கண்ணோட்டம்: நேரில் வந்த இயக்குநர்கள்! - ‘லைவ்’ சர்வதேசத் திரைப்பட விழா 2018

By திரை பாரதி

 

சு

யநலத்தின் குரூர கைகள் நமது காற்றையும் நீரையும் மண்ணையும் மலையையும் ஏன் உண்ணும் உணவையும் சிதைத்துக்கொண்டிருக்கின்றன. தமிழகம் முன் எப்போதையும்விட மிக மோசமான சூழலியல் பிரச்சினைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

இத்தகைய தருணத்தில் அரசியல், சமூகம், கலை, இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் சுற்றுச்சூழல் பேசுபொருளாக்கப்பட வேண்டும். கலைத்துறையைப் பொறுத்தவரை சூழலியல் அவலங்களை ஆவணமாக்கி மக்கள் மத்தியில் மிக எளிதாகவும் வேகமாகவும் எடுத்துச்சென்று தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகக் காட்சி ஊடகம் இருக்கிறது.

உலகம் முழுவதும் உண்மையாக நிகழ்ந்துகொண்டிருக்கும் சூழலியல் பிரச்சினைகளைக் கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள், இன, மொழி, தேச எல்லைகளைக் கடந்து மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. அப்படிப்பட்ட படங்களைத் தமிழ் பார்வையாளர்களுக்கும் அறிமுகப்படுத்துவதன் மூலம்தான் திரையுலகுக்கு ‘சூழலியல்’ அடிக்கடி கையாளப்பட வேண்டிய உள்ளடக்கம் என்பதைக் கவனப்படுத்த முடியும்.

இதைக் கருத்தில் கொண்டே சென்னை லயோலா கல்லூரியின் திரைக்கல்வித் துறையான ‘லைவ்’ (LIVE - Loyola Institute of Vocational Education), பூவுலகின் நண்பர்கள், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இணைந்து சர்வதேச சூழலியல் திரைப்பட விழாவைக் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி 23வரை நடத்தின.

இந்த நான்கு நாள் திரைப்பட விழாவில் பொலிவியா, திபெத், பங்களாதேஷ், அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட சர்வதேச மொழித் திரைப்படங்களுடன் தமிழ், மலையாளம், மராத்தி மற்றும் மணிப்புரி உள்ளிட்ட மொழிகளில் எடுக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள், இலங்கையில் எடுக்கப்பட்ட ஒரு குறும்படம், லயோலா கல்லூரி மாணவர்களின் நான்கு குறும்படங்கள் ஆகியவை திரையிடப்பட்டன.

தொடக்கவிழா

‘அங்கமாலி டைரீஸ்’ மலையாளப் படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி, ‘சூது கவ்வும்’ இயக்குநர் நலன் குமரசாமி, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இணைந்து லயோலா கல்லூரியின் காட்சி ஊடக அரங்கில் நடந்த படவிழாவைத் தொடங்கி வைத்தனர். மேலும் நிகழ்வில் லயோலா கல்லூரியின் ரெக்டர் அருட் தந்தை ஏ.எம். பிரான்சிஸ் ஜெயபதி, கல்லூரியின் முதல்வர், முனைவர். எம். சேவியர் ஆரோக்கியசாமி, ’லைவ்’துறையின் இயக்குநர் ஏ.பி. அருண் கண்ணன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் அதில் அங்கம் வகிக்கும் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநில அளவில் நாம் எதிர்கொள்ளும் சூழலியல் சிக்கல்களை எடுத்துக்காட்டி, அவற்றின் கேடுகளை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் திருப்பூரில் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் உருவெடுத்துவரும் பேராபத்தையும் தொடக்க நிகழ்வில் பங்குபெற்ற பலரும் வலியுறுத்திப் பேசினார்கள்.

திரையிடல்கள் மற்றும் நாடகம்

படவிழாவின் தொடக்கப்படமாக ‘ரேபிட் ப்ரூஃப் பென்ஸ்’ (Rabbit proof fence) என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. இது ஆஸ்திரேலியா அபோர்ஜின்ஸ் பிரச்சினைகளைப் பேசியது. தொடர்ந்து ‘ஜலால்'ஸ் ஸ்டோரி’ என்ற பங்களாதேஷ் நாட்டின் திரைப்படம் திரையிடப்பட்டு, அதன் இயக்குநர் அபு சஹேத் ஈமானுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. பின்னர் காவிரி ஆற்றின் பயணம் குறித்த ‘Journey with the River Cauvery’, உலகமயமாதலுக்குப் பிறகான சென்னையைக் குறித்த ‘யாருக்காக சிங்காரச் சென்னை’ ஆகிய இரு ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

முதல்நாள் திரையிடல்களின் முடிவில் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்ற நாவலை மையமாக வைத்து அதே பெயரில் இயக்குநர் அருண்மொழி இயக்கியிருந்த நவீன நாடகத்தை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைத்து ‘சூழலியல் திரைப்படவிழாவின் அவசியம்’ குறித்துப் பேசினார்.

இயக்குநர்களின் பங்கேற்பு

இரண்டாம் நாள் திரையிடலில் மூன்று தேசிய விருதுகள் உட்படத் தனது படைப்புகளுக்காகப் பல சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கும் பிரபல மலையாள இயக்குநர் பிஜு தாமோதரின் ‘காடு பூக்குன்ன நேரம்’ பங்குபெற்றது. மாவோயிஸ்டுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படக்காட்சியின் முடிவில் இயக்குநர் பிஜு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதேபோல் சர்வதேசப் படவிழாக்களில் தொடர் கவனம் பெற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த நிர்மலன் நடராஜாவின் ’அன்லாக்’ குறும்படம் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப்பெற்றது.

“போர்களினால் ஏற்படும் அழிவென்பது நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட துயரம் மிக்கது. போர் இனி எங்கும் நடக்கக் கூடாது, போர்களுக்கான துயர சாட்சியாக வாழும் தமிழீழ மக்களின் சார்பாக இதை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்ற கனத்த உரையை நிகழ்த்தினார் நிர்மலன். அவரிடம் ஈழத்தின் இன்றைய நிலை குறித்துப் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்துக்கும் பதில் அளித்தார். அன்று மாலை நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் திரைக்கதாசிரியர் அஜயன் பாலா கலந்துகொண்டார்.

‘டேம்ட் ரெய்ன்’(Dammed Rain) என்ற மராட்டியப் படத்துடன் தொடங்கிய மூன்றாம் நாள் திரைப்படவிழாவில் அந்தப் படத்தின் சதிஷ் மன்வர், இந்தப் படத்துக்காக தான் நேரடியாக மேற்கொண்ட கள அனுபவங்களையும் அவர் சந்தித்த விதர்பா பகுதி விவசாயிகளின் தொடரும் துயரங்களையும் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து ‘த லொரக்ஸ்’ என்ற அனிமேஷன் படம், தேசிய விருது பெற்ற ‘லேடி ஆஃப் த லேக்’ (Lady of the Lake) என்ற மணிப்பூர் மாநிலப் படமும் பொலிவியா நாட்டின் தண்ணீர் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஈவன் த ரெய்ன்’(EVEN the Rain) படமும் திரையிடப்பட்டன.

சிறப்புத் திரையிடல்

இறுதிநாளில் நடிகர் விஜய்சேதுபதி தயாரிப்பில், லெனின் பாரதி இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படம், திரையரங்குகளுக்கு வருமுன்பே பிரிமியர் திரையிடலாக ‘லைவ்’ படவிழாவின் கடைசிநாளில் திரையிடப்பட்டது. பல சர்வதேசப் படவிழாக்களில் பங்குபெற்று பாராட்டப்பட்டுவரும் இந்தப் படத்தின் இயக்குநருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

“ மூன்று ஆண்டுகள் மலை மக்களோடும், அவர்களின் வாழ்க்கையோடும் ஒன்றிப் பழகிய பின்புதான் படப்பிடிப்பைத் தொடங்கினோம். மேற்குத் தொடர்ச்சி மலையும் அங்குள்ள வாழ்வும் நமது பெருமிதம், நமது அரண். அதை நாம் இழந்துவிடக்கூடாது” என்று பேசினார் இயக்குநர் லெனின் பாரதி. நிறைவுவிழாவுக்கு பி.சி. ஸ்ரீராம், மிஷ்கின், எஸ்.பி. ஜனநாதன் உள்ளிட்ட திரை ஆளுமைகள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசினார்கள்.

தனது குழுவுடன் இணைந்து திரைப்படவிழா ஒருங்கிணைப்புப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவந்த ‘லைவ்’ துறையின் கௌரி சங்கர், “இந்தச் சூழலியல் படவிழாவுக்கு அருண் கண்ணன் தலைமையிலான குழுவினர் புவியியல்ரீதியாக முக்கியத்துவம் கொடுத்து படங்கள் தேர்வு செய்திருந்தது சர்வதேசப் படவிழா என்ற அளவுகோலுக்குப் பலமாக அமைந்தது. அதேபோல் திரையிடப்பட்ட படங்களின் இயக்குநர்களில் பலர் நேரில் பங்குபெற்றது நம் நோக்கத்தை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றியது. தமிழகம் முழுவதிலுமிருந்து ஊடக மாணவர்களும் திரை மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்” என்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்