மற்றும் இவர்: நான் நடிகன்பா..! - இளங்கோ குமாரவேல்

By டி. கார்த்திக்

நாடக மேடையிலிருந்து திரைக்கு வந்த, ‘தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பதத்துக்குப் பொருத்தமான இளங்கோ குமாரவேல் சினிமாவில் இயக்குநரின் நடிகர் என்று பெயர் பெற்றிருப்பவர். சுமார் 20 ஆண்டுகளாக நினைவில் நிறுத்தக்கூடிய குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் காத்திருந்து ஸ்கோர் செய்துவரும் அவரை சென்னையின் அசோக் நகரில் இருந்த வீட்டில் சந்தித்தேன்.

வீட்டுக்குள் நுழையும்போதே அரை டஜன் அல்சேஷன் நாய்கள் வரவேற்றன. ‘நம்ம அண்ணன்’ என்று அவர் நாய்களுக்குக் கூற அவை என்னை முகர்ந்து பார்த்து சாந்தமாக அனுமதிக்க, புத்தகங்களால் நிறைந்திருந்த குமாரவேலின் வாசிப்பு அறையில் பேசத் தொடங்கினோம்.

சென்னைதான் அவருக்குப் பூர்வீகம். அவருடைய தாத்தா டாக்டர் ராசமாணிக்கம் தமிழறிஞர். தந்தை இளங்கோ தமிழ் ஆசிரியர். அம்மா புனிதவதி இளங்கோவன் அகில இந்திய வானொலியில் முன்னாள் இயக்குநர். தமிழ் மணம் வீசும் குடும்பம். பெரிய குடும்பப் பின்னணியோடு வந்த குமாரவேல், நாடகக் கலையைத் தன் வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்தார்.

1980-களின் இறுதியில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இந்திரா பார்த்தசாரதி துறைத் தலைவராக இருந்த காலத்தில் ‘ஸ்கூல் ஆஃப் டிராமா’வில் முதுகலை படித்திருக்கிறார். பிறகு ந. முத்துச்சாமியின் கூத்துப்பட்டறையிலும் பாடம் படித்தார். இந்த இரு இடங்களில்தான் உலக நாடகங்களையும் தமிழ் மரபுக் கலைகளையும் கற்றுக்கொண்டிருக்கிறார் குமாரவேல்.

நாடகம் மீதிருந்த தணியாத காதலால் ‘மேஜிக் லான்டர்ன்’ என்ற நாடகக் குழுவைக் குமாரவேல் தொடங்கினார். குழந்தைகளுக்குத் தமிழ், ஆங்கில நாடகங்களைக் கற்றுத் தருவது, நாடகங்களுக்குக் கதை எழுதுவது, அதில் நடிப்பது இவைதான் அஜெண்டா. அந்த வகையில் 1999-ல் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் திறந்தவெளி நாடகமாக சென்னையில் அரங்கேற்றியிருக்கிறார். அந்த நாடகத்தில் கரிகாலனாக நாசர் நடித்ததால், அவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. நாசர் மூலமாகவே ‘மாயன்’ (2001) படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்.

இயக்குநர் ராதா மோகனின் படங்களில் கட்டாயம் இடம்பிடித்துவிடுவார் குமாரவேல். ‘மின்னல் ரவி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார் குமாரவேல். அந்த நாடகத்தைப் பார்க்க வந்த கேமரா மேன் விசு, இயக்குநர் ராதாமோகனிடம் குமாரவேலை அறிமுகப்படுத்தினார். குமாரவேலின் சாமானியத் தோற்றமும் குரலும் கதாபாத்திரத்துக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ளும் வேகமும் ராதாமோகனைக் கவர்ந்துவிட, தனது பெரும்பாலான படங்களில் இளங்கோ குமாரவேலுக்குத் தயாராக இருக்கும் ஓர் இடம்.

அவற்றில் ராதாமோகனும் ரசிகர்களும் எதிர்பார்ப்பதற்குச் சற்று அதிகமாகவே நடிப்பில் தடம் பதிப்பார். ராதா மோகனின் ஆஸ்தான் நடிகரானது எப்படி எனக் கேட்டால், “அது எப்படி நடந்துச்சுன்னு எனக்கே தெரியல” என்று சிரிக்கிறார். “அவருக்கு என்னைப் பிடித்தது ஒரு காரணமாக இருக்கலாம். என்னுடைய அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத்தான் ராதாமோகன் எனக்குக் கொடுத்திருக்கிறார். சில கதாபாத்திரங்களைச் செய்ய முடியுமா என்று தயங்கியபோதுகூட ‘உன்னால் முடியும்’ என்று தட்டிக் கொடுத்துச் செய்ய வைப்பார்.

‘அழகிய தீயே’ படத்துக்குப் பிறகு அவருடைய எல்லாப் படங்களிலும் நான் நடிக்கவில்லை என்றாலும், கதை விவாதங்களில் எனக்கும் இடம் கொடுத்திருக்கிறார். எங்களுக்குள் நல்ல புரிதலும் நட்பும் உண்டு” என்கிறார் குமாரவேல்.

2017-ல் வெளியான ‘குரங்கு பொம்மை’யில் வில்லனாகவும் தோன்றி அசரடித்தார். அண்மையில் வெளியான ‘சர்வம் தாளமயம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷின் தந்தையாக நடித்திருந்தார். விளிம்பு நிலை மக்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம் அது.

மிருதங்கம் செய்யும் கூலித் தொழிலாளி. இந்தக் கதாபாத்திரத்துக்காக சென்னை ஐஸ் அவுஸில் மிருதங்கம் செய்யும் தொழிலாளி ஒருவரிடமிருந்து மிருதங்கம் எப்படிச் செய்வார்கள் என்பதைக் கற்ற பிறகே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

நாடகங்கள் பலவற்றை எழுதியிருக்கும் குமாரவேல், ‘கற்றது களவு’ என்ற படத்துக்குத் திரைக்கதையை எழுதியதிலும் எந்த ஆச்சரியமில்லை.
 

matrum-3jpgright

பிரகாஷ்ராஜ்?

நல்ல நண்பர். ‘அழகிய தீயே’ தொடங்கி அவரது படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன.

படங்களின் எண்ணிக்கை?

செய்த கதாபாத்திரத்தையே திரும்பவும் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.

திடீர் வில்லன்?

நான் நடிகன்பா.

ஹோம்வொர்க்?

கண் பார்த்தது… நடிப்பு தானாக வந்தது. இருந்தாலும் ஹோம் ஒர்க் தேவை.

புதிய படங்கள்?

ஹிப்ஹாப் ஆதியுடன் ‘நட்பே துணை’. சித்தார்த்துடன் ‘அருவம்’ , ‘சதுரங்க வேட்டை 2’. இவை இல்லாமல் மிதுலன் என்பவரின் படம்.  

 

தொடர்புக்கு: karthikeyan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்