கண்ணிலே இருப்பதென்ன
கன்னி இளம் மானே...
காவியமோ ஓவியமோ
கன்னி இளம் மானே...
படம்: அம்பிகாபதி (1957)
“வாழ்க்கையில் நான் முதன்முதலாக மேக்கப் போட்டுக் கொண்ட நாளை மறக்க முடியாது!” என்று தொடங்கினார் பானுமதி. ‘எந்தப் படத்துக்கு?’ என்றேன். “படம் எல்லாம் இல்லை. பள்ளிக்கூட டிராமாவுக்கு! அக்கம்மாதான் எனக்கு முதன்முறையாக மேக்கப் போட்டுவிட்டாள்!” கொழகொழவென்று என்னத்தையோ எடுத்து என் முகத்தில் பூசினாள். அதற்குப் பிறகு முகப்பவுடர்.
நெற்றியில் ஒரு பெரிய சிவப்பு கலர் கோடு. கண்ணுக்கு ஏதோ மை. டிரஸ் எல்லாம் போட்டபிறகு கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். விசித்திரமாக இருந்தது. கண்ணாடியில் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே என் தலைமீது ஒரு அட்டை கிரீடத்தை வைத்தாள். நான்தான் லட்சுமி தேவியாம்!
பள்ளிக்கூட ஆடிட்டோரியம் பெற்றோர்களாலும் பள்ளிக் குழந்தைகளாலும் நிரம்பி வழிந்தது. நான் மலேரியா பேஷண்ட் மாதிரி நடுங்கிக்கொண்டிருந்தேன். அப்பா ஊரில் இல்லை. அம்மா இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வருவது கிடையாது. அக்கம்மா மட்டும்தான் என்னுடன் இருந்தாள்.
மேடையில் அட்டையில் செய்திருந்த ஒரு பெரிய தாமரையை வைத்தார்கள். அக்கம்மா கச்சிதமாகப் புடவை கட்டிவிட்டாள். காற்றடித்த பொம்மை மாதிரி இருந்தேன். இரவல் வாங்கிய நகைகள் மட்டுமல்லாது இந்த அட்டை கிரீடம் வேறு. முதன்முதலாக ஒரு உண்மை புரிந்தது. ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது ரொம்ப கஷ்டமான காரியம்!
என்னை அட்டையால் செய்த தாமரைப் பூவின் நடுவே அக்கம்மா உட்காரவைத்தாள். மேடையில் என்னைச் சுற்றி விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. பள்ளிக்கூடமே எனக்கு அந்நிய இடமாகத் தெரிந்தது. மாணவர்களின் முகங்கள் எல்லாம் பழகிய முகம் மாதிரியே இல்லை. நானே வேறு ஒரு உடம்பில் புகுந்து கொண்டுவிட்டது போல் இருந்தது.
திரை உயர்ந்தது, பார்வை யாளர்கள் படபடவென்று கை தட்டினார்கள். எனக்கு மயக்கம் வரும்போல் இருந்தது. அக்கம்மா சொன்னதைச் செய்தேன். லக்ஷ்மி கையை உயர்த்தி ஆசீர்வதிப்பது போல் நின்றேன். கடவுள் வாழ்த்து முடிந்தது.
லட்சுமியும் பின்னே ஸ்ரீராமனும்
அடுத்தது ‘பாதுகா பட்டாபிஷேகம்’ எனக்கு அப்பாவின் பட்டு வேஷ்டி, பட்டு அங்கவஸ்திரத்தால் டிரஸ் பண்ணிவிட்டு நெற்றியில் சிவப்பாக ராமம் வைத்துவிட்டாள். ஸ்ரீராமன் ரெடி. சீதையாக நடித்தவள் ஊரிலேயே பெரிய நகைக்கடைக்காரர் வீட்டுப்பெண். அவள் காது கழுத்தெல்லாம் நகைகள் ஜொலித்தன.
அவளைப் பார்த்து நாடக ஆசிரியர் சிரித்தார். ‘அம்மா கதைப்படி சீதை காட்டுக்குப் போகணும்! நகையெல்லாம் கழற்று அம்மாயி’ என்று சொல்லிவிட்டு நகைகளைக் கழற்றிவிட்டு சாதாரணப் புடவை ஜாக்கெட் போட்டுவிட்டு ஒரு மாங்கல்யச் சரடைக் கழுத்தில் மாட்டிவிடச் சொன்னார்.
இதைப் பார்த்ததும் அந்தப் பெண்ணின் பெற்றோர், உறவினர்களுக்கு எல்லாம் கோபம் வந்துவிட்டது. ‘எங்கள் பெண் இப்படி பரம ஏழையாக நடிக்க மாட்டாள். எல்லா நகையும் இவளுக்குப் போட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் வேறு யாராவது காட்டுக்குப் போகட்டும்! எங்கள் பெண் நகை இல்லாமல் காட்டுக்குப் போகமாட்டாள்!’ என்றார்கள்.
கடைசியாக, சீதை வேடத்துக்கு ஓர் அழகான, நிஜமாகவே ஏழைப்பெண் கிடைத்தாள். லட்சுமணன், பரதன் கதாபாத்திரங்களில் நடிக்கவும் பெண்கள் கிடைத்துவிட்டார்கள்.
நான் என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தேன். அடக்கடவுளே ராமன் முகத்தில் இப்படி ஒரு அசட்டுக் களையா? நான் நடிக்கவே இல்லை. அக்கம்மா சொன்னதைச் செய்தேன். அக்கம்மாதான் என் முதல் டைரக்டர். நாடகத்தில் என் நடிப்பை எல்லோரும் புகழ்ந்தார்கள். மறுநாள் காலை நான் பள்ளிக்கூடம் போகும்போது ‘பாதுகா பட்டாபிஷேக’ ராமன் அதோ போகிறான் என்று மாணவர்கள் கத்தினார்கள். எனக்கோ வெட்கம். அந்த வேடத்தை ஏன்தான் போட்டோமோ என்று தோன்றியது.
இப்போதுகூட நான் காரில் போகும்போது என்னைப் பார்த்து ‘அதோ பானுமதி! பானுமதி!’ என்று ரசிகர்கள் கத்துவதைப் பார்க்கிறேன். அப்போது எனக்கு என் பள்ளிக்கூட நண்பர்கள் ஞாபகம் வந்துவிடும்.
அக்கம்மா எனக்கு மேக்கப் போட்டது விதியின் விளையாட்டு. வீட்டுக்கு வந்த அப்பாவுடைய நண்பர் ‘வெங்கட சுப்பையா! உன் மகள் டிராமாவில் பிரமாதமாக நடித்தாள்!’ என்று பாராட்டினார்.
கிராப்பு வைத்த கிருஷ்ணன்
அன்று பானுமதி அம்மையார் வீட்டுக்குள் நுழையும்போது ஒருவர் பஞ்சகச்சமும் குடுமியுமாக மாடிப்படியில் இருந்து வேகமாக இறங்கி என்னைக் கடந்துபோனார். முகத்தில் மேக்கப் களை நன்றாகத் தெரிந்தது. பானுமதி சொன்னார் “இப்போதெல்லாம் இப்படிக் குடுமிவைத்திருப்பவர்களை விநோதமான ஜந்து மாதிரி பார்க்கிறார்கள். நான் எடுக்கிற சீரியலில் சாஸ்திரிகள் வேஷத்தில் நடிக்க நீங்கள்தான் மாட்டேன் என்று சொல்லிவிட்டீர்களே!”
உண்மைதான் சீரியலுக்காக என் அழகான கிராப்பை என்னதான் மேக்கப் என்றாலும் தியாகம் செய்ய நான் விரும்பவில்லை. கிராப்புத்தலையை நான் தடவிக்கொள்வதைப் பார்த்தபடி சொன்னார். “கிராப்புத் தலை காரணமாக எங்கள் கிராமத்தில் நடந்த விபரீதமான, ஏன் வேடிக்கையான சம்பவத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்” என்று நினைவுகளுக்குத் தாவினார் பானுமதி.
“அப்பாவழி உறவினர் ஒருவர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளை எங்கள் வீட்டில் படிப்பதற்காகக் கொண்டுவந்து விட்டிருந்தார். பையனின் பெயர் முத்துக்கிருஷ்ணன். பெண்ணின் பெயர் நாகவள்ளி. இருவரும் சரியான போக்கிரிக் குழந்தைகள். நாகவள்ளிக்கு என்மீது பொறாமை. ஏதாவது என்னை வம்புக்கு இழுத்துக்கொண்டே இருப்பாள். கிருஷ்ணன் செய்கிற வம்புகள் எல்லைமீறிப் போயின.
அம்மா மோரைக் கஷ்டப்பட்டுக் கடைந்து எடுத்த வெண்ணெய்யைத் திருடித் தின்பதிலிருந்து, பள்ளிக்குப் போகாமல் மட்டம் போட்டுவிட்டு ஊர் சுற்றுவதுவரை அவன் செய்கிற துடுக்குத்தனங்கள் கொஞ்சமல்ல. பள்ளிக்கூட டிராமாக்களில் நடிப்பதில் கிருஷ்ணனுக்கு ஆர்வம். படிக்கவே மாட்டான்.
பெண்கள் பின்னால் சுற்றுவான். எங்கள் ஊரில் இருந்த சிவன் கோயில், கிருஷ்ணன் கோயில், ராமர் கோயில் ஆகிய மூன்று கோயில்களின் அர்ச்சகர்களின் பெண்களுக்கும் அப்போதுதான் கல்யாணம் முடிந்திருந்தது. இன்னும் புகுந்தவீடு செல்லவில்லை.
இவன் அந்தப் பெண்களைச் சுற்றிவர ஆரம்பித்தான்! ஒவ்வொரு கோயிலின் பின்புறம் பிரகாரத்தில் இருக்கும் நந்தவனத்தில் அந்தப் பெண்களை ரகசியமாகச் சந்திப்பான்! அவர்கள் பிரியத்துடன் தருகிற புளியோதரை, தயிர்சாதம், எலுமிச்சை சாதம் என மூன்று வகையான பிரசாதங்களைச் சாப்பிட்டுவிட்டுக் குண்டாகிக்கொண்டே வந்தான். மூளை மழுங்கிக்கொண்டே வந்தது.
கிருஷ்ணனின் காதல் விவகாரம் பள்ளிக்கூட ஆசிரியருக்கும் தெரிந்துவிட்டது. இவன் எப்போது பார்த்தாலும் கோயில்களுக்கு வரும் பெண்களின் பின்னாடியே சுற்றுகிறான். படிப்பதே கிடையாது என்று புகார் கிளம்பியது. ‘அவனைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும்’ என ஒரு பெண்ணின் தகப்பனார் முடிவுசெய்துகொண்டார்…” என்று சொல்லி நிறுத்த, எனக்கோ கிருஷ்ணன் மாட்டியிருப்பானோ என்ற எண்ணம் எழுந்தது.
(தாரகை ஜொலிக்கும்)
தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com | படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago