தமிழகத் திரையரங்குகள் திகில் படங்களில் வரும் ஆள் இல்லாத பேய் வீடுகளைப் போல் மாறிக்கொண்டிருக்கின்றன. நாங்களும் வேலைநிறுத்தம் செய்யப்போகிறோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்திருப்பது ஏட்டிக்குப் போட்டி என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
திரையரங்க உரிமையாளர்கள் கேளிக்கை வரி நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்றித்தரக் கோரி வேலைநிறுத்தம் என்கிறார்கள். ஆனால், தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதோ டிஜிட்டல் சினிமா சேவை வழங்கிவரும் தனியார் நிறுவனங்களுக்கு (Digital Cinema Service Providers) கடிவாளம் போட.
அவர்கள் வசூலித்துவரும் திரையிடல் கட்டணம் (VPF- Visual Projection Fee) தாறுமாறாக இருக்கிறது என்று கூறியே மற்ற மூன்று மாநிலங்களுடன் இணைந்து வேலைநிறுத்தத்தில் இறங்கியிருக்கிறார்கள். எப்போதும் இல்லாத வண்ணம் தயாரிப்பாளர் சங்கம் இத்தனை தீவிரத்தோடு டிஜிட்டல் சினிமா சேவை நிறுவனங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பதன் பின்னணியில் உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஏமாற்றப்பட்டார்களா?
டிஜிட்டல் சினிமா சேவை வழங்கும் நிறுவனங்கள் தயாரிப்பாளர்களையும் திரையரங்க உரிமையாளர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருவதே உண்மை என்று புள்ளிவிவரத்துடன் கூறுகிறார் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு.
“தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் ஆகிய மூன்று தரப்பினரின் அறியாமையை டிஜிட்டல் சேவை வழங்க வந்த சில நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டுகளில் சுமார் 1,500 கோடிகளை இதில் முதலீடு செய்து மோனோபோலிகளாக மாறி நிற்கின்றன.
90 சதவீதத் திரையரங்குகள் இன்று சொந்த டிஜிட்டல் புரொஜெக்டர் கருவி இல்லாமல், காலங்காலமாக ஈட்டிவந்த விளம்பர வருவாயை இழந்து நிற்கின்றன. திரைப்படத்துறையில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய ஊழல் என்றே இதை நான் பார்க்கிறேன்”.
தயாரிப்பாளர் தலையில்தான் எல்லாம்
தொடர்ந்து பேசிய எஸ்.ஆர். பிரபு , வி.பி.எஃப் என அழைக்கப்படும் டிஜிட்டல் திரையிடும் கட்டணத்தைப் பழைய படச்சுருள் பிரதி முறைக்குப் பக்கத்தில் கொண்டுசென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டி ஆதாரங்களையும் தருகிறார், “ படச்சுருள் காலாவதியானபின் டிஜிட்டல்தான் வருங்காலத்துக்கான தொழில்நுட்பம் என்பதால் வெளிநாடுகளில் சோனி போன்ற பன்னாட்டுத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனங்கள் திரையரங்குகள் டிஜிட்டல் திரையிடல் முறைக்கு மாற உதவின. அப்பொழுது பிளேயர் (player) மற்றும் சர்வர் (server) அடங்கிய டிஜிட்டல் புரொஜெக்டரை அமைக்க சுமார் 20 லட்சம் முதல் 60 லட்சம்வரை செலவானது.
இதனால் டிஜிட்டலால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களின் தயாரிப்புச் செலவு குறைய நாங்கள் டிஜிட்டல் புரொஜெக்டருக்கு எதற்கு இவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்தனர். இந்தச் சிக்கலைத் தீர்க்க டிஜிட்டல் சேவையை வளரப்போகும் ஒரு மாபெரும் சந்தையாகப் பார்த்த டிஜிட்டல் சாதன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஒரு வழி கண்டனர். அப்பொழுது உருவானதுதான் டிஜிட்டல் திரையிடல் கட்டண முறை (VPF -Visual Projection Fee structure).
அதாவது புரொஜெக்டர் செலவை டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு ஒரு படத்துக்கு சுமார் ரூ.20,000 வீதம் 5 வருட காலத்துக்குப் படம் வெளியிடுபவரிடம் பெற்றுக்கொள்வது எனவும் இந்த முறையில்செலவுகள் அனைத்தையும் மீட்டெடுத்த பின்னர் புரொஜெக்டர் அந்தத் திரையரங்கத்துக்குச் சொந்தமாகிவிடும் எனவும் அதற்குப் பின்னர் வெறும் சேவைக் கட்டணம் மட்டும் பெற்றுக்கொள்வது எனவும் உலகளாவிய முறையில் பன்னாட்டு டிஜிட்டல் சேவை ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த முறையில் உலகம் முழுக்க 2018 -க்குப் பின் வி.பி.எஃப் கட்டணம் இல்லை. அதனால்தான் இங்கு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆன திரையரங்குகளுக்கு ஆங்கிலப் படங்களுக்கு வி.பி.எஃப் இல்லை. வெறும் சேவைக்கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதில் ஏமாந்தது வழக்கம்போல் இந்தியர்கள்தான்” என்கிறார்.
இப்படித்தான் ஏமாந்தோம்
“இந்தியாவில் டிஜிட்டல் மாற்றம் ஆரம்பித்த காலத்தில் சில திரையரங்குகள் டிஜிட்டல் புரொஜெக்டரைச் சொந்தமாக வாங்கின. ஆனால், பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் டிஜிட்டல் புரொஜெக்டர் வாங்கத் தயக்கம் காட்டியபோது டிஜிட்டல் சேவை நிறுவனங்களே ‘உங்களுக்கு புரொஜெக்டரை இலவசமாகத் தருகிறோம் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால் போதும், விளம்பர வருவாயை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்றனர். புரொஜெக்டருக்கான பணம் வசூல் ஆனவுடன் விளம்பர வருவாயை நாம் பகிர்ந்து கொள்ளலாம்’ எனச் சொன்னார்கள்.
டிஜிட்டல் புரொஜெக்டர்கள் பொருத்தப்பட்டு அதற்கான முதலீட்டை வி.பி.எஃப் மற்றும் விளம்பர வருவாய் மூலம் ஈட்டிக் குவித்து 10 வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் வி.பி.எஃப் கட்டணம் முன்பைவிட அதிகமாகக் கேட்கப்படுகிறது. தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பலமுறை வி.பி.எஃப் கட்டணமாக அள்ளிக்கொடுத்து நொந்துபோய் அதுபற்றிப் பேச முற்படும்போதெல்லாம் அசிங்கப்பட்டதற்கு டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் போட்டுள்ள கிடுக்குப்பிடி ஒப்பந்தங்கள்தாம் காரணம்.
இந்த ஏமாற்று விஷயங்கள் தெரிந்த வெகுசில திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் எதிர்த்துக் கேட்ட பொழுதெல்லாம் அவர்களுக்கு வசூலிக்கும் வி.பி.எஃப் கட்டணத்தில் கண் துடைப்பாகச் சிறிது சலுகை அல்லது விளம்பரத்தில் பங்கீடு அதிகமாகத் தந்து, இன்னும் ஹைடெக் உபகரணங்கள் இலவசமாகத் தந்து வாயடைக்கப்பட்டனர்.
அதுமட்டும் இல்லாமல் முந்தைய நஷ்டங்களால், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் மீதுள்ள கோபத்தாலும் சில முக்கியத் திரையரங்க உரிமையாளர்கள் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். இவர்கள் தவிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் பலர் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் குழம்பி நிற்கின்றனர். ஆனால், எங்கள் போராட்டம் எங்கள் கழுத்தை நெறிப்பவர்களுக்கு எதிரானது. இந்த மோனோபோலியை ஒருபோதும் ஏற்கமாட்டோம்” என்கிறார் ஆர்.எஸ்.பிரபு.
திரையரங்க உரிமையாளர் தரப்பில் பேசினார் திருச்சி ஸ்ரீதர், “ தயாரிப்பாளர்களுக்கும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும் இடையிலான பிரச்சினையில் நாங்கள் தலையிடுவது சரியல்ல. தற்போது டிஜிட்டல் சேவை நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தங்கள் வி.பி.எஃப் கட்டணத்தை 20 சதவீதம் குறைத்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்.
அதை மேலும் குறைக்கத் தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போட்டுவிட்டார்கள். இங்கே இரண்டு தரப்புமே இறங்கிவர வேண்டும். இது தொடர்பாக நான் இன்று தமிழக ஆளுநரைச் சந்தித்து திரையுலகின் பிரச்சினையைத் தீர்க்க அரசு தலையிடும்படி கேட்டுக்கொள்ள இருக்கிறேன்” என்கிறார்.
ரசிகர்களுக்கும் தொல்லை!
பெப்சி திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கச் செயலாளருமான ஆர்.கே.செல்வமணியிடம் பேசியபோது, “ எப்படியாவது நாம் தப்பித்துக்கொள்வோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் நினைக்கவில்லை.
எப்பாடு பட்டாவது படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். இந்த இரு தரப்பின் இயலாமையைத்தான் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் நன்கு பயன்படுத்திக்கொள்கின்றன. மொபைல்போன் வந்த 2004-ல் ஒரு நிமிடம் அவுட் கோயிங் காலுக்கு 16 ரூபாயும் இன்கம்மிங் காலுக்கு 8 ரூபாயும் கட்டணமாக வாங்கினார்கள். ஆனால், இன்று மொபைல் சேவை தர நீ, நான் என்று பல நிறுவனங்கள் வந்துவிட்டன.
சந்தை திறந்து இருக்கிறது. அதனால் 158 ரூபாயில் அன்லிமிடெட் ஆகப் பேசிக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. நவீனத் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை படச்சுருள் இல்லாத டிஜிட்டல் சேவைக்கும் சேவைக்கட்டணம் மட்டும்தானே வாங்க வேண்டும். இவர்கள் திரையரங்குகளில் தாராளமாக புரொஜெக்டர் வைத்துக்கொள்ளட்டும்.
ஆனால், தயாரிப்பாளர் ஒரு புரொஜெக்டர் வைத்துக்கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதைத் தடுக்காதே என்பதுதான் என் கருத்து. திரைத் துறையினர் ஒருசில டிஜிட்டல் சேவை நிறுவனத்துக்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது இரண்டு மணி நேரப் படம் பார்க்க இருபது நிமிடங்கள் விளம்பரத்தை மக்கள் பார்க்க வேண்டியுள்ளது.
தயாரிப்பாளர்கள் தங்களது படத்தின் விளம்பரத்தை அவர்கள் படத்துடன் இணைக்கவே டிஜிட்டல் நிறுவனங்களுக்குக் காசு கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago