ஓய்வென்பது எனக்கு இல்லை! - தமன்னா பேட்டி

By கா.இசக்கி முத்து

நாயகனுடன் டூயட், காதல் காட்சிகள் என்பதே நாயகியின் பணியாக இருந்துவந்தது. தற்போது அதை உடைத்து நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல படங்கள் வரத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் 'கண்ணே கலைமானே' படமும் அமைந்துள்ளது. பாரதி என்ற கதாபாத்திரம் குறித்து படக்குழுவினர் புகழ்ந்து வரும் வேளையில், அதை ஏற்று நடித்திருக்கும் தமன்னாவைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…

‘கண்ணே கலைமானே' படம் எப்படித் தொடங்கியது?

உதயநிதி ஹீரோவாக இக்கதையில் நடித்துத் தயாரிக்கிறார். எதற்கும் கதையைக் கேளுங்கள் என்றவுடன், கதையைக் கேட்டுவிட்டு உதயநிதிக்குப் பேசினேன். ‘இக்கதையில் நீங்கள் நடித்து, தயாரிக்கிறீர்களா?' என்று கேட்டேன். அவரோ ‘ஆமாங்க… ஏன்?' என்றார். ‘உங்களோட கதாபாத்திரத்துக்குச் சரி சமமாக என்னோட கதாபாத்திரமும் இருக்கிறது. அந்தச் சந்தேகத்தில் கேட்டேன்' என்றேன்.

அவரோ ‘எனக்குக் கதை ரொம்பப் பிடிச்சிருக்கு. ஏன் உங்களுக்குப் பிடிக்கவில்லையா?' என்று கேட்டுச் சிரித்தார். ரொம்பவே பிடிச்சிருக்கு என்று ஷூட்டிங் போனோம். உண்மையைச் சொன்னால், வெவ்வேறு படங்களில் நடித்து வருவதால் இப்படத்தைச் சமீபத்தில் பார்த்து ரொம்பவே ஃபீல் பண்ணிட்டேன். அந்த அளவுக்குப் பாரதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக நம்புகிறேன். எனக்கு நானே மார்க் போட்டுக்கொள்வதைவிட மக்கள் பார்த்துவிட்டுக் கூறட்டும் என்று காத்திருக்கிறேன்.

சீனு ராமசாமி உங்களுக்காகவே இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார் போலத் தோன்றுகிறதே?

அதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். ‘தர்மதுரை' படத்தில் ரொம்ப அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்தார். அதைப் போலவே இதில் வங்கி அதிகாரியாக அழுத்தமான கதாபாத்திரத்தைக் கொடுத்துள்ளார். சில காட்சிகளில் அவர் எதிர்பார்த்தைவிட நான் நன்றாக நடித்ததாக ஸ்பாட்டிலேயே பாராட்டினார். அது பெரிய விஷயம். தன்னைச் சிறப்பாக நடிக்க வைத்ததால் முத்தம் கொடுத்து சீனு சாரைப் பாராட்டினார் உதயநிதி. உதயநிதிக்குப் பாட்டியாக நடித்த வடிவுக்கரசி அம்மாவுடன் பல காட்சிகளில் போட்டி போட்டு நடித்துள்ளேன்.

தமன்னாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று சமூக ஊடகங் களில் செய்திகள் அவ்வப்போது வருவதைப் படித்துவிட்டு என்ன நினைப்பீர்கள்?

நடிப்பு வாழ்க்கை முடியப் போகிறது என்று சொல்லும் ட்வீட் களையும் கிசுகிசுக்களையும் படிப்பது பிடிக்கும். என் கதை முடிந்துவிட்டது என்று சொல்லும்போதெல்லாம் எனக்கு அதிலிருந்து அதிக உற்சாகம் கிடைக்கும். ஏனென்றால், அப்போது நான் ஒரு புதுமுகம் போல உணர்வேன். அது என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைக்கும். நானும் உழைப்பேன். எனது நடிப்பு வாழ்க்கையிலேயே மிக மோசமான நிலையில் இருக்கிறேன் என்று வரும் ட்வீட்டுகளைப் படிக்கும்போது எனக்கு த்ரில்லிங்காக இருக்கும். ஆம்! இதற்காகத்தான் காத்திருந்தேன் என்று சொல்லிக்கொள்வேன்.

அப்படி இதற்குமுன் அப்படியான தோல்வி முகத்தில் நான் இருந்தபோதுதான் ‘பாகுபலி' வாய்ப்பு வந்தது. உங்கள் தொழில் வாழ்க்கை முடிந்துவிட்டது என யாராலும் முடிவுசெய்ய முடியாது. ஒரு நடிகையாக நடிப்பு வாழ்க்கை போதும் என்று நான் நினைக்கும்போதுதான் எனது தொழில் வாழ்க்கை முடியும். எனக்குள் இருக்கும் நடிகைக்கு எப்போதும் ஓய்வில்லை.

கதாநாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில்தான் உங்களைக் காண முடிகிறது?

இதுவரை பல கமர்ஷியல் படங்களில் நடித்திருக்கிறேன். நாயகனுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் என் கதாபாத்திரத்தை மக்கள் ரசித்திருக்கிறார்கள். வழக்கத்தை உடைப்பது என்பது மிகப் பெரிய சவால். ஏனென்றால், பெரும்பாலான கதைகள் நாயகனை மையமாக வைத்து வருபவையே. கடந்த சில வருடங்களாக, வலிமையான பெண் கதாபாத்திரங்கள் இருக்கும் படங்களில் நடித்திருக்கிறேன். அவை இப்போதுதானே தலைகாட்டத் தொடங்கியிருக்கின்றன.

இந்த கட்டமைப்புக்குள் எனக்கென ஒரு இடத்தை என்னால் உருவாக்கிக்கொள்ள முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.  நான் படக்குழுவோடு இணக்கத்துடன் இருப்பவள். எனது கதாபாத்திரம் என்று வரும்போது எனக்கு அதில் எந்தப் பேராசையும் கிடையாது. நன்றாக ஓடும் படங்களில் நான் பங்காற்ற வேண்டும். அதற்கு எனது தற்போதைய நடிப்புத்திறன் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்.

இது வெப் சீரிஸின் காலம். அதில் நடிக்கும் எண்ணம் இருக்கிறதா?

இன்று மக்களுக்குக் கிடைக்கும் டிஜிட்டல் பொழுதுபோக்கின் அளவைப் பார்க்கும்போது, ஒரு நடிகருக்கு, தன் நடிப்பைக் காட்ட இதற்குமுன் இவ்வளவு தளங்கள் இல்லை என்பது புரிகிறது. எனக்கும் நிறைய வெப் சீரிஸ் வாய்ப்புகள் வருகின்றன. நான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதால் வெப் சீரிஸ் வாய்ப்புகள் இன்னும் அதிகமாக என்னை ஈர்க்க வேண்டும்.

ஆனால், விரைவில் அப்படி ஏதாவது ஒன்றில் நடிக்க ஆர்வமாயிருக்கிறேன். நான் என்னை எப்போதும் ஒரு நட்சத்திரமாக எண்ணியதில்லை. நான் ஒரு நடிகை. நான் நடிக்க நினைக்கும்வரை எனக்கான கதவு திறந்திருக்கும். ஏனென்றால் என்னை எல்லோருக்கும் பிடிக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்