காரைக்குடியில் இண்டர்மீடியட் படிப்பை முடித்துவிட்டுத் திரும்பினால் இன்னொரு சலுகையும் உண்டு என்று உறுதி அளித்திருந்தார் கோபுவுடைய தந்தை. குடுமியை எடுத்துவிட்டு கிராஃப் வெட்டிக்கொள்ளும் சலுகை அது. படிப்பு முடிந்து ரிசல்ட் வருமுன்பே கிராஃப் வெட்டிக்கொண்டார் கோபு. பெரிய விடுதலை கிடைத்ததுபோல ஒரு ஃபீல். ஆனால், நண்பன் ஸ்ரீதர் இல்லாத செங்கல்பட்டு கோபுவுக்குக் கசந்தது. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை என்று கலகலப்பான குடும்பத்துடன் வசித்த கோபுவுக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.
ஆனால், ஸ்ரீதரின் இடம் அப்படியே காலியாக இருந்தது. ரெங்கடு என்ற ரங்கநாதன், பின்னாளில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியின் மூத்த அதிகாரியாக வட தமிழகம் முழுவதும் பெயர்பெற்ற வெங்கடேசன் என்ற வெங்கு ஆகிய இருவரும் கோபுவின் நட்பு வட்டத்துக்குள் வந்தனர். இந்தக் கூட்டணியுடன் வந்து இணைந்துகொண்டார் செங்கல்பட்டு திருமலை டாக்கீஸ் உரிமையாளர் நாயுடுவுடைய மகன் கிட்டப்பா.
அன்று கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த பாலாற்றில் நீச்சலடிப்பதில் தொடங்கி பொதி சுமக்காமல் மந்தையில் திரிந்துகொண்டிருக்கும் கழுதைபோல் பொழுதை வீணாக்கிக்கொண்டிருந்தனர். இந்தக் கூட்டணியில் தனது வீரதீரச் செயல்களுக்காகச் செங்கல்பட்டு நகரத்தில் கோபு மட்டும் தனித்த புகழைப் பெற்றிருந்தார்.
வாத்தியாரை வாழ்த்திய மாணவன்
கோபு அப்போது செங்கல்பட்டில் பள்ளி இறுதி வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். பள்ளியில் சம்ஸ்கிருதம் அவருக்குச் சிறப்புப் பாடம். ஒருநாள் பள்ளியிலிருந்து சற்று முன்னதாகவே வீட்டுக்குத் திரும்பியிருந்தார் தந்தையார் துரைசாமி. அவரது முகத்தில் கோபமும் கையில் ஒரு புளியமரக் குச்சியும் துடித்துக்கொண்டு இருந்தன. அடித்தால் அத்தனை சீக்கிரம் உடையாது அந்தக் குச்சி. கோபு புத்தகப்பையுடன் வீட்டுக்குள் நுழையும்போதே கோபத்துடன் கேட்டார்.
“ ஏண்டா... இப்படிச் செஞ்சே?”
“பின்னே என்னப்பா? 35 மார்க் எடுத்தா பாஸ். 34 மார்க் எடுத்துட்டேன். ‘மீதி ஒரு மார்க் போட்டா உங்க பாட்டனார் வீட்டு ஆஸ்தி குறைஞ்சுப்போயிடுமா’ன்னு கேட்டேன். அவர் பதிலுக்கு... ‘தேவ பாஷையான சம்ஸ்கிருதத்தை நான் அசுரர் பாஷையா மாத்திட்டேன்’னு எல்லார் முன்னாடியும் திட்டினார். எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துடுச்சு!
அப்படியா, தேவ பாஷை சொல்லித் தர உங்களை இதோ இப்போ தேவர்கள் ஆசிர்வதிக்கிறா பாருங்கோன்’னு சொல்லி ஆன்சர் பேப்பரைச் சுக்கு சுக்கலா கிழிச்சு, சடார்ன்னு பெஞ்சுமேலே ஏறி அவர் தலையிலே கொட்டினேன். கிளாஸே கொல்லுன்னு சிரிச்சுது. வாத்தியார் சுதாரிக்கிறதுக்குள்ள உஷாராகி ஒரே ஓட்டம் எடுத்துட்டேன். நான் இனிமே சம்ஸ்கிருத கிளாஸ் போகமாட்டேன்ப்பா’
கோபு அப்பாவையே அதட்ட, அந்த அதட்டலில் வாத்தியார் துரைசாமியே ஆடிப்போய்விட்டார். அத்தனைக்கு மத்தியிலும் கோபுவின் மாடுலேசன் அவரது கோபத்தைத் தணித்து, சிரிப்பை வரவழைத்துவிட்டது. அந்தச் சம்பவத்துக்குப் பின் சில நாட்கள் பள்ளிக்கூடத்துக்கு மட்டம்போட்ட கோபுவை வாத்தியாரின் மகன் என்பதால் மன்னித்து மறுபடியும் உள்ளே அனுமதித்தது பள்ளி நிர்வாகம்.
போய்யா நீயும் உன் வேலையும்
இப்படிப் பள்ளிக் காலத்தில் புகழ்பெற்றிருந்த கோபுவின் எதிர்காலத்தைக் குறித்து அவருடைய பெற்றோர் கவலைப்பட்டுக்கொண்டிருந்தனர். தங்கள் உறவினர் மூலம் கோபுவை தபால் ஆபீஸ் வேலைக்கு அனுப்ப முயன்றனர். உறவினர் மூலம் ஒரு தபால் அதிகாரியைப் பிடித்த பெற்றோர் அவரிடம் அனுப்பிவைத்தனர். பெற்றோரின் வார்த்தையைத் தட்ட முடியாமல் கோபுவும் அவரைக் காணச் சென்றார். கோபு கிராப் ஹேர் ஸ்டைல் வைத்து கொண்டிருப்பதைக் கண்டு அவரை ஏற இறங்கப் பார்த்தார் அந்த அதிகாரி.
“என்னடா அம்பி கிராப் வச்சிருக்கே? குடுமி வச்சுக்கோ. வேலை வாங்கித் தரேன்” என்றார் அவர்.
“அதெல்லாம் முடியாது. இந்த கிராப்பு தலைக்கு ஏத்த வேலை ஏதாவது இருந்தா தர முடியுமா?!” என்றார் கோபு.
“குடுமி வச்சுக்கிறதா இருந்தா குமாஸ்தா வேலை தரேன்!”
“அந்த வேலையை நீங்களே வச்சுக்கங்க..!” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினார் கோபு. வீம்பாகப் பேசிவிட்டு திரும்பிவந்தகோபு பெற்றோருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருட்டியதும் மெல்ல வீட்டுக்குள் நுழைந்துவிடலாம் என்று பொழுது சாயும்வரை காத்திருந்து தெருவுக்குள் நுழைந்தார். அப்போது இருட்டுக்குள்ளிருந்து…
“ டேய் கோபு அசையாதே.. அப்படியே நில்லு” என்று ஒரு குரல் மிரட்டியது. திடுக்கிட்டுப் பயந்து நின்ற கோபுவின் முன் வந்து நின்றார் ஸ்ரீதர். சென்னையிலிருந்து வந்திருந்த ஸ்ரீதர் அவருக்காகக் காத்திருந்தார்.
16chrcj_rathpasamright“உடனே கிளம்பு! நான் எழுதிய ‘ரத்த பாசம்’ நாடகம் நாளைக்கு அரங்கேறுது. அதை நீ பார்க்க போறே!” என்றபடி அன்றிரவே ரயிலைப் பிடித்து கோபுவை அழைத்துக்கொண்டு மெட்ராஸுக்கு வந்தார் ஸ்ரீதர். மயிலாப்பூரில் நாடகம்.
இடைவேளையின் போது, ஸ்ரீதரை மேடையேற்றி, ‘இந்த நாடகத்தை எழுதிய ஆசிரியர் ஸ்ரீதர் இவர்தான்!’ என்று அறிவித்தார்கள். கோபுவுக்கு பரமானந்தம். கையைத் தட்டிக்கொண்டே இருந்தார். ஸ்ரீதருக்குக் கிடைத்த பெருமை, செங்கல்பட்டுக்கே கிடைத்தது போல் ஒரு பெருமிதம்.
திண்ணையில் ஒரு திரைக்கதையாளர்
ஸ்ரீதர் டி.கே.எஸ் நாடகங்களில் மும்முரமாக இருக்க, கோபு செங்கல்பட்டிலும் மெட்ராஸிலுமாக மிமிக்ரி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். வேலை கிடைக்காத கோபுவுக்குச் சொத்தாவது கிடைக்கட்டும் என்று தனது விதவைத் தங்கை கமலாவுக்கு அவரைத் தத்துக் கொடுத்துவிட்டார் அப்பா. இதனால் காஞ்சிபுரத்தில் அத்தையின் வீட்டில் குடியேற வேண்டிய கட்டாயம் கோபுவுக்கு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் கமலா அத்தையின் வீட்டுக்கு எதிரே கூரத்தாழ்வார் கோயில் இருந்தது.
அதற்கு இரு கட்டிடங்கள் தள்ளி திராவிட நாடு பத்திரிகையின் அலுவலகம். அதன் வெளித் திண்ணையில் உட்கார்ந்து சட்டை கூட போடாமல், ஒரு டவலைத் தோளில் போட்டுக்கொண்டு, மிக எளிய தோற்றத்துடன் தெரிந்த ஒருவர் மும்மரமாக ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்த கோபு தன் அருகே நின்றிருந்தவரிடம் ‘அவரு யாரு, என்ன எழுதறாரு.?’ என்று விசாரித்தார். “அவர்தான் சி.என். அண்ணாத்துரை. சினிமாவுக்கு கதை, வசனம் எழுதறாரு!” என்று பதில் வந்தது.
“ யார்!? ‘வேலைக்காரி’, ‘நல்லதம்பி’ படங்களின் கதாசிரியரா?” என்று வியப்பாகக் கேட்டார் கோபு. “ ரெண்டு படத்தையுமே பார்த்திருக்கிறாயே தம்பி…. நீ காஞ்சிபுரத்தானா இவ்வளவு விசாரணை தொடுக்கிறாய்?” என்று கேட்டவர் அரங்கண்ணல். அண்ணா அரசியலில் வளர்ந்திராத அக்கால கட்டத்தில் திரைப்படங்களுக்கு அவர் கதை வசனம் எழுதிக்கொண்டிருந்த அந்த திண்ணைக்காட்சி கோபுவின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துபோனது.
பின்னாளில் எத்தனை பெரிய அல்லது சிறிய பட நிறுவனமாக இருந்தாலும் சரி ஹோட்டல் அறை வேண்டாம் என்று கோபு அன்புடன் மறுத்துவிட்டு, மாடிப்படி, மொட்டைமாடி, ஸ்ரீதர் காரின் முன்இருக்கை அல்லது பானட் ஆகியவற்றில் அமர்ந்து கிடுகிடுவென்று நகைச்சுவைக் காட்சிகளை எழுதிக் கொடுக்க அண்ணாவின் எளிமை கோபுவுக்குப் பெரும் தாக்கத்தைத் தந்தது. அப்படிப்பட்ட அண்ணாவுக்கு எதிராக கோபு தன் குழுவினருடன் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை உருவானது.
(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago