எல்லா சாலைகளும் ரோமை நோக்கி... என்னும் புகழ் பெற்ற வரியைக் கேட்டிருப்பீர்கள். கடந்த ஞாயிறன்று எல்லா சாலைகளும் சென்னை, ஒய்எம்சிஏ நோக்கித் திரும்பியிருந்தன. தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் திரண்டுவந்து ரசித்தனர்.
இளையராஜாவின் இசைக்கும் தங்களுக்கும் இருக்கும் உறவை, பிரிக்க முடியாத பந்தத்தை இளையராஜாவுடன் பணியாற்றிய திரைப் பிரபலங்கள் மேடையில் பகிர்ந்துகொண்டாலும், பாடல்கள் ஒலிக்கும்போது, ஒவ்வொரு ரசிகனுக்கும் அவனுக்கு /
அவளுக்கு மட்டுமேயான நினைவுகளின் அலை அவர்களின் மனத்தில் அடித்துக்கொண்டி ருப்பதை, ஓயாமல் தட்டும் கைகள், கண்களின் இமைக்கரைகளைத் தாண்டி கன்னத்தில் வழியும் கண்ணீர், உதடு குவித்து பக்கத்தில் அமர்ந்திருப்பவரின் காதுகள் செவிடாகும் அளவுக்கு விசில் சத்தம்… எனக் கலவையான உணர்ச்சிகள் ரசிகர்களிடமிருந்து வெளிப்பட்டன. `இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமை எங்களிடம் தான் உள்ளது…’ என்பதைச் சொல்லாமல் சொன்னது ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் ரசிகர்களிடம் எழுந்த ஆரவாரம்.
புடாபெஸ்டிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட வயலின் கலைஞர்கள், பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள் அனைவரின் பெயரையும் ரசிகர்களிடம் இளையராஜா கூறியது நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.
எப்போது கைதட்ட வேண்டும்?
ஒரு பாடல் எப்படித் தொடங்கு கிறதோ அதே த்வனியில், அதே இசைக் கோவையுடன் முடிவதை சில பாடல்களில்தான் உணரமுடியும். இதை அந்தப் பாடலின் முத்திரை இசை (Signature Music) என்பார்கள். அந்த வரிசையில் `பூவே செம்பூவே’ பாடலும் ஒன்று. மெலிதான கிடார்,
புல்லாங்குழலின் இசையோடு தொடங்கும் பாடல், அடுத்தடுத்த இடையிசைகளில் வாத்திய ஜாலத்தோடு வெளிப்படும். மது பாலகிருஷ்ணன் மிக அருமையாக அந்தப் பாடலைப் பாடி முடித்ததும் ரசிகர்கள் கைதட்ட, பாடலின் இறுதி இசையை ரசிகர்கள் கேட்கச் சொல்லி சைகையாலேயே இளையராஜா அறிவுறுத்தினார். பாடலின் இறுதி இசையை அனுபவித்த ரசிகர்களிடமிருந்து மீண்டும் அதிர்ந்தது கைதட்டல் ஒலி!
கல்லூரி மாணவிகளின் சேர்ந்திசை
எத்திராஜ் கல்லூரி, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி, ராணி மேரிக் கல்லூரிகளில் இளையராஜாவின் 75வது பிறந்த நாளையொட்டி பாராட்டு விழா நடத்தினார்கள். அப்போது அந்தக் கல்லூரி மாணவிகள் சிலர் பாடல்களைப் பாட, அவர்களிலிருந்து சிலருக்குப் பயிற்சி கொடுத்து வித்தியாசமான அகபெல்லா (வாத்திய இசை இன்றி) பாணியில் அவர்களை பாடவும் வைத்தார்.
“நான் பொறந்து வந்தது ராஜ வம்சத்துல…
நான் வளர்ந்து வந்தது ராணி அந்தஸ்துல..:
- எனத் தொடங்கும் பாடலைச் சேர்ந்திசையாகப் பாடியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
கமல்ஹாசனின் கரஹரப்ரியா
மனோ, சித்ரா, உஷா உதுப், மது பாலகிருஷ்ணன், ஹரிசரண், யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, விபாவதி, முகேஷ் ஆகியோரின் பாடல்களில் ரசிகர்கள் மெய்மறந்தனர். அதிலும் இளையராஜாவின் குரலில் `தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல…’ ஒலித்தபோது ஒட்டுமொத்த ரசிகர்களின் மனசும் அவரோடு சேர்ந்து பாடியது.
`காதல் ஓவியம்’ பாடலின் முதல் வரியை புடாபெஸ்ட்டிலிருந்து வந்திருந்த வயலின் கலைஞர்களில் ஒருவர் பாடி அசத்தி ரசிகர்களின் அன்பில் நனைந்தார். அனிதா, சுர்முகி உள்ளிட்ட பாடகிகள் ‘பொதுவாக எம்மனசு தங்கம் ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்’ பாடலை அதிரடியாகப் பாடினர்.
`ஹே ராம்’ படத்திலிருந்து ‘ரகுபதி ராகவ’ பாடலையும் தொடர்ந்து ‘நினைவோ ஒரு பறவை’, ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே…’ பாடல்களையும் பாடி அசத்தினார் கமல். ‘விருமாண்டி’ படத்தில் அவர் பாடிய பாடலைப் பாடுவதற்கு முன்பாக, “பாடல் எந்த ராகத்தில் இருந்தாலும்… இன்றைக்கு நான் பாடும்போது (தொண்டை கரகரப்பாக இருப்பதால்) கரஹரப்ரியாவாகத்தான்” இருக்கும் என்றார் நகைச்சுவையாக. அதற்கு இளையராஜா, “பாருங்க அதுவும் ராகத்தோட பேராவே சொல்றாரு” என்றார்.
இளையராஜா 75 நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்த போது, நாட்டின் பெருமை இளையராஜா என்று கூறியதோடு அனுமதியும் அளித்த நீதியரசரின் தீர்ப்புக்கும் அதற்குக் காரணமாக இருந்த எதிர்ப்பாளர்களுக்கும் முத்தாய்ப்பாக நன்றி கூறினார் இளையராஜா.
நிகழ்ச்சி முடியும்போது நள்ளிரவு12.30 மணி ஆகிவிட்டது. சொந்த வாகனங்களில் வந்திருந்தவர்களைத் தவிர, எத்தனையோ பேர் எப்படி வீட்டுக்குப் போகப் போகிறோம் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை. அந்த இசைத் திருவிழாவைக் காணவந்த கூட்டம் புதிதாய்ப் பிறந்த உற்சாகத்தில் மறுபடியும் கூடுவதற்காக வேண்டிக் கலைந்தது!
உரிமையும் பணிவும்
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்த நாளுக்கு முதல் நாள் திரைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் திரையுலக பிரபலங்கள் இளையராஜாவைப் பாராட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் இளையராஜாவுக்குப் பொன்னாடை போர்த்தி தன்னுடைய வாழ்த்துகளைச் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான், "ஒழுக்கத்தை நான் இவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், "நான் முதலில் `மூன்றாம் பிறை’ படத்தில் வாசித்தேன். அதைக் கேட்ட இளையராஜா சார், " நீ போய் படி" என்று சொல்லி அனுப்பிவிட்டார். அதன் பின் சில ஆண்டுகள் கழித்துதான் `புன்னகை மன்னன்' திரைப்படத்தில் வாசித்தேன்" என்றவர், பிரபலமான அந்த இசைக் கோவையை வாசித்தும் காட்டி ரசிகர்களின் பாராட்டை அள்ளினார்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்ட் வாசிக்க இளையராஜா ஒரு சில வரிகள் பாட வேண்டும் என்று வேண்டுகோளை வைக்க, இளையராஜா `மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலின் சில வரிகளைப் பாட அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்டில் அந்தப் பாடலுக்கான இசைக் கோவையை வாசித்தார்.
அந்தக் காட்சியைப் பார்த்த ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே இளையராஜா, "ஏ.ஆர்.ரஹ்மான் என்னிடம் 500 படங்களில் பணிபுரிந்திருக்கிறார்... ஏம்பா இதெல்லாம் நீதானே சொல்லணும்" என்றார்.
அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், "உங்களிடம் ஒரு படம் பணிபுரிந்ததையே பெருமையாகத்தான் நினைக்கிறேன்" என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மானிடம் இளையராஜா மிக உரிமையோடு பேசியதையும் அதற்கு மிகவும் பணிவோடு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்த விதமும் ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்தது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago