ரஜினியை ‘நல்லவர்’ ஆக்கிய ஸ்ரீதேவி

By ச.கோபாலகிருஷ்ணன்

1990-களின் தொடக்கத்தில், விவரம் தெரியத் தொடங்கிய வயதில், எங்கள் வீட்டில் புதிதாக வாங்கியிருந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகிய மூவரும் அறிமுகமானார்கள்.

முதன்முதலில் பார்த்த நினைவு

‘16 வயதினிலே’ படத்தில்தான் அவரை முதன்முதலில் பார்த்ததாக நினைவு. அந்தப் படத்தில் ‘சப்பாணி’ கமல் அவரால் அவமானப்படுத்தப்படும்போது ஏற்பட்ட வருத்தம் தோய்ந்த உணர்வு இப்போதும் நினைவில் ஆடுகிறது.

‘16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ எனக் கமலுடன் ஸ்ரீதேவி நடித்திருந்த படங்களையே அதிகமும் பார்த்திருந்தேன். கூட்டுக் குடும்பமாக இருந்த எங்கள் வீட்டில் முந்தைய தலைமுறையினர் அனைவரையும் தன் அழகாலும் திறமையாலும் ஆட்கொண்டிருந்தார் ஸ்ரீதேவி. அந்தத் தாக்கம் இயல்பாகவே என்னுள்ளும் இறங்கியது. ‘மூன்றாம் பிறை’ படத்தில் நடித்ததற்கு அவருக்குத் தேசிய விருது வழங்கப்படாததால்தான், தமிழ் சினிமாவுக்கு அவர் முழுக்குப் போட்டுவிட்டதாகப் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள்.

02chrcj_Sridevii_Pokkiri raja ‘போக்கிரி ராஜா’ படத்தில் right

அதன்பிறகு ‘சித்ரஹார்’, ‘சூப்பர் ஹிட் முகாபுலா’ போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றிய ஸ்ரீதேவி முற்றிலும் வேறானவராகத் தெரிந்தார். ஒரே ஆள் இந்த அளவுக்குத் தோற்றத்தில் மாற்றத்தை அடைய முடியுமா என்று திரையில் அவரைப் பார்க்கும்போதெல்லாம் தோன்றும். அவர் செய்துகொண்ட மூக்கு அறுவை சிகிச்சைதான் அந்த மாற்றத்துக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

ரஜினியின் திரைக் காதலி

கமல்-ஸ்ரீதேவி இணை ஆதர்ச இணையாக அறியப்பட்ட ஒன்று. சிறுவயதில் என் மனதுக்குக் கூடுதல் நெருக்கமாக இருந்த ரஜினி, ஸ்ரீதேவிக்கு ஜோடியாக அதிகம் நடிப்பதில்லை என்பதால், ரஜினி ‘நல்லவர்’ இல்லையோ என்றெல்லாம்கூடத் தோன்றியிருக்கிறது. சில ஆண்டுகளில் தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமை இரவுகளில் தமிழ்ப் படங்கள் ஒளிபரப்பாக ஆரம்பித்தபோது, ‘தர்மயுத்தம்’ ஒளிபரப்பப்பட்டது. அதில் ரஜினியும் ஸ்ரீதேவியும் காதலர்களாக நடித்ததைப் பார்த்ததும் ‘ரஜினியும் நல்லவர்தான்’ என்ற நிம்மதி ஏற்பட்டது. இந்த அளவு ஸ்ரீதேவி முக்கியமானவராகத் தெரிந்தது இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது.

தொடர்ந்து ‘ஜானி’, ‘போக்கிரி ராஜா’ என ரஜினியுடனும் ஸ்ரீதேவி பல படங்களில் நடித்திருப்பது தெரியவந்தது. நான் வளர வளர ரஜினி-கமல் இருவர் மீதும் சமமான மரியாதை வரத் தொடங்கியிருந்தது. கமலுடன் அதிகப் படங்களில் ஸ்ரீதேவி நடித்திருக்கிறாரா, இல்லை ரஜினியுடனா என்பதைத் தெரிந்துகொள்ளும் குறுகுறுப்பு அப்போது இருந்தது. பதின்ம வயதுகளில் கூகுள், விக்கிபீடியா பரிச்சயம் ஏற்பட்டிராத அந்தக் காலத்தில் சினிமாவைப் பற்றி யாராவது பேசிக்கொள்வதைக் கேட்டாலே அவர்களிடம் இந்தக் கேள்வியை பட்டென்று கேட்டுவிடுவேன்.

ரஜினி-கமலை வைத்தே ஸ்ரீதேவியைப் புரிந்துகொள்ளும் பார்வை அகல்வதற்கு நீண்ட காலம் ஆனது. ஒருமுறை ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படம் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தில் அவர் கமலுக்கு ஜோடியில்லை என்று தெரிந்தவுடன், அந்தப் படத்தைப் பார்க்கவே தோன்றவில்லை.

வியக்கவைத்த மிகையற்ற நடிப்பு

பள்ளிக் காலத்தின் இறுதி ஆண்டுகளில் திரைப்படங்கள் மீதான ஆர்வம் அதிகரித்ததோடு ரஜினி-கமலைத் தாண்டி ஸ்ரீதேவியின் ஆளுமையை வியக்கும் பக்குவம் வந்தது. ‘மூன்றாம் பிறை’, ‘ஜானி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படங்களின் மறுபார்வை மூலம் ‘இந்தியா சினிமாவின் தலைசிறந்த நடிகை’ என்று என் மனம் அவரைத் தேர்ந்தெடுத்தது. ‘தேவியின் திருவிளையாடல்’ என்ற பக்திப் படத்தில் அரசனாகத் தியாகராஜனும் அரசியாக ஸ்ரீதேவியும் நடித்திருப்பார்கள். ராஜேஷ் சிற்பியாக நடித்திருப்பார். தன்னை சிற்பியுடன் இணைத்து அரசன் சந்தேகப்படுவதைத் தெரிந்துகொண்ட பின், அவரிடம் நியாயம் கேட்கும் காட்சியில் அவரின் மிகை உணர்ச்சியற்ற நடிப்பு சிறப்பானதாகத் தோன்றியது. நீ

ண்ட இடைவெளிக்குப் பின் அவர் நடித்த ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படம் தமிழிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதுதான் நான் அவரைப் பெரிய திரையில் பார்த்த முதல் படம். பிறகு விஜயின் ‘புலி’ படத்தைப் பார்த்தபோது, அதில் அவர் நடித்திருக்கத் தேவையில்லை என்றே தோன்றியது. அவரது வீச்சை உணர்த்தும் ஒரு தமிழ்ப் படத்துகான சாத்தியமின்றியே இயற்கை அவரைப் பறித்துக்கொண்டுவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்