இசைஞானி இளையராஜா. இணையற்ற திரை இசை மேதைகளில் ஒருவர். திரைப்படங்களின் காட்சிகளின் வசனங்களைத் தன் பின்னணி இசை மூலம் பேச வைத்தவர். தென்கோடி கிராமத்தில் பிறந்து தேம்ஸ் நதி நகரை இந்தியா நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இவருக்கு உண்டு. தினமும் சரியாகக் காலை ஏழு மணிக்கெல்லாம் தன் ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்துவிடுகிறார். நாள் முழுதும் நடக்கும் இசைப் பணிகளுக்கிடையே யாரையும் சந்திப்பதில்லை. ‘தி ஹிந்து’ இதழுக்காக அவரைப் பிரசாத் ஸ்டுடியோவில் சந்தித்தோம். பிரகாஷ் ராஜின் ‘உன் சமையலறையில்’ படத்திற்கான பின்னணி இசையமைக்கும் பணிக்கு இடையில் பேசினார் இசை ஞானி.
உங்கள் பார்வையில் ஒரு பாடல் என்பது எப்படி இருக்க வேண்டும் நினைக்கிறீர்கள்?
பாடல் பாடலாக இருக்க வேண்டும். அது உள்ளத்தையும் உயிரையும் உருக்கிக் கேட்பவர்களை மேன்மையான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி நம் முன்னோர்கள் நிறைய பாடல்களைப் போட்டிருக்கிறார்கள். ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’, ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன்’, போன்ற பாடல்களை இனிமேல் யாராவது போட முடியுமா. அஜித், விஜய் இந்த மாதிரியான பாடல்களைப் பாடி நடித்தால் யாராவது பார்க்க முடியுமா. ஆனால் அப்படியான கதையைக் கொண்டு வருபவர்களுக்கு அந்த மாதிரியான பாடல்களைப் போட்டுத் தரலாம்.
கே. பாலசந்தர் ‘சிந்து பைரவி’ படத்திற்காக வந்திருந்தார். அப்போது கதையில் ஒரு சூழலைச் சொல்லி இந்த இடத்தில் சின்ன கீர்த்தனையோடு பாடல் துவங்க வேண்டும் என்றார். தெலுங்குக் கவிஞரை வைத்து எழுதிவிடலாம் என்று முடிவு செய்தோம். பிறகு நான் தற்செயலாகத் தியாகையர் கீர்த்தனை புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்த போது. நான் போட்டிருந்த டியூனுக்கும் அது துவங்கும் காலப் பிராமாணத்திற்கும் பொருத்தமாக ஒரு கீர்த்தனை இருந்தது. ‘மரி மரி நின்னே...’ என்ற கீர்த்தனைதான் அது. இப்படி நல்ல கதை அமைந்தால் நல்ல பாடலும் அமையும். இதில் பெரிய விஷயம் என்னவென்றால் நான் போட்ட டியூனுக்கு தியாகையர் எப்பவோ கீர்த்தனையை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். இதை எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன்.
திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களை மேடைக் கச்சேரிகளில் பாடும்போதும், வாசிக்கப்படும் போதும் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?
ஒரு பாடலுக்கான குறிப்புகளை எழுதுவதற்கு எனக்கு அரை மணிநேரம் போதும். இரண்டு மணிநேரத்தில் அதைப் பதிவு செய்துவிடுவேன். ஒரு பாடலுக்கு ஒரு நாளோ இரண்டு நாளோ ஆகலாம். ஆனால் அதை மறுபடியும் வாசிப்பதற்குப் பத்து நாட்களுக்கும் மேலாக ரிகர்சல் செய்ய வேண்டியிருக்கிறது. என்னுடைய நோட்ஸை வாசித்த அதே வாத்தியக் கலைஞர்களே மறுபடியும் அதேபோல் வாசிக்கச் சிரமப்படுகிறார்கள். ரிகர்சலின்போது அவர்கள், “சார் போகிற போக்கில் இப்படி ஒரு மியூசிக்கை எப்படிப் போட்டுட்டு போனீங்க. இது எங்கிருந்து உங்களுக்குள் இருந்து வந்தது?” என்று கேட்கும்போது எனக்கு எந்தப் பதிலும் சொல்லத் தோன்றாது.
ஒவ்வொரு மேடைக் கச்சேரிகளிலும் ரெக்கார்டிங்கில் ஒலித்த அதே இசையைக் கொடுக்க வேண்டும் என்பதில் மட்டும் நான் உறுதியாக இருப்பேன், அதில் சின்னத் தவறு வந்தாலும் அந்த இடத்திலிருந்து மறுபடியும் வாசிக்க வைப்பேன். சரியாக வரும் வரைக்கும் விட மாட்டேன். இந்த மாதிரி நேரங்களில் ரசிகர்களுக்கு ரெக்கார்டிங்கை நேரில் பார்த்த உணர்வு ஏற்படும். அது அவர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும்.
பாடல் கம்போஸிங்கில் இயக்குனர்களோடு உட்காரும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
நிறைய சொல்லலாம். ஒரு இயக்குனர் என் முன்னால் வந்து அமர்ந்து கதையைச் சொன்னவுடன் நான் சில டியூன்களை போடுவேன். “இந்த டியூன் வேற மாதிரி இருக்கு வேறு ஒரு டியூன் போட முடியுமா” என்று கேட்பார். அவர் திருப்திக்காக நானும் வேறு ஒரு டியூனை போட்டுத் தருவேன். அதே சமயம் அவர் வேண்டாம் என்று சொன்ன டியூனை வேறு படத்திற்குப் பயன்படுத்தி, அந்தப் பாட்டு ஹிட்டாகிவிடும். அதைக் கேட்டுவிட்டு இயக்குநர், “இந்த மாதிரியான டியூன்களை எங்களுக்குத் தந்திருக்கலாமே” என்று பரவசப்படுவார். “நீ வேண்டாம்னு சொன்ன டியூன்தான் இது” என்பேன். பாரதிராஜாதான் இப்படி நிறைய முறை கேட்டிருக்கிறார்.
இதேபோல அவதாரம் படத்திற்காக நான் போட்ட ஒரு டியூன் நாசருக்கு பிடிக்கவில்லை. ஆனால் என்னிடம் சொல்லத் தயக்கம். நான் அதைத் தெரிந்துகொண்டேன். “போய்ட்டு சாயங்காலம் வாங்க.” என்று அனுப்பி வைத்தேன். மாலையில் முழு ஆர்க்கெஸ்ட்ரேஷனுடன் வாசித்துக் காட்டினேன். அழுதேவிட்டார் நாசர்.
ஆயிரம் படங்களைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறீர்கள் அது பற்றி?
இதையெல்லாம் நான் சாதனையாகவே நினைக்க வில்லை. ஏதோ வாழ்க்கையை ஒட்டி வந்திருப்பதாகவே நினைக்கிறேன். காரணம் நான் செய்கிற வேலையில் இருக்கும் தவறு எனக்குத் தெரியும். அதனால் நான் அமைதியாக இருந்துவிடுகிறேன். நீங்கள் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கும் பாடல்களில்கூட அந்தத் தவறு இருக்கிறது. இது எனக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். சரிகமபதநி என்கிற ஏழு ஸ்வரங்களைத்தான் நான் திரும்பத் திரும்பப் போட்டுக்கொண்டிருக்கிறேன். என்னால் புதிதாக ஒரு ஷட்ஜமத்தை உருவாக்க முடியுமா? ஏற்கனவே இருந்தவற்றிலிருந்துதான் பாடல்களை அமைக்கிறேன். இதில் என்ன சாதனை இருக்கிறது.
இந்தக் கின்னஸ் ரெக்கார்ட், உலக ரெக்கார்ட் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது. இதையெல்லாம் மிஞ்சிய சாதனைகள் பதிவு செய்யப்படாமலே இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை சாதனை என்பது இசையில் நான் அதைச் செய்திருக்கிறேன் இதைச் செய்திருக்கிறேன் அவார்டு வாங்கியிருக்கிறேன் என்பதல்ல. இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆன்மிகத்தில் உட்காருவதே பெரிய சாதனையாக நினைக்கிறேன்.
சமீபத்தில் நீங்கள் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி நடந்தது. புகைப்படம் எடுக்கும் ஆர்வம் எப்போதிருந்த வந்தது?
சிறு வயதில் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் இருந்தது. படம் வரைவதில் எனக்கும் பாரதிராஜாவிற்கும் போட்டியே நடக்கும். அந்த ஆர்வம்தான் பின்னால் புகைப்படம் எடுப்பதாக மாறிப்போனது. 78-லிருந்து நான் எடுத்த புகைப்படங்களைப் புகைப்படக் கலைஞர் நண்பர் கார்த்தி பாதுகாத்து வைத்திருக்கிறார். இப்போது கண்காட்சியாக வைத்திருப்பது சிறு பகுதிதான்.
திடீரென்று ரசிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறீர்களே இதன் நோக்கம்..?
இண்டர்நெட், ஃபேஸ்புக், டுவிட்டர் கலாச்சாரம் வளர்ந்த பிறகு ரசிகர்கள் என் பெயரில் ரசிகர் மன்றங்களைத் தாங்களாகவே ஒரு பெயரில் துவங்க ஆரம்பித்துவிட்டனர். இப்படி நிறைய குழுக்கள் வந்துவிட்டன. அவர்களை எல்லாம் முறைப்படி ஒருங்கிணைக்கலாம் என்று நண்பர்கள் வற்புறுத்திச் சம்மதிக்க வைத்தனர். இதன் மூலம் மேலும் மன்றங்கள் வருவதைத் தடுக்க முடியும்.
ஒரு பாடல் பிடித்துப் போய் அந்த இன்ஸ்பிரேஷன்ல எதாவது பாடலை உருவாக்கி இருக்கிறீர்களா?
இன்ஸ்பிரேஷன் என்பது வேறு. இமிடேஷன் என்பது வேறு. உதாரணமாக எனக்குச் சின்ன வயதில் எம்.எஸ்.வி. அண்ணாவோட ‘வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே..’ என்ற பாடல் ரொம்பவும் பிடிக்கும். இந்த விஷயத்தை எம்.எஸ்.வி. அண்ணனிடம் சொன்னபோது ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தில் நானும் அவரும் சேர்ந்து இசையமைத்தபோது அவர், அப்படிப் போட்ட பாடல்தான் ‘வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..’ என்ற பாடல். இது சந்தம் உட்பட எல்லாமே அந்தப் பாட்டின் மீட்டரிலே இருந்தது. அதனால் இது இமிட்டேஷன்தானே தவிர இன்ஸ்பிரேஷன் கிடையாது. ஆனால் எனக்காகக் காத்திரு படத்தில் ‘ஓ..நெஞ்சமே இது உன் ராகமே..’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள் அந்தப் பாட்டுதான் எம்.எஸ்.வி. அண்ணாவோட இன்ஸ்பிரேஸனில நான் போட்டது.
இலக்கியவாதிகளில் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் யார்?
ஜெயகாந்தன் அவர்களை நான் ஆதர்சமாக நினைக்கிறேன். எப்போதாவது அவரைச் சந்தித்துப் பேசுவதுண்டு. அவருடைய வாழ்க்கையைப் பதிவு செய்வதற்காக ஒரு ஆவணப் படம்கூட எடுத்திருக்கிறேன். இதில் எந்த வித வணிக நோக்கமும் கிடையாது. இதேபோல் நாஞ்சில் நாடன், சிற்பி பாலசுப்ரமணியம், தெ. ஞானசுந்தரம், பெரும்புலவர் நமச்சிவாயம், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரும் அவ்வப்போது என்னைச் சந்தித்து உரையாடுவது வழக்கம். இதில் நாஞ்சில் நாடனையும் எஸ். ராமகிருஷ்ணனையும் தம்பி சுகா இயக்கிய படித்துறை படத்தில் பாடலும் எழுத வைத்திருக்கிறேன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago