திரையுலகில் சுஜாதா: திரையெல்லாம் செண்பகப்பூ

By டோட்டோ

ஒரு பேட்டியில் ‘உங்களைத் தொடர்ச்சியாக இயக்குவது எது?’ என்று எழுத்தாளர் சுஜாதாவிடம் கேட்கப்பட்டது. “தெரிந்து கொள்ளும் ஆர்வம்” இதுதான் அவர் சொன்ன பதில். அவரது பலதுறைப் பரிமாணங்களைப் போலவே, திரையுலகப் பங்களிப்புக்கும் இந்த ஆர்வம்தான் அவரை இயக்கியிருக்கிறது. எழுத்தாளர்களுக்கும் திரையுலகத்துக்குமான உறவு, 1930களிலேயே தொடங்கிவிட்டது.

பாவேந்தர் பாரதிதாசன், அகிலன், கல்கி, புதுமைப்பித்தன், விந்தன், ஜெயகாந்தன் எனத் தொடர்ந்தது. இந்த வரிசையில் சாண்டில்யன், பி.டி.சாமி போன்றவர்களும் உண்டு என்றாலும், தற்போது 2019-ல் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிவரப்போகும் ‘காப்பான்’ படம் வரை தொடர்கிறது.

இதில், சுஜாதா முற்றிலும் வேறுபடுகிறார். வெறும் வசனகர்த்தாவாக மட்டுமன்றி, விமர்சனக் காலகட்டம், அவரின் நாவல்கள் படமாக்கப்பட்ட காலகட்டம், நேரடிக் கதை, வசனப் பங்களிப்பு, தயாரிப்புத் துறை என அவரது திரையுலகப் பங்களிப்புகளின் பரிமாணங்களைக் காணமுடியும்.

திரை விமர்சன காலம்

தமிழின் தொடக்க கால ‘ப்ளாக்’ எழுத்தான ‘கணையாழி’யின் கடைசிப் பக்கங்களில் தொடங்கின சுஜாதாவின் திரை விமர்சனங்கள். “தமிழ் சினிமா ஒரு ஸ்ட்ரெச்சர் கேஸ்.” என்று கூறிப் படங்களைக் கிழித்தாலும் திரையிசையில் இளையராஜாவைப் பாராட்டியிருக்கிறார். ‘சலாம் பாம்பே’, அபர்ணா சென்னின் ‘36 -சவுரங்கி லேன்’, ‘அர்த் சத்யா’, ‘ஸ்பர்ஷ்’, ‘நிஷாந்த்’ போன்ற பல இந்திப் படங்களின் விமர்சனங்களின் வழியாக அப்படங்களின் படைப்பாளிகளைத் தமிழ் வாசகருக்கு அறிமுகம் செய்தார்.

தெலுங்கு ‘சங்கராபரணம்’ படத்துக்கு விமர்சனம் தந்தவர், பி.வி. காரந்த், புட்டண்ணா கனகல், கிரிஷ் கர்னாட், கிரிஷ் காசரவள்ளி என முக்கிய கன்னட இயக்குநர்களையும் அவர்களது படங்களையும் பதிவு செய்திருக்கிறார். ஆங்கிலப் படங்களில் குறிப்பாக ஹிட்ச்காக் படங்கள், பிற நாட்டுப் படங்கள் எனப் பார்த்தவற்றையெல்லாம் பகிரும் சினிமா பேரார்வலராக இருந்திருக்கிறார்.

படமான படைப்புகள்

சுஜாதாவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான முதல் படம் ‘காயத்ரி’ (1977). அடுத்தது ‘ப்ரியா’. இதில், ‘திடீர் கண்ணையா’ என்னும் துணை நடிகர் (கணேஷ்) வசந்தாக நடிக்க வைக்கப்பட்டதிலிருந்தே ‘ப்ரியா’ படமாக்கப்பட்ட விதத்தைப் புரிந்துகொள்ளலாம்.

புத்திசாலி வழக்கறிஞர் கணேஷ் கதாபாத்திரம் ஜரிகை போட்ட பேண்டில், சிங்கப்பூர் வெயிலில் ‘என் ஜோடிக்கிளியே, கன்னல் தமிழே, தேனில் ஊறும் திராட்சை நீயே’ என டூயட் பாடுவதை எல்லாம் நொந்திருக்கிறார். ‘இது எப்படி இருக்கு’ என வெளிவந்த படத்தைக் குறிப்பிடும்போது “எனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை – இட் வாஸ் ஹாரிபிள்” என ‘கணையாழி’யில் எழுதியிருக்கிறார்.

இசையமைப்பாளர் இளையராஜா தந்த யோசனையின் அடிப்படையில் எழுதப்பட்ட ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ பின்னர் ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்தது. இதே நாவலுக்கு பாலுமகேந்திராவும் திரைக்கதை எழுதி அது வெளிவராமல் போனதாக அறிகிறோம்.

‘காகித சங்கிலிகள்’ நாவல் ‘பொய் முகங்கள்’ ஆனது, ‘ஜன்னல் மலர்’, ‘யாருக்கு யார் காவல்’ ஆனது (இறைவியும்கூட), கடைசியாக ‘இருள் வரும் நேரம்’ நாவலைத் தழுவி பி.சி.ஸ்ரீராம் ‘வானம் வசப்படும்’ படமெடுத்தார். பாலு மகேந்திராவின் கதை நேரம் நிகழ்ச்சியில் இவரின் சிறுகதையும் படமாக்கப்பட்டது.

உங்கள் நாவல்கள் நல்லா எடுக்கப்படலை என்று குறைபடும் நீங்கள், ஏன் தருகிறீர்கள் என்ற கேள்விக்கு அவரின் பதில்: “நான் தரவில்லையென்றாலும் அவர்கள் எப்படியும் எடுத்துவிடுவார்கள்”.

திரைக்கதை, வசன காலம்

‘நினைத்தாலே இனிக்கும்’ – கே.பாலசந்தரின் கதைக்கு முதன் முதலில் சுஜாதா திரைக்கதை எழுதியதாகச் சொல்லப்பட்டாலும் டைட்டிலில் ‘வசனம்’ என்பதில் மட்டுமே இவரது பெயர் இடம்பெறும். கிட்டத்தட்ட 12 பாடல்களின் தேனிசை மழைக்கு மத்தியில் இவர் வசனம் எழுதி வெளிவந்த திரைப்படம். பின்னர் கதை வசனம், திரைக்கதைப் பங்களிப்பு எனத் தொடங்கி 1986-ல் வெளிவந்தது ‘விக்ரம்’.

ஒரு நிருபர், ஒருநாள் முதல்வராவது, நாசிக்கில் அச்சடிக்கும் பணம் காணாமல் போவது, காஷ்மீர் பிரச்சினையின் பின்புலம், திருட்டில் பேரார்வம் கொண்டவனின் பின்னணி எனப் பல்வேறு தளங்களில் இவரின் வீச்சு திரைக்கதைகளில் உதவியது. ஒரு இடைவெளிக்குப் பிறகு, இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கருடன் தலா 6 படங்கள், காந்திகிருஷ்ணாவுடன் 3 படங்கள், பாரதிராஜாவுடன் 2 படங்கள், ஜீவா, அழகம்பெருமாள், ரவிச்சந்திரன், ஜேடி-ஜெர்ரி, ராஜீவ் மேனன் எனத் தொடர்ச்சியாக 20 படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம் எழுதி வெற்றிகரமான பங்களிப்பு செய்திருக்கிறார்.

இளையராஜாவின் கதை என்று கூறப்பட்ட ‘நாடோடித் தென்றல்’ படத்துக்கு இவர்தான் வசனம். ஒரு திரைப்படத்தில் வசனத்தைக் குறைக்க வேண்டியது தன் வேலை என்பதையும் சினிமா ஒரு கூட்டுமுயற்சி என்பதையும் அவர் சரிவரப் புரிந்தே செயல்பட்டிருக்கிறார். இரண்டு மணி நேரத் திரைப்படத்துக்குப் பத்து பக்கங்களுக்கு மேல் வசனம் இருக்கக் கூடாது என்று இயக்குநர்களிடம் வாதிட்டிருக்கிறார்.

ஆலோசனைக் காலம்

பெண்டாமீடியா, நிறுவனத்தின் மீடியா ட்ரீம்ஸ் தயாரிப்புத் தளத்தில் தயாரிப்பு ஆலோசகராக இவர் பெரும் பங்காற்றினார். ‘பாரதி’, ‘நிலாக்காலம்’ (‘அன்று உன் அருகில்’ நாவல்), ‘லிட்டில் ஜான்’, ‘விசில்’, ‘பாண்டவர் பூமி’ ‘பம்மல் கே சம்பந்தம்’ ஆகியவை முக்கியத் திரைப்படங்கள். இவர் திரைக்கதை அமைத்து எழுதிய, பெண்டாமீடியாவின் மற்றொரு அனிமேஷன் படமான ‘பாண்டவாஸ்: தி ஃபைவ் வாரியர்ஸ்’ திரைப்படம் 2000-ல் தேசிய விருது பெற்றது. இது ஆங்கில அனிமேஷன் படம்.

இது தவிர, எம்.ஜி.வல்லபனின் ‘தைப்பொங்கல்’ திரைப்படத்தில் ஒரு காட்சியிலும் ‘நிலாக்காலம்’ படத்தில் எழுத்தாளராகவே வருவதுபோல் படமாக்கப்பட்டதாகவும் தெரிகிறது. திரைப்படத்துக்கு வெளியே திரைப்படங்கள் குறித்து ‘பேசாதே’, ‘எது சஸ்பென்ஸ்’, ‘திரைக்கதையும் சிறுகதையும்’ போன்ற முக்கியக் கட்டுரைகள், ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ புத்தகம் போன்றவை இவரின் கூடுதல் பங்களிப்புகள்.

72 வயதில் கடந்த 2008 பிப்ரவரி 27-ல் மறைந்த சுஜாதா, எழுத்துலகிலும் திரையிலும் அவர் விட்டுச் சென்ற நிரப்ப முடியாத நட்சத்திர வெற்றிடம் அப்படியேதான் இருக்கிறது இன்னமும்.

தொடர்புக்கு: tottokv@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்