திரையரங்க வேலை நிறுத்தம் முடிந்துவிட்டது. ஆனால், தயாரிப்பாளர்களின் போராட்டம் தொடர்கிறது. அவர்கள் புதுப்பட வெளியீட்டை முற்றாக நிறுத்திவிட்டதால் திரையரங்குகள் எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்ன’னையும் கமலின் ‘காக்கிச் சட்டை’யையும் விஜய் சேதுபதியின் ‘தர்ம துரை’ போன்ற படங்களையும் வெளியிட்டு, பார்வையாளர்களுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார்கள். இந்தக் காத்திருப்பு தொடருமானால், புதுப்படங்கள் இல்லாமல் திரையரங்குகளை இயக்க முடியாது என்ற நிலை வெகுசீக்கிரம் ஏற்படலாம்.
ஆனால், டிஜிட்டல் திரையிடல் சேவை நிறுவனங்களுக்கு எதிராகத் தயாரிப்பாளர்கள் நடத்திவருவதாகக் கூறப்படும் இந்த யுத்தம், உண்மையில் மற்றொரு தரப்பைப் பணியவைக்கவும் நடத்தப்படுகிறது என்ற தகவல் தற்போது கசிந்திருக்கிறது. ‘குரூப் ரிலீஸ்’ என்று வருணிக்கப்படும் 10 முதல் 70 திரையரங்குகளை ஒரே சிண்டிகேட்டாகக் கூட்டணி அமைத்துப் படங்களை வெளியிடும் முறைக்கு எதிராகவே இந்தப் போராட்டம் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸைத் தொடர்ந்து கவனித்துவரும் ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும்.
யார் இவர்கள், ஏன் இவர்கள்?
விநியோகம், திரையிடல் என இரண்டு தரப்புகளாகப் பிரிந்திருந்த சினிமா வியாபாரத்தில், திரைப்பட விநியோகம் என்ற பிரிவையே இந்த குரூப் மற்றும் சிண்டிகேட் தரப்பில் சிலர் ஒழித்துக்கட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. திரையரங்கத் தொழிலுக்குள் தாதாக்கள்போல் நுழைந்து, தியேட்டர் சிண்டிகேட் முறையைத் தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்தத் தொடங்கிய குறிப்பிட்ட சிலரே இன்று ஒரு படத்தின் சினிமா வசூலையும் வியாபாரத்தையும் தீர்மானிப்பவர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். திரைப்பட விநியோகத் தொழிலுக்குப் புதிதாக வருபவர்களையும் இவர்கள் வளரவிடுவதில்லை.
இந்த குரூப் ரிலீஸ் மற்றும் தியேட்டர் சிண்டிகேட் முறையில் தமிழகத்தில் உள்ள 1,069 திரையரங்குகளில் சுமார் 450 திரையரங்குகள் சிக்கியிருப்பதால் தயாரிப்பாளர்களுக்கு இம்முறையால் பெரும் தலைவலி ஏற்பட்டிருக்கிறது. தாக்குப்பிடித்துவரும் வெகுசில விநியோகஸ்தர்களும் இத்தகைய திரையரங்க தாதாக்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டார்கள். வெளியீட்டுக்குமுன் தயாரிப்பாளர் கேட்கும் அட்வான்ஸ் தொகையை இந்தத் திரையரங்க தாதாக்களிடம் வட்டிக்கு வாங்கி, படத்துக்குக் கொடுக்கிறார்கள். இதனால் திரையரங்க தாதாக்கள் கொடுத்ததுதான் வசூல் என்ற நிலை உருவாகி, போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல் விநியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களும் சிரமப்படுகிறார்கள்.
இந்தக் கிடுக்கிப்பிடியில் இனியும் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் பெரும்பாலான விநியோகஸ்தர்கள் விநியோகத் தொழிலில் இருந்தே வெளியேறிவிட்டார்கள். ஆனால், தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் என்ற ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள்.
எங்கே போடப்பட்ட விதை?
குரூப் ரிலீஸ், தியேட்டர் சிண்டிகேட் முறை இரண்டுமே ஒன்றா? தியேட்டர் சிண்டிகேட் தமிழகத்தில் முதலில் எங்கே உருவானது? பத்திரிகையாளரும் பாக்ஸ் ஆபீஸ் ஆய்வாளருமான ஆர்.ராமானுஜத்திடம் கேட்டபோது “ ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகளைக் குத்தகை முறையில் எடுத்து நடத்தும் திரையரங்கத் தொழில் தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்பட்ட ஒன்றுதான். ஆனால் இரண்டு, மூன்று, ஐந்து திரையரங்குகள் என்று இருந்த இந்த தியேட்டர் லீஸ் தொழில், 5 என்ற எண்ணிக்கையைக் கடந்து வளர்ந்தபோதுதான் தியேட்டர் சிண்டிகேட் முறை உருவானது. இந்த இடத்தில் எம்.ஜி. பற்றிக் கூற வேண்டியிருக்கிறது.
விநியோகஸ்தர்களின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில் எம்.ஜி. எனப்படும் மினிமம் கியாரண்டி முறையில் படங்களைத் தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வந்தனர். ஓர் ஊரில் 20 திரையரங்குகள் இருக்கின்றன என்றால் அங்கே ஒரு படம் 30 லட்சம் வசூல் செய்யும் என்றால் 60 லட்சம் ரூபாயை எம்.ஜி.தொகையாகப் பெற்றுக்கொண்டு படத்தைக் கொடுத்தார்கள். இது அரைப்படி பால் கறக்கும் மாட்டிடம் ஒரு லிட்டர் கறக்க முயலும் மனோபாவம்.
இதனால் கொடுத்த எம்.ஜி.தொகையை எடுக்கத் திரையரங்குகளுக்கு அதிக தொகைக்குப் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டது. திரையரங்கை நடத்துபவர்களும் படத்துக்குக் கொடுத்த அட்வான்ஸ் தொகையை எடுத்துவிட டிக்கெட் விலை, கேண்டீன் தின் பண்டங்களின் விலை, பார்க்கிங் கட்டணம் ஆகியவற்றை ஏற்றினார்கள்.
இதுவரை வெற்றிபெற்ற கதாநாயகர்களின் படங்கள் அனைத்துக்கும் இதேமுறையில்தான் மக்களிடம் பிளாட் ரேட் வசூல் செய்து தர, சட்டவிரோதமான இந்த வசூலின் 60 சதவீதத்தையே கதாநாயகர்களுக்குத் தயாரிப்பாளர்கள் சம்பளமாகக் கொடுத்து வருகிறார்கள். திரையரங்கை நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தால் இப்படி மக்களைப் பிழிந்து வசூல் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் திரையரங்க உரிமையாளர்கள் படிப்படியாகத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.”
வெளியாகாத ‘எந்திரன்’
“இந்த நெருக்கடியான நேரத்தில்தான் கரூரில் இருந்த 8 திரையரங்களில் 7-ஐ நடத்திவந்த உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் இணைந்து ஒரு சிண்டிகேட்டை உருவாக்கினார்கள். அதன் தலைவர்தான் புதுப்பட ரிலீஸ் சமயத்தில் விநியோகஸ்தரிடமோ தயாரிப்பாளரிடமோ பேசுவார். மூன்று பெரிய படங்கள் அல்லது மக்கள் மத்தியில் அறியப்பட்டிருக்கும் படங்கள் ரிலீஸ் ஆகின்றன என்றால், தியேட்டர் அமைவிடத்தைப் பொறுத்து கூட்டத்தை ஈர்க்க எந்த தியேட்டரில் எந்தப் படத்தை ரிலீஸ் செய்வது என்பதை அவரே முடிவு செய்வார். இப்படி மூன்று படங்களின் ‘எக்ஸிபீட்டர் ஷேர்’ எனப்படும் தியேட்டர் வசூல் தொகையை 7 திரையரங்குகளுக்கும் பிரித்துக் கொடுத்து திரையரங்கத் தொழிலில் ஒரு சமதர்ம சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர்.
இந்தப் பாதுகாப்பான முறைக்கு எதிராக மினிமம் கியாரண்டி முறையில்தான் படங்களைத் தர முடியும் என்று விநியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களும் பிடிவாதம் பிடித்தபோது, கரூர் சிண்டிகேட் எம்.ஜி.யில் படத்தை வெளியிட மாட்டோம் என்று திட்டவட்டமாக மறுத்தது. அந்த நேரத்தில்தான் ‘எந்திரன்’ படம் ரிலீஸ் ஆனது. எம்.ஜி.முறையில்தான் ‘எந்திரன்’ படத்தைத் தர முடியும் என்று தயாரிப்பாளர் சொன்னபோது கரூர் சிண்டிகேட் எங்களுக்கு ‘எந்திரன்’ படம் வேண்டாம் என மறுத்துவிட்டது.
இதனால் கரூர் நகரத்தில் கடைசிவரை ‘எந்திரன்’ ரிலீஸ் ஆகவே இல்லை. கரூர் சிண்டிகேட்டின் இந்தத் தன்னம்பிக்கையும் நஷ்டத்தில் இருந்து தப்பித்த விதமும் மற்ற மாவட்டத் திரையரங்கத் தொழில் நடத்துபவர்களையும் ஈர்த்ததால் சேலம், கோவை என தியேட்டர் சிண்டிகேட்களின் எண்ணிக்கை அதிகரித்து குரூப் ரிலீஸ் முறை உருவானது.”
தற்காப்பும் தனிநபர் ஆதிக்கமும்
“நலிவடைந்துவரும் தியேட்டர் தொழிலைக் காப்பாற்றுவதற்கான தற்காப்பு நடவடிக்கையாக மிக நியாயமான முறையில் செயல்பட்ட கரூர் தியேட்டர் சிண்டிகேட் முறை, திருப்பூரைச் சேர்ந்த தனிநபர் ஒருவரின் சுயநலத்தால் இன்று களங்கப்பட்டு நிற்கிறது. எல்லாத் திரையரங்கு உரிமையாளர்களையும் அழைத்த அவர், நீங்கள் படத்துக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டாம், அதை நான் பார்த்துக்கொள்கிறேன். வசூலில் எனக்கு 5 சதவீதம் கமிஷன் கொடுத்துவிடுங்கள் என்ற கமிஷன் கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். இன்று 60-க்கும் அதிகமான திரையரங்குகள் அவரது கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன.
இதனால் அவரையும் இன்னும் சிலரையும் மீறி கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் எந்தப் படத்தையும் ரிலீஸ் செய்துவிட முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. தயாரிப்பாளரிடம் படத்தை வாங்கிக்கொண்டு வரும் விநியோகஸ்தரை அழைத்து ‘உனக்கு எவ்வளவு பணம் தேவை?” என ரிலீஸுக்கு முதல்நாள் வட்டிப் பணம் கொடுப்பார். அடுத்த நாளிலிருந்து பட வசூல் மூலம் கடனை வசூலித்துக்கொண்டு கமிஷனையும் பெற்றுக்கொள்ளும் அவரைப் போன்றவர்களால் இன்று சினிமா விநியோகத் தொழில் கந்து வட்டித் தொழிலாக மாறிவிட்டது” என்கிறார் ராமானுஜம்.
தென் தமிழகத்தைப் பொறுத்தவரை திருநெல்வேலி முதல் கன்னியாகுமரி வரை உள்ள திரையரங்குகளின் உரிமையாளர்கள் பெரும்பாலும் சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளை நடத்துவதால் இன்னும் திரையரங்க தாதாக்களின் கையில் சிக்காமல் இருக்கிறார்கள். சென்னையும் இதில் தப்பிப் பிழைத்திருக்கிறது என்கிறார்கள் பார்க்ஸ் ஆபீஸ் பார்வையாளர்கள். சிண்டிகேட் தாதாக்களையும் குரூப் ரிலீஸ் முறையையும் இனித தயாரிப்பாளர்களால் மாற்றவே முடியாது என்ற நிலைதான் தற்போது வரை நீடிக்கிறது என்கிறார்கள் சில பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago