எனது ஆட்டத்தில் நான் யார்? - ராணி முகர்ஜி சந்திப்பு

By நம்ரதா ஜோஷி

கடந்த பல ஆண்டுகளாக, ராணி முகர்ஜி ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். விரைவில் வெளிவரவிருக்கும் அவரது ‘ஹிச்க்கி’ (Hichki) திரைப்படத்தை சித்தார்த் பி. மல்ஹோத்ரா இயக்கியிருக்கிறார். ராணி முகர்ஜியின் நடிப்பில் ‘மர்தானி’ வெளியாகி நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் வெளியாகிறது. இந்த இடைக்காலம் அவரது திருமணம், குழந்தைபேறுக்கானதாக அமைந்திருக்கிறது.

இந்த அம்சம் எப்படி அவர் தனது பணியை அணுகுவதைப் பாதித்திருக்கிறது? நேர மேலாண்மையுடன் பணியையும் வீட்டையும் சம நிலையில் நிர்வகிக்க முடிவதாக வாழ்க்கை இப்போது மாறியிருக்கிறது என்று சொல்லும் அவர், “என்னால் ஒரு நொடியைக்கூட விட்டுக்கொடுக்க முடியவில்லை. நான் படப்பிடிப்புத் தளத்துக்கு வருவதற்கு முன்னரே எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்க இயக்குநர்களிடம் சொல்கிறேன். நான் வந்ததும் உடனடியாகப் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன்.

படப்பிடிப்புத் தளத்தில் சாப்பிடுவதற்குக்கூட நேரம் எடுத்துக்கொள்வதில்லை. பணியை முடித்ததும் என் குழந்தையிடம் சென்றுவிடுவேன். ஆனால், அதற்காக ஏனோதானோவென்று நடித்துக்கொடுப்பதில்லை. எப்போதும் என் சிறந்த நடிப்பைக் கொடுக்கவே விரும்புகிறேன்” என்கிறார். அதனால், ‘ஹிச்க்கி’ திரைப்படத்துக்காக இன்னும் கூடுதலாகப் பணியில் கவனம்செலுத்துகிறார் அவர்.

மீண்டும் திரைப்படங்கள்

‘ஹிச்க்கி’ திரைப்படத்தில் மீண்டும் தன்னை நடிக்கத் தூண்டியது தன் கணவர்தான் என்று சொல்லும் ராணி, “என் மகளுடன் நான் ஒன்றிப்போயிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். என்னை ஒரு தனிமனுஷியாக, நடிகையாக அவர் மதிக்கிறார். அதுதான் என் இலக்குகளைப் புரிந்துகொள்ள உதவியது. முன்பு இதுபோன்ற தூண்டுதல்களை என் அம்மாதான் செய்துகொண்டிருந்தார். இப்போது என் கணவர் அதைச் செய்கிறார்” என்று சிரிக்கிறார்.

சமீபத்தில் அவர் பெரிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை. அவர் நடிக்கும் படங்களில் ராணியே பிரதானமாக இருக்கிறார். பெரிய நட்சத்திரங்கள் யாருடனும் அவர் இணைந்து நடிக்கவில்லை. அவர் தன் மகளுக்காக, ஒரு நேரத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கே முன்னுரிமை கொடுக்கிறார். அவர் ‘யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்’ படத்தில் நடிப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. ஏனென்றால், அவருக்கு வசதியான நேரத்தில் அங்கே பணியாற்ற முடிகிறது.

“இந்த மாதிரியான நேரச் சுதந்திரம் எனக்கு வேறு தயாரிப்பு நிறுவனத்தில் கிடைத்தால் நான் மகிழ்ச்சியாகப் படங்களில் நடிப்பேன். ஆனால், நான் எப்போதும் தனித்துவமான நபராகத்தான் இருந்துவருகிறேன். என் சாதனைகள் எனக்குச் சொந்தம். என் கணவரின் சாதனைகள் அவருக்குச் சொந்தம். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர்தான் காரணம். அவரது படங்களில் நான் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். ஆனால், அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவருடைய தந்தையும் அவரும்தான் காரணம்” என்று விளக்குகிறார் அவர்.

ராணி, பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். தன் தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு, குடும்பத்துக்கு உதவுவதற்காக அவர் 90-களின் பாதியில் நடிக்கவந்துவிட்டார். “இளம்வயதிலேயே பணிவாழ்க்கையைச் செதுக்க தொடங்குவதில் எந்தத் தவறுமில்லை. நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் விஷயமாக வயது எப்போதும் இருக்க முடியாது. 80 வயதாகும்போதுகூட நீங்கள் பணியாற்றலாம்” என்கிறார் அவர்.

இயல்பான நடிப்பே சிறந்தது

‘ஹிச்க்கி’ திரைப்படம் ‘தூரே நோய்க்குறியீடு’ (Tourette Syndrome) என்ற நோய் பற்றிப் பேசுகிறது. ஒரு தாயாக மாறிய பிறகு, இதுபோன்ற பிரச்சினைகளைக் கூடுதல் அக்கறையுடன் அணுக முடிவதாக அவர் தெரிவிக்கிறார். ஹாலிவுட்டில் 2008-ம் ஆண்டு வெளியான ‘ஃப்ரன்ட் ஆஃப் தி கிளாஸ்’ (Front of the Class) திரைப்படத்தைத் தழுவி ‘ஹிச்க்கி’ திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம், பிராட் கோஹனின் ‘Front of the Class: How Tourette Syndrome Made Me the Teacher I Never Had’ என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

இந்தத் திரைப்படத்தில் அவர் நடித்திருக்கும் ‘நைனா’ கதாபாத்திரம் பிராட் கோஹனை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால், தொடர்ந்து கோஹனிடம் பேசிவந்திருக்கிறார் ராணி. “நான் கோஹனுடன் ஸ்கைப்பில் உரையாடினேன். அவர் குழந்தையாக, வளரும்போது இருந்த மனநிலையைப் புரிந்துகொள்ள இது உதவியது. அவர் ஆசிரியராக விரும்பியபோது, பலமுறை நிராகரிக்கப்பட்டிருக்கிறார்.

9CHGOW_HICHKI இப்போது ராணி முகர்ஜி right

ஆனால், இப்போது அவர் பள்ளி முதல்வராக இருக்கிறார். அவர் எப்படி இந்தப் பாகுபாடுகளை எதிர்கொண்டார்? எப்படித் தன் இலக்குகளை அடைந்தார்? போன்ற அம்சங்களை அவரிடம் பேசிய பிறகு புரிந்துகொண்டேன்” என்று சொல்கிறார் அவர்.

இயல்பான நடிப்புதான் ராணியின் வலுவான அம்சமாக எப்போதும் இருந்திருக்கிறது. அவர் பிராட் கோஹனின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் தன்னுடையதாக உணர ஆரம்பித்திருக்கிறார். “அவரின் உணர்வுகளை எனக்குள் உள்வாங்கி, அதைப் படத்தில் இயல்பாக வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். ‘தூரே நோய்க்குறியீடு’ பற்றிய பெரிய விழிப்புணர்வை ‘ஹிச்க்கி’ திரைப்படம் ஏற்படுத்தும். இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எதிர்கொள்ளும் பலவிதமான பாகுபாடுகளை இந்தப் படம் பேசியிருக்கிறது” என்கிறார் அவர்.

நம்பர் 1

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன், ராணி முகர்ஜி, தனக்குத் திருமணமாகும் வரை நம்பர் 1 இடத்தைத் தக்க வைப்பேன் என்று சொல்லியிருந்தார். ஆனால், இப்போது வெற்றியைப் பற்றிய அவரது அணுகுமுறை எளிதானதாக மாறியிருக்கிறது. “என்னுடைய ஆட்டத்தில் நான் நம்பர் 1 ஆக இருக்கிறேன். அப்படி நான் நம்புவதுதான் நல்லது. இல்லையென்றால், என் பணிவாழ்க்கை தேக்கமடையத் தொடங்கிவிடும்.

தற்போது என்னுடன் போட்டிபோடவே நான் விரும்புகிறேன். தொடர்ந்து கற்றுக்கொள்கிறேன்; புதுமையான வழிகளை அறிந்துகொள்கிறேன். என் வாழ்க்கையிலிருந்து புதுமை நீங்கிவிட்டால், என் ரசிகர்களையும் நான் இழந்துவிடுவேன். ஒரு நடிகர் எல்லாவற்றையும் சாதித்து விட்டேன் என்று நினைத்தால், அந்த நடிகரின் நடிப்பு முடிவுக்கு வந்துவிட்டதாகத்தான் அர்த்தம்” என்று சொல்கிறார் ராணி.

தி இந்து ஆங்கிலம் | சுருக்கமாகத் தமிழில்: என். கௌரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

மேலும்