உன்னைவிட மாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பேதானே
பெண்ணை லேசாய் எண்ணிக்கொண்டு
பேதை என்று இகழ்ந்திடாது
அன்புசெய்தால் அமுதம் அவளே
வம்பு செய்தால் விஷமும் அவளே!
படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
ஒருநாள் பானுமதியிடம் கேட்டேன். ‘பேசும்போது அடிக்கடி பிராப்தம், விதி என்றெல்லாம் சொல்கிறீர்கள். உங்களுக்குக் கைரேகை, ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?” பதிலேதும் சொல்லாமல் என்னை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கிருந்த பீரோவைத் திறந்து “பாருங்கள்” என்றார்.
அந்த பீரோ முழுவதும் அவர் சேகரித்து வைத்திருந்த ஜோதிடம் தொடர்பான கிரந்தங்கள், புத்தகங்கள்! கைரேகை ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட நூல்களையும் காண்பித்தார். பழஞ்சுவடிகள் சிலவும் அங்கே இருந்தன.
“ஜாதகம்கறது ஏதோ பொய் புனைசுருட்டு கிடையாது. அது கணிதம். சின்ன வயசிலிருந்தே எனக்கு இதிலெல்லாம் ஈடுபாடு உண்டு. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வீட்டிலிருக்கும் நாடி கிரந்தங்களில் மூழ்கிவிடுவேன்” என்றவர், அதை முறைப்படி கற்றுக்கொண்டதையும் தெரிவித்தார். “சிவலிங்க வீரேசலிங்கம் என்று ஒரு சித்தர புருஷர் இருந்தார். அவரிடம்தான் கைரேகை, ஜோதிடக் கலையைக் கற்றுக்கொண்டேன்.
எம்.ஜி.ஆரின் கைரேகையைப் பார்த்து அந்தக் காலத்திலேயே அவருக்கு ஆரூடம் சொல்லி இருக்கிறேன் தெரியுமோ?” என்றவரைப் பார்த்து ஆச்சரியம் விலகமால் ‘அப்படியா?’ என்றேன். “ஆமாம் சார்.. அப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல படங்களில் நடித்துப் பிரபலமாகி இருந்தேன். ‘மலைக்கள்ளன்’ படப்பிடிப்பில் ‘புதுமுகம்’ என்று சொல்லி எனக்கு எம்.ஜி.ராமச்சந்திரனை அறிமுகப்படுத்திவைத்தார்கள்.
கையை காட்டிய எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் முகத்தில் ஒரு காந்தசக்தி இருந்ததைக் கவனித்தேன். நடை உடை பாவனைகளில் ஒரு பெரும்போக்கும் நாகரிகமும் தெரிந்தது. மரியாதையாக என்னை ‘அம்மா’ என்றுதான் கூப்பிடுவார். பானுமதி என்று சொல்லவே மாட்டார். ஸ்டுடியோவில் பணியாற்றும் லைட் பாயைக்கூட ‘சாப்பிட்டாச்சா?’ என்று கேட்டுவிட்டுத்தான் சாப்பிட உட்காருவார்.
சினிமாவில் மட்டுமல்ல; நிஜவாழ்க்கையிலும் அவர் ஒரு ஏழைப்பங்காளர்தான். ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளையின்போது கிரீடத்துடன் மன்னர்வேடம் அணிந்து அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரையே கவனித்தபடி இருந்தேன். நிச்சயமாக இவர் போன ஜென்மத்தில் ஏதோ ஒரு தேசத்தின் மன்னராகவோ இளவரசராகவோதான் இருந்திருக்க வேண்டும் என்று என் மனசுக்குப் பட்டது. அப்படி ஒரு கம்பீரம். அது நடிப்பால் வருவதல்ல.
நானே எம்.ஜி.ஆர் அருகில் சென்று ‘மிஸ்டர் ராமச்சந்திரன் உங்கள் கையைக் காட்டுங்கள். எனக்குக் கொஞ்சம் கைரேகை ஜோதிடம் தெரியும் என்றேன். அவர் கூச்சத்துடன் ‘வேண்டாம் அம்மா எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது’ என்றார். சுற்றி இருந்தவர்கள் வற்புறுத்தலால் கையைக் காண்பித்தார். பார்த்த உடனே சொல்லிவிட்டேன். “மிஸ்டர் ராமச்சந்திரன் நீங்கள் பிற்காலத்தில் பேரும் புகழும் பெறப் போகிறீர்கள்! இந்த உலகமே கொண்டாடும் உன்னத ஸ்தானத்தை அடைவீர்கள்! ஆனால் சினிமாவால் அல்ல” என்று நான் கூறியதும் எல்லோரும் கை தட்டினார்கள்.
அவர் கைகூப்பி வணங்கி ‘நன்றி அம்மா’ என்றார் புன்னகையுடன். பின்னர் அந்தச் சம்பவத்தை மறந்துவிட்டேன். பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர். என்ற மந்திரச் சொல்லுக்குக் கட்டுண்டு தமிழக மக்கள் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியபோது கலைத் துறையினர் சார்பாக சென்னையில் பிரம்மாண்டமான பாராட்டுக் கூட்டம் நடந்தது. நான் மேடைக்குக் கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்தேன்.
உரையாற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அங்கிருந்து என்னைப் பார்த்துவிட்டு ‘இந்த நிலைக்கு நான் வருவேன் என்று நானே எதிர்பார்க்காத காலத்தில் அன்றே என் கைரேகையைப் பார்த்து பானுமதி அம்மையார் கணித்துச் சொன்னார். அவரது ஆரூடம் பலித்துவிட்டது’ என்றார். அரங்கத்தில் கை தட்டல் அடங்க வெகுநேரமாயிற்று” என்றவர் என்னைக் கூர்ந்து பார்த்து, “உங்கள் ஜாதகத்தை நாளைக்குக் கொண்டுவாருங்கள் பார்க்கலாம்” என்றார் பானுமதி.
எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அடுத்தமுறை சென்றபோது, என் ஜாதகம் எழுதிய பழைய செல்லரித்த நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்தேன். புரட்டிப் பார்த்துவிட்டு “சரிதான்..! நான் நினைச்சபடிதான் இருக்கு” என்றார்.
நான் சற்று ஆவல் அதிகமாகி ‘என்னம்மா சொல்றீங்க’ என்றேன். “களத்திரபாவம் சரியில்லை” என்றவர் தொடர்ந்தார்.
“மனைவியால் பெரிய சந்தோஷம் கிடைக்காது. சஞ்சலம்தான்” என்றவரைப் பார்த்து ‘உண்மைதான்’ என்று சொன்னேன்.
பானுமதி, “உங்க மேல உங்க மனைவிக்கு ரொம்ப ஆசை உண்டு. ஆனால் காரணமில்லாமல் ஒரு ஊடல் இருந்துகிட்டே இருக்கும்.” என்றார். அட! ‘இன்னிக்குக் காலையில் கூட ஊடல்தான் அம்மா’ என்றேன். “நான் கொடுக்கிற செக் உங்க ஊடலைச் சரிபண்ணிடும்னு நினைக்கிறேன்” என்று ஏதோ ஞானதிருஷ்டியால் பார்த்த மாதிரிப் பேசிய பானுமதியை வியப்போடு ஏறிட்டுப் பார்த்தேன். “அது அப்படித்தான் சார்.
பெண்கள் பெரும்பாலும் லெளகீகமாகத்தான் இருப்பார்கள். அப்படி இருப்பதுதான் நல்லதும்கூட. லோகம் இயங்குறதுக்கு இந்த லெளகீகம் தேவை. அதனால்தான் மூன்று பிடிகளுக்கு மேல் குசேலன் கொடுத்த அவலைச் சாப்பிட வேண்டாம்னு துவாரகை கிருஷ்ணனின் கையைப் பிடித்துக் கொண்டாள் அவள் மனைவி” என்றவர் அன்று பேட்டி முடிந்து கிளம்பும்போது மறக்காமல் எனக்குக் காசோலை கொண்டுவந்துகொடுத்தார்.
கைரேகை பார்ப்பதைக் கைவிட்டார்
அடுத்த சந்திப்பிலும் ஜோதிடம், கைரேகை பற்றிக் கொஞ்சம் பேச்சு தொடர்ந்தது. “கைரேகை பார்ப்பதையே கைவிடும்படியான சம்பவம் ஒன்று என் வாழ்க்கையில் நடந்தது” என்று தொடங்கினார் பானுமதி. “எங்கள் படக்குழுவின் புகைப்படப் பிரிவில் ராஜூ என்ற இளைஞன் இருந்தான். நானும் குருஜியும் (அந்த சித்த புருஷர்) படப்பிடிப்பு இடைவேளையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ராஜூ வந்தான். அவரை வணங்கிவிட்டு, தன் கையை நீட்டி ‘சுவாமி என் கைரேகையைப் பார்க்கணும்’ என்று பவ்யமாகக் கேட்டுக் கொண்டான். குருஜி சிரித்துக்கொண்டே ‘நீ பாரேன்’ என்று என்னிடம் தள்ளிவிட்டார்.
ராஜூவின் கைரேகையைப் பார்த்தேன். திரும்பத் திரும்பப் பார்த்தேன். எனக்குள் கலவரம் மூண்டது. ‘எப்படி இருக்கு?’ என்று கேட்டார் குருஜி. நீங்களே பாருங்கள் என்று நான் கூறியதும் குருஜி முகத்தில் சிந்தனைக்கோடுகள். ‘நீ நினைத்தது சரிதான். நான் கிளம்புகிறேன்’ என்று சொல்லிவிட்டு குருஜி போய்விட்டார். ராஜூவைப் பார்த்து, உன் வயது என்ன என்றேன். ‘இருபத்தாறு’ என்றான். கடவுளே இந்த வயதுக்கு மேல் அவன் வாழ்க்கை தொடர முடியாதே... என் மனதை அவனது ஆயுள் ரேகை பிசைந்தது. அவனிடம் பேச்சை மாற்றிப் பார்த்தேன். ஆனால், அவன் குறியாக இருந்தான். அவனிடம் உடம்புக்கு ஏதாவது? என்று நான் இழுப்பதற்குள் ‘நான் நல்லாத்தான் இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
இது நடந்து கொஞ்ச காலம் கழிந்தது. என் கணவர் என்னிடம் ‘அவனைக் கைரேகை பார்த்துப் பயமுறுத்திவிட்டீர்களாமே? ஆள் ஜோரா இருக்கான்!’ என்று கிண்டல் செய்தார். சில மாதங்கள் சென்றன. படப்பிடிப்பில் அவசர அவசரமாக என்னை நோக்கி வந்த புரடெக்ஷன் பாய் ஒருவர், ‘அம்மா நம்ம ராஜூ செத்துப்போய்விட்டான். சைனஸுக்காக ஆப்ரேஷன் செய்திருக்கான். அதில் என்னமோ சிக்கல். ரெண்டே நாள்தான் ஆஸ்பத்திரியில் இருந்தான். இன்று காலையில் போய்விட்டான்” என்றார்.
கண்முன்னால் துருதுருவென ஓடிக்கொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு ஏற்பட்ட திடீர் நிலையைக் கேட்டு துக்கம் தொண்டையை அடைத்தது. கண்கள் கலங்கிச் சடாரென்று துளிகள் வெளியே தெறித்தன. அந்தத் துளிகளில் துக்கத்துடன் எனது குற்ற உணர்ச்சியும் கலந்திருந்தது. எதிர் காலத்துக்குள் என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்ப்பதைப் போல முட்டாள்தனம் என்ன இருக்க முடியும் என்று தோன்றிவிட்டது.
அதற்குப் பிறகு கைரேகை பார்ப்பதையே விட்டுவிட்டேன்” பானுமதி பேசுவதை நிறுத்திவிட்டுப் பெருமூச்செறிந்தார். அவரது கண்கள் இப்போது கலங்கியிருந்தன. ஜன்னலுக்கு வெளியே ஒருபெரிய மாமரத்தின் கிளையிலிருந்து எதிர்காலம் பற்றிய கவலையே இல்லாமல் அக்காக் குருவி ஒன்று கத்தியது.
(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago