ஸ்ரீ
தரும் கோபுவும் ஐந்தாம் வகுப்பில் தொடங்கி ஒன்றாகப் படித்தவர்கள். கோபுவின் வீடு செங்கல்பட்டு சின்னமணிக்காரத் தெருவில் இருந்தது. ஸ்ரீதரின் வீடு மறுகோடியில் நத்தம் என்ற பகுதியிலும் இருந்தது. பள்ளிவிட்டால் நண்பன் கோபுவைத் தேடி வந்துவிடுவார் ஸ்ரீதர். ஒன்பதாவது படிக்கும்போது ஸ்ரீதருக்குக் கலையார்வம் துளிர்த்தது. மனோகரா என்னும் நாடகத்தை எழுதி, பள்ளி ஆண்டு விழாவில் அரங்கேற்றினார். அதில் ஸ்ரீதர் கதாநாயகனாகத் தோன்ற, அதே நாடகத்தில் காமெடியன் ரோலில் சக்கை போடு போட்டார் கோபு.
அதுமட்டுமல்ல; நாடகத்தின் நகைச்சுவைப் பகுதியை கோபுதான் எழுதினார். ஸ்ரீதர்-கோபு கூட்டணி முதல்முதலாக உருவானது பள்ளியாண்டு விழாவில்தான். இவர்கள் இருவருடன் ரங்கநாதன் என்ற மாணவனும் படித்தார். இவர்தான் ‘கடுகு’ அகஸ்தியன் என்ற பிற்கால எழுத்தாளராக உருவெடுத்தார். இவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிவிட்டால் அவர்கள் இருக்கும் இடம் கணஜோராகக் களை கட்டிவிடும். அடிக்கடி சாகசங்களிலும் இறங்கிவிடுவார்கள்.
காப்பாற்றிய கதாநாயகன்
அப்போது பாலாற்றுக் கரையில் மாந்தோப்புகள் நிறைய உண்டு. அந்தத் தோப்பு மாங்காய்களைத் திருடி அவற்றைத் துவைக்கிற கல்லில் உடைத்து உப்புக்கல் வைத்துத் தின்றால்தான் ருசி. தோட்டக்காரர் இல்லாத சமயத்தை உளவறிந்து மாங்காய் அடிக்கச் செல்ல வேண்டும். அப்படி மதிய சாப்பாட்டுக்கு அவர் சென்றிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஸ்ரீதரும் கோபுவும் தோப்புக்குள் நுழைந்து மாங்காய் அடித்துக்கொண்டிருந்தார்கள். மாயக்காரன் மாதிரி அங்கே திடீரென்று வந்து நின்றார் தோட்டக்காரர். ஸ்ரீதர் உட்பட எல்லோரும் அலறி அடித்து ஓட்டம்பிடித்துவிட, சுதாரிப்பதற்குள் கோபுவைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டார் தோட்டக்காரர்.
பள்ளிக்கூடப் பிள்ளை என்று கூடப் பார்க்காமல் கோபுவின் முதுகை மத்தளம் ஆக்கினார் தோட்டக்காரர். இரக்கமில்லாத தோட்டக்காரர் ஆத்திரம் அடங்காமல் மாங்காய் திருடிய கள்வர்களின் தலைவனைப் பிடித்துவிட்டதுபோன்ற கர்வத்துடன் கோபுவை மரத்தில் கட்டிப் போட்டார். ஆனால், கோபுவுக்கு நண்பன் மீது நம்பிக்கை இருந்ததால் மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த மாங்காய்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்ரீதர் தனக்குத் தெரிந்த ஒரு பெரிய மனிதரை அழைத்து வந்து கோபுவை மீட்டுக்கொண்டுபோனார்.
“என்னை மரத்தில் கட்டிப் போட்ட விவகாரத்தை யாரிடமும் சொல்லக் கூடாது” என்று சத்தியம் செய்யச் சொன்னார் கோபு. ஸ்ரீதரும் சத்தியம் செய்துகொடுத்தார். ஆனால், மறுநாள் பள்ளிக்கூட மணியை அடித்துக்கொண்டே பியூன் கோபுவைப் பார்த்து “இன்னா கோபு, மாந்தோப்புல செம மாத்து மாத்திட்டாங்களாமே?” என்றான். அவன் கேட்ட விதம் பள்ளிக்கூடம் முழுவதும் மணியடித்துச் சொல்லி விட்டேன் என்பது போல இருந்தது கோபுவுக்கு.
“என்னடா ஸ்ரீ! நீ செய்த சத்தியம் அவ்வளவுதானா?” கோபு கோபத்துடன் கேட்டார்.
“டேய் நீ மாட்டிக்கிட்டதும் உன்னைக் காப்பாத்தனுமேன்னுதான் நான் தப்பிச்சுப்போனேன். நானும் உன்னோட மாட்டியிருந்தா நம்மள யார் காப்பாத்தியிருப்பா சொல்லு?” என்று ஸ்ரீதர் பதில் சொன்னதும் கோபுவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
கேள்வித்தாள் வள்ளல்
பள்ளித்தேர்வு நேரம் நெருங்கிவிட்டால் காமெடியன் கோபு ஹீரோவாக மாறிவிடுவார். கோபுவுடைய தந்தை துரைசாமிதான் இருவருக்கும் வகுப்பு வாத்தியார். அவர் வீட்டு பீரோவில்தான் கேள்வித்தாள்கள் அடங்கிய பைலை வைத்திருப்பார். ஸ்ரீதர் கோபுவை விசேஷமாகக் கவனிப்பார். கோபுவும் பீரோவைத் திறந்து தன் அப்பாவுக்குத் தெரியாமல் கேள்வித்தாள்களில் ஒன்றை உருவிடுவார். கேள்வித்தாள் இருந்து விட்டால் போதுமா, புத்தகத்தில் பதில்கள் எங்கே இருக்கின்றன என்று தேட வேண்டுமே! ஸ்ரீதரும் கோபுவும் ரங்கநாதனைத் தேடி ஓடுவார்கள்.
கையில் கேள்வித்தாள் கிடைத்ததும் ஸ்ரீதரும் கோபுவும் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டை தாண்டவே மாட்டார்கள். இருவரும் பார்டர் மார்க் மேதாவிகள். ஆனால், ரங்கநாதன் மட்டும் சென்டம் வாங்கிவிடுவார்.
கோபுவையும் ஸ்ரீதரையும் குறித்து துரைசாமி வாத்தியாருக்கு எந்தச் சந்தேகமும் எழவில்லை. ஆனால், ரங்கநாதன் செண்டம் வாங்குவதைப் பார்த்து வியந்துபோன அவர், அந்தத் தகிடுதத்தத்தின் சூத்திரதாரிகள் கோபுவும் ஸ்ரீதரும் என்று தெரிந்து சுதாரித்துக்கொண்டார் வாத்தியார். தேர்வு நேரங்களில் கோபுவை வீட்டுச் சிறையில் தள்ளிவிடுவார். ஆனால், கோபு அசர மாட்டார். புழக்கடையிலிருந்து சின்ன சின்ன கற்களைப் பொறுக்கி வைத்து, கேள்வித்தாள்களைக் கல்லில் சுற்றி மடித்து வீதியில் எறிவார்.
ஸ்ரீதர் அதை லாகவமாகப் பிடித்து, ரங்கநாதனிடம் கொண்டுபோய்ச் சேர்த்து அவர் இரக்கப்பட்டுத் தரும் பார்டர் மார்க் பதில்களை மட்டும் தெரிந்துகொண்டு பதில்களை எழுதி, நண்பனுக்காக மீண்டும் கோபுவின் வீட்டு மாடியை நோக்கி கல்லில் எறிய, கோபு அதைத் தாவிப் பிடிப்பார். இந்தப் பரிமாற்றத்தில் தொடங்கிய இவர்களது லட்சியக் கூட்டணி, பின்னாளில் கதை-வசன தாள்களின் பரிமாற்றத்தில் முடியும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்களா என்று தெரியவில்லை.
02chrcj_gopu sridar ஓய்வுத் தருணம் ஒன்றில் கோபுவும் ஸ்ரீதரும் பிரிந்த நண்பர்கள்
பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும் ஸ்ரீதருடைய அப்பா அவரைக் கூட்டுறவு அலுவலகத்தில் வேலையில் அமர்த்திவிட்டார். ஸ்ரீதருடன் திரிந்து கொண்டிருந்த கோபுவை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவரைக் காரைக்குடிக்கு நாடு கடத்துவதுபோல அழைத்துச் சென்று அழகப்பா கல்லூரியில் இன்டெர்மீடியேட் படிப்பில் சேர்த்தனர். இதற்கு கோபு ஒப்புக்கொள்ள மாட்டார் என்று தெரிந்துகொண்ட கோபுவின் பெற்றோர், அழகப்பா கல்லூரில் புகழ்பெற்ற கிரிக்கெட் டீம் இருப்பதை எடுத்துக்கூறி ஆசை காட்டி அவரைக் கல்லூரியில் அடைத்துவிட்டு வந்தார்கள்.
அதை உண்மை என்று நம்பிய கோபு, கல்லூரியின் கிரிக்கெட் அணியில் சேர்ந்து திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வெல்வதற்குக் காரணமாக இருந்தார். ஆனால், நண்பன் ஸ்ரீதர் நம் அருகில் இல்லையே என்ற கவலை அவரை அரித்துக்கொண்டேதான் இருந்தது.
அங்கிருந்து கோபுவுக்கு கடிதங்கள் எழுதி தனது நட்பைப் பத்திரமாக வைத்துக்கொண்டார். காரைக்குடியில் கோபு படித்துக்கொண்டிருந்தபோது அழகப்பா கல்லூரியின் பொறியியல் துறை கட்டிடத்தைத் திறப்பதற்காக வந்திருந்தார் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. சிவப்பு சிங்கமாக நின்றிருந்த காஷ்மீர் ஆப்பிள் நேருவைத் தொட்டுக் கைகுலுக்கி, நண்பன் ஸ்ரீதரிடம் பீற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை.
ஆனால், நேருவை நெருங்க முடியவில்லை. மானசீகமாக நேருவின் கையைக் குலுக்கிவிட்டு, அவர் கல்லூரிக்கு வந்து சென்ற நிகழ்வை நண்பனுக்கு கோவையாக எழுதி அனுப்பினார். அவ்வளவு சீக்கிரம் பாராட்டிவிடாதவர் ஸ்ரீதர், ‘நானே நேருவைக் கண்டதுபோல் நல்ல வர்ணனையில் எழுதியிருக்கிறாய் சினேகிதா’ என்று ஸ்ரீதரிடமிருந்து பாராட்டு வரிகளுடன் பதில் வந்தது.
காரைக்குடியில் கோபு தங்கியிருந்த இடத்தின் பெயர் கல்லுக்கட்டி. அங்கிருந்த குளக்கரை எதிரில் இருந்த ஏ.வி.எம் சன்ஸ் கட்டிடத்தின் மாடியில்தான் நண்பர்களோடு தனது அறையைப் பகிர்ந்திருந்தார் கோபு. ‘வேதாள உலகம்’, ‘வாழ்க்கை’ போன்ற ஏ.வி.எம்மின் படங்களை அங்கிருந்த சரஸ்வதி தியேட்டரில் பார்த்த கோபு, எப்படியாவது ஏ வி எம் செட்டியாரைச் சந்தித்து அவரைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்திருந்தார்.
ஆனால், பிற்காலத்தில் ‘காசேதான் கடவுளடா’ நாடகத்தை ஏ.வி.எம். செட்டியார் வாங்கி, திரைப்படமாகத் தயாரித்து, அதைத் தன்னையே இயக்கச் சொல்வார் என்று கோபு சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. விதி இப்படித்தான் சிறு சிறு சம்பவங்களின் மூலமாக எதிர்காலத்துக்குக் கட்டியம் கூறும் என்பதை கோபு அப்போது உணர்ந்திருக்கவில்லை.
சிரிப்பு தொடரும்
தொடர்புக்கு: tanthehindu@gmial.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago