திரையுலகம் கனவுகளின் தொழிற்சாலை மட்டுமல்ல; வினோதங்களின் தொழிற்சாலையும்தான்! தொடக்ககால சினிமா வரலாற்றில் காணக் கிடைக்கும் சில சுவாரசிய வினோதங்கள் இவை.
தமிழ் சினிமாவின் தந்தை எனப் போற்றப்படும் நடராஜ முதலியார் தயாரித்து வெளியிட்ட இரண்டாவது மவுனப்படம் 1971-ல் வெளியான ‘திரௌபதி வஸ்திராபஹரணம்’. இதில் திரௌபதியாக நடித்தவர் தமிழ்ப்பெண்னோ இந்தியப்பெண்ணோ அல்ல; ஒரு ஆங்கில நடிகை. ஆங்கிலேய அதிகாரிகள் பொழுதுபோக்கும் ‘பால் ரூமி’ல் நடனமாடும் கல்கத்தா பெண் ஒருவரை திரௌபதி வேடத்துக்கு அமர்த்திக்கொண்டார் நடராஜ முதலியார்.
ஆனால், கடைசி நேரத்தில் துகிலுரியும் காட்சியில் அவர் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அந்தக் காட்சி இல்லாமல் எப்படி ‘திரௌபதி வஸ்திராபஹரணம்’ படத்தை எடுக்க முடியும்? அந்த நேரத்தில் கல்கத்தா பெண்ணுடன் நடனமாடிவந்த ஆங்கிலோ- இந்தியப் பெண், அதற்கு ஒப்புக்கொண்டார். அவரைத் தொடர்ந்து ஆங்கிலோ - இந்தியப் பெண்கள் தமிழ் மவுனப் படங்களில் நடிக்க முன்வந்தார்கள்.
நடிக்க மறுத்தனர்
மவுனப் படங்கள் படம்பிடிக்கப்பட்ட காலத்தில் தமிழ் நாடக உலகம்தான் தனிப்பெரும் பொழுதுபோக்குத் துறை. நூற்றுக்கும் அதிகமான தொழில்முறை நாடகக் குழுக்கள் இருந்தன. அவற்றில் திறமைமிக்க நடிகர்கள் பலர் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்கள். ஆனால், நாடக நடிகர்கள் தொடக்கத்தில் சினிமாவில் நடிக்க மறுத்துவிட்டார்கள். அதற்கான காரணம் சற்று வினோதமானது என்றாலும் அர்த்தபூர்வமானது. அன்றைய நாடக நடிகர்கள் சிறந்த பாடகர்களாக விளங்கினார்கள்.
மவுனப் படங்களில் அவர்களால் பாடி நடிக்க முடியாதது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. எனவே, அவர்கள் மவுனப் படங்களில் நடிக்க மறுத்தனர். இதனால் நடனமாடும் பெண்கள் நடிகைகள் ஆனார்கள். பயில்வான்களும் சர்க்கஸில் ஸ்டண்ட் செய்பவர்களும் உடலை நன்கு வளர்த்து வைத்திருந்த மல்யுத்த வீரர்களும் நடிகர்கள் ஆனார்கள். மரைன் ஹில் என்ற ஆங்கிலோ இந்திய நடன மாது நடிக்க வந்தபோது அவரது பெயர் விலோச்சனா என மாற்றப்பட்டது.
இவரைப் போன்ற சில ஆங்கிலோ இந்தியப் பெண்கள் நடிக்க வந்தபோதும் மவுனப் படக் காலத்தில் நடிகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. மவுனப் படம் தோன்றி மக்களிடம் செல்வாக்குப் பெற்றுவிட்ட முதல் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1927-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் ‘சினிமாட்டோகிராப் என்கொயரி கமிட்டி’ ஒன்றை நியமித்து, திரையுலகின் தேவைகளைக் கேட்டறிந்தது. அது தனது பரிந்துரைகளில் ஒன்றாக ‘நடிகைகளை உருவாக்க ஒரு பயிற்சிப் பள்ளியைத் தொடங்க வேண்டும்’ என வலியுறுத்தியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
நம்ப முடியாத தொடக்கம்
இன்றைய படங்களுடன் அன்றைய படங்களை ஒப்பிட்டுக்கூறும்போது ‘இப்பவெல்லாம் படமா எடுக்குறாங்க? நாலு ஃபைட், நாலு பாட்டு, அதுல ஒண்ணு குத்துப்பாட்டு. காதல்ங்கிற பேர்ல வர்ற காட்சிகளைக் குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்க முடியுமா?’ என்று மூத்த பார்வையாளர்கள் கேட்பார்கள். ஆனால், தமிழ் சினிமாவின் மவுனப்பட யுகத்தில் இந்த எல்லா அலங்கோலங்களும் இருந்தன.
அதற்குக் காரணம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏராளமான மவுனப் படங்கள் பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டன. அவற்றில் இந்த அம்சங்கள் அனைத்தும் மலிந்திருந்தன. இந்தப் படங்களோடு உள்நாட்டு மவுனப் படத் தயாரிப்பாளர்கள் போட்டிபோட வேண்டியிருந்தது. இதனால் நம்மவர்கள் தயாரித்த புராணப் படங்களிலும் சண்டைக் காட்சிகள், சாகசக் காட்சிகள், பெல்லி நடனம், முத்தமிடும் காட்சி போன்றவை சர்வ சாதாரணமாக இடம்பெற்றன.
இந்தப் போக்கை ஓரளவுக்கு மாற்றிக் காட்டியவர் மவுனப்பட காலத்தில் நம்மவர்களின் கதையைப் படமாக்கிய புதுக்கோட்டை மைந்தரான ராஜா சாண்டோ. மக்கள் மத்தியில் செவிவழிக் கதையாக இருந்த நல்ல தங்காள் நாட்டார் கதையை ‘ராஜேஸ்வரி’ என்ற தலைப்பில் தயாரித்து வெளியிட்டபோது ‘உங்கள் சொந்தப் படத்தைக் காணத் தவறாதீர்கள்’ என்று விளம்பரம் செய்தார்.
சோதனை முயற்சியே முதல் சாதனை!
இந்தியாவில் சினிமா முதலில் எந்தமொழியில் பேசியது என்று கேட்டால், பலர் முந்திக்கொண்டு இந்தி என்பார்கள். உண்மைதான்! ஆனால், தென்னிந்தியாவின் எந்த மொழியில் முதன்முதலில் சினிமா பேசியது என்று கேட்டால் அதற்கான பதில் வினோதமானதாகவே அமைந்துவிட்டது! இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தென்னிந்தியாவின் முதல் பேசும்படம் அமைந்துவிட்டது.
மேல்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிலிம் சுருளும் ஒலிப்பதிவுக் கருவிகளும் இந்திய மொழியான இந்தியைப் பதிவு செய்யுமா இல்லை பகிஷ்கரிக்குமா என்ற அச்சம் கொண்டிருந்தார்கள் சுதேசிப் படத் தயாரிப்பாளர்கள். அப்படி அஞ்சியவர்களில் ஒருவர் ‘இம்பீரியல் மூவிடோன்’ என்ற மவுனப்படத் தயாரிப்பு நிறுவனத்தை பம்பாயில் வெற்றிகரமாக நடத்திவந்த அர்தேஷிர் இரானி.
இந்தச் சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள ‘ஆலம் ஆரா’ என்ற இந்தியாவின் முதல் படத்தைத் தயாரித்து வெளியிட்டு பிரிட்டிஷ் இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். முதல் பேசும்படத்தைத் தயாரித்துவிட வேண்டும் என்ற உந்துதலை அவருக்குக் கொடுத்தது 1929-ல் இந்தியாவுக்குள் முதன்முதலாக நுழைந்த ஒரு ஆங்கிலப் பேசும்படம். அதுதான் கல்கத்தாவில் முதன்முதலாகத் திரையிடப்பட்ட ‘மெலடி ஆஃப் லவ்’.
drama-2jpgright‘ஆலம் ஆரா’வில் இந்தியைப் பரிசோதனை செய்துபார்த்த இரானிக்கு மவுனப் பட உலகம் செழித்து விளங்கிய மற்ற இந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கிலும் இந்தச் சோதனையைச் செய்து பார்த்தால் என்ன எனத் தோன்றியது. ஹெச்.எம்.ரெட்டி என்பவரிடம் இயக்குநர் பொறுப்பைக் கொடுத்தார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிக் கலைஞர்களை பம்பாய்க்கு அழைத்தார்.
தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களைத் தமிழ், தெலுங்கில் பேசவும் பாடவும் ஆடவும் செய்து ‘லைவ் சவுண்டி’ல் படமாக்கினார். படமாக்கியதைப் போட்டுப் பார்த்தார். விதேசி பிலிம் சுருள் இந்தியை மட்டுமல்ல, எந்தமொழியையும் ஏற்றுக்கொள்ளும் என்று அவருக்குத் தெரிந்துபோனது.
இப்படி பிராந்திய மொழிச் சோதனைக்காக மதராஸிலிருந்து கே.சுப்ரமணியம் பரிந்துரையுடன் பம்பாய்க்கு அனுப்பிவைக்கப்பட்ட தமிழ் நடிகை டி.பி.ராஜலட்சுமி. ஆமாம்! முதல் தமிழ் பேசும்படத்தின் கதாநாயகியாக டி.பி.ராஜலட்சுமியை வரலாறு பதிவு கொண்டது.
நடனம் தெரியாத டி.பி.ராஜலட்சுமியைக் குறத்தி நடனம் ஆடவைத்துப் பதிவு செய்துகொண்ட அந்தப் படம் 1931-ல் வெளியான ‘காளிதாஸ்’. மவுனப் படங்களையும் பேசும் ஆங்கிலப் படங்களையும் திரையிட்டு வந்த ‘கினிமா செண்டிரல்’ திரையரங்கில் 1931, அக்டோபர் 31 தீபாவளி தினத்தில் வெளியான ‘காளிதாஸ்’ படத்தைக் கண்ட மதராஸ்வாசிகள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
கதாநாயகி வித்யாதரியாக நடித்திருந்த டி.பி.ராஜலட்சுமி தமிழில் பேச, அவரது கேள்விகளுக்குத் துணைக் கதாபாத்திரத்தில் நடித்த எல்.வி.பிரசாத் தெலுங்கில் பதில் சொல்லுவார். அரசனாக நடித்தவர் இந்தியில் பேசினார். இப்படி இதில் பங்கேற்றிருந்த கலைஞர்கள் அனைவரும் அவரவர் தாய்மொழியில் பேசினார்கள். ஒலிப்பதிவு சோதனைக்காகத் தயாரிக்கப்பட்ட படமே தமிழ் சினிமா வரலாற்றில் முதல் பேசும்படம் என்ற சாதனையாகப் பதிவாகிவிட்டது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago