சினிமா ஒரு மாய உலகம். அதில் ஒருவர் எந்தத் துறையை ஆர்வமாகத் தேடி வருகிறாரோ, அது அவருக்குக் கிடைக்காமலேயே போய்விடும். வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கும் துறை, வீடு தேடிவந்து இழுத்துச் செல்லும். இன்றைய தமிழ்க் கலைஞர்களில் அதற்குச் சரியான உதாரணம் நடிகர் இளவரசு. இயக்குநராக வேண்டும் என்ற லட்சியக் கனவுடன் இருந்தவரால் ஒளிப்பதிவாளராகத்தான் முடிந்தது. அதுவும் அவருக்கு எட்டாத கனியாக மாற, அரிதாரம் பூசி முழு நேர நடிகராக மாறியவர்.
கேட்டதும் கிடைத்ததும்
1980-களில் இயக்குநர் கனவுடன் மதுரையிலிருந்து புறப்பட்டவர்களில் இளவரசுவும் ஒருவர். சினிமா வாய்ப்பு தேடி அலைந்தவருக்கு பாரதிராஜா பள்ளிக்கூடத்தில் அடைக்கலம் கிடைத்தது. 1980 மற்றும் 90-களில் பாரதிராஜா இயக்கிய படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி. கண்ணனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். எந்த சினிமா யூனிட்டிலும் இல்லாத ஒரு சிறப்பு, பாரதிராஜா படக்குழுவுக்கு உண்டு.
அவருடைய யூனிட்டில் பணியாற்றும் பெரும்பாலானவர்களுக்கு ஒரு காட்சியிலாவது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். கேமராமேன் உதவியாளராக இருந்தபோது சினிமாவில் தலைகாட்டினார் இளவரசு.
1987-ம் ஆண்டில் வெளியான ‘வேதம் புதிது’ படத்தில் பாலு தேவர் கதாபாத்திரத்தைச் சொத்துக்கு ஆசைப்பட்டுக் கொல்லும் வேடம் ஒன்று இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய ஆள் வராமல் போகவே, அந்த வாய்ப்பு இளவரசுவுக்கு கிடைத்தது. இரண்டு வசனம் பேசி இளவரசு நடித்தார்.
பின்பு அந்தக் கதாபாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் உயிர்க்கொடுத்தார் பாரதிராஜா. ஆனால், சென்சாரில் திரைக்கதை மாறியபோது இளவரசு நடித்த காட்சியமைப்புகள் மாறின. ஆக, கேமரா மேன் உதவியாளராக இருந்த இளவரசு, கேமரா முன் நடித்த முதல் படம் ‘வேதம் புதிது’தான்.
matrum-2jpg‘இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்’right“அந்தப் படத்துக்குப் பிறகு பாரதிராஜாவின் படங்களில் தொடர்ந்து பணியாற்றினேன்” என்பதைப் பெருமையாகச் சொல்லும் இளவரசு, கேமரா நுட்பங்களைக் கற்றுக்கொண்டதால் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்பதில் கவனத்தைக் குவித்திருக்கிறார். ஆனால், நடிகராக அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டிருந்ததால், படங்களில் நடிக்கத் தேடிவந்த அழைப்புகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க முடியாமல் நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார் இளவரசு.
“சேரனின் ‘பொற்காலம்’ எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில்தான் நான் ஒளிப்பதிவாளராக மாறியிருந்தேன். பலரும் என்னை நடிக்க அழைக்கும்போது, தேவையில்லாமல் நம்மை ஏன் கூப்பிடுகிறார்கள் என்று மறுத்திருக்கிறேன்” என்கிறார் இளவரசு.
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி 1996 முதல் 2000-ம் வரை 13 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவற்றில், விஜய் நடித்த ‘ நினைத்தேன் வந்தாய்’ படமும் ஒன்று.
மொழி கடந்த பயணம்
அதன் பிறகு ஏன் ஒளிப்பதிவு வாய்ப்பு உங்களுக்கு வரவில்லை என்றால், “எவனும் கூப்பிடல..” என வெடித்து சிரிக்கிறார்.
“என்னோட இயக்குநர்கள் சீமான், செல்வபாரதி, சிவச்சந்திரன் போன்றோர் கமர்ஷியலாக ஜெயிக்கவில்லை. இங்கே இயக்குநர்களுக்கு வணிக வெற்றி மிகவும் முக்கியம். இயக்குநர்களை வைத்துத்தான் ஒளிப்பதிவாளர்கள் வர முடியும்” எனும் இளவரசு ஒளிப்பதிவாளர் வாய்ப்பு குறைந்தபோது, அரிதாரம் பூசிக்கொள்வதை விரும்பி ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார். இனி நடிப்புதான் என முடிவெடுத்தார்.
வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என இவர் ஏற்கும் கதாபாத்திரங்களின் வண்ணங்கள் பலவிதம். “இடம் மாறினாலும் எனக்கு சினிமா விரும்பிக் கொடுத்த நடிப்பில் தடம் பதிக்க வேண்டும் என்று ஈடுபாடு காட்டத் தொடங்கினேன்” என்கிறார் இளவரசு. ஏற்கும் கதாபாத்திரம் எதுவானாலும் அதில் தன்னுடைய தனித்தன்மையான நையாண்டியும் யதார்த்தமும் கலந்த அணுகுமுறை, வட்டாரப் பேச்சு வழக்கில் ஈடுபாடு மூலம் ரசிகர்களைக் கவர்வது இவருக்குக் கைவந்த கலையாகிப்போனது எப்படி?
“கதைக்கோ கதாபாத்திரங்களுக்கோ தொந்தரவு இல்லாமல் நமது இயல்பில் ஊறிப்போயிருக்கும் நகைச்சுவையைச் சேர்த்துக்கொள்ளலாம். அதை இயக்குநர்களும் அனுமதிப்பார்கள். குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தபோதும் என்னுடைய நகைச்சுவைத்தனம் வெளிப்பட்டிருக்கிறது என்றால், தொந்தரவு செய்யாமல் அந்தக் காட்சி வந்திருக்கிறது என்று அர்த்தம்” என்கிறார் இளவரசு.
இதுவரை 170-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், இன்று மலையாளப் படங்களிலும் தன் திறமையை வெளிப்படுத்திவருகிறார். 2017-ம் ஆண்டில் வெளியான ‘மாயநதி’ என்ற மலையாளப் படத்துக்குப் பிறகு 8 படங்களில் நடித்து முடித்துவிட்டார். மலையாளம் இல்லாமல் ஒடியா மொழியிலும் 3 படங்களில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளராக சினிமாவில் நுழைந்த இளவரசு, இன்று அந்தத் துறையையே மறக்கும் அளவுக்கு முழு நேர நடிகராக மாறிவிட்டார். அவரது ஈடுபாட்டைக் கண்டு பலமொழிகளில் இருந்தும் அழைப்புகள் வர, ‘வாய்ப்புள்ள போதே தூற்றிக்கொள்’ என்ற சினிமா தத்துவத்துக்கு ஏற்ப யதார்த்தத்தை உணர்ந்த உத்தரவாதமான நடிப்புக் கலைஞராக தொடர்கிறார் இவர்!
ஒளிப்பதிவாளராக முதல் படம்?
1996-ல் சீமான் இயக்கத்தில் வெளியான ‘பாஞ்சாலங்குறிச்சி’.
சேரன் படங்களில் தவறாமல் இடம்பெறுவது?
இரண்டு பேரும் பக்கத்து ஊர். நல்ல நண்பர்கள். இது போதாதா?
கை நழுவிய படங்கள்?
‘குருதிப்புனல்’, ‘விருமாண்டி’. ஆனால், விட்டதை ‘பாபநாசம்’ மூலம் பிடித்தேன்.
மறக்க முடியாத பாராட்டு?
‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் மங்குனிப் பாண்டியனாக நடித்துச் சிரிக்க வைத்ததை நாகேஷ் பாராட்டியது.
மீண்டும் ஒளிப்பதிவு?
நிச்சயம் கிடையாது.
எதிர்கால லட்சியம்?
ஒரு படத்தையாவது இயக்கிவிட வேண்டும்.
தொடர்புக்கு: karthikeyan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago