நகைச்சுவையின் இயல்பான அம்சங்களில் முக்கியமான ஒன்று பகடி. அது பிறரைப் புண்படுத்திவிடாத நேர்மையுடன் இருக்க வேண்டும். அதே நேரம் அந்த நேரத்துக்கு மட்டும் குலுங்கிச் சிரித்துவிட்டு கடந்துபோவதாக அந்தப் பகடி இருக்கக் கூடாது. தன்னம்பிக்கையை ஊட்டுவதாகப் பகடி இருக்க வேண்டும் என்பார் கோபு. அப்படிப்பட்ட அசலான நகைச்சுவையை தன் அம்மாவின் வெள்ளந்தியான பேச்சுகளிலிருந்து உள்வாங்கிக்கொண்டவர்.
நடுவுல வந்தவன் நடுவுல போயிட்டான்
சூழ்நிலைக்கு ஏற்ப அம்மா செல்லம்மாவிடம் வெளிப்பட்ட அசலான நகைச்சுவை உணர்வைப் போலவே துணிவும் இணைந்தே வெளிப்பட்டது. இக்கட்டான சூழ்நிலைகளில் கூடச் சம்பந்தப்பட்டவர் ஒருகணம் திடுக்கிட்டு, அதே நேரம் அவர் அந்த இக்கட்டிலிருந்து விடுபட்டு வெளிவந்துவிடும்விதமாக நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டுவந்துவிடுவார். இப்படித்தான் அவருக்கு நெருக்கமான ஒரு பெண்மணியின் கணவர், வீட்டு முற்றத்தில் வழுக்கி விழுந்தபோது, அவரது தலை துணி துவைக்கும் கல் மோதி, அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.
‘உன் வாழ்க்கை இப்படிப் பாழாப்போச்சே. உன்விதி இப்படியா அமையணும், ஆத்துக்காரனுக்கு நல்ல சாவு…’ என்று ஊரார் ஒவ்வொருவராக வந்து, துக்கம் கேட்கிறேன் என்ற பெயரில் அவரது மனதையே சுக்கல் சுக்கலாக உடைத்துப்போட்டிருந்தார்கள். கோபுவின் அம்மா செல்லம்மா துக்கம் கேட்கப் போயிருந்தார். அன்று கை வளையல்களை உடைத்து, தலையிலிருக்கும் பூவை எடுத்து, நெற்றிக்குங்குமத்தை அழித்துவிடும் சடங்கு.
கணவனைப் பறிகொடுத்திருந்த பெண்மணி செல்லம்மாவைக் கண்டதுமே பெருங்குரலெடுத்து அழ, செல்லம்மா அவரை அதட்டினார்.
“எதுக்குடி அழறே! நடுவுல வந்தவன், நடுவிலேயே போயிட்டான், அதுவும் நடு முத்தத்துல வழுக்கி விழுந்து! அழறதை நிறுத்திட்டு, வேலைக்குப் போய் குடும்பத்தை நிமிர வைக்க பாரு. பிறந்ததுலேர்ந்து வச்சுக்கற குங்குமப் பொட்டை நடுவுல வந்தவனுக்காக எதுக்கு அழிக்கணும்?” என்று கேட்டதும் அங்கே வந்திருந்த கூட்டம் மொத்தமும் அசந்துபோனது, அரண்டும்போனது. ஆச்சார அனுஷ்டானங்கள் மிக்க அந்தக் காலத்தில் இப்படிப் பேசுவதற்கு எவ்வளவு துணிவு வேண்டும்?
எழுதி வாங்கினாயா?
இப்படி சிறுவயது முதலே அம்மாவின் அதிரடி நகைச்சுவைகளால் ஈர்க்கப்பட்ட கோபு, இக்கட்டான மற்றொரு சூழலில் அவர் உதிர்ந்த இன்னொரு ‘பிளாக் ஹியூம’ரையும் விவரித்துவிட்டுக் குழந்தையைப் போல் சிரிக்கிறார். கோபுவின் மாமியார் இறந்தபோது, உறவினர்கள் எல்லாரும் குழுமியிருந்தனர். திடீரென்று செல்லம்மா, கோபுவின் மனைவியிடம் வந்து, “கமலா! உங்கம்மா கிட்ட எழுதி வாங்கினியா?” என்று கேட்டார். அங்கிருந்த எல்லோருக்கும் பகீரென்று ஆகிவிட்டது. ‘கடவுளே.. சம்பந்தியம்மாள் சொத்துப் பிரச்சினையை இப்படிப் பட்டவர்த்தனமாக எழுப்புகிறாரே’ என்று பந்துக்கள் அனைவரும் பதைபதைத்துப் போனார்கள். அடுத்து செல்லமா என்ன கேட்பாரோ என்று எல்லோரும் குழம்பிப்போய் அவரது முகத்தைப் பார்க்க,
“உங்கம்மா ஆவக்காய் ஊறுகாய் பிரமாதமா போடுவாள். அவகிட்ட ரெசிபி எழுதி வாங்கிக்கிட்டியா?” என்று செல்லம்மா கேட்க, சாவு வீடு நகைச்சுவை மன்றமாகி குபீர் சிரிப்பொலியால் நிறைந்தது.
இரண்டாம் குரு
அம்மாவின் நகைச்சுவை உணர்வு ஏற்படுத்திய தாக்கம் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ‘கலைவாணர்’ என்.எஸ் கிருஷ்ணன் ஏற்படுத்திய தாக்கம், அவரைத் தனது இரண்டாம் நகைச்சுவை குரு என்று கோபு கூறும் அளவுக்கு அவரை வடிவமைத்திருக்கிறது. சி.வி.ராமன் தயாரிப்பில் டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் வெளியான படம் ‘கிருஷ்ண பிடாரன்’(1942). இந்தப் படத்தில் சங்கீத வித்துவானாக வரும் என்.எஸ்.கேவின் நகைச்சுவைக் காட்சிகள் பற்றிப் படம் பார்த்தவர்கள் வந்து சிலாகிக்க, பத்து வயதில் அந்தப் படத்தைப் பார்க்கப் போனார் கோபு.
படத்தில் என். எஸ்.கே. ஒரு கர்நாடக சங்கீத வித்துவான். அவருடைய சகாக்கள் புளிமூட்டை ராமசாமி, ஆழ்வார் குப்புசாமி, சி.எஸ் பாண்டியன் ஆகியோர். (கவுண்டமணி, செந்தில் மாதிரி இவர்கள் அன்று பிரபலமான நகைச்சுவை அணி) கதைப்படி என்.எஸ் கிருஷ்ணனுக்கு ஆறு மணிக்கு சங்கீதக் கச்சேரி. மிருதங்க வித்துவானுக்கு ஏதோ பிரச்சினை. தன்னால் வர முடியவில்லை என்று மிருதங்கத்தை மட்டும் அனுப்பிவைத்துவிட்டு, ‘இன்றைக்கு மட்டும் யாரையாவது வைத்து சமாளித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிடுவார். மிருதங்கம் இல்லாமல் கச்சேரி களை காட்டாதே!
நொந்துபோகும் வித்வான் என்.எஸ்.கே., “மிருதங்கம் வாசிக்க யாரையாவது போய் அழைச்சிட்டு வாங்கோ” என்பார். ஆவர் அப்படிக் கூறிக்கொண்டிருக்கும்போது தெருவில் ஒரு பறை அறிப்பாளர், அரசனின் ஆணையைப் பறையடித்து கூறிக்கொண்டே வருவார். அவரைப் பிடித்துக்கொண்டு வந்து என்.எஸ்.கே. முன்பாக நிறுத்துவார்கள்.
என்.எஸ்.கே. அவரிடம் “தண்டோராக்காரரே! எனக்கு நீங்க மிருதங்கம் வாசிக்கணும்” என்பார். அவரோ விழித்தபடி “மிருதங்கம்னா என்னங்க அய்யா?”என்று கேட்பார்.
“அது ஒன்னுமில்லேப்பா… இப்ப நீ பறையைக் குச்சியால் அடிச்சே இல்லே. குச்சிய உபயோகப்படுத்தாம உன்னோட விரல்களைக் கொண்டு இந்த மிருதங்கத்தை ரெண்டு பக்கமும் அடிக்கணும். வாத்தியம்தான் வேற” என்பார். அவரும் ஒப்புக்கொள்ள, அடுத்த காட்சியில் கச்சேரி தொடங்கும்.
26chrcj_Krishnapidaran2-01rightகொஞ்சம் பக்கத்தில் வா
‘ராம நீ சமானமெவரு…’ என்று என்.எஸ்.கே. பாடுகிறார்.
பறையை அடிக்கும் அந்த தண்டோராக்காரர் ‘திருதிரு’வென விழித்தபடி ‘டண்டணக்கா டண்டணக்கா’ என்று மிருதங்கத்தை அடிக்கத் தொடங்க, என்.எஸ். கே திகைக்கிறார். அவரைப் பார்த்து, “தண்டோராக்காரரே! கொஞ்சம் கிட்டே வாங்க!” என்கிறார்.
தண்டோராக்காரர், மிருதங்கத்தைத் தூக்கிக்கொண்டு என்.எஸ்.கே. அருகில் வந்து உட்காருகிறார். என்.எஸ் கே. மீண்டும் திகைத்து, “நான் சொன்னது இந்த கிட்டே இல்லே! சங்கீதத்துக்குப் பக்கமா கொஞ்சம் கிட்ட வர சொன்னேன்!” என்று சொல்லிவிட்டு, மீண்டும், “ராம...நீ சமானமெவரு...” என்று பாடத் தொடங்குகிறார்.
தண்டோராக்காரர் மறுபடியும், ‘டண்டணக்கான டண்டணக்கா’ என்று தாளத்தைத் தன் வழக்கமான அடியில் தொடர… என்.எஸ்.கே. வேறு வழியின்றி, “நீ என்னோட ஒத்து வர மாட்டே! நான்தான் உன்னோட ஒத்துப் போகணும்” என்று சொல்லிவிட்டு, ‘ராமா நீ சமானமெவரு’ என்ற கர்நாடக கீர்த்தனையை, ‘ராமநீச.... மானமேவரூ...’என்று ‘டண்டணக்கா டண்டணக்கா’ ஸ்டைலில் வேகமாகவும் தாவித் தாவியும் பாட, இந்தக் காட்சியில் திரையரங்கம் குலுங்கியது. கோபுவினுள் இந்த நகைச்சுவைக் காட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படியெல்லாம் மக்களைச் சிரிக்கவைக்க முடியுமா என்று கலைவாணர் சிறுவன் கோபுவைச் சிந்திக்க வைத்துவிட்டார். இந்த ஒரு காட்சிக்காகவே ‘கிருஷ்ண பிடாரன்’ படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பிய கோபு, அதற்காக வீட்டில் காசு திருடி படம் பார்த்திருக்கிறார்.
பத்து வயதில் பார்த்த ‘கிருஷ்ண பிடாரன்’ படத்தின் காட்சியை 86 வயதில் நினைவூட்டிக்கொண்டு, என்.எஸ்.கே.வின் குரலில் அப்படியே நடித்துக் காட்டுகிறார். கோபு ஒரு சிறந்த மிமிக்ரி கலைஞர் என்பதையும் அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். பின்னாட்களில் ஸ்ரீதரின் படங்களுக்கு நகைச்சுவைக் காட்சிகளை எழுதியபோது கோபுவிடம் தன் தாயாரின் நகைச்சுவையில் இருந்த பகடி, துணிவு ஆகியவற்றுடன் கலைவாணரின் நாகரிகக் கோமாளித் தன்மையும் இணைந்துகொண்டது.
இதனால் கோபுவிடமிருந்து வெளிப்பட்டது அத்தனையுமே தரமான நகைச்சுவையாக அமைந்துபோனது. இதைப் பிரபல வார இதழ், ‘என்.எஸ். கிருஷ்ணனுக்குப் பிறகு, நாகரிகமான சிறந்த நகைச்சுவையை அளித்தவர் சித்ராலயா கோபு’ என்று பாராட்டி எழுதியது. ஆனால், தன் நண்பன் ஸ்ரீதரிடம் பாராட்டு வாங்குவதுதான் கோபுவுக்குக் குதிரைக் கொம்பாக இருந்தது.
சிரிப்பு தொடரும்
தொடர்புக்கு tanthehindu@gmial.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago