மரணமென்ற வார்த்தையை மாற்றி அமைத்தால்
வரணும் ரமணனென்ற வார்த்தை - பெறணும்
அவனருளைப் பெற்றால் அனைத்தும் பெறலாம்
சிவனருளுன் சீமந்தச் சேய்
-இது கிரேஸி மோகன் எழுதிய வெண்பா. பெரும் ஆரவாரத்துடன் ரசிக்கப்படும் தூய நகைச்சுவையைப் படைத்துக்கொண்டிருந்த கிரேஸி, அந்த ஆரவாரத் துக்கு நேர் எதிரிடையான மௌனத்தை ஆராதித்த ஆன்மிகத் தொண்டர்.
“மொழின்னா என்ன? ரமண மகரிஷி அழகாகச் சொல்லியிருக்கிறார். மெளனமே ஒரு மொழிதான்னு. மெளனமே மிகப் பெரிய பேச்சுதான்” என்று நண்பர்களிடம் கூறும் கிரேஸி, ரமண மகரிஷியைத் தன் ஞானகுருவாக வரித்துக்கொண்டவர்.
சிரிப்புகள் சிதறும் எழுதுகோலை வைத்துவிட்டு, அவர் தூரிகையை எடுத்தால் தெய்வ உருவங்கள் கித்தான்களில் உருப்பெற்று வரும். அந்த ஓவியங்களுக்குப் பொருத்தமாக வெண்பாக்களைச் சில நிமிடங்களில் எழுதிவிடும் அவரது ஆழமான தமிழ், அனைவரையும் அசரடிக்கும்.
தெய்விகம் வரைந்த கைகளால் மனிதர்களை வரைவதா என எண்ணாமல் “நாம எல்லாருமே கடவுளோட சாயல்தான்” என்று தனது குழுவில் உள்ள ஒவ்வொரு கலைஞரையும் ஓவியமாக வரைந்து அவர்களுக்கே அதைப் பரிசளித்து மகிழ்ந்தவர்.
எழுதத் தெரிந்தவர்களையும் ரசிக்கத் தெரிந்தவர்களையும் தனக்கு நண்பர்களாகச் சேர்த்துக்கொண்ட மகா வாசகர் கிரேஸி. வீட்டுக்கு வந்துசேரும் பத்திரிகைகள், சிற்றிதழ்கள், நூல்கள் அனைத்திலும் தன்னைக் கவர்ந்துவிடும் கட்டுரைகளைப் படித்துவிட்டு, எழுதியவர்களைப் பாராட்டி, கடிதமோ மின்னஞ்சலோ அனுப்புவார்.
அவர்களை போனில் அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துப் பாராட்டுவார். ‘கிரேஸி எனும் இத்தனை பெரிய ஆளுமை எந்த அடையாளமும் இல்லாத நம்மை இத்தனை பாராட்டிப் பேசிக்கொண்டிருக்கிறாரே’ என்று எழுதியவரின் மனத்தில் தன்னம்பிக்கை பொங்கும்.
நாடக மேடை, திரை எழுத்து இரண்டிலுமே பெரும் பெயரும் புகழும் பெற்றிருந்தபோதும் கிரேஸியின் இந்தத் தன்னடக்கம், புகழை ஒரு பொருட்டாகக் கருதாத இயல்பு ஆகிய அவரது குணங்கள், இன்றைய கலையுலகில் காணக் கிடைக்காத அதிசயங்கள்.
வாசிப்பு ஒரு வழிபாடு
29 சூப்பர் ஹிட் படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியபோதும் நாடக மேடையைவிட்டு அவரது கால்கள் நகர்ந்ததே இல்லை. வெளியூரில் நாடகமென்றால், தனது இலவம்பஞ்சுத் தலையணையை மறக்காமல் எடுத்துக்கொள்வார். “இந்தத் தலையணை வைத்துக்கொண்டால் எனக்குக் கணத்தில் தூக்கம் வந்துவிடும்” என்பார்.
கிரேஸியின் தலையணையை வாங்கிப் பார்த்தால் அதன் உறைக்குள் குறைந்தது இரண்டு புத்தகங்களாவது இருக்கும். இரவு ஒருமணி நேரமாவது வாசிக்காமல் தூங்க மாட்டார். வாசிப்பு அவரைப் பொறுத்தவரை வழிபாட்டின் ஒரு பகுதி. கிரேஸியிடம் உதவியாளராகும் விருப்பத்துடன் வந்து சேரும் புதியவர்களிடம் அரிச்சுவடிபோல் அவர் தொடக்கத்திலேயே சொல்லித் தருவது வாசிப்பு.
“நம்மால் சுவாசிக்காமல் உடல் வளர்க்க முடிகிறதா? அதேபோல்தான் வாசிக்காமல் அறிவை அரை அங்குலம் கூட வளர்க்க முடியாது” என்பார். அத்துடன் நின்றுவிடாமல், தேவன், பாக்யம் ராமசாமி தொடங்கி சோவரை யாரையெல்லாம் வாசிக்க வேண்டும் என்ற பட்டியலைக் கொடுப்பதுடன் தன்னிடம் இருக்கும் பொக்கிஷப் புத்தகங்களையும் அள்ளிக் கொடுப்பார். புத்தகத்தை அள்ளிச் சென்றவன் அதைப் புரட்டிப் படிக்கிறானா என்பதையும் கண்டுபிடித்துவிடுவார்.
“வறுகடலை மடிச்சுத் தர்ற துண்டு பேப்பர்லகூட மொழியோட ருசிய ரசிக்கக் தெரியனும். நாம நினைச்சத மத்தவங்களுக்குப் பிடிச்ச மாதிரி சொல்ல மொழிதான் ஊடகம். ஒரு கடைக்குப் போய்த் துணி வாங்குறோம். அதை முழுக்கையா தைப்பதா, ஸ்டைலா தைப்பதா, காலர் வைப்பதா, வேண்டாமா என்பதை டைலர் மாதிரி முடிவு செய்யத் தெரியனும். நம்ம தொழிலுக்கு மொழி ஆளுமை ரொம்ப ரொம்ப முக்கியம்.
‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில, கல்யாண விருந்து பண்ணும் காட்சி வரும். சைவ சமையலுக்குப் பெயர்போன மணி ஐயர் கூட்டிய சாம்பார்ல, அவர் பையன் தவறி ஒரு சின்ன மீனைப் போட்டுடுவார். காட்சியில பாக்குறப்ப எல்லாருக்கும் சிரிப்பு வரும். அது இயல்பு.
அதன்பிறகு ‘வாட் யு மீன்.. ஐ மீன்..’ என்று பேசும்போதுதான் மொழி வரும். இந்த வசனம் காமெடியைக் கூட்டியது. அதாவது, சாம்பாரில் பல்லி விழுந்தாலும் தப்புதான். ஆனால், அந்த இடத்தில் ‘வாட்யு மீன்..., ஐ மீன்...’ என்ற வசனம் எனக்குக் கிடைச்சதால மீனை வைச்சுக்கிட்டேன். இந்த வசனம் அந்தக் காட்சி பளிச்செனத் தெரிய உதவியது.
CaptureJPGவசனத்துக்கு ஏற்ற காட்சி அமைத்தால் அதற்கு ‘ரிவர்ஸ் இன்ஜினீயரிங்’ என்று பெயர். கதை, திரைக்கதை, வசனம் என வரிசையாக எழுத வேண்டுமென்று இல்லை. வசனம், திரைக்கதை, கதை என மாற்றியும் எழுதலாம். ‘கொடியசைந்ததும் காற்று வந்ததா...காற்றசைந்ததும் கொடியசைந்ததா’ என்பது மாதிரிதான்.
அந்த நேரத்தில் எது நன்றாக வருகிறதோ அதைச் செய்துவிட வேண்டியதுதான்” என்று நகைச்சுவையின் நுட்பங்களை ஆர்வத்துடன் கேட்கும் யாரிடமும் மடை திறந்ததுபோல் தயக்கமின்றிப் பகிர்ந்துவிடும் தயாளன் கிரேஸி மோகன். அன்றாட வாழ்க்கையில் நாம் கவனிக்கத் தவறி கடந்து சென்றுவிடும் ஹாஸ்ய கணங்களைக் கண்டெடுத்து கதாபாத்திரங்களின் சூழ்நிலையில் கனகச்சிதமாகப் பொருத்திவிடும் நகைச்சுவைப் பொறியாளர் அவர்.
பொறுமை வேண்டும்
தந்தையின் ஆவலை ஏற்று, இன்ஜினீயரிங் படித்துவிட்டு நல்ல வேலையில் இருந்த ரங்காச்சாரி மோகன், பள்ளிப் பருவத்திலேயே நாடகம் எழுதத் தொடங்கிவிட்டவர். அப்பாவைப் போலவே ஆங்கிலத்தில் தனக்கிருந்த அபார மொழியறிவை, தமிழ் வசனங்களோடு கலந்து தந்து சிரிக்க வைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.
“என் நாடகம் ஒன்றில், ஒரு பார்பரை டாக்டரா நடிக்க வைப்பாரு நம்ம ஹீரோ. பார்பரா அவர் இருக்குறப்ப கதாநாயகி பார்த்திருப்பா. டாக்டரா பார்க்கிறப்போ, கதாநாயகி கேட்பாள், ‘நான் உங்கள எங்கேயோ பார்த்திருக்கிறேனே?’ என்று. அதற்குப் பதில் எழுதணும். இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தேன்.
அதிகாலையில் ஐந்து மணிக்குப் பதில் கிடைத்தது. அந்த பதில்.., ‘என்னை நீங்க பார்த்தே இருக்க முடியாது. ஏன்னா நான் ஒன்லி ஃபார் ஜென்ஸ்’ என்று டாக்டரா நடிக்கும் பார்பர் சொல்லுவார். அவர் வேற எதையோ சொல்லும்போதே அவருடைய குணாதிசயம் வந்துடுது இல்லையா.
இதை எதுக்குச் சொல்றேன்னா, மொழி இருக்கு பாருங்க, அதுக்காகக் காத்திருக்கணும். பொறுமை இருக்கணும். காத்திருக்கறவனுக்கு மொழி நிச்சயமாகக் கிடைக்கும். மொழி மாறுவதைப் பத்தி ரொம்ப கவலைப்படக் கூடாது. மொழி கலப்பில்லாமல் எதையும் செய்ய முடியாது.
அதே நேரத்துல தேவையில்லாம நம்ம மொழிய வசனத்துல சிரச்சேதம் செய்யவும் கூடாது” என்று கூறியிருக்கிறார். இறுதி தருணம்வரை தமிழ் வெண்பாக்களை ரசித்துப் புனைந்துகொண்டிருந்த கிரேஸி மோகன், “கி.வா.ஜகந்நாதன், கொத்தமங்கலம் சுப்பு, கிருபானந்த வாரியார், கவிஞர் வாலி” ஆகியோரை வாசித்தே தமிழைத் தனதாக்கிக் கொண்டதாகப் பெருமைபொங்கக் கூறுவார்.
ஒரு பேட்டியின் போது, ‘உங்கள் நகைச்சுவையின் குரு’ யாரென்றேன். “அப்பாவும், அவரிடமிருந்த நகைச்சுவைக்கு குருவாக இருந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும்” என்றார்.
அதேநேரம், தனக்குமுன் மேடை நாடக நகைச்சுவையிலும் அதையே திரையில் பரிசோதித்து வெற்றிகண்ட ‘சித்ராலயா’ கோபுவைத் தனது முன்னோடியாக ஏற்றுக்கொண்டவர். இனி வரும் தலைமுறையினர் கலப்படம் ஏதுமற்ற தூய நகைச்சுவையைக் கற்றுக்கொள்ள விரும்பினால் அதற்கு கிரேஸி மோகன் விட்டுச் சென்றிருக்கும் படைப்புகளே பல்கலைக்கழகம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago