மற்றும் இவர்: உருவம் கொடுத்த இருவர்!

By டி. கார்த்திக்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ‘கில்லி’ படத்தில் நாயகனோடு கபடி விளையாடும் நடிகர்களில் ஒருவராக அறிமுகமானவர் முருகதாஸ். இன்றோ ‘ஆடுகளம்’ முருகதாஸ் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.

அந்த அளவுக்குத் திரை நடிப்பில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட சிறந்த கலைஞர். நாடக மேடையிலிருந்து திரைக்குள் நுழைந்த யதார்த்த நடிப்புக்குச் சொந்தக்காரர்.

புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம்தான் முருகதாஸின் சொந்த ஊர். இவருடைய தாத்தா ஒரு தெருக்கூத்துக் கலைஞர். அப்பா விபத்தில் கையை இழந்தவர். பெரிய வசதிகள் எதுவும் இல்லாத சாதாரணக் குடும்பம். நாடகங்களில் நடித்தால் காசு கிடைக்கும் என்பதற்காகச் சிறு வயதிலேயே ‘ஆழி’ என்ற குழந்தைகள் நாடகக் குழுவில் சேர்ந்துவிட்டார்.

பின்னர் நடிப்பை இன்னும் நன்றாகக் கற்றுக்கொள்ள விரும்பி, சென்னை வந்து 2003-ல் ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறையில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து நாடகங்களில் நடித்துவந்த முருகதாஸுக்கு, அவரே எதிர்பார்க்காத சினிமா வாய்ப்பு தேடிவந்தது.

“சென்னை காந்தி மண்டபத்துல இருக்குற பூங்காவுல ‘படுகளம்’ங்கிற பேர்ல ஒரு நாடகத்தை முத்துசாமி ஐயா போட்டாரு. அங்கே நிறையப் பார்வையாளர்கள் வந்திருந்தாங்க. இயக்குநர் தரணியும் அப்போ வந்திருந்தார். அவரோட கண்ணில் நான் பட்டேன். என்னோட நடிப்பைப் பார்த்துட்டு அவருதான் ‘கில்லி’ படத்தில் ஆதிவாசிங்கிற கதாபாத்திரத்தைக் கொடுத்தாரு.

அதன்பிறகுதான் ‘புதுப்பேட்டை’, ‘வெண்ணிலா கபடிக்குழு’ன்னு நல்ல படங்கள்ல நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன” எனத் தனது திரைப் பயணத்தின் தொடக்கத்தை ஒரு கதைசொல்லியைப்போல இயல்பாகச் சொல்கிறார் முருகதாஸ்.

2004-ம் ஆண்டுக்குப் பிறகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்த முருகதாஸுக்கு 2011-ல் வெளியான ‘மெளனகுரு’ ஒரு திறமையான நடிகர் என்ற அடையாளத்தைக் கொடுத்தது. “எனக்கு அந்தப் படத்துல வாய்ப்புக் கொடுத்ததற்காக இயக்குநர் சாந்தகுமாருக்குக் காலம் பூராவும் நன்றி சொல்வேன்.” என்று முருகதாஸ் நெகிழும்போதே, அந்தப் படத்தின் மூலம் அவருக்குக் கிடைத்த வீச்சை அறிய முடிகிறது.

சினிமாவில் முகம் தெரிந்த நடிகராக ஆனபிறகு இயக்குநர் வெற்றிமாறனிடம் வாய்ப்புக் கேட்டு மனம் தளராமல் அவருடைய அலுவலகத்தையே சுற்றிச்சுற்றி வந்திருக்கிறார். தொடர்ச்சியாக அவர் எடுத்த முயற்சிக்குப் பலன் கிடைத்தது. Aadukalam-Murugadossjpgright

‘ஆடுகளம்’ படத்தில் நடிக்க முருகதாஸுக்கு வாய்ப்பு கொடுத்தார் வெற்றிமாறன். ‘மெளனகுரு’ படத்துக்குப் பிறகு ‘ஆடுகளம்’ படம் முருகதாஸுக்குப் புகழ் வெளிச்சத்தைக் கொண்டுவந்து சேர்த்தது. அப்போது முதல் முருகதாஸின் பெயருக்கு முன்னால் ‘ஆடுகளம்’ ஒட்டிக்கொண்டது.

நாடகத்துக்கு மிகை நடிப்பு தேவைப்படும், திரைக்கோ அது அவசியமற்றது. அங்கிருந்து வந்து திரைக்கு ஏற்ப எப்படி உங்களை தகவமைத்துக் கொண்டீர்கள் என்றால் “உண்மைதான். நாடகத்தில் எல்லாவற்றையும் பெரிதாகச் செய்யணும். அதற்காக நிறைய மெனக்கெடணும். ஆனா, சினிமால எல்லாவற்றையும் சின்ன சின்னதாகத்தான் நடிக்க வேண்டியிருக்கும். தொடக்கத்தில் எனக்குக் கொஞ்சம் கஷ்டம் இருந்துச்சு. இயக்குநர் வெற்றிமாறன்தான் யதார்த்த  நடிப்பை கற்றுக்கொடுத்தார்.

கொஞ்சம் மிகையா தெரிஞ்சாகூட, ‘ஓவர் ஆக்டிங்’ கொடுக்காத என்று சொல்லிவிடுவார். கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டு நடிக்கக் தொடங்கின பிறகுதான் என்னிடமிருந்த நாடக்கத்தன்மை குறைந்தது. நடிப்பில் களிமண்ணாக இருந்த என்னைப் பிசைந்து உருவம் கொடுத்தது சாந்தகுமாரும் வெற்றிமாறனும்தான்” என்று தன்னடக்கத்துடன் பேசும் முருகதாஸ், வெற்றிமாறனின் ‘விசாரணை’ படத்தில் காவல் நிலையத்தில் அடிவாங்கும் விசாரணைக் கைதியாக கலங்கடித்தார்.

‘தகராறு’, ‘தடையறத் தாக்க’, ‘குட்டிப்புலி’ என ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் முருகதாஸ், கடைசியாக பளிச்சென்று தன் நடிப்பின் முகம் காட்டிய படம் ‘96’. “தொடர்ந்து வெற்றிப் படங்களில் எனக்கு வாய்ப்பு கிடைச்சதுக்குக் கலைத் தாய்க்குத்தான் நன்றி சொல்லணும்” என்று உருகும் முருகதாஸ், தற்போது நகைச்சுவை, குணச்சித்திரம் என இரட்டைச் சவாரி செய்துவருகிறார். “நான் ஒரு நடிகன். களிமண்ணு போலத்தான் நானும்.

அதுல இயக்குநருக்கு என்ன பொம்மை தேவையோ அதைப் பிடிச்சு வைக்குறாங்க” என்றவர், தற்போது, ஹென்றி இயக்கிவரும் ‘ராஜா மகள்’ என்ற படத்தில் 8 வயது குழந்தைக்கு அப்பாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருவதையும் அந்தப் படத்துக்காகக் காத்திருப்பதையும் பகிர்ந்துகொண்டார் முருகதாஸ்.

இலக்கு?

சீசனில் வருகிற பறவைபோல அல்லாமல் காலம்பூராவும் நினைவில் நிற்கும்படி நடிக்க வேண்டும்.

நடிப்பில் புதுசு?

‘கன்னிமாடம்’ என்ற படத்தில் முழுநீள காமெடி ரோல்.

எதிர்பாராத வாய்ப்பு?

‘விசாரணை’, ‘மெளனகுரு’ படங்களைப் பார்த்துவிட்டு மலையாளப் படத்தில் நடிக்க அழைத்தது.

நடிக்க விரும்பும் கதாபாத்திரம்?

காமெடி ரோலில் நிறைய நடிக்க ஆசை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்