திரைவிழா முத்துக்கள்: மகத்தான பரிசு வேறு எதுவுமல்ல (எ ட்வெல்வ் இயர் நைட் (உருகுவே)

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

சிறையதிகாரிகளுக்குத் தெரியாமல் சுவரில் துளையிட்டுத் தப்பிக்கும் ‘சஷாங்ரிடம்ப்ஷன்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்கள் விறுவிறுப்பான தன்மை கொண்டவை.

தவறான குற்றச்சாட்டுக்குள்ளாகி, ஆயுள்தண்டனைக் கைதியாகச் சிறைக்குச் சென்று, நம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் துயரங்களையும் தடைகளையும் எதிர்கொள்ள முடியும் என்பதை சாக்லேட் தடவிச் சொன்னது ‘சஷாங் ரிடம்ப்ஷன்’. ஆனால், ‘எ ட்வெல்வ் இயர் நைட்’ படத்தில் சாகசத்துக்கே வாய்ப்பில்லை.

சக கைதிகளுடன் பேசுவதற்கும்கூட அரிதாகவே வாய்ப்புண்டு. வெளியில் குடும்பத்தினருக்கோ மக்களுக்கோ எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் கூடத்தெரியாது. இந்நிலையில் தனிச்சிறைக் கொட்டடிகளில் மாற்றி மாற்றிஅடைக்கப்பட்டு 12 ஆண்டுகள் வதைபட்டு விடுதலையாகும் கதையைப் பேசும் ‘எ ட்வெல்வ் இயர் நைட்’ திரை எந்தத் துயரத்தையும் தாங்கும் மனித வல்லமையைப் பேசுகிறது.

அத்தனை இருள், காதைப் பிளக்கச் செய்யும் மௌனம், கொல்லும் தனிமையை மனிதன் சகித்துக்கொள்ள முடியும் என்பதை அங்குலம் அங்குலமாகச் சொல்லும் இந்தப் படமும் காத்திருப்பின், சகிப்புத்தன்மையின் ஆற்றலைத்தான் பேசுகிறது, ஆனால் மிக உண்மையாக. தண்டனைக் காலம்காகிதத்தில் எழுதப்பட்டாலும் மெது மெதுவாக அது உடல்களுக்குள்எலும்பெலும்பாக எழுதப்படுவதை விஸ்தாரமாகச் சித்திரிக்கிறது ‘எ ட்வெல்வ் இயர் நைட்’.

360 டிகிரி கோணத்தில் விரியும் படத்தின் தொடக்கக் காட்சியில் சீருடை அணிந்த படையினர் ஒரு சிறைக்குள் புகுந்து கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் ஒன்பது புரட்சியாளர்களை இழுத்துச் செல்கின்றனர். கதை, முஹிகா, நேட்டோ, ரூசோ என்ற மூன்று புரட்சியாளர்களின் மேல் குவிகிறது. சூரிய ஒளியே இல்லாதகுகையையொத்த அறைகள், மண்ணெண்ணெய் குளியல், உடல் ரீதியானசித்திரவதை, சிறைக் காவலாளிகளுடன் கூட பேசுவதற்கான அனுமதி மறுப்பு எனத் தொடங்குகிறது சிறை வாழ்க்கை.

 படிப்படியாக வன்முறைகளும் விசாரணைகளும் குறையத் தொடங்குகின்றன. தனிமைச் சிறையில் கால உணர்வற்று, தன்னுணர்வற்று அவர்கள் நாட்களைக் கழிப்பது உச்சபட்சத் தண்டனையாக மாறுகிறது. நாடகத்தனமானசம்பவங்களுக்கோ தருணங்களுக்கோ வாய்ப்பில்லாத நிலையில் மூன்று கதாபாத்திரங்களும் உணரும் வலியையும் ஒருவரையொருவர் தொடர்புகொள்வதற்கு முயலும் குறைந்தபட்ச எத்தனங்களையும் கொண்டு இயக்குநர்நம்மை அந்தச் சிறைக் கொட்டடியில் அடைபட்டதுபோல் உணரவைக்கிறார்.

 பல் தேய்ப்பதற்குக் கூட வாய்ப்பில்லாத சூழலில் நடிகர்களின் தோற்றம்கிட்டத்தட்ட ஒன்றுபோல் மாறிவிடுகிறது. கைதி ரூசோவின் கடித மொழியால் ஈர்க்கப்பட்டு ஒரு சிறை சார்ஜண்ட் அவனிடம் அன்பாகிறார். ரூசோவின் காதல் சொட்டும் மொழி அவருக்குக் காதலியைப் பெற்றுத் தருகிறது. மன நலப் பாதிப்புக்குள்ளாகி உருவெளித் தோற்றங்கள் அச்சுறுத்தும் முஹிகாவைச் சரியான தருணத்தில் சந்தித்துப் பெண் உளவியல் மருத்துவர் உதவியளிக்கிறார்.

சிறைச் சுவர்களைத் தட்டி ஓசை எழுப்புவதன் வழியாகச் சமிக்ஞைகளாலான தொடர்பைஅவர்கள் தங்களுக்குள் உருவாக்கிக்கொள்கிறார்கள். இவையெல்லாம் அவ்வப்போது கிடைக்கும் ஆறுதல்கள்தாமே தவிர, சிறையில் அவர்கள் அனுபவிக்கும் பயங்கரங்களுக்கு நிரந்தரத் தீர்வாக எதுவும்காண்பிக்கப்படுவதேயில்லை. ஏனென்றால், இருள் சூழ்ந்த சிறையிலிருந்து மீள அப்படி எதுவும் இல்லை.

இரண்டாம் உலகப் போர் அனுபவங்களை முன்வைத்து, லோகோதெரபி என்னும்சிகிச்சையை முன்வைத்த விக்டர் பிராங்கள் சொல்வதைப் போல, வாழ வேண்டுமென்பதே இந்தப் புரட்சியாளர்களின் வாழ்வதற்கான அர்த்தமாகிறது.

உருகுவேயில் அப்போதைய அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்ட தொழிற்சங்கம் சார்ந்த இடதுசாரி கொரில்லா இயக்கமான டுபமரோ இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் உண்மைக்கதை இது. உருகுவேயில் ஜனநாயகம் மீண்டும் மலர்ந்தபோது, கொடுஞ்சிறைத் தண்டனையைச் சந்தித்த மூன்று கைதிகளில் ஒருவரான முஹிகாநாட்டின் அதிபரானார்.

ஒரு ராணுவ அரசு அதிகாரத்தில் இருக்க என்னென்ன நடைமுறைகளில் ஈடுபடும் என்பதைச் சிறைச் சூழ்நிலையின் பின்னணியில் கதையாக்கியுள்ளார் இயக்குநர் அல்வாரோ ப்ரெச்னர்.

ஒரு சுற்றுலாப் பயணியாக இல்லாமல், திட்டமிடப்படாத ஒரு பயணத்துக்குப்பார்வையாளன் தயாரெனில் இந்தப் படம் ஒரு புனித யாத்திரைதான். மனிதனாகஇருப்பதில் உள்ள அற்புதத்தை மிக இருண்ட பின்னணியில் சொல்லும் இத்திரைப்படம், கடந்து சென்ற 16-வது சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில்இருமுறை திரையிடப்பட்டது.

தொடர்புக்கு: gopalakrishnan.sn@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்