அஞ்சலி: சென்னை தினத்தின் பிரம்மா!

By செய்திப்பிரிவு

சென்னையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் யாருக்கும் இரண்டு புத்தகங்கள் போதும். சென்னையின் சரித்திரத்தை, பாமர வாசகர்களும் ரசிக்கும் வகையில், கதை கூறுவதுபோல, வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்கள் வழியே எளிய முறையில் கொண்டு சேர்த்த புத்தகங்கள் அவை. அவற்றை எழுதிய பெருமகன் சு.முத்தையா.

அந்த இரு புத்தகங்களில் முதலில் வெளியான ‘மெட்ராஸ் டிஸ்கவர்டு’ பல பதிப்புகளைக் கண்டது. அதையே பிற்காலத்தில் விரிவுபடுத்தி ‘மெட்ராஸ் ரீடிஸ்கவர்டு’ என்ற நூலை எழுதினார். இவ்விரு பொக்கிஷங்களுக்கும் அப்பால், பல தளங்களில் இயங்கி சென்னையின் சரித்திரத்தைத் தலைமுறைகளுக்கு மீட்டுத் தந்ததில் முத்தையாவின் பங்களிப்பு, ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு வகையில் சேர்வது.

சு.முத்தையா (S.Muthiah) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் பிறந்தவர். இவருடைய தந்தை, இலங்கையின் கொழும்புவில் பங்குச்சந்தை முகவராக இருந்ததால், அங்கே வளர்ந்து பள்ளிக் கல்வியைக் கற்றார். பின்னர் அமெரிக்கா சென்று உயர்கல்வியை முடித்து கொழும்புவுக்கே திரும்பினார்.

இலங்கையின் ‘தி டைமஸ் ஆப் சிலோன்’ நாளிதழில் பத்திரிகையாளராக 18 ஆண்டுகள் பணிபுரிந்தார். படிப்படியாக உயர்ந்து, ஆசிரியருக்கு அடுத்தநிலை பொறுப்புக்கு வந்தார். ஆனால், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஆகும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. ஏனென்றால், அவர் இலங்கையின் குடிமகன் அல்ல.

வழிகாட்டிகள் வழியே வரலாறு

பின்னர் இந்தியா திரும்பி, சென்னையில் குடியேறினார். தனியார் நிறுவனமான டி.டி.கேவில் பணியில் சேர்ந்து ‘சுற்றுலா வழிகாட்டி’ப் புத்தகங்கள் எழுதும் பணியைச் செய்யத் தொடங்கினார். அங்கேதான் அவருக்கும் சென்னையின் சரித்திரத்துக்கும் இடையிலான காதல் மலர்ந்தது. முத்தையாவுக்கு முன், சென்னையைப் பற்றிய வரலாற்று கட்டுரைகளை எழுதியவர் பத்திரிகையாளர் என்.எஸ்.ராமசாமி.

இவருடன் இணைந்து சென்னையின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக இருந்த ‘பாரி அண்ட் கோ’வின் வரலாற்றை எழுதினார். துரதிர்ஷ்டவசமாக என்.எஸ்.ராமசாமி மறைந்தபோது. சிறிய அளவில் அவர் தொடங்கிய பணியை முத்தையா தொடர்ந்தார்.

முத்தையாவின் தன்னடக்கத்துக்குப் பெரிய உதாரணம், அவர் தன்னை என்றுமே சரித்திர ஆய்வாளர் என்றோ வரலாற்றாசிரியர் என்றோ கூறிக்கொண்டதில்லை. ‘நான் கதை சொல்பவன்’ என்றே தன்னை வருணித்துக்கொள்வார்.

நம் நகரைக் குறித்து நாமே குறை கூறுவதும் பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி என மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டுக் குறைத்துப்பேசுவதும் பலருக்கு வாடிக்கையாக இருந்தது. இந்தப் பழக்கத்தை மாற்றி, சென்னை நகரின் மீது சென்னைவாசிகளுக்கு ஒரு பற்றுதலையும் பெருமையையும் உருவாக்குவதற்காக இவர் தன் வாழ்க்கையை சென்னையின் வரலாற்று ஆய்வுக்கு அர்ப்பணித்தார்.

சென்னை தினம்

சென்னையில் உள்ள, மிகப் பழமையான கட்டிடங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் தீவிர முயற்சி எடுத்துக்கொண்டவர். கடற்கரைசாலையில் உள்ள, காவல்துறைத் தலைவர் அலுவலகக் கட்டிடம், ராணிமேரி கல்லூரிக் கட்டிடம், சென்னைப் பல்கலைக்கழக செனட் கட்டிடம் ஆகியவற்றைக் காப்பாற்றியதில் பெரும்பங்கு இவரைச் சேரும். ஆங்கிலேயர்களுக்கு புனித ஜார்ஜ் கோட்டையின் நிலத்தைத் தாரை வார்த்துக் கொடுத்த நாளை ‘மெட்ராஸ் டே’ என்று பெயரிட்டுச் சிறிய அளவில் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் கொண்டாடினார்.

ராஜாஜி ஹாலில் அரை நாள் கொண்டாட்டமாக அவர் தொடங்கிவைத்த ‘சென்னை தினம்’ அவர் மறையும்பொழுது, நகரின் நூற்றுக்கணக்கான இடங்களில் ஒரு மாத காலக் கொண்டாட்டமாக மாறியது அவர் கண்ட வெற்றி. ‘இப்பணிக்கு எந்த ஒரு அமைப்பும் தலைவனும் இருக்கக் கூடாது; நாம் எல்லோரும் ஆலோசகர்கள்தான்’ என்று ஒரு பெரும் ஆர்வலர் அணியைத் தன்னுடன் இணைத்துக்கொண்டார். அதில் என்னையும் சேர்த்தது அவர் எனக்கு அளித்த மிகப் பெரிய கௌரவம்.

ஒருமுறை ‘புனித ஜார்ஜ் கோட்டை உருவானதை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?’ என அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு முத்தையா “நாம் கொண்டாடுவது அந்த நாளை அல்ல; நம் நகரத்தை, அதன் வரலாற்றைக் கொண்டாடுகிறோம்.

ஆகவே, இந்த நாள் அல்லாமல் வேறு எந்த நாளைக் குறிப்பிட்டுக் கொடுத்தாலும் கொண்டாடுவோம். இதில் ‘நமது சென்னை’ என்ற கர்வம் வர வேண்டும். அது எந்த நாளாக இருந்தாலும் பரவாயில்லை” என்று அவர்களுக்குப் பதில் அளித்தார். சென்னையின் மீது அவர் கொண்ட அபரிமிதமான காதலுக்கு இது மற்றோர் உதாரணம்.

வணிக நிறுவனங்களின் வரலாறு

ஒரு நகரின் வளர்ச்சிக்கு அதன் வர்த்தகம் மிக முக்கியம். வர்த்தக நிறுவனங்களின் வரலாறு, அந்த நகரின் சமூக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருப்பது. ஆகவே, வர்த்தக நிறுவனங்களின் வரலாற்றை எழுதுவது அவசியம் என்பதை அவர்களுக்கு உணர்த்தி, முருகப்பா குழுமம், அசோக் லேலேண்ட் குழுமம் எனப் பல நிறுவனங்களின் வரலாற்றுப் புத்தகங்களை எழுதினார். அத்துடன் தமிழ்நாட்டின் வணிகப் பெரும்புள்ளிகளின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார். இவை அனைத்திலும் சென்னை நகரின் வரலாறே முன்னால் வந்து நிற்கும்.

இவை அனைத்துக்கும் மேலாக, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் காலப் பெட்டகமாக, வாரம்தோறும் வெளியாகும் அவரது கட்டுரைக்களைப் படிப்பதற்கென்றே ஒரு பெரும் வாசகர் கூட்டம் காத்துக்கொண்டிருக்கும். இவ்வாறு 973 கட்டுரைகளை அவர் எழுதிக் குவித்தார். ஒவ்வொரு கட்டுரையின் பின்னணியிலும் அவரது அயராத உழைப்பும் தேடலும் இருந்தன.

மாதம் ஒருமுறை வெளியாகிவந்த ‘வென் த போஸ்ட்மேன் நாக்ஸ்’ என்ற பத்தியில், வாசகர்கள் சென்னையைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு ஆராய்ந்து, தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பதில் அளிப்பார். தெரியாத விஷயங்களுக்கு வாசகர்களிடமே கேள்வியை எழுப்பி, அவர்களிடம் வரலாற்று ஆய்வுக்கான ஆர்வத்தைத் தூண்டிவிட்டார். என்றுமே வேறொருவரை போட்டியாகவோ பொறாமையாகவோ அவர் பார்த்ததில்லை. அவருடன் பணிபுரிந்த எங்கள் அனைவரையும் அவர், சக ஆய்வாளர்களாகத்தான் பார்த்தார். ஆனால், எங்கள் பார்வையில் அவர்தான் ஆசான்.

சென்னையும் திரைப்படமும்

சுமார் பத்தாண்டுகளுக்கு முன், சினிமா அஞ்சல் தலைகளை நான் சேகரித்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிந்துகொண்டு என்னை அழைத்தார். “சினிமாவுக்கும் சென்னை நகருக்குமான உறவையும் அதன் தொடர்ச்சியையும் நீ ஆய்வு செய்து பேச வேண்டும்” என்று கட்டளையிட்டார். அவர் அளித்த உத்வேகத்தில் ‘சென்னை த்ரு த சினி கேமரா’ என்ற தலைப்பில் எனது முதல் பேச்சு அமைந்தது.

அதில் 1939 முதல் 70-கள்வரை தமிழ் சினிமாவில் வந்த சென்னை மாநகரத்தின் காட்சிகளைத் தொகுத்து, காட்சிகள் இடம்பெற்ற திரைப்படம் பற்றியும் காட்சியில் இடம்பெற்ற இடங்களைப் பற்றியும் ஆய்வு செய்து வருணித்தேன். அன்று தொடங்கியது சென்னையுடன் தொடர்புடைய எனது சினிமா வரலாற்று ஆய்வுப் பணி.

பின்னர் ‘பேச்சு மட்டும் போதாது, நீ எழுதவும் வேண்டும்’ என்று என்னைத் தூண்டிவிட்டு, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர் குழுவிடம் என்னை அறிமுகமும்

செய்து வைத்தார். இன்னும் சொல்லப்போனால் ஒரு வாசகரின் கேள்விக்கு என்னிடம் பதில் கேட்டு, அதைப் பற்றி அவர் எழுதும்போது என்னை ‘பிலிம் ஹிஸ்டாரியன்’ என்று குறிப்பிட்டிருந்தார். தன்னை ‘ஹிஸ்டாரியன்’ என்று அழைக்க வேண்டாம் என்று கூறிய அவர், எவ்வளவு தாராளமாக அந்தப் பட்டத்தை மற்றவர்களுக்கு அளித்தார் என்பதில் ஆர்வம் கொண்டவர்களை மேலும் தூண்ட வேண்டும் என்ற அவரது வேட்கைக்கும் பரந்த மனதுக்கும் எடுத்துக்காட்டு.

என்னைப் போல வெவ்வேறு துறையில் அவர் கைதூக்கிவிட்ட பல ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். அவருடைய பணியைத் தொடர்வதே எங்களது கடமை என்பதை அவர் உணர்த்திச் சென்றுவிட்டார்.

சுமார் 8 ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஒருமுறையும் யாரிடமும் அதைப் பற்றிக் கவலைப்பட்டுப் பேசியதில்லை. சென்னையைப் பற்றிய ஒரு விழா என்றால் முதலில் போய் நிற்பவர் அவர். மனைவியை இழந்த பிறகு ஒரு மெல்லிய சோர்வு அவரிடம் தென்பட்டது, அவர் பக்கத்தில் இருந்த என் போன்றவர்களுக்கு மட்டுமே தெரியவந்தது.

தன் மறைவுக்குப் பின் சென்னை, மயிலாப்பூரில் உள்ள மயானத்தில்தான் தனக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று தன் மகள்களிடம் அவர் கூறியிருந்தார். சென்னையின் பழமை வாய்ந்த வரலாற்றைக் கூறிக்கொண்டிருக்கும் மயிலையில்தான் தனது இறுதிப்பயணம் தொடங்க வேண்டும் என்பதுதான் அன்னாரின் விருப்பமோ..? முத்தையா மறையவில்லை. அவரது புத்தகங்கள் மூலம் சென்னை மக்களின் முகங்களில் உருவாக்கிய பெருமிதம் கலந்த புன்னகை மூலம் தினந்தோறும் நம்முடன் இருக்கிறார்.

-மோகன் வி. ராமன் 

கட்டுரையாளர்,

நடிகர், திரைப்பட வரலாற்று ஆய்வாளர்

தொடர்புக்கு: mohanraman@gmail.com

தமிழில்: ஆர்.சி.ஜெயந்தன்அஞ்சலி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்