மீன்கொடி தேரில் ‘வல்லப’ ராகம்

By ஆர்.கே.அருள்செல்வன்

இளையராஜாவின் இசையில் லயிக்கும் ரசிகர்களின் நினைவுத் தடத்தில் பதிந்துபோன இருபது பாடல்களில் ஒன்றாவது மறைந்த மூத்த பத்திரிகையாளர் எம்.ஜி.வல்லபன் எழுதிய பாடலாக இருக்கும். அவர்தான் எழுதியது என்று தெரியாமலேயே அந்தப் பாடல்கள் அவர்களின் உள்ளத்தில் நுழைந்திருக்கும்.

தேடிக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் வல்லபன் எழுதிய திரைப்பாடல்களின் எண்ணிக்கை நூற்றுக்குள் அடங்கும். அவை நம் நினைவுகளில் அலையடித்துக்கொண்டிருக்கும் வெற்றிப் பாடல்கள் என்பதில்தான் பாடலாசிரியராக வல்லபனின் திறமை வெளிப்பட்டு நிற்கிறது.

‘மீன்கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்’ என்ற ‘கரும்புவில்’ படப் பாடல் இன்னும் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் வலம் வந்துகொண்டிருக்கிறது. இன்னும் ‘தீர்த்தக் கரைதனிலே’ என்ற ‘தைப்பொங்கல்’ படப் பாடல், ‘தர்மயுத்தம்’ படத்தின் ‘ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி’ பாடல் , ‘என்னோடு பாட்டுப் பாடுங்கள்’, ‘மெல்ல மெல்ல என்னைத் தொட்டு’, ‘பூமேலே வீசும் பூங்காற்றே’ , ‘நாலு வகை பூவில் மலர்க்கோட்டை’ , ‘கண்மலர்களின் அழைப்பிதழ்’ , ‘இசைக்கவோ நம் கல்யாணராகம் ..’, ‘தென்றலோ தீயோ.. தீண்டியது நானோ ?’ போன்ற பல பாடல்களைக் கேட்கிற போது ‘அட இது எனக்குப் பிடித்த இளையராஜாவின் பாடல்கள் அல்லவா’ என ரசிகர்கள் துள்ளக்கூடும்.

தெரிந்த பாடலின் பின்னால் முகம் தெரியாத பாடலாசிரியன் இருப்பான். ஓ! இந்தப் பாடல்கள் எல்லாம் வல்லபன் எழுதியவையா, இத்தனை நாள் எனக்குத் தெரியாதே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுக்கொள்ள இன்று பொருத்தமான தினம். இன்று மார்ச் 23 எம்.ஜி.வல்லபனின் பிறந்த நாள்.

அவர் பாடல்கள் சென்றடைந்த அளவுக்கு அவர் பெயர் சென்றடையவில்லை. காரணம் அவர் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டதில்லை. கவிதை எழுதுவோர், இலக்கணப்படி, யாப்பின்படி எழுதுவோர் என்ற எல்லாரும் திரைப்படத்துக்குப் பாட்டு எழுதிவிட முடியாது. பல கவிதைப் புத்தகங்கள் போட்ட கவிஞர்கள் பலரும் முட்டி மோதி முயற்சி செய்து மூக்குடைந்து ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று போன வேகத்தில் திரும்பிவந்த துறை இது.

23chrcj_mg vallaban

ஆனால், தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத ஒருவர் தமிழில் வெற்றிகரமான பாடல்களை எழுதியிருக்கிறார் என்பது வியப்பு. அவை உங்கள் அபிமான பாடல்கள் கொண்ட சிறு பட்டியலில் இடம் பிடித்திருப்பது என்பது அதைவிட சிறப்பு. எம்.ஜி.வல்லபனின் தாய் மொழி தமிழல்ல, மலையாளம். கேரளாவில் திருச்சூர் பகுதியில் பெரிஞ்ஞினம் என்ற ஊரில் பிறந்தவர். குடும்பம் சென்னை வந்தபோது வல்லபன் பள்ளி வயதுச் சிறுவன். பள்ளிப் படிப்பு மலையாள வழியிலும் தமிழ் வழியிலும் கழிந்தது.

குடிபெயர்ந்து வந்த தமிழகத்தில் மலையாளத்துக்கே தாய்மொழியாகக் கருதப்படும் தமிழை இன்னும் இனிமையாகவும் எளிதாகவும் பயின்றதில் ஆச்சரியமில்லை. தமிழ் இதழியலைத் தேர்ந்தெடுத்த வல்லபன், அதில் கவிதைகளும் பாடலும் எழுதும் அளவுக்கு ஆற்றலை வளர்த்துக் கொண்டார். இவரைப் பாடலாசிரியர் ஆக்கியவர் எழுத்தாளர், இயக்குநர் ஆர்.செல்வராஜ் . அவர் இயக்கிய ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் ‘சோலைக்குயிலே காலைக்கதிரே’ பாடல் மூலம் பாடலாசிரியராக வல்லபனை அறிமுகப்படுத்தினார். இளையராஜா இசையில் அப்பாடலைப் பாடிய எஸ்.பி. ஷைலஜாவுக்கும் அதுவே முதல் பாடல். அது பிரமாதமான வெற்றி பெற்றது. அதன் பிறகு இளையராஜாவின் இசையில் ‘வல்லப’ ராகங்கள் காற்றில் மிதக்கத் தொடங்கின.

பிறரது இசையிலும் வல்லபன் எழுதியிருந்தாலும் இளையராஜா - வல்லபன் கூட்டணியில் பிசிறு தட்டாத மொழியின் ஒத்திசைவு மெலடிகளாய் செவிகளைக் கொள்ளையடிக்கும் ரகமாக அமைந்தது ஓர் ஆச்சரியம். வல்லபனின் சொற்களில் அழகுணர்ச்சி ததும்பும். குறிப்பிடத்தக்த புதிய சொற்களின் பயன்பாடு இருக்கும். உதாரணம் ‘சீதா புகழ் ராமன்’ , ‘கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே’ போன்றவற்றைக் கூறலாம். சிலப்பதிகாரத்தில் வருவதுதான் கானல் வரி. அதைத் தன் பாடலில் எடுத்தாண்டிருப்பார்.

ஒரு பாடலாசிரியராகவே தொடர வேண்டியவர் கதை, திரைக்கதை என்று பாதை மாறினார். மணிரத்னம் படம் உள்பட வல்லபனின் கதை, திரைக்கதை பங்களிப்பில் 18 படங்கள் வந்துள்ளன. ‘தைப்பொங்கல்’ என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார் இந்த இனிய மனிதர். பல மாத இதழ்களை வெற்றிகரமான பாதையில் நடத்திய பத்திரிகை ஆசிரியராகவும் தடம் பதித்தவர்.

அறியப்படாத ஆளுமையாக அவர் மறைந்து விட்டாலும் அவரது பாடல்கள் காற்று வெளியில் எங்காவது ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். இனி, அவரது பாடல்களோடு எம்.ஜி.வல்லபன் என்ற பெயரையும் சேர்த்தே நினைவு கூர்வோம்.

தொடர்புக்கு arulselvanrk@gmail.com

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE