான்.
இவர்கள் அனைவரும் பல காட்சிகளில் ஒன்றாகத் தோன்றுவார்கள்! எல்லோரும் குழுமி ஒன்றாக அமர, கோபு காட்சியை உரக்கப் படித்துக் காட்டுவார். படித்துக் காட்டும் போதே நட்சத்திரங்கள் கலகல என்று சிரித்துக் கொண்டிருப்பார்கள். “அசத்திட்டே ஆச்சாரி”, என்று சிவாஜியும், “கொன்னுட்டே கோபு” என்று நாகேஷும் சொல்லுவார்கள்.
சோ, “எங்கப்பாவுக்கு கோபு வசனம்னா உயிர்” என்று தொடங்கி தன் தந்தைக்கும் கோபுவுக்கும் உள்ள நட்பைப் பற்றி அப்போது பேச, மனோரமாவோ இடை மறித்து, “கோபண்ணே ! டேக் சமயத்துல நான் சிரிச்சா நீங்கதான் காரணம்'' என்று கூறுவார். ஜெயலலிதா மட்டும் கருத்துக் கூறாமல் அமைதியாக இருப்பார். பிறகு காட்சி படமாக்கப்பட்டவுடன் கோபுவின் அருகில் வந்து, “கோபு சார்.. உங்க எழுத்துல பி.ஜி.வோட் ஹவுஸ் ஸ்டைல் இருக்கு. இந்த மாதிரி காமெடி நிறைய எழுதுங்க. ஐ என்ஜாய்ட் யுவர் டயலாக்ஸ்!'' என்று அமைதியாகப் பாராட்டிவிட்டுச் செல்வார். இது அவர் பாணி.
எம்.ஜி.ஆர் படங்களில் அதுவரை நடித்துவந்த ஜெயலலிதா, முதன்முறையாக ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில்தான் சிவாஜியுடன் நடித்தார். “வந்த இடம் நல்ல இடம்'' என்று படத்தின் தொடக்கத்திலேயே சிவாஜி அவரை வரவேற்பது போன்று ஒரு பாடல் காட்சி, சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது. ‘எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்’ பாடல் காட்சி அண்ணா நகர் உலகத் தமிழ் மாநாடு பொருட்காட்சியில் படமாக்கப்பட்டது.
‘கலாட்டா கல்யாணம்’ மாபெரும் வெற்றியைப் பெற, இது ராசியான அணி என்று நினைத்த சிவாஜி கணேசன், தொடர்ந்து ‘சுமதி என் சுந்தரி’ படத்தைத் தயாரித்தார். கோபு திரைக்கதை, வசனத்தில், சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் சிவாஜி, ஜெயலலிதா, நாகேஷ், சச்சு, தங்கவேலு நடித்த படம். ‘ரோமன் ஹாலிடே’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுத்த வங்கமொழிப் படத்தைப் பார்க்கும்படி கோபுவிடம் கூறி, “அதை உன்னுடைய பாணியில் நகைச்சுவையாக மாற்றி எழுத வேண்டும்” என்று சிவாஜி கூற, கோபு எழுதிய படம் அது.
சிவாஜியின் அற்புத நடிப்பு, ஜெயலலிதாவின் நளினமான ஆடல், பாடல் காட்சிகள், நாகேஷ், சச்சு, தங்கவேலு, தேங்காய் சீனிவாசன் ஆகிய நால்வரணியின் நகைச்சுவை என அதிரடி வரவேற்பைப் பெற்றது. கண்ணதாசன் பாடல்களுக்கு அருமையான இசையைத் தந்திருந்த எம்.எஸ்.வியின் கற்பனையில் கரைபுரண்ட ‘பொட்டு வைத்த முகமோ’ போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. சிவாஜி - சி.வி.ராஜேந்திரன் - கோபு கூட்டணி தமிழ் சினிமாவில் புகழ்பெறத் தொடங்கியது.
இச்சமயத்தில் கோபுவுக்கு திக் திக் என்று நெஞ்சம் படபடக்க வைக்கும் செய்தி ஒன்றுடன் கோபுவின் திருவல்லிக்கேணி வீட்டுக்குள் நுழைந்தார் அந்த மனிதர்..
(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago