நவரசக் கோமாளிகள்! - இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பேட்டி

By கா.இசக்கி முத்து

‘கோமாளி’ படத்தில் ஜெயம் ரவிக்கு நவரச வேடங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு வித்தியசமாக ஆலோசித்து முடிவு செய்திருக்கிறது. எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் ‘கோமாளி’ படம் குறித்து புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடம் பேசியதிலிருந்து...

‘கோமாளி’ படம் என்ன கதைக்களம்?

தற்போது மிகப் பெரிய அளவில் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. ஒருவரை மிக எளிதாகத் தொடர்புகொள்ள முடியும். அதேவேளையில் அதன் பின்விளைவுகளைப் பார்த்தோம் என்றால், பலரும் மொபைல் போனே கதி என்று இருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் நன்மை, தீமைகளை காமெடியாகச் சொல்லியிருக்கோம். படத்தை மெசேஜாகச் சொல்லாமல் செம ஜாலியாக எடுத்திருக்கிறோம்.

படத் தலைப்புக்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உள்ளதா?

‘கோமாளி’ படத்துக்கான காரணம் ஃபர்ஸ்ட் லுக்கிலேயே இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்காதவர்கள் டீஸரில் தெரிந்துகொள்ளலாம். ஏனென்றால், படத்தின் கதையே அதில்தான் அடங்கியிருக்கிறது.

படத்துக்குள் ஜெயம் ரவி எப்படி வந்தார்?

இக்கதையை முடித்தவுடன், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திடம் கதையைச் சொன்னேன். இதுக்கு ஜெயம் ரவி சரியாக இருப்பார் என்று சொன்னார்கள். எனக்கும் அவர்களது தேர்வு சரி எனப் பட்டது. ஜெயம் ரவியிடம் கதையைச் சொன்னவுடன் அவருக்கும் பிடித்துவிட்டது.

 ‘தனி ஒருவன்’,  ‘அடங்கமறு’ என்று வலுவான கதையிலேயே ஜெயம் ரவியைப் பார்த்தவர்கள், இப்படத்தில் ஜாலியானவராக காணலாம். ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ உணர்வில் படம் இருக்கும். இக்கதைக்காக உடல் எடையைக் கூட்டணும், குறைக்கணும் என நிறைய வேலைகளும் இருந்தன. அதை அவர் விரும்பி செய்திருக்கார்.

எந்த அளவுக்கு 9 கதாபாத்திரங்களுக்கு ரவி தயாரானார்?

இரண்டு பேர் பண்ண வேண்டிய கதை இது. ஜெயம் ரவியே இந்த ரோலையும் உடல் எடையைக் குறைத்துச் செய்கிறேன் என்றார். அதைக் கேட்டவுடன் எனக்கு இன்ப அதிர்ச்சி. ஏனென்றால் இப்படி யாராவது பண்ண மாட்டார்களா என்று காத்திருந்தேன். 2 மாதங்களில் 15 கிலோ எடை குறைத்தார்.

ஷூட்டிங்குக்கு முன் இன்னொரு 5 கிலோ குறைத்து முதல் கட்ட படப்பிடிப்பிலேயே 20 கிலோ எடையைக் குறைத்தார். எந்தவொரு காட்சியையுமே தனக்காக மாற்ற வேண்டும் என்றெல்லாம் சொல்லவே இல்லை. என்னை முழுமையாக நம்பினார். முதல் படமே ஜெயம் ரவியோடு அமைந்ததால், அதை அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன்.

படத்தில் எதற்காக 9 கெட்டப்?

அதைப் படம் பார்க்கும்போது தெரிஞ்சுக்குங்க. நிறைய காலங்களை மையப்படுத்தி இப்படம் நகரும். அதற்காக நிறைய கெட்டப் தேவைப் பட்டது. ஒரே ஷாட்டில் 2 ஜெயம் ரவி, 3 ஜெயம் ரவி எல்லாம் வருவார்கள். கதையே சுவாரசியமாக இருக்கும்.

படத்துக்காக சென்னை வெள்ளத்தை செட் போட்டு பிரம்மாண்டமாக அமைக்கிறீர்களாமே..?

உண்மைதான். கதையோட்டமாக சென்னை வெள்ளம் ஒரு முக்கியமான காட்சியாக வருகிறது. அதை அப்படியே கொண்டு வர வேண்டும் என்பதற்காகப் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது.

யாரெல்லாம் நடிக்கிறார்கள்?

முதன்முறையாக ஜெயம் ரவியுடன் கைகோத்துள்ளார் காஜல் அகர்வால். காஜல் அகர்வாலுக்கு இணையாக சம்யுக்தா ஹெக்டே ஒரு முக்கியமான கதாபாத்திரம் பண்ணியிருக்கார்.   யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஆர்.ஜே. ஆனந்தி படத்தில் அறிமுகமாகிறார். யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார்,  பொன்னம்பலம் என நிறைய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

முதல் படமே பெரிய கதையாக இயக்குவது சவாலாகத் தெரியவில்லையா?

வழக்கமான கதையை எடுப்பதே இப்போது சவால். ரசிகர்கள் ரொம்பவே தெளிவாக இருக்கிறார்கள். முதல் படத்தைச் சிறப்பாகக் கொடுக்க வேண்டும் என விரும்பினேன்.  ஈஸியான கதையை முதல் படமாக இயக்கியிருந்தால் அதுதான் சவால். அது ஓடாமல்கூடப் போகலாம். ஆனால், ‘கோமாளி’யைக் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அந்தமாதிரி புது கதை இது.

உதவி இயக்குநராகப் பணிபுரியாமல் படம் இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?

கல்லூரி நாட்களிலிருந்தே குறும்படங்கள் எடுத்திருக்கிறேன்.  ‘மூவி பஃப்’ சார்பில் ‘ஃபர்ஸட் க்ளாப்’ என்று ஒரு போட்டி நடந்தது. அதில் கடந்த ஆண்டின் டைட்டில் வின்னர் நான்தான். டெல்லி கணேஷ் நடித்து மிகவும் பிரபலமான ‘அப்பா லேக்’ குறும்படத்தை இயக்கியதும் நான்தான்.

அதன் மூலமே தயாரிப்பாளர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்படித்தான் திரையுலகிலும் நுழைந்தேன். நிறைய விளம்பரப் படங்கள் எடுத்திருக்கேன். இந்த அனுபவங்களை வைத்துதான் படம் இயக்கியிருக்கேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்