வில்லன், குணச்சித்திரம் என எந்தக் கதாபாத்திரத்திலும் தன்னைப் பொருத்திக்கொள்ளும் நடிப்புக் கலைஞர் பாலா சிங். அண்மையில் வெளியான ‘என்.ஜி.கே.’ படத்தில் அரசியல்வாதியாகத் தன்னுடைய முத்திரை நடிப்பை வழங்கியிருந்தார். தோற்றம் மாற்றாமல், நடிப்பில் கெட்டிக்காரத்தனத்தைக் கொண்டுவந்துவிடும் நடிகர் இவர்.
பாலா சிங்கின் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள அம்சிக்காகுழி என்ற கிராமம். பள்ளி, கல்லூரியில் நாட்களில் தொடங்கி நாடகங்கள் மீது ஈர்ப்பு. நாகர்கோவிலில் கோயில்கள், தேவாலயங்கள் ஆகிய இடங்களில் நாடகங்கள் போடுவதில் நன்கு பிரபலமாகி, ‘செயின்ட் சேவியர் ஆர்ட்ஸ் கிளப்’ என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவையும் நடத்தியிருக்கிறார். அக்குழுவுக்கு வெளியூர்களிலும் வரவேற்புக் கிடைக்க, மாவட்டம் கடந்து பிரபலமானார் பாலா சிங். அப்படித்தான் தலைநகர் சென்னைக்குள்
1980-களில் அடியெடுத்து வைத்திருக்கிறார். சென்னையில் பத்திரிகையாளர் ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழு, டாக்டர் ருத்ரன் நாடகக் குழு உட்படப் பல சுயாதீனக் குழுக்களின் நாடகங்களில் இணைந்து பங்கேற்றிருக்கிறார்.
அந்த நேரத்தில் தன் ஆதர்ச இயக்குநர்களாக அவர் கருதிய பாலசந்தர், பாரதிராஜா தொடங்கி முத்திரை பதித்த இயக்குநர்களிடம் வாய்ப்புக் கேட்டு அலைந்திருக்கிறார். ஆனால், எந்தக் கதவும் திறக்கவில்லை. எனினும், இவர் மனம் தளரவில்லை.
“சினிமாவுக்கு அழகான தோற்றம் அவசியம் என்று நினைத்த காலம் அது. அலைந்து, திரிந்து ஓடாகிப்போனதில் எனது உடல் தோற்றம் சீர்குலைந்துபோயிருந்தது. பசிக்கும் கஷ்டத்துக்கும் நடுவே சினிமாவில் எப்படியும் நடித்துவிடுவது என்ற வைராக்கியம் மட்டுமே என்னிடம் இருந்தது.
நீண்ட தேடுதலுக்குப் பிறகு 1982-ல் மெளலி இயக்கிய ‘வா இந்தப் பக்கம்’ என்ற படத்தில் முதன்முதலாக சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. பிறகு ‘ஏழாவது மனிதன்’ படத்தில் ஒரு கம்யூனிஸ்ட்டாக நடித்தேன்” என்று தனது தொடக்க நாட்களைப் பற்றிச் சொல்கிறார் பாலா சிங்.
இதன்பிறகு யூகிசேதுவிடம் உதவி இயக்குநராகப் பணி, சினிமா தயாரிப்பு நிர்வாகி என சினிமாவையே தன்னுடைய வாழ்க்கையாக மாற்றிக்கொண்டுவிட்டார். “சினிமாவுக்குள் ஏதாவது வேலைசெய்துகொண்டிருந்தாதான், சாதிக்க முடியும் என்று அதிலேயே புழங்கிக்கொண்டிருந்தேன்.
இதனால், நட்பு வட்டம் பெருகியது. அப்போதுதான் மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனாலும், தமிழில் தேடுதல்கள் நிற்கவில்லை. ஒரு வழியாக 1993-ல் நடிகர் நாசர் இயக்கிய ‘அவதாரம்’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் எனக்குப் பெயரை மட்டும் பெற்றுத் தரவில்லை. நல்ல நடிகர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்தது. தனிக் கவனமும் கிடைத்தது” என்கிறார் பாலா சிங்.
நாசரின் கவனத்துக்குரியவராக பாலா சிங் எப்படி மாறினார்? “டாக்டர் ருத்ரன் இயக்கத்தில் ‘அவுரங்கசீப்’ என்ற நாடகத்தில் நானும் நாசரும் நடிச்சோம். அவர் அவுரங்கசீப்பாக நடித்தார். அவரது தம்பியின் வேடத்தில் நான் நடிச்சேன்.
என் நடிப்பைப் பார்த்து ‘நான் படம் எடுக்கும்போது வாய்ப்புத் தருகிறேன்’ என்று சொல்லியிருந்தார். அதன்படியே வாய்ப்புக் கொடுத்தார். ‘அவதாரம்’ படத்தைத் தொடர்ந்து ‘ராசி’, ‘இந்தியன்’, ‘பொற்காலம்’, 'ஆனந்தப் பூங்காற்றே’ என நல்ல படங்கள்அமைந்தன.” என்கிறார் பாலா சிங்.
குணச்சித்திரம், வில்லன் என ஒரே நேரத்தில் இரட்டைச்சவாரி செய்யும் இவரால் ஏற்கும் கதாபாபாத்திரம் எதுவோ, அதுவாகவே நம்மை உணரவைக்க முடிகிறது. “தமிழ் சினிமாவில் என்னதான் பெர்ஃபார்மென்ஸ் செய்தாலும் மரியாதை கிடைத்துவிடாது. 100 நாள் படத்தில் யார் நடித்திருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் பெயர் கிடைக்குது.
ஓடாத படத்தில் மிகவும் நன்றாக நடித்திருந்தாலும் மறந்துவிடுவார்கள். நல்ல படம் சென்னையைத் தாண்டி செங்கல்பட்டுக்குக்கூடப் போகாது. ‘வண்ணத்துப்பூச்சி’ என்ற ஒரு படத்தில் நடித்தேன்.
தாத்தாவுக்கும் பேத்திக்குமான ஆழமான உறவைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படம். ஆனால், அந்தப் படம் சென்னையில் ரிலீஸானபோது தியேட்டருக்கு என்னை அழைத்தார்கள். அந்தப் படத்தைபார்க்க ஒரு ஆள்கூட வரவில்லை. இதுதான் தமிழ் சினிமாவின் யதார்த்தம்.” என்கிறார் பாலாசிங்.
அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்றால், அதில் பாலாவுக்கு எப்போதுமே ஓரிடம் இருக்கும். அண்மையில் வெளியான ‘என்.ஜி.கே.’ படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. “என்.ஜி.கே படத்தில் அருணகிரி கதாபாத்திர வாய்ப்பு கிடைக்க என்ன காரணம்ணு எனக்குத் தெரியல.
காலையிலிருந்து இரவுவரை அரசியல்வாதிகள் செய்யும் சேஷ்டைகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவையெல்லாம் மனத்தில் ஏறிக்கொண்டே இருக்கின்றன. அதை உள்வாங்கி நடித்தேன்” எனும் பாலாசிங்,
“என்னுடன் சேர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடிய பலரும் வாழ்க்கையை இழந்து, பிழைப்பை இழந்து அடையாளமற்றுப் போய்விட்டதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை” என்று தன் ஈர மனதைக் காட்டுகிறார். ஈரம் இருந்தால்தானே அவன் கலைஞன்.
செல்வராகவன்?
நாசருக்குப் பிறகு என்னைச் செதுக்கிய இயக்குநர்.
ஆசை?
வாய்ப்புக் கிடைக்கிற வரை நடிக்க வேண்டும்.
விருது?
கருணாநிதி கையால் வாங்கிய கலைமாமணி.
மறக்க முடியாத பாராட்டு?
‘தென்பாண்டி சிங்கம்’ பார்த்துவிட்டு கருணாநிதி அழைத்துப் பாராட்டியது.
அடுத்த படங்கள்?
சாந்தகுமார் இயக்கும் ‘மகாமுனி’, சமுத்திரகனியின் ‘சங்கத்தலைவன்’
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago