அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை வரிசையில் முக்கியத்துவம் பெறுவது வசிப்பதற்கான இல்லம். அதிலும் ‘கனவு இல்லம்’ என்பது பலருக்கும் கனவாகவே தேங்கிவிடுகிறது. சிலர் இல்லம் என்ற அளவில் ஏதோ ஒன்றை அடைந்தால்போதும் என்ற அளவில் திருப்தியடைகிறார்கள். ஆனால் ’கனவு இல்லம்’ கைவசமான உண்மைக் கதைகளைக் காண வழிசெய்கிறது நெட்ஃபிளிக்ஸின் ’தி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் எக்ஸ்ட்ரார்டினரி ஹோம்ஸ்’ (The World's Most Extraordinary Homes) என்ற தொடர்.
பிபிசியுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத் தொடர் இது. விருது பெற்ற கட்டிடக்கலை வல்லுநரான பியர்ஸ் டெய்லரும் நடிகையும் கட்டிடக்கலை ஆர்வலருமான கரோலினும் இந்தக் கனவு இல்லங்களைத் தேடி உலகமெங்கும் நமக்காக உலா வருகின்றனர்.
அடர் வனத்தின் ஊடே, மலைகளின் உச்சியில், சில்லிடும் ஆர்க்டிக் வளையத்தில், கடல் அலைகள் தாலாட்டும் கரையோரத்தில், சிற்றோடைகள் சிலுசிலுக்கும் மலைச்சரிவில், மலைப் பாறைகளின் குளுமையை உறிஞ்சும் பாதாளத்தில்... என இயற்கையின் மடியில் வீற்றிருக்கும் வீடுகளை இருவரும் அலசி ஆராய்கிறார்கள்.
குளிர்சாதன வசதி போன்ற செயற்கை இம்சைகள் இன்றி, இயற்கைக்கு ஊறு விளைவிக்காத கட்டுமானப் பொருட்களைக் கொண்டு, கானுயிர்களுக்கு இடைஞ்சலின்றி அமைக்கப்பட்ட வசிப்பிடங்கள் இந்தப் பட்டியலில் வருகின்றன.
கலிஃபோர்னியாவின் மலைச்சரிவில், பிரம்மாண்ட வீடொன்றின் பாகங்களாகச் செயலிழந்த போயிங் விமானமொன்றின் இறக்கை, வால் போன்ற பாகங்கள் மறுசுழற்சி முறையில் அலங்கரிக்கின்றன. அடுத்து அரிசோனாவில் நூற்றாண்டுத் தொன்மையும் மரபும் தோய்ந்த இயற்கை எழில் கொஞ்சும் வீடுகள், சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் எண்கோண வடிவிலான வீடுகள் என ஆச்சரியங்கள் தொடர்கின்றன.
இரண்டாவது சீசனில் வரலாற்றுப் பின்புலமும் கலாச்சாரச் செறிவும் மிகுந்த இடங்களுக்குப் பயணம் செல்கிறார்கள். அந்த வகையில் இயேசு அவதரித்த ஜெருசலேமிலும் அரபு கிராமங்களிலும் நவீனத்துடன் பிணைந்த பழமையான வீடுகளைத் தரிசிக்கலாம். கூடவே அடுத்த தலைமுறையினருக்காக முழுவதும் தானியங்கித் தொழில்நுட்பம் நிறைந்த நவீன அமெரிக்க வீடுகள், ஆங்கில ‘எஸ்’ வடிவிலான சுவிஸ் இல்லங்கள், ஆங்கில ‘வி’ வடிவிலான ஜப்பானியக் குடில்கள் போன்றவையும் உண்டு.
தற்போது வெளியாகி இருக்கும் இத்தொடரின் இரண்டாவது சீசனில் ஸ்பெயின், நார்வே, இஸ்ரேல் ஆகியவற்றுடன் இந்தியாவின் பசுமை மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் அத்தியாயம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மும்பையின் நகர சந்தடிகளுக்கு அப்பால் பாறைகள், கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைக் கொண்டே அமைக்கப்பட்ட வீடுகள் வருகின்றன.
பாயும் காட்டு ஓடைகளுக்கு நடுவே வீடு பிரிந்து வழிவிடுவதுடன், வனத்தில் செழித்திருக்கும் மரங்களை அகற்றாது அவற்றை வீட்டின் வடிவமைப்பில் ஒன்றாக்கியும் இயற்கைக்கு இசைவான பண்ணை வீடுகள் அமைத்திருக்கிறார்கள்.
வீடுகளைச் சுற்றிக் காட்டுவதுடன், வீட்டை வடிவமைத்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் கனவு இல்லங்களின் உரிமையாளர்களின் பேட்டியாகவும் ஆவணப்படம் செல்கிறது. மனிதர்கள் தங்களது வாழ்க்கையில் கனவு இல்லங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும் அதற்காக அவர்கள் செலவிடும் பிரயத்தனமும் அந்தக் கனவு ஈடேறி வரும்போது அவர்கள் அடையும் நிறைவான மகிழ்ச்சியும் அந்தச் சந்திப்புகளில் பிரதிபலிக்கின்றன.
வாழும் நாட்களில் திருப்தியான ‘வீடு பேறு’ அடைய விரும்புவோரும், கனவு இல்லங்களைப் பரிசீலிப்போரும் கட்டாயம் காண வேண்டிய ஆவணத் தொடர் இது.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago