செங்கல்பட்டில் கோபுவின் வீடு சின்னமணிக்காரத் தெருவிலும், ஸ்ரீதரின் வீடு அதன் மறுகோடியில் நத்தம் என்ற பகுதியிலும் இருந்தது. கோபுவின் தெருவில் மிஸ் செங்கல்பட்டுகள் நிறையப் பேர் வசித்தனர். அந்தப் பெண்கள் எல்லாருமே தன்னைக் காண்பதற்கு வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு கோபுவின் வீட்டிலேயே காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு தவம் கிடப்பார் ஸ்ரீதர்.
ஆனால், இந்த இளவட்டப் பெண்களுக்கு ஏற்கெனவே காதல் வலை வீசிக்கொண்டிருந்தான் அதே தெருவைச் சேர்ந்த பாக்ஸர் சுந்தரம். அந்தப் பதினாறு வயதில் திருத்தமான தோற்றத்துடன் சலவை செய்த பேண்ட் சட்டையில் கோபுவின் தெருவில் ஸ்ரீதரைப் பார்த்துவிட்டால் முடிந்தது கதை. “ ஹோய்…மைனர்... எங்க தெருப்பக்கம் உனக்கு என்னடா வேலை? ” என்று ஸ்ரீதரைப் பிடித்து நிறுத்தி பாக்ஸர் சுந்தரமும் அவனுடைய நண்பன் டெல்லி உள்ளிட்ட இளவட்ட கோஷ்டியினர் வீடு கட்டுவார்கள்.
அதற்கெல்லாம் அசராத ஸ்ரீதரை “ என் நண்பனைப் பார்க்க உங்களமாதிரி கோஷ்டிகிட்ட எல்லாம் பர்மிஷன் வாங்கணுமா? இப்போ என்ன தடுத்தீங்கன்னா நத்தம் பக்கம் ஒரு பய வரமுடியாது?” என்று பதிலுக்கு மிரட்டிக்கொண்டிருக்கும்போதே நண்பனைக் காப்பாற்ற கோபு ஓடிவந்துவிடுவார்.
“இப்படித் துணிவுடன் அவன் காதலில் கசிந்துருகியதால்தான் தன் படங்களில் காதலையே முக்கிய கதாபாத்திரம் ஆக்கி அழகுபார்த்தானோ எனத் தோன்றுகிறது” என்று சிரிக்கிறார் இன்றைய 86 வயது இளைஞன் கோபு.
நாடகம் போட்ட நண்பர்கள்
கோபு – ஸ்ரீதரின் இளமைக் காலம் வயதுக்கே உரிய துடுக்கு மற்றும் துள்ளல்களோடு நின்றுவிடவில்லை. கோபு படிப்புக்கு அப்பால் காரைக்குடியில் வெறித்தனமாகத் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்ரீதரும் திரைப்படங்களைப் பார்த்தார் எனினும் தான் வேலைசெய்துவந்த செங்கல்பட்டு கூட்டுறவுச் சங்க அலுவலகத்தில் வேகவேகமாகத் தனது வேலைகளை முடித்துவிட்டு சின்னச்சின்ன நாடகங்களை எழுதிக்கொண்டிருந்தார். கோபு தனது படிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் செங்கல்பட்டு வர, அவருக்காகவே காத்திருந்தவர் போல, ஸ்ரீதர் ஓடோடி வந்தார்.
“டேய் கோபு... போர் அடிக்கிறது. ஒரு டிராமா போடலாமா?” ஸ்ரீதர் கேட்டார்.
“டிராமாவா!? அதுக்கு எங்கேடா போறது?” கோபு கேட்டார்.
“அதப்பத்தி ஏன் கவலைப்படுறே… ‘உலகம் சிரிக்கிறது’னு நான் ஒரு நாடகம் எழுதியிருக்கேன். அதைப் போடுவோம்” ஸ்ரீதர் சொல்ல, கோபு முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்டார்.
“ உலகம் சிரிக்கிறது இருக்கட்டும். உன் நாடகத்தைப் பார்த்து ஊர் சிரிக்காம இருக்குமா?” கோபுவின் நக்கலுக்குச் சட்டென்று சிரித்தார் ஸ்ரீதர். “கவலைப்படாதே. அதுல உன்னோட காமெடியும் உண்டு. நாடகத்துக்கு ஆகற செலவுக்கு நம்மகிட்ட தேறாது. அதுக்கு நீ எனக்கு ஸ்பான்சர் மட்டும் பிடிச்சுக் கொடு அப்புறம் செங்கல்பட்டுல நாமதாண்டா கிங்ஸ்!” என்றார் ஸ்ரீதர்.
கோபுவுக்கு உற்சாகம் தீயாகப் பற்றிக்கொள்ள செல்வந்தரான தன் பெரியப்பா மகன் எம். இ .ரெங்கசாமியிடம் ஸ்ரீதரை அழைத்துச் சென்றார். கோபுவின் தந்தை பள்ளியாசிரியர். ஆனால், பிறந்தது பெரிய செல்வந்தர் குடும்பத்தில்.
ரங்கசாமி நாடகத்துக்கு நிதியளித்து உதவினார். ஒரு டிக்கெட்டின் விலை இரண்டு ரூபாய் என்று நிர்ணயித்து ரங்கசாமி டிக்கெட்களை அச்சடித்துத் தந்துவிட்டார். வசூல் எவ்வளவாக இருந்தாலும் என்னிடம் வந்துவிட வேண்டும் என்று ரகசியமாக கோபுவிடமும் சொல்லிவிட்டார். ஆனால், டிக்கெட் எங்கே விற்றது? போவோர் வருவோர்க்கெல்லாம் இடைத்தேர்தல் டோக்கன் போல் வாரி வாரி வழங்கப்பட்டது. கூட்டம் சேர்ந்தால் போதும் என்று டிக்கெட் விற்பனை காந்திக் கணக்காகிப்போனது.
காதலியாக வேடமிட்ட கோபு
திட்டமிட்டபடி மிகப் பொறுப்பாக ஒத்திகைகள் எல்லாம் பார்த்து ‘உலகம் சிரிக்கிறது’ நாடகம் அரங்கேறியது. எதிர்பாராதவிதமாக செங்கல்பட்டு ரசித்துச் சிரித்தது. ஸ்ரீதர் வழக்கம் போல் ஹீரோ. கதைப்படி ஒரு கட்டத்தில் ஹீரோவைக் கல்லூரியை விட்டு நீக்கிவிடுவார் முதல்வர். காதலியாக நடித்த கோபு நவீன கண்ணகியாகப் பொங்கி எழுந்து, தலைவிரி கோலத்துடன் முதல்வர் அறைக்குள் நுழைந்து, “ தீர விசாரிக்காமல் என் தலைவனை நீங்கிய உமக்கு டர்பன் ஒரு கேடா, எதற்கு குஷன் நாற்காலி, ஏனிந்த டாம்பீகம்?” என்றெல்லாம் அவரை நகைச்சுவை வசனங்களால் வருத்தெடுத்துவிட்டு “இந்தக் காதலி கண்ணீருக்குப் பரிகாரம் வேண்டும்.
இந்த ஆண்டு காலேஜ் ரிசல்ட் பணால் ஆகட்டும்! கரஸ்பாண்டெண்ட் உம் சம்பள உயர்வில் கை வைக்கட்டும்” என்று கையை நீட்டி கோபு ஆவேசமாகப் பேசத் தலையில் அணிந்திருந்த சவரிமுடி சடாரென்று தரையில் விழுந்து கோபுவின் சிறிய குடுமி வெளியே தெரிய, ரசிகர் கூட்டம் ஐந்து நிமிடம் சிரித்து ஆர்ப்பாட்டம் செய்தது.
நாடகம் மாபெரும் வெற்றி. ஆனால், ஸ்பான்சர் செய்த பெரியப்பா மகன் ரெங்கசாமிக்கு நஷ்டம். ஆனால், நாடகம் தந்த அனுபவமும் அதற்குக் கிடைத்த பாராட்டும் கோபு ஸ்ரீதர் இருவரையுமே நிலைகொள்ளாமல் செய்தது.
மெட்ராஸ் திருப்பம்
திடீரென்று ஸ்ரீதரைப் பல நாட்களாகக் காணவில்லை. ஒரு நாள் கோபுவைத் தேடி பரபரப்புடன் வந்தார் ஸ்ரீதர். “டேய் கோபு... ‘ரத்த பாசம்’னு ஒரு நாடகம் எழுதினேன். அதை நாடக ஜாம்பவான்கள் டி.கே.எஸ்.சகோதரர்கள் வாங்கியிருக்காங்கடா. இனிமே ஒத்திகைக்காக நான் அடிக்கடி மெட்ராஸ் போக வேண்டியிருக்கும். அதனால மெட்ராஸ்ல தங்கலாம்னு இருக்கேன்.” ஸ்ரீதர் சொன்னதும் கோபுவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. நண்பனுக்குப் பெரிய வாய்ப்பு கிடைத்துவிட்ட மகிழ்ச்சி ஒருபுறம், இனி அவன் செங்கல்பட்டில் இருக்கப்போவதில்லை என்ற வருத்தம் மறுபுறம்.
ஸ்ரீதர் சென்னை கிளம்பிவிட அப்போது ரங்கநாதன் கோபுவுக்குக் கைகொடுத்தான். ரங்கநாதன் என்ற ரெங்குடுவுக்கும் நகைச்சுவை உணர்வு உண்டு. ஒருமுறை இருவரும் விகடன் சந்துருவின் விகடக் கச்சேரிக்கு சென்றிருந்தனர். அதனால் கவரப்பட்ட இருவரும், ‘நாமும் விகடகச்சேரி செய்தால் என்ன’ என்று யோசித்து பிறகு அதைச் செயல்படுத்தினார்கள். முதன்முதலாக கோபுவின் வீட்டு மொட்டை மாடியிலேயே விகட நிகழ்ச்சியை நடத்த, திரண்டிருந்த அக்கம்பக்கத்தினர் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தபோது கோபு ஆச்சரியமாக ஒருவரைக் கவனித்தார்.
அம்மாவின் நகைச்சுவை வெடிகளில் ஊசிப் பட்டாசாகிவிடும் அப்பா, அத்தனை சீக்கிரம் வாய் திறந்து சிரிக்காத மனிதர். அவரே மகனின் நகைச்சுவைத் தெறிப்புகளுக்குக் குலுங்கிக் குலுங்கி சிரிப்பதைக் கண்டதும் கோபுவுக்குத் தன் மீதிருந்த தன்னம்பிக்கை கடலாகப் பெருகி அலையாக ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது. அதன் பிறகு கோபு-ரெங்குடுவின் விகட நிகழ்ச்சி பிரபலம் ஆக, உறவினர்கள் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் வீட்டுத் திருமணங்களில் இவர்களின் விகட நிகழ்ச்சிக்கு நல்ல விலை கிடைக்கத் தொடங்கியது. இதனால் கோபுவைப் பற்றிய கவலை பெற்றோருக்கு குட் பை சொல்லிவிட்டுச் சென்றது.
ஆசீர்வதித்த பிரபலம்
ஸ்ரீதர் மெட்ராஸ் போனதுபோலவே இவர்களது விகட நிகழ்ச்சி மெட்ராஸுக்கு ஏற்றுமதியானது. அப்படியொரு மெட்ராஸ் திருமணத்தில் கோபுவின் விகடகச்சேரிக்கு அமோக வரவேற்பு. வந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தனர். அவர்களின் மத்தியில் தன் கணவருடன் இணைந்து தமிழகத்தையே சிரிக்க வைத்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணியும் மனம்விட்டு நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார். அவர் டி. ஏ. மதுரம். நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்த மதுரம் “ பேஷ்... பேஷ்… அபாரம்... நல்லா வரணும்” என்று ஆசீர்வதித்துப் பாராட்டிவிட்டுச் சென்றார். பின்னாளில் மதுரம் தயாரித்த ‘புனர்ஜென்மம்’ படத்தில் ஸ்ரீதரும் கோபுவும் பணியாற்றப்போவதற்கு அந்த நிகழ்ச்சி ஒரு அச்சாரமாக அமைந்துபோனது.
சிரிப்பு தொடரும்
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago