மயங்காத மனம் யாவும் மயங்கும்
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலைமோதும் ஆசை பார்வையாலே
அழகின் முன்னாலே - ஓ ராஜா
படம்: காஞ்சித்தலைவன்
கிராப்பு வைத்த கிருஷ்ணன் கதையை பானுமதி தொடர்ந்தார்.
“அப்போது அப்பா ஊரில் இல்லை. என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று ஒரு நாள் ராமர் கோவிலுக்குப் போனேன். பகல் மூன்று மணி. கோயிலின் வெளிப்புறக் கதவு சாத்தியிருந்தது. கோயிலில் யாரும் இல்லை. கோயிலுக்குப் பின்னாலிருந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் நின்றேன். புழுக்கத்துக்கு இதமாகக் காற்று வீசியது. மரத்துக்கு அந்தண்டைப் பக்கம் மதில்சுவர் மறைவில் பேச்சுக்குரல் கேட்டது. போய்ப்பார்த்தால் அர்ச்சகரின் மகளும் கிருஷ்ணனும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணை எனக்குத் தெரியும். கல்யாணம் முடிந்து மூன்று மாதம்கூட ஆகவில்லை.
கிருஷ்ணன் பிரசாதத்தை ருசித்துச் சாப்பிட்டபடி அவள் கன்னத்தை நிமிண்டினான். அவளோ அவன் கிராப்புத் தலையை ஆசையுடன் கோதினாள். அந்தப் பெண் மீது கோபம் வந்தது. அதேநேரம் அவளை நினைத்து வருத்தமாகவும் இருந்தது. அவள் கணவன் குடுமி வைத்திருந்தான். கூன் போட்டு பெண்பிள்ளை மாதிரி நடப்பான். அது ஒரு கட்டாயக் கல்யாணம். அந்த ஆலமரத்தடி சந்திப்பு நடந்த நேரத்தில் பெண்ணின் தகப்பனார் வந்துவிட்டார். கிருஷ்ணன் கையும்களவுமாகப் பிடிபட்டுவிட்டான்.
மறுநாள் அவர் வீடுதேடி வந்துவிட்டார். அவரை சமாதானம் செய்து, ‘உங்கள் மகளையும் கண்டித்து வையுங்கள். முதலில் அவளை மாமியார் வீட்டுக்கு அனுப்புங்க’ என்றாள் அம்மா. ‘நீங்கள் சொல்வது சரிதான் அம்மா’ என்று சொல்லிவிட்டுப்போனார். ‘ஏண்டா இப்படிக் கல்யாணமான பெண்கள் பின்னால் சுற்றுகிறாய்?’ என்று கிருஷ்ணனை அம்மா திட்டினாள் ‘நான் என்ன செய்வேன் அம்மா? அந்தப் பெண்கள்தான் என் பின்னாடி வருகிறார்கள்.
என் கிராப்பு அழகாக இருக்கிறதாம்! அவர்களுக்கு பிடித்தமில்லாத மாப்பிள்ளைக்கு ஏன் கட்டிவைக்கவேண்டும்? அவங்க கஷ்டத்தைச் சொன்னார்கள், கேட்டது தப்பா?’ என்று சொல்லிக்கொண்டே கண்ணாடியைப் பார்த்தபடி கிராப்புத்தலையைச் சரிசெய்யத் தொடங்கிவிட்டான்.
மறுநாள் மூன்று பெண்களின் தகப்பனார்களும் அவரவர் மாமியார் வீட்டுக்கு பெண்களைப் ‘பேக்’ பண்ணி அனுப்பிவிட்டார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் பானுமதி.
பேசுவதற்கு முன்னால் ஒரு மெல்லிய பாடலை முணுமுணுப்பது பானுமதி அம்மையாரின் வழக்கம். சிலநேரம் பாடல் வரிகள் விளங்காவிட்டாலும் ராகம் பரம சுகமாக இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான் என்ன பாடல், என்ன ராகம் என்று புரியாத ஒரு இசை மீட்டல் அவரிடமிருந்து வந்துகொண்டிருந்தது. இது என்ன பாடல் அம்மா... ரொம்ப நன்றாக இருக்கிறதே என்று கேட்டேன்.
“அதுவா? ‘வரவிக்ரேயம்’ என்ற தெலுங்குப் படத்தில் அறியாத பெண்ணான காளிந்தியாக நான் நடித்தபோது பாடிய பாடல்! அது என் முதல் படம். ‘பலுகவேமி நா தெய்வமா?’ தெய்வமே எனக்குப் பதில் சொல்ல மாட்டாயா? தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனை. அப்போதிருந்த என் மனநிலைக்குப் பொருத்தமான பாடல். அதைப் பற்றித்தான் இப்போது உங்களுக்குச் சொல்லப்போகிறேன்” என்று தொடர்ந்தார். சொல்லட்டும் கேட்போம்.
அம்மாவின் அதிர்ச்சியும் அறிமுகப் படமும்
“அப்பாவுக்குக் கர்னாடக சங்கீதத்தில் அபார ஞானம். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு என்றால் அவருக்கு உயிர்.
வீட்டில் கிராமபோன் ரிகார்டுகளைப் போட்டுவிட்டு தான் ரசிப்பதோடு என்னையும் கவனிக்கும்படி சொல்வார். கேட்டதை என்னையே பாடிக்காட்டச் சொல்லிக் கண்ணைமூடிக் கேட்டபடி ரசிப்பார். கடவுளின் கிருபையால் எனக்கு இயற்கையிலேயே இனிமையான சாரீரம் வாய்த்திருந்தது. அது மட்டுமில்லாமல் ஏதாவது ஒரு ராகத்தை ஒருமுறை கேட்டதும் அதை அப்படியே அச்சு அசலாகத் திரும்பப் பாடிவிடுவேன்.
புகழ்பெற்ற டைரக்டர் சி. புல்லையா அப்போது ‘வரவிக்ரேயம்’ என்ற படத்தை எடுத்துக்கொண்டிருந்தார். அதில் சங்கீதஞானம் மிகுந்த காளிந்தி என்ற சிறுமி வேடத்துக்கு ஒரு பெண் தேவைப்பட்டாள். அந்தப் படத்தில் பாடல்கள் நிறையப் பாடுகின்ற வாய்ப்பும் இருந்தது. சினிமா சம்மந்தப்படாத அல்லது சினிமாக்காரர்கள் குடும்பத்தைச் சேராத சினிமாவுக்கே புதுசாக அந்தப் பெண் இருக்க வேண்டும் என்பது புல்லையாவின் விருப்பமாக இருந்தது. புல்லையா என்னைக் காண விரும்பினார். பாடல்கள் பாடும் வாய்ப்பு, அந்தப் படத்தில் நிறைய இருப்பதால் அப்பாவுக்கும் இந்த ஏற்பாடு பிடித்திருந்தது.
அம்மாவிடம் இதைப் பற்றிச் சொன்னார். அம்மாவுக்கு இதைக் கேட்டதும் பயங்கர அதிர்ச்சி. சினிமா உலகத்தைப் பற்றி நல்லதும் கெட்டதுமாக அவள் பலவிஷயங்கள் கேள்விப்பட்டிருந்தாள். ‘ஐயையோ! வேண்டவே வேண்டாம்! சினிமாவில் சேர்ந்த பெண்கள் கெட்டுப் போய்விடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்ற அலறிய அம்மாவைப் பார்த்து சிரித்துவிட்டு அப்பா சொன்னதை இன்றுவரை மறக்கமுடியவில்லை. ‘அடி அசடே! எங்கே இருந்தாலும் கெட்டுப்போகிறவர்கள் கெட்டுப்போவார்கள்.
இது தெரியாதா உனக்கு? எங்கேயுமே போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பெண்ணும் கெட்டுப்போவாள்! நாம் நல்ல குணத்தோடு இருந்தால் நம்மைச் சுற்றிய உலகமும் நல்லதாகவே இருக்கும். எல்லாம் நாம் நடந்துகொள்வதைப் பொறுத்துதான் இருக்கிறது. என் மகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது! கவலைப்படாதே. அவளைக் காப்பாற்ற நான் இருக்கிறேன்!’ என்றார். அந்தக் கணத்தில் அப்பாவின் மீது எனக்கிருந்த மரியாதை கூடியது.
டைரக்டர் புல்லையாவைச் சந்திக்க நாங்கள் ராஜமுந்திரிக்குப் புறப்பட்டுப் போனோம். எங்களை ராஜமுந்திரியில் இருந்து ஆந்திரா சினி ஸ்டுடியோவுக்கு அழைத்துப் போனார்கள். ஸ்டுடியோவின் கட்டிடம் பெரிதாகவும் பாழடைந்தும் காணப்பட்டது. ஏன் ஸ்டுடியோ இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று புரியவில்லை.
ஆனால், எனக்கு அந்த ஸ்டுடியோவைப் பிடித்ததற்கு அங்கிருந்த கொய்யாமரங்கள்தாம் காரணம். ஒவ்வொரு கொய்யாவும் குண்டு குண்டாக இருந்தது. அவ்வளவு பெரிய கொய்யாவை நான் பார்த்ததே இல்லை. ‘அப்பா அந்தக் கொய்யாக்காயைப் பறிக்கலாமா?’ என்று கேட்டேன். சிறுவயதில் இருந்தே எனக்குக் கொய்யா என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் செங்காய்கள் என்றால் ரொம்பவே இஷ்டம்.
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஸ்ரீ பி.என். ரெட்டியிடம் கொய்யாமீது எனக்கு இருந்த அளவு கடந்த ஆசையைச் சொன்னேன். ‘அதுக்கென்ன மல்லேஸ்வரி படத்தில் ஒரு கொய்யாப்பழ சீன் வச்சிடுவோம்!’ என்றார். அவர் தமாஷ் பண்ணுகிறா ரென்று நினைத்தேன். ஆனால், மல்லேஸ்வரி படத்தில் உண்மையில் ஸ்ரீ கிருஷ்ணதேவராயருக்கு நான் கொய்யாப் பழங்கள் அன்பளிப்பாகக் கொடுக்கிற மாதிரி ஒரு சீனை அமைத்துவிட்டார் என்று சொன்ன பானுமதி முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com | படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago