பானுமதி அம்மையாரின் நினைவாற்றலை எண்ணி வியப்பு மேலிட்டது. “எப்பவோ நடந்ததை எல்லாம் இவ்வளவு துல்லியமாகச் சொல்லுகிறீர்களே!” என்று அவரிடம் கேட்டேன்.
“எனக்குச் சின்ன வயதிலிருந்தே கிரகித்து உள்வாங்கிக்கொள்ளும் சக்தி அதிகம். என் கணவர்கூட அடிக்கடி, இதையெல்லாம் எப்படி ஞாபகம் வச்சிருக்கே என்பார்!” என்றவர் காதல் நினைவுகளைத் தொடர்ந்து பகிரத் தொடங்கினார்.
“ ரோஜாச் செடியின் முள் கிழித்த மறுநாள் படப்பிடிப்பு இல்லை. அம்மா ஷாப்பிங் போக விரும்பினார். நாங்கள் ஒரு காரில் புறப்பட்டோம். சற்றுத் தள்ளி புரொடக்ஷன் கார் நின்றது. அதை நோக்கி ராமையா, ஹெச்.வி.பாபு, ராமகிருஷ்ணா எல்லோரும் வந்து கொண்டிருந்தார்கள். நான் ராமகிருஷ்ணாவைப் பார்த்தேன்.
இதை அப்பா கவனித்துவிட்டார். அதே நேரம் ஹெச்.வி.பாபு ராமகிருஷ்ணா என்று கூப்பிட்டார். ‘நீ சொன்ன பையன் அவன்தானா?’ என்று அப்பா சட்டென்று கேட்டார். நான் வேறு வழியின்றித் தலையாட்டினேன். அப்பா ராமகிருஷ்ணாவைப் பார்த்தார். அவர் முகம் வாடிவிட்டது.
‘அச்சச்சோ... இந்தப் பையனா? ஆள் இப்படி நோஞ்சானாக இருக்கானே. பழக்க வழக்கங்கள், குணத்தில் இவன் நல்லவனாக இருக்கலாம். ஆனால், உன் பக்கத்தில் இவனை மாப்பிள்ளையாக வைத்துப் பார்க்கவே பிடிக்கலையே அம்மா..’ என்று அதிருப்தியோடு முணுமுணுத்தார்.
என் இதயம் நின்றே விட்டது. அப்பாவிடம் ஒரு வழக்கமுண்டு. எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் தங்கள் பெண்களுக்கு வரன் பார்க்கும் போதெல்லாம் அப்பா ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அடிக்கடி சொல்லுவார். ‘பையன் ஆஜானுபாகுவாக இருக்க வேண்டும்’.
இதே மாதிரி மாப்பிள்ளை எப்படி இருக்கவேண்டுமென்று அவரிடம் ஒரு சாமுத்திரிகா லட்சணப் பட்டியலே இருந்தது. காரில் அப்பா பக்கத்தில் உட்கார்ந்திருந்தாலும் எங்களுக்கு இடையே ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.
ஜமீன்தார் வீட்டுச் சம்மந்தம்
ஷாப்பிங்கைப் பெரிய ஈடுபாடு இல்லாமல் முடித்துவிட்டுத் திரும்பினோம். இரவுச் சாப்பாட்டின் போது அப்பா என் கல்யாணப் பேச்சைத் திடுதிப்பென்று எடுத்தார்.
‘என் நண்பரின் பையன் ஒருத்தன் இருக்கான். பெரிய ஜமீன்தார் குடும்பம். பி.ஏ.படித்திருக்கிறான். பார்க்கிறதுக்கு ராமனைப் போல லட்சணமாக இருப்பான். ஆனால், பெண்கள் விஷயத்தில் கிருஷ்ணனைப் போல்தான்! கல்யாணம் பண்ணினால் சரியாகிவிடுவான்.
நீ என்னம்மா சொல்லுகிறாய்?’ என்று என்னைப் பார்த்துச் சட்டென்று கேட்டார். இப்போது இந்தப் பேச்சை எடுப்பானேன்? ராமகிருஷ்ணாவுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிவைக்க முடியாது என்று மறைமுகமாகச் சொல்லுகிறார். நான் சாப்பாட்டிலிருந்து பாதியில் எழுந்து கை கழுவினேன்.
அப்பா, அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ‘அந்தப் பையன் பார்க்க லட்சணமாக இல்லாவிட்டாலும் வேலையைச் சொல்லு. சினிமா வேலை நிரந்தரமானது கிடையாது. இந்த மாதிரி பையனுக்கு ஆசையாக வளர்த்த பெண்ணை கொடுக்கணுமா என்றுதான் யோசிக்கிறேன்’. அம்மா குறுக்கிட்டுச் சொன்னார்.
‘அவளுக்கு என்ன தெரியும்? நீங்க அந்த ஜமீன்தார் பையனையே முடியுங்க. சினிமாவும் வேண்டாம், கினிமாவும் வேண்டாம்! அவ மனசு மாறுவதற்குள் இந்த இடத்தை முடியுங்க’ என்றாள். அப்பாவும் ‘சரி… பிள்ளை வீட்டாரை வந்து பெண் பார்க்கச் சொல்லி எழுதறேன்’ என்று தீர்க்கமாக அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
பெண்ணுக்குப் பிழைக்கத் தெரியாது
அப்பாவிடம் நேரடியாகப் பேசத் துணிவு இல்லை. என் தங்கையைத் தூது அனுப்பினேன். ‘கல்யாணம் என்றால் அது ராமகிருஷ்ணனோடுதான். இல்லாவிட்டால் காலமெல்லாம் கன்னியாகவே இருந்து விடுகிறேன்’. எனது முடிவைப் பெற்றோர் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் எப்போதும் செல்லமாகவே பேசும் அப்பா சொன்னார், ‘என் கண்ணல்ல..
உன் எதிர்காலம் நல்லா இருக்கணும் அம்மா! இதுதான் என் ஆசை!. பையன்கள் விஷயம் வேறே. அவங்க எப்படியாவது பொழச்சுப்பாங்க. ஆனா பொண்ணுங்க கல்யாணத்தைப் பெத்தவங்கதான் ஜாக்கிரதையாய் நல்ல இடமாகப் பார்த்து செஞ்சு வைக்கணும்.
ராமகிருஷ்ணா நல்ல பையன் என்றுதான் கேள்விப்பட்டேன். என்ன படிச்சிருக்கான் தெரியுமா?’ என்றார். நான் அசடுபோல் ‘எனக்குத் தெரியாதே’ என்றேன். அவர் என்னை அடுத்தடுத்து மடக்கிக் கேள்விகள் கேட்டுக்கொண்டே வந்தார்.
“வீடு, இல்லன்னா சொத்துபத்து ஏதும் இருக்கா?”
“தெரியாது”
“அவரோட ஜாதி என்ன தெரியுமா?”
“தெரியாது.”
“அப்பா அம்மா இருக்காங்களா?”
“தெரியாது”.
அப்பா சிரித்தார்.
எனக்குத் தலைசுற்றியது. இதைப் பற்றியெல்லாம் நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அவரை உளமாரக் காதலிக்கிறேன் என்பது ஒன்றுதான் எனக்குத் தெரியும். அதுவும் அவருக்குத் தெரியாது.
அப்பா கேட்டதிலும் தப்பொன்றுமில்லை. ஒரு விஷயம் தெளிவானதில் நிம்மதி. என்னவர் பற்றி இத்தனை விஷயங்கள் அவருக்குத் தெரிந்தாக வேண்டும். நான் என்ன செய்வேன்? அவர் கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் இல்லையே!
காதலின் அசடு
அப்பாவின் கேள்விகளையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த என் தங்கை, எப்படியோ ராமகிருஷ்ணா பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டுவந்துவிட்டாள். ‘பி.ஏ. வரை படித்திருக்கிறார்!’ பிராமணர். சொல்லிக் கொள்ளும்படியாக எந்தச் சொத்தும் இல்லை! அப்பாவுக்கு ஏதோ அரசாங்க உத்தியோகம்! தாயார் திருவல்லிக்கேணியில் தன் சகோதரி வீட்டில்தான் வசிக்கிறார்’.
தங்கை கொண்டுவந்திருந்த தகவல்கள் அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட அப்பா, ‘அப்போ நீ அவனை விரும்பற விஷயம்கூட அவனுக்குத் தெரியாது! அப்படித்தானே?’ என்றார். நான் தலையாட்டினேன். ‘ஆக அவனுக்குத் தெரியாமலே அவனைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாய்! அட அசடே..!’ என்று சிரித்தார் அப்பா.
ஆமாம் நான் ஒரு முட்டாள்தான்! அவரை நேசிக்க எனக்கு ஏது உரிமை? அவருக்கே தெரியாமல் அவரை நேசிக்கும் இந்தத் துணிச்சல் எனக்கு எப்படி வரலாம்? அம்மா சொன்னார். ‘ஐயோ பாவம்! அவளுக்கு என்ன வேணும்னு அவளுக்கே தெரியாதுங்க.
பசிச்சா பசிக்குதுன்னு சொல்லத் தெரியாது! உங்களுக்குத் தெரியாமல் அவன் கிட்டே போய் என்னைக் கல்யாணம் செஞ்சுக்கோ அப்படீன்னு சொல்லிடுவாளா? வீட்டுக்கு மூத்த பொண்ணு வேறே. அவ கண்ணீர் விட்டா குடும்பத்துக்கு ஆகாது! உங்க இஷ்டம்போல் செய்யுங்க’ என்று சொல்லிவிட்டு தன் கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.
இந்த விஷயங்கள் எல்லாம் கண்ணாமணி அம்மா காதுக்கு எட்டிவிட்டன. மறுநாள் மாடியில் வந்து அவரைச் சந்திக்குமாறு அழைப்பு வந்தது. நான் தயங்கியபடியே மாடிக்குப் போனேன்.
‘வாடி பொண்ணே! எல்லா சங்கதியும் தெரிஞ்சு போச்சு! நான் என் கணவரிடம் படத்தின் பெயரை ‘கிருஷ்ண பிரேமா’ என்பதற்குப் பதில் ‘ராமகிருஷ்ண பிரேமா’ என்று வைக்கச் சொல்லிட்டேன்!’ என்று சொல்லிவிட்டுச் டு சத்தம்போட்டு சிரித்தார். நான் வெட்கத்தால் தலை குனிந்தாலும் அழுத்தும் வேதனையால் அவர்முன் கலங்கி நின்றேன்.
(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு:
thanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago