சி(ரி)த்ராலயா 09: எழுத்தாய் மாறிய வாழ்க்கை!

By டி.ஏ.நரசிம்மன்

ண்பன் கோபுவுடன் தனது முதல் புதிய காரில் மதுராந்தகம் போய்விட்டு மெட்ராஸ் திரும்பிக்கொண்டிருந்த ஸ்ரீதர், காபி குடிப்பதற்காக தாம்பரத்தில் நிறுத்தினார். காபி கிளப்பிலேயே கோபுவைச் சுடச்சுட ராஜினாமா கடிதம் எழுதவைத்து கையெழுத்தும் போட வைத்தார். வேலைநேரம் முடிவதற்குள் கோபுவின் அலுவலகத்துக்கு காரைச் செலுத்தினார்.

கோபுவின் பின்னாலேயே எஸ்கார்ட் போல சென்று அவர் தன் மேலதிகாரியிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த அடுத்த நிமிடம் கோபுவின் மனம் மாறிவிடப் போகிறது என்று அவரை இழுத்துக்கொண்டு தியாகராயநகர் வடக்கு போக் சாலையில் இருந்த வீனஸ் பட அலுவலகத்துக்கு அழைத்துவந்தார் ஸ்ரீதர். மேலதிகாரி ராஜினாமா கடிதத்தைப் பிரித்துப் படித்த அந்தக் கணத்தில் உருவாகிவிட்டது ஸ்ரீதர் - கோபுவின் வெற்றிக் கூட்டணி.

பொத்தி வைத்த எழுத்தாளர்கள்

நானூறு ரூபாய் சம்பளத்தில் ஸ்ரீதரின் கம்பெனியில் உதவி வசனகர்த்தாவாகச் சேர்ந்துவிட்ட சினிமா எழுத்தாளர் அவதாரம் பற்றி மனைவியிடம் மூச்சு விடவில்லை கோபு. ‘கல்யாண பரிசு’ படத்தில் வரும் எம் சரோஜா போன்று, “என் கணவர் இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட்' கம்பெனியில் பெரிய உத்தியோகத்தில் இருக்கார்” என்று தன் தோழிகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார் கோபுவின் மனைவி கமலா.

அவரோ கணவனுக்குத் தெரியாமல் டி.கமலாதேவி என்ற பெயரில் சுதேசமித்திரன், கலைமகள், விஜயவிகடன் போன்ற பத்திரிகைகளுக்குச் சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந்தார். வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திவந்த ஜகன் மோகினி என்ற குடும்பப் பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

புகுந்த வீட்டுக்கு உண்மை தெரிந்தால் வேலைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்று விவரத்தைக் கூறாமல் கோபுவைத் திருமணம் செய்து கொண்டிருந்தார் கமலா.

கோபுவுக்கோ தனது விவகாரம் மனைவிக்கும் வீட்டாருக்கும் தெரிந்துவிட்டால் “ஓ… நீ சினிமாக்காரனா உத்தியோகத்துல ஒசந்திட்டியோ?” என்று கேட்டு வெளுத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்! இப்படிக் கணவன் மனைவி இருவருமே தங்கள் எழுத்துப் பணியைப் பொத்தி வைத்திருந்தார்கள்.

இயக்குநர் ஆனார் ஸ்ரீதர்

ஒரு க்ரைம் த்ரில்லர் போல நாட்கள் நகர்ந்துகொண்டிருக்க ஒருநாள் ஸ்ரீதர் மூச்சிரைக்க ஓடி வந்து கோபுவின் முன் நின்றார். “கோபு… வீனஸ் கம்பெனியின் பங்குதாரர்கள், அடுத்த படத்தை என்னையே டைரக்ட் செய்ய சொல்லுறாங்கடா! நீ என்ன சொல்றே?'' என்று படபடப்புடன் கேட்டார். “நீ கார் ஓட்டுற மாதிரியே உன் வாழ்க்கையும் வேகமா சீறிப் பாயுது.

மூணு படங்கள்ல வசனம் எழுதினே. உடனே தயாரிப்பாளர் ஆகிற வாய்ப்பு தேடி வந்தது. இப்போ இயக்குநர் வாய்ப்பு தேடி வந்திருக்கு. யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும். உடனே எஸ் சொல்லிடு'' என்றார் கோபு.

உமா பிச்சர்ஸுக்காக ஒரு முக்கோணக் காதல் கதையை எழுதியிருந்தார் ஸ்ரீதர். ஆனால், உமா நிறுவனத்தார் பெரிய பட்ஜெட்டில் ‘சித்தூர் ராணிபத்மினி’ கதையைத் தயாரிக்க முடிவு செய்துவிட்டனர். அவர்கள் நிராகரித்த அந்த முக்கோணச் காதல் கதையின் மீது நம்பிக்கை வைத்து அதைப் பழைய பிலிம் டப்பாவில் போட்டு வைத்திருந்தார்.

பின்னர் அதைத் தூசிதட்டி, வீனஸ் கிருஷ்ணமூர்த்திக்கும் (இயக்குநர் மணிரத்னத்தின் சித்தப்பா) கோவிந்தராஜனுக்கும் (‘கலைவாணர்’ என்.எஸ்.கேயின் சகலை) கூற, “நல்ல லேடீஸ் சப்ஜெக்ட்” என்று அவர்கள் இருவரும் பாராட்டினார்கள். “நாங்களே தயாரிக்கிறோம்” என்று பச்சைக்கொடி காட்டி, “உடனேயே ஸ்கிரிப்ட் ரெடி செய்யுங்கள்” என்றும் கூறிவிட்டார்கள். அவ்வளவுதான்! ஸ்கிரிப்ட் எழுத ஸ்ரீதரும் கோபுவும் பெங்களூரு நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்குச் சென்று தங்கிவிட்டனர்.

“கோபு நகைச்சுவைப் பகுதியை நீ எழுது” என்று கூறிவிட்டு அந்த முக்கோணக் காதல் கதைக்குத் திரைக்கதை வடிவத்தை எழுதத் தொடங்கிவிட்டார் ஸ்ரீதர். அதுதான் ‘கல்யாண பரிசு’ படத்தின் கதை.

கதையுடன் இணைந்த நகைச்சுவை

“இம்போர்ட், எக்ஸ்போர்ட் விஷயமாக ஆந்திரா போக வேண்டியிருக்கிறது'' என்று சொல்லிவிட்டு ஸ்ரீதருடன் பெங்களூரு வந்திருந்த கோபுவின் முன்னால் அடிக்கடி அவரது மனைவியின் முகம் வந்து நிழலாடியது. தனது புளுகு மூட்டையை வைத்தே ஒரு நகைச்சுவைப் பகுதியை எழுதினால் என்ன என்று தோன்றியது கோபுவுக்கு.

செங்கல்பட்டில் பழைய நண்பன் வெங்குவின் விதவிதமான ‘டூப்’ கதைகள் நினைவைக் கிளற, தன்னை முன்னிறுத்தியே ‘கல்யாண பரிசு’க்காக எழுத்தாளர் பைரவன் கதாபாத்திரத்தை உருவாக்கினார் கோபு. வெடுக் வெடுக்கென்று கேள்வி கேட்டு மடக்கும் தன் மனைவியையே எம். சரோஜா ஏற்று நடித்த மாலினி கதாபாத்திரமாக மாற்றினார்.

நெல்லூரில் தன் கசின் ரங்கசாமியின் மைத்துனர் நடத்தி வந்த மன்னார் அண்ட் கம்பெனி என்ற நிறுவனத்தின் பெயரைக் கடன் வாங்கி தனது நகைச்சுவைப் பகுதியை எழுதினார்.

கோபு நகைச்சுவைப் பகுதியை எழுதி முடித்ததும் அதை வாங்கிப் படித்த ஸ்ரீதர், அவரை ஏற இறங்க நோக்கினார். என்னதான் பால்ய நண்பனாக இருந்தாலும் அப்போது அவர் ஒரு இயக்குநர் என்பதால் கோபுவுக்கு உள்ளூர நடுக்கம்.

“டேய்… இது உன் கதைதானே?'' ஸ்ரீதர் நக்கலான தொனியில் கேட்க, “டேய் எப்படிடா!” என்று ஆச்சரியப்பட்டு ஆமோதித்தார் கோபு. ‘இது வேண்டாம், வேற ஏதாவது எழுது’ என ஸ்ரீதர் சொல்லுவார் என்று எதிர்பார்த்தார், கோபு. “உன் காமடி என் கதையோட சூப்பரா ஜெல் ஆகுதுடா பிரமாதம்! பைரவனையும் கதாநாயகன் பாஸ்கரையும் இணைக்கிறேன் பார்” என்று தனது முதல் பாராட்டை நண்பனுக்கு மனம் திறந்து அளித்தார். கோபு திக்குமுக்காடிப் போனார்.

16CHRCJ_SRIDHAR_ இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் rightகுட்டு உடைந்தது

‘கல்யாண பரிசு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கோபுவை அழைத்துச் செல்ல வீனஸ் கம்பெனியில் இருந்து வீடுதேடி அன்றாடம் கார் வந்தது. அவர் மனைவி கமலாவுக்குச் சந்தேகம். “ஏழு மணிக்கு கார் வந்து நிற்கிற அளவுக்கு என்ன வேலை செய்யறீங்க, அதுவும் இந்தக் காலை நேரத்துல என்ன ஏற்றுமதி இறக்குமதி?” கல்யாண பரிசு எம்.சரோஜாபோலவே கமலா கேள்விகளை அடுக்க தங்கவேலுவைப் போலத் திணறிப்போனார் கோபு.

எவ்வளவு காலம்தான் பொய் சொல்லித் தப்பிப்பது? “ஸ்ரீதருக்கு உதவி வசனகர்த்தாவாக சேர்ந்திருக்கேன். நானூறு ரூபாய் சம்பளம்!” என்று திக்கித் திணறி மனைவியிடம் சொன்னார். எரிமலை வெடிக்கப் போகிறது என்று எதிர்பார்த்த கோபுவுக்கு ஆச்சரியம்.

“அட இது நல்ல விஷயம்தானே! நானும் ஒரு எழுத்தாளர்தான். பத்திரிகையில் துணை ஆசிரியரா வேலை பார்க்கறேன். உங்க அம்மாக்கள் ரெண்டு பேருக்கும் பயந்துதான் உண்மையைச் சொல்லலை. நான் தொடர்ந்து எழுதுவேன். உங்க வீட்டுக் காரங்களை நீங்க கன்வின்ஸ் பண்ணுங்க. நீங்க சினிமால சேர்ந்த விஷயத்தைச் சொல்லி எங்க வீட்டு ஆட்களை நான் சமாளிக்கிறேன்” என்று ஒரு கண்டிஷன் போட்டார் கமலா.

‘சித்ராலயா’ கோபுவுடைய மனைவி கமலா ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர். கதவு, படிகள், ஊமை உறவுகள் உட்படப் பல பரிசுபெற்ற நாவல்களை எழுதி கமலா சடகோபன் என்ற பெயரில் புகழ்பெற்றவர். மங்கையர் மலர் பத்திரிகையின் இணை ஆசிரியையாகவும் பணி புரிந்துள்ளார். இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைக்கும் கடவுள் தனக்கு ஒரு எழுத்தாளரையே முடிச்சுப் போட்டுவிட்ட திருப்தியில் கோபுவின் பேனா இன்னும் வேகம் எடுத்தது.

சிரிப்பு தொடரும்

படங்கள் உதவி: ஞானம்

தொடர்புக்கு tanthehindu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்