கவிஞர், ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை தனது முதல் திரைப்படமாக ‘மாடத்தி’யை உருவாக்கியிருக்கிறார். தென்தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைச் சமூகமாக வாழும் புதிரை வண்ணார்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படம் இது.
ஒரு சுயாதீனத் திரைப்பட இயக்குநராக ‘மாடத்தி’ படம் பற்றியும் அதை வெளியிடுவதற்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர் உரையாடியாதிலிருந்து ஒரு பகுதி…
ஆவணப்பட இயக்குநராக அறியப்பட்ட உங்களது முதல் கதைப்படம் இது. நீங்கள் உணர்ந்த வித்தியாசத்தைக் கூறுங்கள்?
எனது ‘செங்கடல்’ தற்கால அரசியலைக் கையாண்டது. ‘மாடத்தி’யை, ‘பியூர் ஃபிக் ஷன்’ எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் நான் சிறுமியாகக் கேட்டு வளர்ந்த நாட்டார் தேவதைக் கதைகளின் வடிவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம்.
புதிரை வண்ணார் சமூகத்தில், முதல் தலைமுறையாய்ப் படித்து பட்டம் பெற்று அரசுப் பணியாற்றி தாசில்தாராக ஓய்வுபெற்ற மூர்த்தி, படத்தின் திரைக்கதை, வசனத்தில் ரஃபீக் இஸ்மாயிலோடு இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
திருநெல்வேலியைச் சுற்றி ஒரு 25 கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று புதிரை வண்ணார் சமூக மக்களைச் சந்தித்து, நேர்காணல்கள் எடுத்து, சேகரித்த தரவுகள்தான் திரைக்கதைக்கான கச்சாப் பொருள்.
தொழில் முறை நடிகர்களும் புதிரை வண்ணார் சமூக மக்களும் இணைந்து நடித்து, இந்தப் படத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறார்கள்.
‘மாடத்தி’ கதையை சினிமாவுக்காகத் தேர்ந்தெடுத்த பின்னணி என்ன?
பாலியல் வன்முறையால் தொடந்து இடம்பெயரும் சமூகம், புதிரை வண்ணார் சமூகம். தலித்து களுக்கும் தலித்துகளாய்ப் பார்க்கவும் தகாதவர்களாய் அடிமை வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தச் சமூகத்தைக் குறித்து வாசித்ததன் அடிப்படையில், தொடர்ந்து தரவுகளைத் தேடித் திரட்டினேன்.
இமையத்தின் ‘கோவேறுக் கழுதைகள்’, ஆய்வாளர்கள் ஆ. சிவசுப்பிரமணியன், லட்சுமணன், ஆ. தனஞ்செயன் எழுதிய புத்தகங்களைத் தேடி வாசித்தேன். அம்பேத்கர், தன்னுடைய ஐந்தாவது தொகுதியில் மிக ஆணித்தரமாக, திருநெல்வேலி ஜில்லாவில் வாழும் புதிரை வண்ணார் சமூகம் படும் இன்னல்களைக் குறித்துப் பேசியிருந்ததை ஜெயராணி சுட்டிக்காட்டினார்.
திருநெல்வேலியைச் சுற்றி வாழும் குடும்பங்களைச் சந்திக்க ஓவியர் சந்ரு ஏற்பாடுகள் செய்தார். ஆய்வுப் பிரதிகளைத் திரைக் கதையாக்கினோம். திரைக்கதை ஒரு நவீன தேவதைக் கதையாக மாறியது.
நமது கிராம தேவதைகள் எல்லாருமே நியாயமற்ற ஒன்றுக்குப் பலியான பெண்கள். அதைக் குறிப்பிடத்தானே ‘அன்ஃபேரி டேல்ஸ்’ என்று துணைத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள்?
என் குடும்பம் இன்றும் கும்பிடும் குலதெய்வத்தின் கதை நான் எந்தப் பாடப் புத்தகத்திலும் படிக்காதது. ஆனால், அந்தக் கதைதான் என் பண்பாட்டின் வரலாறு. அந்தத் தடத்தில் நான் தேடிக் கண்டடைந்த ஒரு உக்கிர தேவதைதான் ‘மாடத்தி’.
சம்பிரதாயமான சினிமா தயாரிப்பு, திரை யிடல், விநியோக முறைகள் மாறிவரும் நிலையில், சுயதீனத் திரைப்படம் எடுப்பதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா?
இது கூட்டு முதலீட்டில் (Crowd funding) தயாரிக்கப்பட்ட படம். படத்தின் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றவர் படத்தைப் பாதியில் கைவிட்டுவிட்டார். அந்த நேரத்தில் என் கல்லூரி நண்பர்களும் கலைத்துறை நண்பர்களும்தான் கைகொடுத்து உதவினார்கள்.
பாதியில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பினால், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வந்த ஒளிப்பதிவாளர் ஜெஃப் டோலன் ஊதியம் எதுவும் வாங்க மறுத்துத் திரும்பினார். அடுத்துப் பொறுப்பேற்ற ஒளிப்பதிவாளர் அபிநந்தன் தன் பங்கோடு, கேமரா கருவிகளையும் தந்து உதவினார்.
கலை இயக்குநர் மோகன மகேந்திரன் தனக்கென எதையும் கேட்காமல் வேலை செய்து தந்தார். எடிட்டராக வந்த தங்கராஜ் நிலைமையை அவதானித்து தயாரிப்பு மேற்பார்வையையும் செய்து தந்தார்.
என்னுடைய ஆவணப்படங் களையும் கவிதை நூல்களையும் நிதி திரட்டலுக்கான (fund raiser) தொகுப்பாக்கி முகநூலில் அறிவித்தேன். குறைந்தபட்சம் ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தும், கூடுதலாக உதவ நினைத்தவர்கள் ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம்வரை தந்தும் என் படைப்புகளை வாங்கி ‘மாடத்தி’ தயாரிப்புக்கு உதவினார்கள்.
இறுதிகட்டப் படப்பிடிப்பு, பின் தயாரிப்புப் பணிகளை முகநூலில் திரட்டிய நிதியில்தான் செய்து முடித்தேன். படத்தின் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக்கும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவும் ஸ்டுடியோ கட்டணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு இசையும் ஒலியும் அமைத்துக்கொடுத்தார்கள்.
அதற்குப்பின், சிங்கப்பூர் திரைப்பட விழாவில் நிறைவு நிதிக்கான (Finishing funds) போட்டியில் வென்றதால், படத்தை நிறைவு செய்து மாஸ்டரிங் முடிக்க, விநியோகிக்க இணை தயாரிப்பாளர்கள் முன்வந்தார் கள். பிரெஞ்சுத் தயாரிப்பாளர் ஃபிரான்சுவா படத்தின் முதல் பிரதியை பார்த்துவிட்டு, பிரெஞ்சு சப்-டைட்டில் இட்டு ஐரோப்பா எங்கும் ‘ரோட் ஷோ’ செய்வதற்குத் தயாராகியிருக்கிறார்.
சம்பிரதாயமான முறைகளுக்கு வெளியே, சுயாதீன சினிமாவுக்கான சூழல் அனுகூலமாக இல்லாமல் ஆக்கு வதற்கான எல்லா தடைகளையும் சினிமாவின் மீதான நேசத்தால் வென்றெடுக்க முடியும் என்பதுதான் அனுபவங்களின் மூலம் நான் கற்ற பாடம்.
‘செங்கடல்’ படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறப் போராடினீர்கள். ‘மாடத்தி’க்கு என்ன நிலைமை?
தணிக்கைத் துறை என்பது சினிமாவைக் குறித்தோ கலையைக் குறித்தோ எந்த அறிவும் அக்கறையும் இல்லாதவர்கள் அமர்ந்திருக்கும் ஒரு மூடர் கூடம். நம் வரிப்பணம் விரயமாக்கப்படும் இடம்.
அங்கிருப்பவர்கள் ஆளும் கட்சியின் கூஜாக்களாகத் தங்கள் அதிகாரத்தை வைத்துக்கொண்டு வெறுமனே ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். வணிக சினிமாக்களுக்குத் தணிக்கை என்பது அவர்களின் சூதாட்டங்களின் ஒரு பகுதி. மாற்று சினிமாக் கலைஞர்களுக்குத் தணிக்கை கழுத்தில் வைக்கப்படும் கத்தி.
கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள்போல் இம்முறை இருக்காது என்ற நம்பிக்கையோடு ‘மாடத்தி’யை எடுத்துக்கொண்டு போனேன். கமிட்டியில் அவர்கள் கேட்ட முதல் கேள்வி “பதினாலு பதினைந்து வயது பெண்ணுக்கு பாலீர்ப்பு வருமா, என்னால் நம்ப முடியவில்லை?” என்பதுதான்.
தணிக்கை அதிகாரிக்கும் நமக்கும் அறிவார்ந்த உரையாடலுக்கு எப்போதும் வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்தேன். ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்துக்குப் போய் நீதிபதி வாயால் சொல்ல வைத்துத்தான் இந்த அதிகாரிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டியிருக்கிறது.
எங்கள் காலமும் ஆற்றலும் பணமும் ஒவ்வொரு முறையும் வீணாவதற்கு யார் பதில் சொல்வது? இந்த அலைக்கழித்தலின் மூலம், அடக்குமுறையின் மூலம் என்ன சொல்கிறது அதிகாரம்? அப்பீல் போகிறேன்.
இப்போது தணிக்கைச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க, தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலோ கில்ட் அமைப்பிலோ உறுப்பினராக வேண்டுமாம். ரூ. 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை உறுப்பினர் கட்டணம். பட டைட்டிலைப் பதிவு செய், கம்பெனியைப் பதிவு செய், பப்ளிசிட்டி கிளியரன்ஸ் வாங்கி வா என ஆயிரத்தெட்டுச் சான்றிதழ்களுக்கும் சங்கங்களுக்குப் பணம் கட்ட வேண்டும்.
பண மோசடிகளும் ஊழலும் குடுமிப்பிடி சண்டைகளும் மலிந்து கிடக்கும் இந்த சங்கங்களில் உறுப்பினராக வேண்டும் என்று எதற்குச் சுயாதீனப் படைப்பாளி களைக் கட்டாயப்படுத்த வேண்டும்? மற்றுமொரு கேலிக்கூத்து விலங்குநல அமைப்பிடம் தடையில்லாச் சான்று (Animal Welfare Certifcate) பெற வேண்டும் என்பது. படங்களில் விலங்குகளைப் பறவைகளைப் பயன்படுத்தினால் அதை வாங்க வேண்டும் என்பது சரி. அந்த நிறுவனம் ஏன் ஹரியானாவில் மட்டும் இருக்கிறது.
அந்த நிறுவனத்தில் ஏன் தரகர்கள் மூலம் மட்டுமே சான்றிதழ் வாங்க முடிகிறது? ஒரு படைப்பாளி நேரடியாக, முறையாகக் கையாள முடிவெடுத்தால், அந்த நிறுவனத்தில் யாரையும் ஏன் தொலைபேசியில்கூடத் தொடர்பு கொண்டு பேசிவிட முடிவதில்லை? இந்த ஊழலையெல்லாம் யாரும் ஏன் கேள்வி கேட்பதில்லை?
டிஜிட்டல் தொழில்நுட்பம், இணைய வெளியீடு போன்ற புதிய முறைகள் சினிமாவுக்கு சுயாதீன முயற்சிகளுக்குச் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளதாகக் கருதுகிறீர்கள்?
டிஜிட்டல் வெளியீட்டு மேடை சுயாதீன சினிமாவுக்கான தளத்தை விசாலப்படுத்தியிருப்பது உண்மை. ஆனால் பாருங்கள்.
‘மாடத்தி'யை டிஜிட்டல் ஃபிளாட்ஃபார்மில் விற்க வேண்டுமென்றால் தணிக்கைச் சான்றிதழ் அவசியம். டிஜிட்டல் வெளியீட்டுக்கு நமது அரசு வைத்திருக்கும் புதிய வேட்டு. படைப்புச் சுதந்திரத்துக்குத் தொழில்நுட்பம் வழிவிட்டாலும் அரசாங்கம் மறித்துக் கொண்டு நிற்கிறது என்பதுதான் நிதர்சனம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago