மறு வெளியீடு: வசந்த மாளிகை - ஆச்சரியப்படுத்திய  ஆனந்தும் லதாவும்

By செய்திப்பிரிவு

மனித மனங்களை ஊடுருவி மாயங்களை நிகழ்த்துவதில் காதலை மிஞ்சிய நுட்பமான உணர்வு இல்லை என்றே சொல்லிவிடலாம். அதன் வெளிப்பாடாகவே, காதலை, அதன் நேர்மையோடு சொல்லும் படங்களுக்குக் கிடைக்கும் அபார வெற்றியைப் பார்க்க வேண்டும்.

அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் நீண்ட வரலாற்றில் ‘காதல் காவியம்’ என ரசிகர்களால் இன்றளவும் புகழப்பட்டுவரும் ‘வசந்த மாளிகை’ படத்துக்குத் தனியிடம் உண்டு.

மற்ற காதல் படங்களிலிருந்து சில விஷயங்களில் வேறுபட்டு நிற்பதே அந்தப் படத்தின் தனித்தன்மை எனக் கூறலாம். பதின்ம வயதுக் காதல் உட்பட, எதிர்பாலின ஈர்ப்பைத் தொடக்கப்புள்ளியாகக் கொண்டு காதலைப் பேசிய படங்களே அதிகம். ஆனால், உடலும் மனமும் முதிர்ந்த ஒரு காதலை வடிவமைத்துக் காட்டியது வசந்த மாளிகை.

மேலும், அனைத்து உத்தம குணங்களையும் உள்ளடக்கிய தமிழ் சினிமா நாயக பிம்பத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு, ஒரு ஜமீன்தார் குடும்பத்தின் ஆண் வாரிசு இருக்கலாம் என்று நம்பக்கூடிய அனைத்து பலவீனங்களும் கொண்ட செல்வந்தராக நாயகன் ஆனந்த் சித்தரிக்கப்பட்டார்.

படத்தின் மற்றொரு புதுமை காதல் உணர்வு மட்டுமே உயர்ந்தது இல்லை அதற்கு நிகராகத் தன்மானமும் சுயமரியாதையும் முக்கியம் என்பதை வலுவான நாயகி கதாபாத்திரத்தின் மூலமாக நாடகத்தனமின்றி நிறுவியிருப்பார்கள்.

ஆனந்தும் லதாவும்

ஒரு நடிகன் ஏற்கும் கதாபாத்திரத்தின்  உணர்வுகள் சரியான முறையில் பார்வையாளர்களிடம் சென்று சேர வேண்டுமானால் அதற்கு உடல்மொழி, முக பாவம் ஆகியவற்றோடு குரலும் மிக முக்கியம். நாயகியிடம் காதலை மறைமுகமாகவும் நேரிடையாகவும் சொல்ல முற்படும்போது சிவாஜியின் குரலைக் கவனியுங்கள்.

மென்மையான மயிலிறகால் வருடுவதுபோல் பேசுவார் ஆனந்தாக வரும் நடிகர் திலகம். “லத்தா...” என்று அவர் அழைக்கும் தொனியே, ஆனந்த் காதலின் வசமாகியிருப்பதைக் கூறிவிடும். இவர்தான் கட்டபொம்மனாகவும் குணசேகரனாகவும் கர்ஜித்தார் என்றால் நம்பவே முடியாது.

மழையிலிருந்து காத்துக் கொள்ளக் குடிசையில் நாயகியோடு ஒதுங்கும் நேரத்தில் மனதில் பெருகும் காதலையும் காமத்தையும் வார்த்தைகள் சரியாகச் சிக்காமல் கண்களாலும் உடல் மொழியாலும் வெளிப்படுத்துவது அவருக்கு மட்டுமே சாத்தியம்.  

இந்தப் படம் வாணிஸ்ரீயின் திரைப்பட வாழ்க்கையில் அரிதாய் அமைந்த படம். சந்தர்ப்ப சூழலால் தவறான வழிக்குப் போய்விட்ட நாயகனின் மேல் தோன்றும் இரக்கம், கரிசனம் ஆகிய உணர்வுகள், பின் அவையே காதலாக மலர்வதற்கான படிக்கற்களாக மாறுவது அற்புதமான பரிமாணத்துடன் லதாவின் கதாபாத்திரத்தின் வழி வெளிப்படுத்தியிருப்பார் வாணிஸ்ரீ.

அவரது நடிப்பின் உச்சமாக, காதலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பால்,  தன் சுயமரியாதை கேள்விக்குள்ளாகப்பட்டதும் வெகுண்டெழுந்து அந்தக் காதலையே நிராகரிப்பது அந்தக் கதாபாத்திரத்தை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துவிடுகிறது. இன்னும் ஒருபடி உச்சமாகச் சென்று, ஆனந்த், தன்னால் உயிர் விடத் துணிந்துவிட்டார் என்றதும் அந்த காதலை ஏற்று வாழ வைப்பதை லதா கதாபாத்திரத்தில் உயிரை உருக்கும் வண்ணம் வெளிப்படுத்தியிருப்பார் வாணிஸ்ரீ.

உருவாக்கத்தில் இருவர்

‘வசந்த மாளிகை’ படத்தின் உருவாக்கத்தில் திரைக்குப் பின்னால் இயங்கிய இருவரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பொதுவாக, அடுக்கு மொழி வசனங்களோ, எதிர், புதிர் வாதங்களோ உணர்ச்சி பிரவாகமான வார்த்தைகளோ அரங்கில் கைதட்டல் பெறும்.

ஆனால், வெறும் ஓரிரு வரி வசனங்களுக்குக் கைதட்டல்களை அள்ளியவர் வசனகர்த்தா பாலமுருகன். “மனமா அது மாறுமா..? ”. “அதைத்தான் அவங்க பாசமுன்னு சொல்றாங்க.. நீ வேஷம்னு நினைக்கிறயா..? ”, “விஸ்கியைத் தானே குடிக்க வேண்டாம்னு சொன்னே, விஷத்தை குடிக்க கூடாதுன்னு சொல்லலியே.? ” - போன்றவை சில எடுத்துக்காட்டுகள்.

மற்றொருவர் ‘திரையிசைத் திலகம்’ கே.வி மகாதேவன். கவியரசர் கண்ணதாசன் அற்புத வரிகள் தர, ‘மயக்கமென்ன’,  ‘யாருக்காக’, ‘இரண்டு மனம் வேண்டும்’, ‘கலைமகள் கைப்பொருளே’  போன்ற என்றும் பசுமையான பாடல்கள் இன்றைக்கும் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன.

வெறும் வசன நடையில் எழுதப்பட்ட ‘ஓ மானிட ஜாதியே’ ஒரு கொண்டாட்டப் பாட்டு என்றால், ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’ பாடல் அதிலும் குறிப்பாக இறுதி சரணத்தில் ‘நான் சக்ரவர்த்தியடா…’ என்ற வார்த்தைகள் ரசிகர்களின் உச்சக்கட்ட கொண்டாட்டமாகவே இன்றும் அரங்கில் வெளிப்படுகிறது.

படத்தின் முடிவு சோகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த கேரள மாநில விநியோகஸ்தர் படத்தின் இறுதியில் வரும்  ‘யாருக்காக’ப் பாடல் காட்சியோடு படம் முடிவதாக அமைக்க அந்த முடிவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கேரளத்திலும் பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழகத்திலோ வசூல் வரலாற்றின் சாதனையாக அமைந்தது.

தமிழகத்திலும் இலங்கையிலும் 200 நாட்களைக் கடந்து ஓடிய  ‘வசந்த மாளிகை’ இப்போது நவீன டிஜிட்டல் முறையில் உருமாற்றப்பட்டு இன்று முதல் (ஜூன் 21) தமிழகமெங்கும் வெளியிடப்படுகிறது. படத்தைப் பல முறை பார்த்தவர்களுக்கும் இதுவரை பார்க்காத இன்றைய தலைமுறையினரும் பெரிய திரையில் பார்த்து ரசிக்க இது ஓர் அரிய வாய்ப்பு.

- முரளி ஸ்ரீநிவாஸ்

தொடர்புக்கு: t.murali.t@gmail.com

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்