சம்மதமா? நான் உங்கள்
கூடவர சம்மதமா?
சரிசமமாக நிழல்போல - நான்
உங்கள் கூடவர சம்மதமா?
படம்: நாடோடி மன்னன்
பானுமதி சொன்ன கொய்யாப் பழக் கதை சுவையாக இருந்தாலும் அவர் சாப்பிட்ட கொய்யாப்பழம் அப்படி இல்லை. முதல் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்களிலிருந்து தனது நினைவுகளைத் தொடர்ந்து பகிரத் தொடங்கினார் பானுமதி.
“நான் பறித்துக்கொண்டு வந்த கொய்யாப்பழங்களை அப்பாவின் முன்னால் கொட்டினேன். ஒரு பழத்தை எடுத்துக் கடித்தேன். ஒரே துவர்ப்பு. உடனே அப்பா, ‘இது கல்கத்தா ரக கொய்யா அம்மா. அப்படித்தான் இருக்கும். ரொம்ப சாப்பிட்டால் தொண்டை கட்டிக்கும். நாளை நீ புல்லையாவிடம் பாட்டு பாடிக் காண்பிக்கணும் மறந்துடாதே’.
அவர் கூறியதைக் கேட்டதும் நான் டல்லாகி விட்டேன். கடவுளே நான் மட்டும் சினிமாவுக்குச் சரிப்பட மாட்டேன்னு சொல்லிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். சினிமா பற்றிய கவலை இல்லாமல் படிக்கலாம்; விளையாடலாம்.
நான், அப்பா, அவர் நண்பர் மூணு பேரும் அன்று ‘மோகினி பஸ்மாசுரா’ படம் பார்க்கப்போனோம். புகழ்பெற்ற நடிகை புஷ்பவல்லி மோகினியாக நடித்தார். அப்படியே மோகினியாகவே மாறிவிட்டார். புஷ்பவல்லி பாடத் தொடங்கினார். பாட்டும் நன்றாக இல்லை. குரலும் ஒத்துப்போகவில்லை. வாயசைப்பு மோசம்.
எனக்கும் அப்பாவுக்கும் பிடிக்கவேயில்லை. ‘பாடத் தெரியாவிட்டால் ஏனய்யா இப்படிப் பாடவைக்கிறீர்கள்?’ என்று அப்பா கேள்வி கேட்டார். ‘என்னசார் செய்வது? அந்த அம்மாதான் ஹீரோயின். எனக்கு அவரைவிட நன்றாகப் பாடத் தெரியும் அதுக்காக நான் அவரது ரோலை செய்ய முடியுமா, நடிக்கறவங்கதான் பாடணும்?’ என்றார்.
புல்லையாவைச் சந்தித்தேன்
மறுநாள் காலை இயக்குநர் புல்லையாவைப் பார்க்கப் போனோம். நாங்கள் உட்கார்ந்திருந்த ஹாலுக்குள் புல்லையா நுழைந்தார். இப்போதுதான் முதல் தடவையாக அவரைப் பார்க்கிறேன்.
நரைத்த தலை, கறுப்பும் வெள்ளையுமாய் மீசை. நல்ல உயரம். கட்டுமஸ்தான அழகான தோற்றம். வேட்டியும் குர்தாவும் அணிந்திருந்தார். என்னைப் பாரத்துப் புன்னகைத்தார். பிறகு கேட்டார். ‘குட்டிப்பெண்ணே, உன் பெயர் என்ன?’. யாருக்குமே அவரைப் பார்த்ததும் ஒரு மரியாதை தோன்றும். மிகவும் மரியாதையுடன் அவர் கண்களைத் தவிர்த்து நான் சொன்னேன், ‘பானுமதி’.
என் மனசுக்குள் ஒரு உதைப்பு. எந்தப் பாட்டைப் பாடுவது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாப் பாட்டும் மறந்துபோய்விட்டது.
புல்லையா உட்கார்ந்தார். நான் குனிந்த தலை நிமிரவில்லை. ‘நோ, நோ ரொம்பச் சின்னக் குழந்தை, இவள் சினிமாவுக்கு லாயக்கில்லை’ என்ற வார்த்தைகள் அவர் வாயிலிருந்து எப்போது வரும் என்றிருந்தது. அவ்வளவுதான் சட்டென்று ரயிலைப் பிடித்து ஊருக்குப்போய்விடலாம். இப்படி யோசித்தபடி இருந்தேன். பிறகு துணிச்சலை வரவழைத்துக்கொண்டு ‘சக்குபாய்’ படத்தில் வரும் பாட்டைப் பாடினேன். புல்லையாவைப் பார்க்கும் தைரியமில்லை. எனக்கு வேர்த்துக் கொட்டியது. பாடி முடித்ததும் புல்லையா சத்தம் போட்டுச் சிரித்தார்.
‘அடடே! இந்தப் பெண்தான் நாங்க தேடிக்கிட்டிருந்த காளிந்தி!’ ‘மிஸ்டர் வெங்கட சுப்பையா உங்க பொண்ண அழைச்சிகிட்டு நீங்க கல்கத்தா புறப்படுங்கள். அங்கேதான் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருக்கோம். காளிந்தி ரோலில் நடிக்க வேண்டிய ஒரு பொண்ணுக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தோம். கடவுளே அனுப்பிய மாதிரி உங்க பெண் வந்துவிட்டாள். காளிந்தி வேஷத்துக்கு எத்தனையோ பெண்களைப் பார்த்துவிட்டேன். ஆனால், காளிந்தியே வருவாள் என்று நினைக்கவில்லை! இந்தப் படத்தில் இந்தப்பெண்ணுக்கு நிறைய பாட்டுக்கள் பாடும் வாய்ப்பு கிடைக்கும். குரல் பிரமாதமா இருக்கு’ என்றார் புல்லையா.
அப்பாவின் நிபந்தனைகள்
புல்லையா தன் உதவியாளரை அழைத்து, “ஒரு சின்ன சிக்கல். புஷ்பவல்லி படத்தில் இந்தப் பெண்ணின் தங்கையாக நடிக்கிறாள். குண்டாகவும் இருக்கிறாள். புஷ்பவல்லியைத் தங்கையாக வைத்து நிறைய ஷாட்டுகள் எடுத்தாகிவிட்டது. இந்தப் பெண்ணுக்குத் தங்கையாக நடிக்கும் உடல்வாகு புஷ்பவல்லிக்கு இல்லை. ஆகவே, நல்ல மேக்கப்மேனாகப் பார்த்து அழைத்து வந்து இந்தப் பெண்ணுக்கு பெரிய பெண் மாதிரி தோன்றும் விதமாக மேக்கப் போடணும்’ என்றார். ‘அதுக்கென்ன? அப்படியே செய்கிறேன்’ என்றார் அவருடைய உதவியாளர்.
ஆனால், அப்பா சில கடுமையான நிபந்தனைகளை விதித்தார். ‘மிஸ்டர் புல்லையா உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்! இந்தப் படத்திலே வருகிற ஹீரோ ஆனாலும் சரி, வேறு ஆண் நடிகர் என்றாலும் சரி என் பெண்ணைத் தொட்டுப் பேசக் கூடாது. அவர்கள் தலையை எனது பெண்ணின் தோள்மீது சாய்த்துக் கொள்ளக் கூடாது’ என்றார்.
அதைக் கேட்டு புல்லையா சிரித்துவிட்டுச் சொன்னார். ‘கவலைப்படாதீர்கள்... இந்தப்படத்தில் ஹீரோ கிடையாது. கல்யாணத்துக்கு முந்தியே காளிந்தி கிணற்றில் விழுந்து செத்துப்போகிறாள். அதுவுமில்லாமல் இத்தனை சின்னப் பொண்ணுக்கு ஹீரோ வைக்க முடியுமா?’ என்றார்.
150 ரூபாய் சம்பளம்
இயக்குநர் கூறியதைக் கேட்டு அப்பாவின் மனம் நிம்மதி அடைந்தது. ‘குழந்தையை அழைச்சிட்டு அடுத்த வாரம் கல்கத்தா வாங்க. இது லோ பட்ஜெட் படம்தான். உம்ம பெண்ணுக்கு மாதம் 150 ரூபாய் சம்பளம்’ சொல்லிவிட்டு மறுபடி சிரித்தார். தேடிய பெண் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் சிரித்ததால் அப்பா அதைப் பொருட்படுத்தவில்லை. ‘பணம் ஒரு பொருட்டே அல்ல. என் மகளுக்குப் படத்தில் பாட நிறைய பாட்டுகள் வேண்டும். ஒவ்வொரு பாட்டும் லட்ச ரூபாய்க்குச் சமம். எனக்கு என் பெண் பாடுவதைக் கேட்கணும் அதுபோதும்’ என்றார்.
‘ஊரிலிருக்கும் என் நண்பர்களுக்குக் கொடுப்பதற்காக நிறையக் கொய்யாக் காய்களைப் பறித்துக்கொண்டு அப்பாவுடன் ரயில் ஏறினேன். என் நண்பர்களுக்குக் கொய்யாப் பழங்களைக் கொடுத்தபோது என் கண்ணில் கண்ணீர் தளும்பியது. இவர்களோடு மறுபடி விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா? என் பள்ளிப் பருவம் முடிவுக்கு வந்துவிட்டதா? இந்தக் கேள்விகள் என்னை வாட்டின.
இன்று இளவயது ஆண்களும் பெண்களும் படத்தில் நடிக்கத் தங்கள் படிப்பைக் கைவிடுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. படிக்க முடியவில்லையே என்று நான் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன். இவர்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. வருத்தமாகவும் இருக்கிறது” என்று சொன்ன பானுமதி அம்மையார் குரலில் நிஜமான கவலை ஒலித்தது.
(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு:-
thanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago