சி(ரி)த்ராலயா 06: ராஜசுலோச்சனா எடுத்த இன்சூரன்ஸ்!

By டி.ஏ.நரசிம்மன்

கொல்லன் பட்டறையில் எறும்புக்கு என்ன வேலை? கோபுவின் எதிர்பாராத தேர்தல் பிரச்சாரம் அப்படித்தான் ஆகிவிட்டது. நடிகர் சோவின் தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் அப்போது மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவர் கோபுவின் நகைச்சுவை நிகழ்ச்சிக்குப் பரம விசிறி.

அப்போது தேர்தல் வர, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு கோபுவின் நகைச்சுவை நிகழ்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டார் அண்ணா. அவரை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு வரும்படி ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயர் ஒரு லாரியைக் கொடுத்து அனுப்பினார். பிரச்சாரத்துக்குக் கிளம்பிய கோபுவின் மனக்கண்ணில் திண்ணையில் அமர்ந்து எளிமையான தோற்றத்தில் கதை, வசனம் எழுதிக்கொண்டிருந்த அண்ணாவின் உருவம் வந்து நிழலாடியது.

அவரை எதிர்த்து பிரச்சாரமா என்று ஒரு கணம் தயங்கினார். ஆனால் தனது நலவிரும்பியான ஆத்தூராரிடம் முடியாது என்று சொல்ல முடியாதே. வேறு வழியில்லாமல் பேசும்படம் சம்பத்குமார், ரெங்குடு, வெங்கு என்று கிடைத்த நண்பர்களை லாரியில் அள்ளிப்போட்டுக்கொண்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார் கோபு.

அப்போது திராவிட நாடு அலுவலகத்தில் கணக்காளராகப் பணிபுரிந்துகொண்டிருந்தவர் அரங்கண்ணல். அண்ணாவின் தேர்தல் மேனேஜரும் அவர்தான். கோபுவுடன் அவர் நன்றாகப் பழகியிருந்ததால் பிரச்சாரம் செய்யவந்த கோபுவைக் கண்டதும் அவருக்கு வியப்பு. “ என்னடா தம்பி? அண்ணாவுக்கு எதிரா மைக் பிடிக்கிற தைரியம் உனக்கு இருக்கா?” என்றதும் கோபுவின் அடிவயிறு கலங்கியது. அரங்கண்ணல் அப்படிக் கேட்டதும் லாரியைவிட்டு இறங்கி ஒருமுறை அத்தையின் வீட்டுக்குப்போய் கலங்கிய வயிற்றைக் காலி செய்துவிட்டுவந்து திரும்பவும் பிரச்சார லாரியில் ஏறினார்.

தேர்தலுக்குச் சில தினங்களே இருந்த நிலையில் அண்ணாவும் அப்போது காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். உஷாராக கோபு ஒரு உத்தியைக் கையாண்டார். அண்ணா பிரச்சாரம் செய்துவிட்டு சென்ற தெருக்களில் அவர் வாக்குச் சேகரித்து சென்றபின் லாரியை அந்தப் பகுதிக்குவிடச்சொல்வார்.

யார் இந்தப் பொடியன்?

அண்ணா முதல்நாள் பொதுக்கூட்டம் பேசிய ஆடிசன்பேட்டை தெருவில்போய் கோபுவின் பிரச்சார லாரி நின்றது. முதலில் மைக் பிடித்த கோபுவுடைய நண்பன் வெங்கு,

“எல்லாரும் பொழுதோடு எழுந்து தீர்த்தமாடிட்டு வாக்குச்சாவடிக்குப் போய், நம்ம ராட்டை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கோ” என்று பேச பட்டென்று மைக்கைப் பிடுங்கினார் கோபு. “ஏன்டா... ஏற்கெனவே காங்கிரஸை அக்ரஹாரக் கட்சினு முத்திரை குத்திட்டா. நீ வேற தீர்த்தமாடி… அப்படி இப்படினு விழுற ஓட்டுக்கும் வேட்டு வச்சிடுவபோல இருக்கே!” என்று சொல்லிவிட்டு திராவிடக் கட்சிகளின் பாணியில் ஆரம்பித்தார் கோபு.

“காங்கிரஸ் சிங்கங்களே. வீர அடலேறுகளே. தமிழ் மண்ணின் தாய்க்குலமே ! பல்லவ நாட்டின் பல்கலைக்கழகமாம் காஞ்சியின் பகுத்தறிவு மிக்க சான்றோரே” என்று கவர்ச்சிகரமான வார்த்தைகளில் மாலை கோத்த கோபு காங்கிரஸுக்கு ஆதரவுகேட்டு, “ அடுக்குமொழியால் தமிழைத் திடுக்கிட வைக்கும் அண்ணாதுரை அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன், அரசியல் அரங்கம் என்பது கதை, வசனம் எழுதும் கற்பனைக் கோட்டை என்று நினைத்துவிட்டாரா? வாய்ஜாலம் இங்கே எடுபடாது…

காஞ்சிபுரம் காங்கிரஸைக் கைவிடாது” என்று இடக்கு மடக்காகப்பேசிக்கொண்டே செல்ல, கொஞ்ச நேரத்தில் லாரியைச் சுற்றிக் கறுப்பு சிவப்புக் கொடிகள் ஏந்திய தொண்டர்கள் மொய்க்க, கோபு பேசி முடித்து சகஜ நிலைக்குத் திரும்பியதுபோது, ‘அடடா! நமது பேச்சுக்கு இத்தனை கூட்டம் கூடிவிட்டதே!’ என ஆச்சரியமாகத் தொண்டர்களைப் பார்த்தார்.

அத்தனை தொண்டர்களின் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருக்க கண்டு ‘அய்யோ! இவர்கள் அத்தனைபேரும் திமுக தொண்டர்கள் அல்லவா!’ கள நிலவரம் அறிவதற்குள் கோபுவுக்கு மறுபடியும் வயிற்றைக் கலக்க, ‘சீக்கிரம் அத்தை வீட்டுக்கு லாரியை விடச்சொல்’ என்றார் வெங்குவிடம். ஆனால், தொண்டர்கள் விட்டால்தானே! ஆடிசன் பேட்டையில் சந்துபொந்தெல்லாம் வீடு வீடாக வாக்கு சேகரித்துக்கொண்டு கோபு கூட்டணியின் லாரியின் அருகே வந்த அண்ணா, அரங்கண்ணலைப் பார்த்து “யார் இந்தத் துடுக்கான பொடியன், எங்கோ பார்த்திருக்கிறேனே?” என்று கேட்டார்.

அரங்கண்ணல் அண்ணாவிடம், “நம்ம தெரு பையன்தான். சம்ஸ்கிருத பண்டிட் மருமகன்” என்று சொல்ல, தொண்டர்களைப் போகச் சொல்லுங்கள் என்று கெஞ்சும் தொனியில் அண்ணாவைப் பணிவுடன் பார்த்தார் கோபு.

ஆனால், அண்ணா லாரி அருகில் வந்து “என்ன தம்பி! ஏதோ கேட்கணும்னு சொன்னியே” என்பது போன்ற ஒரு பார்வையை கோபுவின் பக்கமாக உதிர்த்துவிட்டு, கையைக் கூப்பி, “உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று சொல்ல, கோபு உள்ளிட்ட மொத்தக் கூட்டணியும் அவரைத் திரும்பிக் கும்பிட்டு “சரி அண்ணா” என்று சொல்ல, அங்கே கோபத்துடன் நின்றிருந்த மொத்த திமுக தொண்டர்களும் கொல்லென்று சிரித்துவிட்டு லாரிக்கு வழிவிட்டார்கள்.

தேர்தல் பிரச்சாரம் இப்படி அட்டர் பிளாப் ஆகும் என்று கோபு நினைக்கவே இல்லை. ஆத்தூரார் ‘‘பிரச்சாரம் எப்படி கோபு, பேஷா போச்சுதா, அண்ணா காதுக்கு உங்க டீம் பத்தி தாக்கல் போச்சா?’’ என்று கேட்டதும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாத கோபு சடரென்று, “அண்ணாவே லாரிகிட்ட வந்து நின்னு என் பேச்சைக் கேட்டார் என்றால் பாருங்கோ மாமா” என்று கூற ஆத்தூரார் ஆடிப்போனார்.

நிகழ்ச்சியிலிருந்து நாடகம்

இனி, கொட்டிக்கொடுத்தாலும் தேர்தல் பிரச்சாரத்துக்கு மட்டும் போவதில்லை என்று முடிவுசெய்த கோபு ‘நீயும் நானும்’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை நண்பர் ரெங்குடுவோடு நடத்திக்கொண்டிருந்தார். அதிலிருந்து ஒருபடி முன்னேறி ‘மிஸ் மைதிலி’ என்ற நாடகத்தை எழுதி நண்பர்களுடன் திறந்த வெளியரங்கில் நாடகத் தொடங்க அதற்கு வரவேற்பு பெருகத் தொடங்கியது. பல அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து நாடகத்துக்கு அழைப்பு வந்தது.

ஒரு நாள், காட்டாங்குளத்தூரில் நடந்த அந்த நாடகத்துக்கு, எதிர்பாராதவிதமாக வருகை தந்த டி. ஏ. மதுரம், நாடகத்தை முழுவதுமாக பார்த்து மீண்டும் கோபுவை அருகே அழைத்து “நீ மெட்ராஸுக்கு வராமல் இந்தப் பட்டிக்காட்டுப் புழுதியில ஏன் ராசா கிடக்கிற?” என்று வாழ்த்திவிட்டுசெல்ல கோபு எனும் கலைஞனுக்குக் கண்கள் கலங்கிப்போயின.

23chrcj_chirithralaya 25 வயது இளைஞராக கோபு right

நாடகமும் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் திருமண வயதை நெருங்கிவிட்ட ஒரு இளைஞனின் அன்றாடக் கச்சேரியை நடத்திவிடுமா? கையில் பணம் நடமாட சொல்லிக்கொள்ளும்படியான ஒரு நல்ல வேலை வேண்டுமே? மீண்டும் பெரியப்பா மகனே சரணம் என்று அவரைச் சந்திக்க சென்றார் கோபு.

ஆயுள் குறைந்த இன்சூரன்ஸ் வேலை

அவர் ஏஷியன் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்தார். ஜார்ஜ் டவுனில் இருந்த அலுவலகத்துக்குச் செங்கல்பட்டிலிருந்து சீசன் டிக்கெட் எடுத்துக் கொண்டு சென்று வருவார். நண்பர்களுடன் ரயிலில் சீட்டு கச்சேரி, நகைச்சுவை நிகழ்ச்சிகள் சூடு பறக்கும். ‘தெரிந்தவர்களிடம் பாலிசி எடுத்து வாருங்கள்’ என்று இன்சூரன்ஸ் மேனேஜர் உத்தரவிட, நெருங்கி நண்பனாக இருந்த ‘பேசும்படம்’ சம்பத்குமாரை அணுகினார் கோபு.

“யாராவது சினிமாக்காரங்க பாலிசி எடுப்பார்களா?” கோபு கேட்டார். “அவ்வளவுதானே! என்னோடு வா” என்ற சம்பத்குமார் நேராக ராஜசுலோச்சனாவிடம் அழைத்துச் சென்றார். “என் சினேகிதனுக்காக ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக்க முடியுமா மேடம்?” என்று சம்பத்குமார் கேட்ட உடனே பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு பாலிசி எடுத்தார் ராஜசுலோச்சனா.

அதுவரை வில்லன் பி.எஸ்.வீரப்பா போல முறைத்து வந்த மேனேஜர் நட்சத்திர பாலிசிகளுடன் கோபு வரத் தொடங்கியதும் குணச்சித்திரத் திலகம் நாகையா போன்று உணர்ச்சிவசப்பட்டார். “நீங்க இனிமே டை கட்டிட்டு பாலிசி பிடிக்கப்போங்க” என்று அறிவுரை வேறு கொடுக்க, மறுநாள் ஜானவாசத்துக்கு வாங்கிய அண்ணனின் டையை ஏடாகூடமாகக் கழுத்தில் கட்டி, அது இறுகி தொண்டை கம்மி எம்.ஆர்.ராதாவின் கீச்சுக்குரலில் பேசியபடி பலநாட்கள் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது கோபுவுக்கு.

அதுவுமில்லாமல் கோபு டை கட்டிக்கொண்டது பிரதமர் நேருவுக்குப் பிடிக்கவில்லை போல் இருக்கிறது. ஒரே இரவில் இன்சூரன்ஸ் கம்பெனிகள் அனைத்தையும் அரசாங்கம் நாட்டுடைமை ஆக்கிவிட, ட்ரெயினியாக இருந்த கோபுவுக்குக் காலியானது இன்சூரன்ஸ் ஜோலி. ஆனால், கோபு மனம் தளரவில்லை. அவருக்குக் கோயிலாக அடைக்கலம் கொடுத்தது செங்கல்பட்டு திருமலை டாக்கீஸ் திரையரங்கம்.

சிரிப்பு தொடரும்
தொடர்புக்கு: tanthehindu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்