மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’. படத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்
எம்.ஜி.ஆர்., வாழ்க்கையே வெறுத்துப்போய் அந்த அறையில் உள்ள தூக்கு மேடையில் தூக்கிட்டுக்கொள்ள முயல்வதாக ஒரு காட்சி.
எம்.ஜி.ஆர். தூக்கில் தொங்குகிறார். காட்சி அமைப்பின்படி அவரது உடலின் கனம் தாங்காமல் உத்தரம் உடைந்து விழவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தாலும் அப்படி விழுவதற்குள் விநாடி நேரம் எம்.ஜி.ஆரின் உடல் அந்தரத்தில் தொங்குகிறது.
கழுத்தில் மாட்டப்பட்டிருந்த கயிறு குரல்வளையை மேல்நோக்கி இழுக்க.. உடலின் கனம் கீழ் நோக்கி இழுக்க.. சுருக்குக் கயிற்றால் இழுக்கப்பட்ட கழுத்து வலது புறமாகத் திரும்புகிறது.
எம்.ஜி.ஆரின் உச்சந்தலையில் ரத்தம் ‘சுர்’ரென்று ஏறுகிறது. நெஞ்சிலோ வலி. இன்னும் சில விநாடிகள் அந்த நிலை நீடித்திருந்தால்... எம்.ஜி.ஆரின் இந்த ஜீவ மரணப் போராட்டத்திற்கிடையே உத்தரம் உடைந்துவிட்டது. தலை குனிந்து முன்புறம் சாய்ந்தபடி விழுந்த அவரது முதுகில், மேலே இருந்து உத்தரத்தின் கட்டைகள் உடைந்து விழுந்தன. பரபரப்புடன் படப்பிடிப்புக் குழுவினர் ஓடிவந்தனர்.
அப்போதும் தனது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல், இக்காட்சியில் நடிப்பதற்குத் தகுதியற்றவன் என்று தன்னை யாரும் சொல்லிவிடக் கூடாதே.. பல்வேறு தடைகளையும் போராட்டங்களையும் தாண்டிக் கிடைத்த கதாநாயகன் வாய்ப்பு கைநழுவக் கூடாதே.. என்றுதான் எம்.ஜி.ஆரின் சிந்தனை ஓடியது. அந்த நேரத்தில் களைப்போடும் கவலையோடும் இருந்த அவரது முகத்தருகே வருகிறது தண்ணீர் நிரம்பிய கோப்பை. தண்ணீர் குடித்து எம்.ஜி.ஆர். ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக நீண்ட அந்தக் கரத்துக்கு சொந்தக்காரர் ‘வில்லன் திலகம்’ எம்.என்.நம்பியார்!
ஆஸ்தான வில்லன்
‘ராஜகுமாரி’ படத்தில் தொடங்கிய எம்.ஜி.ஆர். - நம்பியார் நட்பு கடைசி வரை பிரிக்க முடியாத உறவாக இருந்தது. எம்.ஜி.ஆருக்குப் படங்களில் ஆஸ்தான வில்லன் நம்பியார்தான். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’படத்திலும் நம்பியார்தான் வில்லன்.
நண்பர்களாக இருந்தாலும் திரையில் இருவரும் ஆக்ரோஷமாக மோதுவார்கள். திரையில் நிஜக் கத்தியுடன் சண்டையிடுவார்கள். வாள் சண்டை பொறி பறக்கும். ‘சர்வாதிகாரி’ படத்துக்காக சண்டையிட்டபோது எம்.ஜி.ஆரின் கத்தி, நம்பியாரின் கட்டை விரலில் புகுந்து வெளிவந்தது.
அதேபோல, ‘அரசிளங்குமரி’ படத்தில் நம்பியார் வீசிய வாள் எம்.ஜி.ஆரின் இடது புருவத்தைப் பதம் பார்த்தது. இன்னும் இரண்டு அங்குலம் கீழே பட்டிருந்தால் கண் பார்வையே பறிபோயிருக்கும். கடைசிவரை எம்.ஜி.ஆரின் இடது புருவத்தில் அந்தத் தழும்பு இருந்தது. ஆனாலும், இதெல்லாம் தொழிலில் நடக்கும் தவறுகள் என்ற புரிதலும் சாதாரணமாக எடுத்துக்கொண்ட மனப்பாங்கும் இருவரிடமும் இருந்ததற்குக் காரணம், அவர்களிடம் நிலவிய ஆழமான நட்பு! படப்பிடிப்பின்போது பலர் முன்னிலையில், எம்.ஜி.ஆரை
‘ராமச்சந்திரா...’ என்று நம்பியார் அழைக்கும் அளவுக்கு நட்பின் நெருக்கம். அந்த உரிமையை நண்பர் நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். வழங்கியிருந்தார்.
நகைச்சுவை மன்னர்!
நம்பியார் என்றாலே உதட்டைப் பிதுக்கி, விழிகளை உருட்டி, உள்ளங்கைகளைத் தேய்த்து, ‘‘டேய்.. மொட்ட..’’ என்று அடியாளைக் கூப்பிடும் கொடூரமான பிம்பம்தான் வெகுமக்கள் மனத்தில் பதிந்துள்ளது. உண்மையில் நம்பியார் கலகலப்பானவர்! படப்பிடிப்பின்போதும் சரி,வெளியிலும் சரி. அவரது நகைச்சுவையால் அவர் இருக்கும் இடத்தில் எல்லாரும் சிரித்த முகத்துடன்தான் இருப்பார்கள்.
அந்த அளவுக்கு அவர் நகைச்சுவை மன்னர்! எம்.ஜி.ஆரும் நகைச்சுவை உணர்வுமிக்கவர்தான். திரையிலும் அரசியலிலும் அவரது பன்முகத் திறமையும், மனிதாபிமானமும், கொடை உள்ளமும், மக்கள் மீது கொண்டிருந்த அன்பும் வெளியே தெரிந்த அளவுக்கு, அவரது நகைச்சுவை உணர்வு வெளியே அதிகம் தெரியவில்லை. நம்பியாரின் ஜாலியான பேச்சுக்கு எம்.ஜி.ஆரும் ஈடுகொடுப்பார்!
‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். படத்தில் வில்லனாக இருக்கும் அவரது அத்தான் நம்பியார் கடைசியில் மனம் திருந்துவார். 7 திரையரங்குகளில் வெள்ளிவிழா கொண்டாடி எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை தகர்க்க முடியாத சாதனை படைத்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்துக்கு சென்னையில் வெற்றி விழா!..
படத்தில் நடித்த நடிகர், நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.கலைஞர்கள் பேசி முடித்தபின் கடைசியாக எம்.ஜி.ஆர். பேசவந்தார். அவரது பேச்சு மக்களுக்குத் தெளிவாகக் கேட்பதற்காக ஏற்கெனவே இருந்த ‘மைக்’குடன் கூடுதலாக இன்னொரு ‘மைக்’ வைக்கப்பட்டது. மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்த நம்பியார், ‘மைக்’ அருகே வந்தார்.
‘‘இது அநியாயம்... நாங்கள் பேசும்போது ஒரு ‘மைக்’தான் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பேசுவதற்கு மட்டும் இரண்டு ‘மைக்’குகளா?’’ என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் நம்பியார் எழுப்பிய கேள்வியால் கூட்டம் கலகலத்தது.எம்.ஜி.ஆர். என்ன லேசா?.. ‘‘படத்தில் எனக்குத்தான் இரட்டை வேடம். அதனால்தான், இரண்டு‘மைக்’குகள் எனக்கு’’ என்று சிரித்தபடி எம்.ஜி.ஆர். பதிலளிக்க, கூட்டத்துடன் சேர்ந்து நம்பியாரும் ஆரவாரம் செய்தார்.
எப்படிப்பட்ட துரோகம்!
எம்.ஜி.ஆர். முதல்வரானபின், திரையுலகை விட்டு விலகி, முதல் அமைச்சர் பணியில் முழுக் கவனத்தைச் செலுத்தினார். சில ஆண்டுகள் கழித்து நம்பியாரின் பேட்டி வார இதழ் ஒன்றில் வெளியானது. ‘எம்.ஜி.ஆர். எனக்குத் துரோகம் செய்து விட்டார்’ என்று பேட்டியில் கூறியிருந்தார் நம்பியார்! அந்த வார இதழின் போஸ்டரிலும் இந்த தலைப்பு.
எங்கும் ஒரே பரபரப்பு. எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது குறை கூறியிருக்கிறாரா என்று அவரது எதிர்ப்பாளர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. கடைசியில், அந்தப் பேட்டியில் நகைச்சுவை ததும்ப நம்பியார் கூறியது இதுதான்:
‘‘எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை கதாநாயகனாக இளைஞராக நடித்தார். அவருக்கு வில்லனாக நானும் இளைஞராக நடித்தேன். அவர் திரையுலகை விட்டு விலகியபின், இப்போது மாமா, அப்பா, தாத்தா போன்ற வயதான பாத்திரங்களில் நரைத்த தலையுடன் நடிக்க வேண்டியிருக்கிறது. தான் மட்டும் இளைஞராகவே நடித்து, திரையுலகில் என்னை வயதானவனாகத் தவிக்க விட்டு எம்.ஜி.ஆர். அரசியலுக்குப் போய்விட்டார். எம்.ஜி.ஆர்.எனக்குத் துரோகம் செய்துவிட்டார்!’’
1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர். மறைந்தார். அப்போது நம்பியார் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்த நேரம். சபரிமலைக்கு அழைத்துச் செல்வதில் பலருக்கு குருசாமியாக நம்பியார் இருந்தார். மாலை அணிந்துவிட்டால் விரதத்தை முறிக்க மாட்டார்.
அதனால், மறைந்த தனது நண்பரை இறுதியாகப் பார்த்து அஞ்சலி செலுத்த முடியாத நிலைமை. தகவல் அறிந்து நம்பியார் மூர்ச்சையானார். மயக்கம் தெளிந்து எழுந்து, ‘‘ஏற்கெனவே அரசியலுக்குப் போனதன் மூலம் திரையுலகில் இருந்து எம்.ஜி.ஆர். என்னை விட்டுப் பிரிந்தார். இப்போது வாழ்க்கையிலும் என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டாரே..’’ என்று நண்பரின் பிரிவைத் தாங்காமல் கலங்கிய நம்பியாருக்கு ஆறுதல் கூறமுடியாமல் சுற்றி இருந்தவர்களுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
சபரிமலை சென்று வந்த பிறகு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டுக்குச் சென்று நம்பியார் அஞ்சலி செலுத்தினார். இருவருக்கும் இடையிலான ஆத்மார்த்தமான நட்பின் அடையாளமாய் நம்பியாரின் கன்னங்களில் உருண்டது கண்ணீர்.
தொடர்புக்கு: sridhar.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago