ஒரு சிறந்த வெற்றியைக் கொடுத்துவிட்டால் போதும். இந்திப்பட உலகம் கைநீட்டி அழைத்துக்கொள்ளும். ‘கல்யாண பரிசு’ படத்தின் வெற்றியைக் கவனித்த பாலிவுட்டின் அன்றைய சூப்பர் ஸ்டாரான ராஜ்கபூர் அதில் நடிக்க விரும்பியதால் ஸ்ரீதர் இயக்க ‘கல்யாண பரிசு’ இந்தியில் ‘நஸ்ரானா’ ஆனது.
படப்பிடிப்பு முழுமையாக முடிந்து சவுண்ட் நெகட்டிவ் உடன் சென்னைக்குக் கிளம்பிய ஸ்ரீதருக்கும் கோபுவுக்கும் விருந்துகொடுத்தார் ராஜ்கபூர். விமானம் இரவு 9 மணிக்கு என்ற நிலையில் ராஜ்கபூர் அறிமுகப்படுத்திய எக்ஸ்பிரஸ் கார்டு என்ற புதியவகைச் சீட்டு விளையாட்டை 8.30 மணிவரை நேரம்போனதே தெரியாமல் ஸ்ரீதர் அவருடன் விளையாடிக்கொண்டிருந்தார்.
இன்னும் அரை மணிநேரம்தானே இருக்கிறது இன்னும் விருந்தும் சாப்பிடவில்லை, அப்படியிருக்க விமானத்தை எப்படிப் பிடிப்பது என்று கவலைப்பட்ட கோபு “நான் சவுண்ட் நெகட்டிவ்வோட முதல்ல கிளம்புறேன். நீ நாளை வா” என்று தமிழில் ஸ்ரீதரிடம் கூறினார் கோபு. ராஜ்கபூருக்குத் தமிழ் அந்நிய பாஷை அல்லவா? அவருக்குப் புரியாதென்று கோபு நினைத்தார். ஆனால், ராஜ்கபூர் “டோன்ட் வொரி, கோபுஜி! யூ வோண்ட் மிஸ் தி பிளைட். உங்களை விருந்து சாப்பிட வைக்காமல் அனுப்ப மாட்டேன்” என்று சமாதானப்படுத்தியவர் சட்டென்று மனைவியை அழைத்தவர் “கோபுஜியை விருந்துக்குக் கூட்டிட்டுப் போங்க..!” என்றார்.
ராஜ்கபூர் அடுத்துச் செய்த காரியம் கோபுவைத் திடுக்கிட வைத்தது. அவர் அமர்ந்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்த சோபா இருக்கையின் திவான் அருகில் இருந்த தொலைபேசியை எடுத்துச் சுழற்றி யாரிடமோ பேசிவிட்டு, போனை வைத்தவர். பின்னர், கோபுவின் முகத்தைப் பார்த்துச் சிரித்தார்.
“கோபுஜி நீங்க போய் நிதானமா சாப்பிடுங்க! இன்னைக்கு நீங்க பெரிய வி.வி.ஐ.பி. நீங்க ஏர்போர்ட் போய்ச் சேராம பிளைட் கிளம்பாது” என்றார் ராஜ்கபூர். கிருஷ்ணா கபூர் மற்றும் அவருடைய சகோதரர் மேற்பார்வையில் விருந்து பரிமாறப்பட்டது. எவ்வளவு பணியாளர்கள்! ஒரு அரச குடும்பம் தோற்றது! மலைத்துப்போனார் கோபு. மாணவப் பருவத்தில் ‘ஆவாரா’ என்ற ராஜ்கபூர் படத்தைப் பார்த்து வியந்திருந்த தனக்கு, அந்த மாபெரும் நடிகரின் மனைவியின் மேற்பார்வையில் விருந்தா?
விருந்து முடிந்து கோபு ஏர்போர்ட்டை அடைந்தபோது இரவு 09.50 மணி. கிட்டத்தட்ட ஒருமணிநேரம் தாமதம். கோபு பிளைட்டுக்குள் ஏறிவந்தபோது பிளைட்டை இவ்வளவு நேரம் நிறுத்தி வைத்த அந்த வி.ஐ.பி. யார் என்று சக பயணிகள் விமானத்தின் வாயிலையே வெறித்துக்கொண்டிருந்த நேரத்தில் எளிய மனிதராக உள்ளே நுழைந்த கோபுவின் முகத்தை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்க்க, கோபுவோ ராஜ்கபூரின் செல்வாக்கை நினைத்து ஆச்சரியப்பட்டுப்போனார்.
ராஜ்கபூரின் பெருந்தன்மை
‘நஸ்ரானா’ படப்பிடிப்பின்போது இன்னொரு சம்பவம். ‘நஸ்ரானா’ செட்டில் கேமரா அசிஸ்டன்ட் பி.என்.சுந்தரம் லைட்டிங்கை மிகுந்த டென்ஷனுடன் சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரைநோக்கி வந்த ராஜ்கபூர், “எடுக்கப்போகும் ஷாட்டுக்கு நீங்கள் அமைத்திருக்கும் லைட்டிங் போதாது என்று நினைக்கிறேன்” என்று ஆங்கிலத்தில் கூறினார். சட்டென்று சுந்தரத்துக்குச் சுள்ளென்று ஏறிவிட்டது. “ சார்… எங்க வேலை எங்களுக்குத் தெரியும். நீங்க நடிப்பில் திறமையைக் காட்டுங்கள்” என்று சொல்லிவிட்டார். முகம் வாடிப்போன ராஜ்கபூர் மவுனமாகத் தனது இருக்கையில் அமர்ந்த கொஞ்ச நேரத்தில் அதை மறந்து உற்சாகமாகிவிட்டார். நடந்ததைக் கேள்விப்பட்ட ஸ்ரீதர் பதைபதைத்துப் போனார்.
ராஜ்கபூர் இந்தத் துடுக்குத்தனத்தை எப்படி எடுத்துக்கொண்டாரோ தெரியலையே என்று கோபுவிடம் வந்து புலம்ப, “பேசாமல் சுந்தரத்தை அழைத்துப்போய் ராஜ்கபூரிடம் வருத்தம் தெரிவித்துவிடலாம் என்று யோசனை கூறினார். “நீயே அதைச் செஞ்சிடு கோபு” என்று ஸ்ரீதர் உத்தரவிட, அடுத்த நொடியே பி.என்.சுந்தரத்தை அழைத்துக் கொண்டு ராஜ்கபூரிடம் சென்றார் கோபி. “சாரி கபூர்ஜி ஏதோ டென்ஷனில் பேசிவிட்டார். உங்களை அவமதிக்கும் எண்ணத்தில் அவர் கூறவில்லை” என்று கோபு சமாதானம் செய்ய, ராஜ்கபூர் எழுந்து சுந்தரத்துக்குக் கை கொடுத்தார்.
“நான்தான் சாரி கேட்கணும் கோபுஜி. என்னுடைய வேலை நடிப்பது. எனது கருத்துகளை மற்றவர்கள் மீது நான் திணிக்க நினைப்பது சரியல்ல. இந்த பம்பாயில் நான் எது சொன்னாலும் உடனே செய்வாங்க. ஆனா, உங்க யூனிட் ஆட்களின் டெடிகேஷன் ஆச்சரியம் தருகிறது. நடிகர்களுக்கு என்று தனிப்பட்ட முக்கியத்துவம் தராமல், வேலைக்கே மதிப்பு தருகிறீர்கள். ஐ லவ் யூ ஆல்” என்று பாராட்டினார். மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்தும் எத்துணை பெருந்தன்மை என்று கோபு வியந்துபோனார்.
அழைத்தார் மதுரம்
‘கல்யாண பரிசு’ வெளியாகி ஊரே அந்தப் படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது கோபுவைக் கூப்பிட்டு அனுப்பினார் டி.ஏ. மதுரம். அவரைக் கண்டதுமே “ உங்க ஆசீர்வாதம் நிஜமாகிடுச்சு” என்று கோபி நெகிழ்ந்து கூற “சினிமால பெரிய கம்பெனியையே தொடங்கிட்டியே கோபு! உன்னோட மன்னார் அண்ட் கம்பெனியத்தான் சொல்றேன். என்ன பிரமாதமான காமெடி” என்று பாராட்டினார். அப்போதே “எங்க கம்பெனி தயாரிப்புல ஸ்ரீதரை வச்சு ஒரு படம் பண்ணணும்” என்று வேண்டுகோள் வைத்த மதுரம், அதற்கான அறிவிப்பையும் அவரைச் சந்திந்த அடுத்த சில தினங்களிலேயே தந்துவிட்டார்.
அந்தப் படம்தான் ‘மீண்ட சொர்க்கம்’ வீனஸ் பிக்சர்ஸ் நிதி உதவியுடன் என்.எஸ்.கே – மதுரம் தம்பதி தயாரித்த படம். ஜெமினி கணேசன், பத்மினி, கே.ஏ.தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா, தாம்பரம் லலிதா போன்றோர் நடித்தனர். இதில் டி. ஆர்.ராமச்சந்திரன் ஏற்ற கதாபாத்திரத்துக்கு நண்பன் கோபுவின் பெயரையே வைத்தார், ஸ்ரீதர்.
திட்டித் தீர்க்க ஒரு ரத்த பந்தம்!
இந்தப் படத்தின் தொடக்கப் பணிகளின்போது ஸ்ரீதரின் மாமா பிள்ளை சி.வி.ராஜேந்திரன் ஒரு நாள் செட்டுக்கு வந்து கோபுவைப் பார்த்தார். அவர் அப்போது அரசுப் பணியில் இருந்தார். “கோபு! நான் உதவி இயக்குநராக சேர ஆசைப்படறேன். உன் நண்பன்கிட்ட சொல்லேன்!” என்றார்.
“உனக்கு எதற்கு சிபாரிசு.. நீதான் ரத்தபந்தமாச்சே!” என்று கோபு கேட்க, சி.வி.ராஜேந்திரன் தயங்கினார். ராஜேந்திரனின் கோரிக்கையை ஸ்ரீதரிடம் கோபு எடுத்துச் சொல்ல, “சரி..சரி..வந்து தொழிலை கத்துக்கச் சொல்லு.!” என்றார் ஸ்ரீதர்.
குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கிய புலவர் நக்கீரர் என்றால், ஸ்ரீதரிடம் திட்டு வாங்கியே பெரிய இயக்குநராக உருபெற்றவர் சி.வி.ராஜேந்திரன். உதவியாளர் கோபுவை பால்ய நண்பன் என்பதால் திட்டுவதற்குத் தயங்குவார் ஸ்ரீதர். அவருக்கு ஒரு சிறந்த வடிகாலாகக் கிடைத்தார் சி.வி.ஆர்.! ஸ்ரீதர் எல்லாக் கோபத்தையும் ராஜேந்திரன் மீதுதான் காட்டுவார்.
‘மீண்ட சொர்க்கம்’ ஒரு முக்கோணக் காதல் கதை. பரதநாட்டியக் கலைஞரான பத்மினிக்கு இந்தக் கதாபாத்திரம் அல்வா சாப்பிடுவது போல அமைந்துவிட்டது. தனது அத்தனை திறமைகளையும் காட்டி அசத்திவிட்டார் பத்மினி. கல்யாணி ராகத்தில் அமைந்த ‘ஆடும் அருட்பெருஞ்சோதி’என்ற பாடல் வாகினி ஸ்டூடியோவில் பத்து நாட்கள் படப்பிடிப்பு செய்யப்பட்டது. பத்மினியின் திறமையைக் கண்டு அசந்து போய்விட்டார் ஸ்ரீதர். ஆனால், ஸ்ரீதரையே ஒருமுறை கோபம் கொள்ள வைத்துவிட்டார் பத்மினி.
கோபம் தொடரும்
படங்கள் உதவி:ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago