அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே வெகுமக்கள் கொண்டாடும் பாப்புலர் மியூசிக் வகையாக ‘பாப்’ இசை கோலோச்சிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரால் உருவான பொருளாதாரச் சரிவுகள் உருவாக்கிய அழுத்தத்திலிருந்து விடுபட நினைத்த, ஐரோப்பிய மனநிலையிலிருந்து 50-களில் உருவான சுயாதீன இசைதான் (Independent music) பாப் இசை.
இதற்கு முக்கியக் காரணம் போருக்குப் பிறகு நிலவிய சுதந்திர உணர்ச்சி. மடோனா, மைக்கேல் ஜாக்சன் தொடங்கிக் கடந்த ஆண்டு பாப்பிசை உலகத்துக்கு அறிமுகமான புதிய கலைஞர்கள்வரை லட்சக்கணக்கான பேரை பாப்பிசை எனும் சுயாதீன தனியிசைச் சந்தை உருவாக்கியிருக்கிறது.
வாழ்வின் அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் உலகம் முழுமைக்குமான சர்வதேசக் கலைஞர்களை சுயாதீனத் தனியிசை உருவாக்கியிருக்கிறது. அதேபோல இன, மதரீதியான ஒடுக்குதல்களுக்கு எதிராகவும், சர்வாதிகார ஆதிக்க சக்திகளுக்கு எதிரான உரிமைக்குரலாகவும் சுயாதீனத் தனியிசை ஒலித்துக்கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு பாப் மார்லி.
உலகம் முழுமைக்குமான ஒரு பாடல்
யார் இந்த பாப் மார்லி? அவர் மறைந்துவிட்டாலும் அவரையும் அவரது இசையையும் ஏன் இந்த உலகம் இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது? புரட்சியாளர் சேகுவேராவுக்கு அடுத்து இன்று உலக இளைஞர்களின் டீ-ஷர்ட்களில் இடம்பெற்றிருக்கும் சிக்குப்பிடித்த தலைமுடியைக் கொண்ட இந்த பாப் மார்லி, தனியிசை வழியே அப்படி என்னதான் சாதித்தார்?
இங்கிலாந்தில் பிறந்த மார்லி தாம் ஒரு ஒரு கலப்பினப் பெற்றோருக்குப் பிறந்தவர் எனத் தெரிந்திருந்தும் தன்னை ஆப்பிரிக்க வம்சாவளிசைச் சேர்ந்த கறுப்பினத்தவர் என அடையாளப்படுத்திக்கொண்ட மாபெரும் தனியிசைக் கலைஞன். வெள்ளையர்களால் கறுப்பினத்தவர்கள் அடிமைப்படுத்தப்படுவதைத் தனது பால்யம் முதல் கண்டதாலேயே மார்லி இந்த முடிவுக்கு வந்தார். அவரது ‘Get Up Stand UP’ பாடலில் தங்களது உரிமைகளுக்காக எழுந்து போராடுங்கள் என கறுப்பின மக்களைப் பார்த்து அறைகூவல் விடுத்தார்.
எழுந்து நில்லுங்கள்...
உங்களது உரிமைகளுக்காக…
வானத்திலிருந்து கடவுள் வந்து
அனைத்துத் துக்கங்களையும் எடுத்துக்கொண்டு
சந்தோஷத்தை வழங்குவாரென்று அனைவரும் நினைப்பீர்கள்…
வாழ்க்கையின் மதிப்பைப் புரிந்துகொண்டால் அதை இந்தப் பூமியில்தான் தேடுவீர்கள்…
அப்போது நீங்கள் வெளிச்சத்தைக் காண்பீர்கள்…
அதனால் எழுந்து நில்லுங்கள்…
- கறுப்பின மக்களின் விடுதலை உணர்ச்சியைத் தூண்டிய இப்பாடல், வெள்ளையர்களையும் மனம் இளக வைத்தது. அதைத் தாண்டி உலகம் முழுவதும் பல்வேறு நிலைகளில் தங்களது உரிமைகளுக்காக, விடுதலைக்காகப் போராடிவரும் பல்வேறு இன மக்கள், தொழிலாளர்கள், பெண்கள், மதச் சிறுபான்மையினர், பால் சிறுபான்மையினர் என அனைவரையும் தங்கள் உரிமைகளுக்காக எழுந்து நிற்கவைக்க பாப் மார்லியின் இந்தப் பாடலால் முடிந்தது. இதுபோல் அவரது நூற்றுக்கணக்கான பாடல்கள் காற்றில் விடுதலை கீதம் இசைத்துக்கொண்டிருக்கின்றன. இதுதான் கட்டுப்பாடுகள் அற்ற சுயாதீன தனியிசையின் சக்தி
இங்கே என்ன நடக்கிறது?
நீங்கள் யூடியூபுக்குள் நுழைந்து பாப் மியூசிக் என்ற இரண்டு சொற்களை உள்ளிட்டால் 13 கோடி வீடியோக்களைக் காண முடியும். ஐரோப்பிய பாப் இசையின் அருகில்கூட அதன் திரையிசை நெருங்க முடியாத அளவுக்கு, பாப் இசைச் சந்தை விஸ்தாரமாக இருக்கிறது. பல மில்லியன் டாலர்கள் வருவாய் கொட்டக்கூடிய கலையாக அங்கே தனியிசை விளங்குகிறது.
இந்த இடத்தில்தான் இந்தியத் திரையிசையின் ஆதிக்கம் பற்றிக் கூற வேண்டியிருக்கிறது. இந்தியாவில் சினிமா என்பது வாழ்வின் முக்கியக் கலாச்சார கூராக மாறி நிற்கிறது. இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கும் திரையிசை நமது வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளின் அருகில் வந்து நிற்கிறது.
பிறந்தால் பாட்டு, வளர்ந்தால் பாட்டு, அன்புப் பாட்டு, பாசப் பாட்டு, நட்புக்குப் பாட்டு, காதலுக்குப் பாட்டு, காதல் தோல்விக்கும் பாட்டு, திருமணத்துக்குப் பாட்டு, துக்கப் பாட்டு, தூங்கவும் பாட்டு, துள்ளல் பாட்டு, எள்ளல் பாட்டு, துரோகப் பாட்டு, இளமைக்கும் பாட்டு, முதுமைக்கும் பாட்டு, இறுதியில் இறப்புக்கும் பாட்டு என வாழ்வில் எல்லாச் சூழ்நிலைக்கும் உணர்ச்சிகளுக்கும் இங்கே திரையிசையே பாடல்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
திரையில் தோன்றும் கதாபாத்திரங்களுடன் தங்களைப் பொருத்திப் பார்த்து ‘கேரக்டர் ஐடெண்டிபிகேஷன்’ செய்துகொள்வதில் இந்தியர்கள் எல்லாக் காலத்திலும் உணர்ச்சிமயமானவர்கள். தங்கள் அபிமான நடிகர்கள் தோன்றும் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களை, படத்துடனும் கதையுடனும் இணைந்து ரசித்தே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். 16chrcj_hip hop adhi ஆதி right
திரையிசையை ரசிக்கும்போது அவர்கள் பார்த்த காட்சியையும் சேர்த்தே மனத்திரையில் ஓடவிடுகிறார்கள். இதனால் திரையிசையின் தாக்கமும் ஆதிக்கமும் இங்கே இன்னும் தீவிரமான ஒன்றாகவே நீடிக்கிறது. இதனால் தனியிசையில் நல்ல கருத்துகளும் ஈர்க்கும் படைப்புத்திறனும் இருந்தும் ரசிகர்களைப் பெரிதாக ஈர்க்க முடியாமல் போய்விடுகிறது. மிக முக்கியமான இந்தக் காரணத்தைக் கடந்து சில தனியிசை ஆல்பங்கள் இங்கே வெற்றி பெற்றிருக்கின்றன.
தனியிசைக்கு குட் பை
இந்தியாவின் தனியிசைச் சந்தையில் வளர்ந்துவரும் இந்திய பாப்பிசை, அதன் நீட்சி வடிவங்களான இந்திய ராப்பிசை, ஹிப்-ஹாப் ஆகியவற்றில் இன்று பல புதுமுகங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப்பொறுத்தவரை உஷா உதூப்பை உந்துதலாக எடுத்துக்கொண்ட மால்குடி சுபாவில் தொடங்கி இன்றைய ஹிப்-ஹாப் தமிழா ஆதிவரை, தமிழ் பாப் மற்றும் ராப்பிசையை, திரையிசையை மீறி ரசிகர்களிடம் கவனப்படுத்தியிருக்கிறார்கள்.
அதற்குக் காரணம் அவர்களது இசைத்திறன் மட்டுமல்ல; அதைக் கொண்டுசேர்க்கத் தனியார் தொலைக்காட்சிகளும் யூடியூப் எனும் உலகளாவிய சமூகக் காணொலியும் இசையை எளிதில் பரவலாக்கும் தளங்களாகக் கிடைத்ததுதான்.
இங்கே பாப் மற்றும் ராப்பில் பிரபலமான பின்னர் இவர்களைப் போன்றவர்கள் சினிமாவில் நுழைந்து பின்னணிப் பாடகர்களாகவும் இசையமைப்பாளர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அதன்பின்னர் அவர்களது முகமாகவும் சினிமாவில் நுழைய விசிட்டிங் கார்டாகவும் உதவிய தனியிசையிலிருந்து அவர்கள் தனிமைப்பட்டுப் போய்விடுகிறார்கள்.
ஆனால், திரையிசைக்கு வெளியே தனியிசையின் ஒரு பிரிவாகக் காலம்தோறும் வளர்ந்து வந்திருக்கும் சாஸ்த்ரிய சங்கீதம், கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்கள் ஆகியவை இந்திய தனியிசைச் சந்தையில் ஒரே சீரான மதிப்புடன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. நமது கிராமிய இசை இளையராஜாவால் திரையிசையில் மிகச் சிறப்பாக எடுத்தாளப்பட்டிருக்கிறது.
கிராமிய இசை என்பது நமது கலாச்சாரச் சொத்து என உணரவைத்த விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் தம்பதி, புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதி போன்ற கலைஞர்கள் திரையில் வாய்ப்பு கிடைத்தபோது கிராமிய இசைத் தளத்திலிருந்து இன்றளவும் நழுவாமல் அதனோடே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இவர்களைப் போன்ற சிறந்த கலைஞர்கள் தேசத்துக்கு வெளியே பிற இன, கலாச்சார மக்களால் அறியப்படாமலே இருக்கிறார்கள். அதே நேரம் நம்மிடமும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் எனும் இரண்டு மாபெரும் உலகக் கலைஞர்கள் இருக்கிறார்கள்.
அவர்களைத் தாண்டி மைக்கேல் ஜாக்சனைப் போன்றோ மார்லியைப் போன்றோ தனியிசையில் உலகக் கலைஞர்களாக உருவெடுக்க நமது கலைஞர்களால் ஏன் முடியாமல் போனது என்ற கேள்வி இங்கே முக்கியமானது. அதற்கு இன்னும் பல முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. அடுத்த வாரம் அதைப் பேசுவோம்…
தொடர்புக்கு: tajnoormd@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago