இசைத்தமிழ் இவர் செய்த அரும் சாதனை: கே.வி.மகாதேவன் நூற்றாண்டு

By பி.ஜி.எஸ்.மணியன்

மார்ச் 14: திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் நூற்றாண்டு தொடக்கம்

“எந்தப் பாடலாக இருந்தாலும் அதற்கு கர்நாடக இசையின் ‘டச்’ இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இசை அமைப்பதே உயிரோட்டத்துடன் இருக்கும் என்று கருதுபவன் நான். என்னாலும் அப்படித்தான் இசை அமைக்க முடியும்” என்று கூறி இருக்கிறார் இந்த நூற்றாண்டு நாயகன்.

அப்படி அவரது இசையில் எத்தனை எத்தனை பாடல்கள் காலம் கடந்து காற்றின் பெருவெளிக்கு கவுரவம் செய்திருக்கின்றன. மிஸ்ர யமன் ராகத்தில் ‘நிலவோடு வான் முகில் விளையாடுதே’, அரபி ராகத்தில் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே’, மோகனத்தில் ‘மலர்கள் நனைந்தன பனியாலே’, கல்யாணி ராகத்தில் ‘மன்னவன் வந்தானடி’, பீம்ப்ளாஸ் ராகத்தில் ‘கோமாதா எங்கள் குலமாதா’ என்று ராகங்களுக்கு இவர் செய்த ஆராதனையின் பட்டியல் அடங்க மறுக்கும்.

09chrcjKVMahadevan1 கே.வி.மகாதேவன் கையெழுத்திட்டு தன் ரசிகர்களுக்கு அனுப்பிவந்த ஒளிப்படம்

ஐம்பதுகளின் இறுதியில் தொடங்கி, அறுபதுகளில் நன்றாக வேர்விட்டு, எழுபதுகளின் இறுதிவரை இந்தியத் திரையிசையை சிலந்தி வலைபோல் ஆக்கிரமித்திருந்தது மேற்கத்திய சங்கீதம். அதன் வேகத்தில் நமது பாரம்பரியமான கர்நாடக சங்கீதம் தன் முக்கியத்துவனத்தைத் திரையில் மெல்ல மெல்ல இழந்துகொண்டு வந்தது.

சுத்தமான கர்நாடக இசையில் பாடல்கள் அமைத்தால் “இது என்ன பாகவதர் காலமா?” என்று கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நேரத்தில் செந்தேனாக கர்நாடக இசையைத் திரையிசையில் குழைத்துத் தந்தவர்தான் ‘திரை இசைத்திலகம்’ என்று அனைவராலும் முடிசூட்டப்பட்ட கே.வி.மகாதேவன்.

இந்த முயற்சியை பண்டிதர் முதல் பாமரர்வரை அனைவரும் ரசிக்கத்தக்க விதத்தில் செய்து வெற்றியடைந்தார். அதற்கு உடனடியாக நினைவில் ஓடிவரும் உதாரணம் என்றால் அது 1965-ல் அவரது இசையமைப்பில் வெளிவந்த ‘திருவிளையாடல்’. அந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கர்நாடக இசையின் மேன்மையை எளிதாய்த் துலங்கச் செய்த அற்புத்தை ஒரு கட்டுரையில் சொல்லி முடியுமா என்ன? திருவிளையாடலில் இடம்பெற்ற மற்ற பாடல்களை விடுங்கள், ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ பாடலை எடுத்துக்கொள்ளுங்கள்.

தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் நாடக மேடைக்காக எழுதிய விருத்தப் பாடல் அது. அதை அப்படியே எடுத்துக்கொண்டு, முழுமையாக ஒரு ராகத்துக்குள் பொருத்தி, கே.பி. சுந்தராம்பாளைப் பாடவைத்து பண்டிதர் முதல் பாமரர்வரை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு நம்பிக்கையும் துணிவும் ஒரு இசை அமைப்பாளருக்கு இருந்திருக்க வேண்டும்! அது கே.வி. மகாதேவனுக்கு இருந்தது. அதனால் அவரால் அந்தப் பாடலை ஒரு வெற்றிப்பாடலாகக் கொடுக்க முடிந்தது.

“திரை இசைப் பாடல்களுக்கு நமது கர்நாடக இசை பொருத்துவதைப் போல வேறு எதுவும் பொருந்துவதில்லை” என்ற அழுத்தமான கருத்தைப் பலதரப்பட்ட பாடல்கள் மூலமாக நிரூபித்திருக்கிறார். புன்னாகவராளி ராகத்தில் “நாதர் முடிமேலிருக்கும் நல்ல பாம்பே” என்று கர்நாடகரீதியில் அமைத்தவர் அதே ராகத்தைப் பயன்படுத்தி ‘எலந்தப் பயம்’ என்ற ‘பணமா பாசமா’ படத்தின் பாடலை அமைத்து பாமர மக்களின் இதயத்தையும் வென்றிருக்கிறார்.

வெற்றிச் சூத்திரம்

“எதையும் கொடுக்கிற விதத்திலே கொடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்” - இதுதான் கே.வி. மகாதேவனின் தாரக மந்திரம். குறைந்த அளவுக்கு வாத்தியங்களை மட்டுமே பயன்படுத்தி அவர் கொடுத்த பாடல்கள் இன்றளவும் சாகா வரம் பெற்று இருக்கிறதே அது என்ன ஜாலம்! வார்த்தைகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்ததாலேயே வாத்தியங்களின் எண்ணிக்கையை அவர் குறைத்துக்கொண்டார். அதுமட்டுமல்ல; ‘பாட்டுக்குத்தான் மெட்டு’ என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவராக அவர் இருந்தார்.

தனது பாடலை நன்றாகப் பாடிவிட்டால் பாடகரை உடனே பாராட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அதே நேரத்தில் வெற்றிபெறும் பாடல்களால் தேடி வந்தபடியிருக்கும் பாராட்டுக்களைத் தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டார். பணிவும் இனிமையும் அவரது ஆர்மோனியபெட்டியின் கறுப்பு வெள்ளை கட்டைகள் போன்றவை.

‘மன்னவன் வந்தானடி’ பாடலுக்காக அவரைப் பிரபல வீணை இசைமேதை எஸ். பாலச்சந்தர் மனமார பாராட்டியபோது, “இதை போய்ப் பெரிசாச் சொல்லறேளே.. ‘அம்பிகாபதி’ படத்துலே பெரியவர் ( ‘இசைச் சக்கரவர்த்தி’ ஜி.ராமநாதன்) ‘சிந்தனை செய் மனமே’ன்னு போட்ட பாடல் இன்னும் நம்ம சிந்தனையக் குடைஞ்சுகிட்டு இருக்கே! அது கல்யாணி. அதுக்கு முன்னாலே நான் போட்டது வெறும் கடையாணி” என்றார் கே.வி.மகாதேவன்.

கலைஞர்களின் கண்டுபிடிப்பாளர்

ஒரு கோரஸ் பாடகியாக இசை வாழ்க்கையைத் தொடங்கிய எல்.ஆர். ஈஸ்வரியை முதன்முதலாகப் பின்னணிப் பாடகியாக ‘நல்ல இடத்து சம்பந்தம்’ படத்தின் மூலமாக அறிமுகம் செய்தவர் கே.வி.எம்தான். மறைந்த ஜெயலலிதாவை முதன்முதலாகச் சொந்தக் குரலில் ‘அம்மா என்றால் அன்பு’ பாடலைப் பாடவைத்தவர். ‘ஆயிரம் நிலவே வா’ பாடலின் மூலம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை இங்கே அறிமுகம் செய்தவரும் அவர்தான். கலைஞர்களை இப்படிக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல; தனது இசையில் அமைத்த ஒரு அருமையான மெட்டு மக்களிடம் சரியாகச் சென்று சேரவில்லை என்றால் அந்த மெட்டை எப்படியாவது கொண்டுசேர்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார் அவர்.

‘எங்க வீட்டுப் பெண்’ பி. நாகிரெட்டியார் இயக்கத்தில் கே.வி.மகாதேவன் இசையில் வெளிவந்த படம். இந்தப் படத்துக்காக ‘கால்களே நில்லுங்கள்’ என்று ஒரு அருமையான மெலடி பாடலை கொடுத்திருந்தார். ஆனால், படம் சரியாகப் போகாததால் பாடல் எடுபடாமல் போனது. நல்ல ஒரு டியூன் இப்படி எடுபடாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் அவர் மனதை அரித்துக்கொண்டே இருந்தது. பிற்காலத்தில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆரின் வெற்றிப் படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்துக்கு இசை அமைக்கும்போது ‘கால்களே நில்லுங்கள்’ மெட்டையே சிறிய மாறுதல் செய்து சற்று வேகமான தாள கதியில் பாடலை அமைத்து வெளியிட்டபின் அந்தப் பாடலின் வெற்றியை ரசித்தார். அந்தப் பாடல்தான் ‘பட்டிக்காடா பட்டணமா’.

கே.வி.எம்மின் பாணி

பாடலுக்கான சரணத்தை அமைக்கும்போது, கடைசி வரியை வாத்தியங்கள் இல்லாமல் நிசப்தமாக அமைத்து மறுபடியும் பல்லவிக்குத் திரும்பும்போது தாளத்தில் ஒரு ‘பீட்’ முத்திரை கொடுப்பது கே.வி.மகாதேவனின் பாணி.

எந்தப் பாடலிலும் சரணத்தின் கடைசி வரி பாடலின் மையக்கருத்தாக அமையும். அந்த மையக்கருத்தை இப்படிப்பட்ட தாளம் மற்றும் மவுன இடைவெளியுடன் அமைக்கும்போது அழுத்தம் திருத்தமாக மக்கள் மனதில் பதியவைக்க முடியும். உதாரணமாக ‘வசந்த மாளிகை’ படத்தில் வரும் ‘மயக்கமென்ன’ பாடலின் இறுதிச் சரணத்தில் வரும் கடைசி வரிகள் இப்படி இருக்கும்.

‘உன் உள்ளம் இருப்பது என்னிடமே - அதை

உயிர் போனாலும் தரமாட்டேன்’

இந்த வரிகளை பி.சுசீலா பாடும்போது ‘உயிர்போனாலும்’ என்ற வார்த்தைகளுக்குத் தனி அழுத்தம் கொடுத்து அந்த வரிகளை நிசப்தமாக அமைத்து அழுத்தமான காதலைக் கேட்பவர் மனதில் பதியவைத்திருப்பார் கே.வி.மகாதேவன்.

09chrcj_psg maniyanமுதல் தேசியவிருது

இசை அமைப்பாளர்களுக்கான தேசிய விருது முதன்முதலாக 1967ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டபோது முதல் வருடமே அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே.வி.மகாதேவன். பின்னர் ‘சங்கராபரணம்’ படத்துக்காக இரண்டாம் முறை தேசியவிருதுபெற்றார். திரையிசை என்பது மனதைச் சுகமாக வருடும் தென்றல் போன்றது என்ற உணர்வை கே.வி.மகாதேவனின் பாடல்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தந்துகொண்டிருக்கின்றன.

நாகர்கோவில் அருகில் உள்ள கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், லட்சுமி அம்மாள் தம்பதியின் மகனாக 1918 மார்ச் 14 அன்று பிறந்தவர் கே.வி.மகாதேவன். பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்ற இவர், 1942-ல் வெளியான ‘மனோன்மணி’ படத்துக்கு ஒரு பாடலை இசையமைத்து திரையுலகில் அறிமுகமானார். அதிலிருந்து சுமார் 50 ஆண்டுகள் திரையிசைக் கடலில் சுமார் 1,500 முத்துக்களை எடுத்துத் தந்தார். கடைசியாக ‘ஒரே தாய் ஒரே குலம்’(1989) என்ற படத்துக்கு இசையமைத்த இவர் 2001 ஜூன் 21 அன்று காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்